cookie

Wednesday, January 8, 2014

Onsite எனும் அக்கப்போரு - நாடகம்

கதாப்பாத்திரங்கள்

Team Leader - அன்பு
Project Manager - வாசு
Team members - சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

கௌரவ கதாப்பாத்திரங்கள் : DBA, Architect, Peter Babe, Phone    

இவர்களோடு நீங்களும்...


குறிப்பு

இந்த நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே. கதையின் போக்குக்காக சில தர்க்க மீறல்கள் திணிக்கப்பட்டுளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.    


காட்சி - 1

நாள் : வெள்ளிக் கிழமை

நேரம்:  காலை 10:00 மணி.

நடிகர்கள்:  Team Leader (அன்பு)  , Project Manager (வாசு) , Phone

அன்பு கனிப்பொறியில் தீவிரமாக மூழ்கி விசைப்பலகையை பதம் பார்த்துக் கொண்டிருக்க, மேசையின் மேல் இருந்த தொலைபேசியில் மணி ஒலிக்கிறது. மறு முனையில் வாசு.

அன்பு: hello

வாசு: அன்பு, நான் வாசு பேசுறேன், busy யா இருக்கீங்களா? கொஞ்சம் என்னோட cabin க்கு வறீங்களா? please.

அன்பு: No problem வாசு. உடனே வர்றேன்.


காட்சி - 2      

இடம்: வாசுவின் அலுவலக அறை

நடிகர்கள்:   அன்பு, வாசு, SRS document.

knock, knock

வாசு: Yes, come in அன்பு......   take your seat.

அன்பு: thanks ..........   என்ன விஷயமா வரச் சொன்னீங்க வாசு?

வாசு: ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வரச்சொன்னேன். weekend plan என்ன அன்பு?

     அன்புவின் மனக்குரல் : இவரு எதுக்கு நம்ம plan ன கேக்குறாரு? weekend க்கு வேட்டு வைக்கப் போறாரா?

அன்பு: பெரிய plan ஒன்னும் இல்ல வாசு, தீவாளி purchase இருக்கு.

வாசு: very good, very good. அதுக்குள்ள purchase சா? ஓ, தல தீபாவளி இல்லையா? மாமனார் வீட்டு கவனிப்புன்னு சொல்லுங்க.

அன்பு:  (அசட்டுச் சிரிப்புடன்) ஆமா வாசு.

வாசு: உங்களுக்கு ஒரு good news சொல்லத்தான் வரச்சொன்னேன்.

அன்பு, ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு வாசு கூறப்போவதை கேட்க ஆவலாக இருந்தார்.

வாசு: நமக்கு புது US project கெடச்சிருக்கு. இந்த project ட successfully ல complete பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு நிச்சயம் onsite opportunity கிடைக்கும்.

(பின்னணியில் "கண்ணா லட்டு தின்ன ஆசையா ?" என்று கேட்க்கும் குரலுக்கு ஆமாம் என்பது போல தலையை அசைக்கிறார் அன்பு).

அன்புவின் கற்பனையில்

தன் புது மனைவியுடன் அமெரிக்காவின் பல முக்கிய இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போல நினைத்துப் பார்கிறார்.    

வாசு: அதோட மட்டும் இல்ல, உங்களுக்கு GC யும் process பண்ணுவோம்.

(பின்னணியில் "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா ?" என்று கேட்க்கும் குரலுக்கு ஆமாம் என்பது போல தலையை அசைக்கிறார் அன்பு).

அன்புவின் கற்பனையில்

பெரிய சொந்த வீட்டின் முன்பு 

அன்பு, அவரின் மனைவி, 

குழந்தை 1,

குழந்தை 2,

SUV கார் 



முதலியவை வரிசையாக வருவது போல கற்பனை செய்து கொள்கிறார்

அன்புவின் முகத்துக்கு முன்பு கையை அசைத்தவாரே வாசு கேட்கிறார் 

என்ன அன்பு அதுக்குள்ள dream மா ? கார், வீடு, நயாகரா... ?

வாசுவின் குரல் கேட்டு இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புகிறார் அன்பு, அசடு வழிய..

உங்கள சொல்லி ஒன்னும் தப்பு இல்ல, அந்த ஊரோட ராசி அப்படி...

வாசு: SRS document ட உங்களுக்கு share பண்ணிருக்கேன். WBS போட்டு கொண்டு வறீங்களா? weekend நீங்க ஏதோ purchase க்கு போறதா சொன்னீங்கள்ள..

அன்பு: அது ஒன்னும் problem இல்ல வாசு. நா அத உடனே பாத்துர்றேன். நாளைக்கே WBS போட்டுட்டு உங்களுக்கு email அனுப்பீர்றேன்.

வாசு: very good அன்பு. நீங்க போயி உடனே வேலைய ஆரம்பிங்க..

அன்பு: Thanks Vasu.

வாசு: no problem, all the best.

அன்பு அந்த அறையை விட்டு வெளியேறுகிறார்...


காட்சி - 3

நடிகர்கள்: அன்பு, வாசு   
நாள்:  திங்கள்
நேரம்: காலை 10:30 மணி

WBS சை அனுப்பிவிட்டு வாசுவின் பதிலுக்காக ஒரே படப்பிடிப்புடன் காத்திருந்தார் அன்பு...

தொலைபேசி மணி ஒலிக்க மீண்டு மறுமுனையில் வாசு.

வாசு: என்னோட cabin க்கு வாங்க அன்பு.

அன்பு அடுத்த நொடி வாசுவின் அலுவலக அறையில்.
  
வாசு: anbu, what is your plan for this new project?

அன்பு மனதிற்குள், வழக்கம் போல email ல படிக்கலையா

அன்பு: 6 resource, 8 sprint ல project ட முடிச்சிரலாம் வாசு.

வாசு: (இறுக்கமான முகத்துடன்) என்ன அன்பு இந்த POC project டுக்கா 6 resource சும் 4 மாசமும் கேக்குறீங்க?

உங்களுக்கு 6 resource வேணும்னா office security யும் சேர்த்துதான் தரனும்.

Impossible அன்பு,

உங்களுக்கு 4 resource சும் 2 மாசமும் தர்றேன் அதுக்குள்ளே முடிச்சிருங்க. உங்க onsite க்கு நான் guarantee. OK ?

அன்புவின் பதிலுக்காக காத்திராமல் வாசு தொடர்கிறார்.

அன்பு, let me introduce your new team.

வாசு தொலைபேசியில் அழைக்க. ஒன்றின் பின் ஒன்றாக slow motion effect ல்  நால்வரும் உள்ளே வருகின்றனர்

(kakka kakka BGM)

நால்வரும் கைகளை பின்புறம் கட்டி, கால்களை அகற்றி தயாராக நிற்க்கின்றனர்.

வாசு: These guys are handpicked by me and will report directly to you.

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

சேதுவும், சேகரும் சாத்தூர்ல இருந்து வந்துருக்காங்க. கண்ணனும் கார்த்திக்கும் விருதுநகர்ல இருந்து வந்துருக்காங்க. இவங்க நாலு பேரும் ஒண்ணா college ல படிச்சிருக்காங்க.

அதனால அவங்களுக்குள்ள நல்ல chemistry இருக்கும்.

அன்பு mind voice: நான் என்ன ஜோடி நம்பர் 1 சீசன் 8 க்கா ஆள் கேட்டேன் 
ஏன்யா கொல்ற. project பண்ண ஆள் கேட்டா chemistry class எடுத்துக்கிட்டு.

அன்பு: வாசு, I want to have one to one discussion before I commit.

வாசு: off-course. actually you should.  


காட்சி - 4


நேர்முக விவாதம்

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்


அன்பு: tell me about yourself

        சேது: I am சேது, studied B.A (Chemistry)

        சேகர் : I am சேகர், studied B.Com (History)

        கண்ணன்: I am கண்ணன், studied B.B.A (English)

        கார்த்திக்:  I am கார்த்திக், studied B.Com tamil medium.

Studied very old sir, அதனால forgot sir.

அன்பு: நீங்க இப்படி இங்கிலீஷ் பேசுனா மெகா சீரியல் தான் எடுக்கணும். இது short story தான் அதனால தமில்லையே பேசுங்க.

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: இஹி ஹி, thank you sir.

அன்பு: நீங்கெல்லாம் ஒண்ணா படிசீங்கன்னு வாசு சொன்னாரே?

      கார்த்திக்: நாங்கெல்லாம் ஒண்ணா PGDCA படிச்சோம்.

அன்பு: உங்க strength என்ன?

       சேது: நான் நல்லா படம் வரைவேன்.
     
       கார்த்திக்: நல்லா கவிதா sorry sir கவித எழுதுவேன்.
     
       சேகர்: 1 நிமிசத்துல 50 push ups எடுப்பேன் சார்.
     
       கண்ணன்: கோபமே பட மாட்டேன் sir.       

அன்பு: என்ன language தெரியும்?

      சேகர்: தமிழ், தெலுங்கு...  

அன்பு: computer language என்ன தெரியும்னு கேட்டேன்?

      சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: கொஞ்சம் ஜாவா தெரியும்

அன்பு: எதுக்காக இந்த job ல join பண்ணீங்க?

      சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: கல்யாணம் ஆகுறதுக்கு sir. Software மாப்ளைக்குதான் easy யா பொண்ணு கிடைக்குது.

அன்பு: very good     


காட்சி - 5

நடிகர்கள்: அன்பு, வாசு

வாசு: are you comfortable with your new team ?

அன்பு: are you serious vasu? இவங்கள வச்சிக்கிட்டு, இந்தப் project ட two months ல முடிக்கிறது impossible.

வாசு: if it's easily possible then why "anbu". that's why i told you about onsite and GC.
வேலைக்கு சேந்த உடனே onsite போகணும்னு நெனைச்ச முடியுமோ?
team கிடைச்ச உடனே project ட start பண்ணிரலாம்னு நினைக்க முடியுமோ?

இந்த project ல நீங்க training குடுங்க. அடுத்த project ல அந்த பசங்க வேறொரு team க்கு training குடுப்பாங்க. அதெல்லாம் இருந்து பாக்குறதுக்கு நீங்க இங்க இருக்க மாட்டீங்க onsite போயிருவீங்க. ஆனா முதல்ல training "அன்பு" தான் கொடுத்தாரு. இதென்ன உங்களுக்கு பெருமையா? கடம.

அன்பு: (மனதிற்குள்: எல்லா தமிழ் படத்தையும் பார்த்து டயலாக்க மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்து ஏன்யா என் உயிர வாங்குற)

Training எல்லாம் குடுத்து project ட complete பண்றது முடியாது வாசு. என்ன விட்ருங்க நான் போறேன்.

வாசு: அன்பு, நான் என்ன வச்சிகிட்டா வஞ்சன பண்றேன். MD யோட recommendation ல வேலைக்கு வந்த பசங்க வேண்டாம்னு சொன்னா என்னோட வேலை, உன்னோட வேலை ரெண்டும் போயிரும். recession time வேற.

அன்பு: (சிறிது யோசனைக்குப் பிறகு) வாசு, I will do my best.


காட்சி - 6


நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

அன்பு: come on guys let's start our game.

சேது: சார், இப்போ நம்ம project பண்ணப்போறது இல்லையா? விளையாடப் போறமா?.

அன்பு: வேலைய ஆரம்பிப்போம்னு சொன்னேன்...

Requirement documents எல்லாம் Server-72 ல SRS folder ல இருக்கு. Files எல்லாம் உங்க local PC க்கு copy பண்ணிக்கோங்க.

என்று தன் குழுவுக்கு கட்டளை இட்டுவிட்டு தன் இடத்துக்கு அன்பு சென்றுவிட. நால்வரும் ஒருவர் பின் ஒருவராக 72 சர்வர் முன்பு வரிசையில் நின்றனர். முதலில் சேது Server-72 இல் ஏதோ செய்துவிட்டு அவருக்கென்று கொடுத்த கணிப்பொறியில் போய் மீண்டும் ஏதோ செய்தார். அதையே மற்ற மூவரும் செய்தனர். சில நிமிடம் கழித்து அங்கு வந்த அன்பு.

அன்பு: document copy பண்ணியாச்சா?

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: copy ஆக மாட்டக்கிது sir.

அன்பு: copy ஆகலையா, என்ன பண்ணீங்க ?

சேது: Server-72 ல file ல select பண்ணி mouse right click பண்ணிட்டு copy option ன select பண்ணிட்டு. என்னோடோ computer ல போய் paste பண்ணினேன் sir.

அன்பு:   என்ன சொன்னீங்க.....   இப்படி நீங்க எப்படி copy பண்ண முடியும் ?

சேது: எல்ல computer ரும் network ல connect ஆகித்தான sir இருக்கு. அதனால இப்படி பண்ணா copy அகனும்ன்ல, copy ஆகாதா?

சேதுவின் இந்த பதிலைக் கேட்டு, அன்பு பேய் அறைந்ததைப் போல நின்றார்... 

(நான் ஒரு கேள்வி கேட்டா, நானே அசந்து போற மாதிரி என்ன ஒரு கேள்வி கேட்க வேண்டியது)

காட்சி - 7

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக், DBA

அன்பு : (தன் குழுவை நோக்கி) table design பண்ணிட்டு DBA கிட்ட verify பண்ணிட்டு வந்துருங்க.

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: OK sir.

DBA விடம் தாங்கள் தயாரித்த தரவு தள அட்டவனையை (database table design) காட்டினார் அவரிடம் ஓப்புதல் பெறுவதற்கு.

அதனை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போதே...

DBA: ( table ஒன்றை காட்டி) இதுக்கு key இல்லையே

கண்ணன் தன்னுடைய கால்சட்டை பையை துலாவி தன்னிடம் இருந்த சாவியை எடுத்து DBA விடம் நீட்டி விட்டு பெருமிதத்துடன் தன் சகாக்களை நோக்கினான்.

சேது, சேகர், கார்த்திக்: super மச்சி.

அதிர்ச்சியில் DBA...



காட்சி - 7.1

நடிகர்கள்: அன்புசேது, சேகர், கண்ணன், கார்த்திக்

அன்பு: Architect கூட ஒரு discussion இருக்கு.

கண்ணன், கார்த்திக் நீங்க ரெண்டு பேரும் DBA கொடுத்த review comments க்கு ஏத்தபடி table ல modifications பண்ணிடுங்க. 

கண்ணன், கார்த்திக்: O.K sir

அன்பு: சேது, சேகர் நீங்க ரெண்டு பேரும் architect கிட்ட discussion க்கு போங்க. architecture finalize பண்ணிரலாம்.

சேது: Architect என்ன பண்ணுவாரு sir?

அன்பு: ஒரு Software க்கான  structure எப்படி இருக்கணும்கிற recommendations குடுப்பாரு. அவருகிட்ட போய் பேசுங்க உங்களுக்கே ஒரு idea கிடைக்கும்.


காட்சி - 7.2

நடிகர்கள்: architect, சேது, சேகர்

சேது, சேகர் இருவரும் architect இருப்பிடத்தின் முன்பு நிற்க, architect கவனம் சிதறாமல் தன்னுடைய கணினியை நோக்கிக் கொண்டிருந்தார். காதுகள் headphone வசம் இருந்தன.

சேகர்: (மிகவும் பணிவுடன், குனிந்து கொண்டு) சார்.... சார்...

Architect டிடம் இருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை

சேகர்: (மீண்டும்) சார்................... சார்........................

சேது: சேகர், என்ன பிச்சையா எடுக்குற? (பார்வையாளர்களை நோக்கி "ரொம்ப அடக்கமாமாம்")

இருவரும் மீண்டும் மிக அருகில் செல்ல architect நிமிர்ந்தார். என்ன வேண்டும் என்பது போல தலையை அசைத்தார்.

சேகர்: புது project க்கு design discussion க்காக வந்துருக்கோம்.

உட்காருங்க என்பது போல தலையை அசைத்தார். இருவரும் அமர்ந்து கொள்ள.

Architect: Project details சொல்லுங்க.

சேது requirement document முதல் பக்கத்தில் இருக்கும் தகவல்களை வாசிக்கத் தொடங்க...

Architect: Cut the crap, Just tell me the key points.

சேகர்: இந்த project ட முடிச்சாதான் எங்களுக்கு increment டும் அன்பு sir க்கு onsite டும் கிடைக்கும்னு சொல்லி இருக்காங்க.

Architect: (ஸ் சப்பா...) please document ட குடுப்பா, நானே படிச்சிக்கிறேன்...

சில நிமிடங்களுக்குப் பிறகு... architect சொல்லப் போவதை குறிப்பெடுக்க தயாராக இருந்தனர் சேகரும் சேதுவும். உ, விநாயகர் துணை என்று எழுதி முடிப்பதற்கு முன்பே

Architect: different types of output ட publish பண்றதுக்கு factory pattern use பண்ணிக்கோங்க. "publish calculation" னு ஒரு method மட்டும் interface ல இருக்கட்டும். Class diagram போட்டு கொண்டு வாங்க.

என்று தன்னுடைய ஆலோசனையை கூறி முடித்து விட்டு அடுத்த நொடியே அவ்விடம் விட்டு சென்று விட்டார்.

சேது: சேகர், அவரு என்ன சொன்னாருன்னு புரிஞ்சதா?

சேகர்:  எதோ calculation போடுற மாதிரி class room படம் வரையச் சொன்ன மாதிரி எனக்கு புரிஞ்சது.

சேது: ஏன்டா மச்சி class room படம் வரையனும்?

சேகர்: நீ தான அன்பு sir கிட்ட நல்லா படம் வரைவன்னு சொன்ன, அதனால இருக்கும். மச்சி உன்னோட படம் வரையிற திறமையை காட்ட இது நல்ல chance.         

சில நிமிடங்களில் சேது தன் கடமையை முடித்துவிட்டு திறமையை architect டிடம் காட்ட ஆர்வமுடன் காத்திருந்தார்.
இயற்கையின் அழைப்பை முடித்துவிட்டு வந்த architect டிடம் பெருமிதத்துடன் படத்தை காட்டினார் சேது.

படத்தை பார்த்து நிலைமையை புரிந்து கொண்ட architect மனதிற்குள் சேது, சேகர் இருவரையும் மாறி மாறி தலையில் கொட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, 

"உங்க team ல யாராவது பெரியாள் இருந்தா கூட்டிட்டு வாங்க" ன்னு சொல்லி இருவரையும் அனுப்பிவிட்டார்.


காட்சி - 7.3

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

அன்பு: இந்த பசங்க எங்க போனாங்க ?

சுற்றும் முற்றும் தேடினார் அன்பு, சிறிது தூரத்தில் நால்வரும் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. கையை அசைத்து அழைத்துப் பார்த்தார். நால்வரின் கவனமும் அந்த மங்கையிடமே மையல் கொண்டிருந்தது.

அன்பு: (சற்று சப்தமாக) சேகர்...

அன்பு அழைக்கும் சப்தம் கேட்டு அந்தப் பெண் நால்வரையும் உஷார் படுத்தினார். நால்வரும் அன்புவை நோக்கி விரைந்தனர்.

அன்பு: உங்களுக்கு கொடுத்த வேலைய முடிச்சிட்டீங்களா?

சேது, சேகர்: இல்ல, Architect உங்ககிட்டதான் பேசணும்னு சொன்னாரு Sir.

கண்ணன், கார்த்திக்: Database Changes இன்னும் முடியல sir.

அன்பு: Very Good. இந்த ரெண்டு மாசத்துல, Project Work முடிக்கிறோமோ இல்லையோ!கல்யாணம் முடிக்கனும்கிற உங்க லட்சியம் கண்டிப்பா நிறைவேறிடும்.

ஆமா, அந்த "Peter Babe" க்குதான் தமிழ் தெரியாதே ! பின்ன நீங்க என்ன பேசுனீங்க?

சேது: English knowledge ஜ improve பண்ணிக்கத்தான் sir அந்தப் பொண்ணுகிட்ட பேசிக்கிட்டு இருந்தோம்.

அன்பு: ம்....

இப்போதான் Architect ட பாத்து பேசிட்டு வர்றேன். என்ன நடந்ததுன்னு சொன்னாரு...  

உங்களோட English ஆர்வத்த கொஞ்சம் control பண்ணிக்கிட்டு, முதல்ல programming கத்துக்கோங்க.      


காட்சி - 7.4

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

இடம்: அலுவலக வகுப்பறை

அன்பு: முதல்ல உங்களுக்கு Encapsulation, Inheritance, Polymorphism தெரியனும்.

(நால்வருக்கும் வகுப்பை ஆரம்பித்தார் அன்பு...
ஒரு வழியாக அடிப்படை போதனை முடிந்தது)

அன்பு: சேது, Inheritance - real time example  சொல்லுங்க?

சேது: எங்க அப்பா மாதிரி, எனக்கும் திருட்டு முழின்னு எங்க அம்மா சொல்லுவாங்க Sir.

அன்பு: கண்ணன் Polymorphism பத்தி சொல்லுங்க.

கார்த்திக்: அன்புங்கிற ஒன்னு, நாம யாரு கிட்ட காட்டுறமோ அவங்க வயசுக்கு ஏத்தமாதிரி வேற வேற அர்த்தம் வரும்.

சின்ன குழந்தைன்னா - அன்பு / பாசம்
வயசுப் பொண்ணுன்னா - காதல் (வெட்கத்துடன்)
வயசான வங்கன்னா - பரிவு

அன்பு: நீங்க தான கவித எழுதுவேன்னு சொன்னீங்க?

கார்த்திக்: ஆமா sir.

அன்பு: ஒரு கவித சொல்லுங்க.       

கார்த்திக்:

உன் விழி ஈர்ப்பு விசையில் பயின்றேன் இயற்பியல்.
உன் அருகாமையில் என் உடலுக்குள் வேதியல்.
எப்போது நாம் இருவரும் பயில்வோம் உயிரியல்.               

கண்ணன்: அடடே ஆச்சர்யக் குறி...

மற்ற மூவரும் கரகோஷம் செய்கின்றனர்...   

அன்புவும் சிரிக்கிறார்...

அன்பு: அடுத்து முக்கியமான ஒன்னு, debugging. debugging ன்னா program ல இருக்குற mistakes எல்லாம் correct பண்றது.

கண்ணன்: sir, அப்ப coding னா, program ல mistakes ச போடுறதா sir.

அன்பு: .....   உங்களையெல்லாம் இப்படி கேக்கச் சொல்லி யாரு சொல்லித் தர்றது... ?      


காட்சி - 8

நடிகர்கள்: அன்பு,  DBA


DBA: அன்பு இந்த பசங்கள வச்சி நீங்க எப்படி project ட முடிக்கப் போறீங்களோ தெரியல?

அன்பு: புன் சிரிப்பு...

DBA: table ல key எங்கன்னு கேட்டா? pocket ல இருந்து எடுத்துக் காட்டுறாங்க.

அன்பு: மீண்டும் சிரிப்பு...

அன்பு: அந்த பசங்க கிட்ட, இந்த வேலைக்கு ஏன் வந்தீங்கன்னு கேட்டேன்? அதுக்கு அவங்க கல்யாணம் அகுரதுக்குன்னு சொன்னங்க. அவங்க நேர்மை எனக்கு புடிச்சது. அது மட்டும்மில்லாம அவங்ககிட்ட ஒரு fire இருக்கு. நிச்சயமா எங்களால இந்த வேலைய முடிக்க முடியும். அதுக்கு என்கிட்டே ஒரு plan இருக்கு.


காட்சி - 9

நடிகர்கள்: அன்பு, வாசு


கையில் பெட்டி படுக்கையுடன் அன்பு அலுவலகத்திற்குள் நுழைகிறார். அதே வேளையில் வாசுவும் அலுவலகத்திற்குள் வர.


வாசு: அன்பு என்ன பெட்டியோட வர்றீங்க.

அன்பு mind voice: பண்றதையும் பண்ணிட்டு கேள்வியப்பாறு

அன்பு: என்னோட wife அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டேன். apartment ட காலி பண்ணிட்டு இங்கயே வந்துட்டேன். ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம் தங்குறதுக்கு எதுக்கு வீடு. வீட்டு வாடகையவது மிச்சமாகும் பாருங்க அதுதான்.

கடமைதான் முதல் மனைவின்னு என்னைக்கு சொன்னானோ தெரியல....

வாசு mind voice பையன் செம கடுப்புல இருக்கான் போல...


காட்சி - 10

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

பெட்டி படுக்கையுடன் அலுவலகம் வந்தது அன்பு மட்டுமல்ல அவனது குழுவும் தான்.


விக்ரமன் படத்தில் இருந்து ஒரு பாடல் ஒளிபரப்பாகிறது....  வேலையும் விரைவாக முடிகிறது.


காட்சி - 11

Delivery Date 

அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு deployment க்கு அனுப்பியாகி விட்டது.

waiting for the client response.

நகம் கடித்துக்கொண்டு ஐவரும் காத்துக் கொண்டிருக்க. தொலை பேசி அழைப்பு வருகிறது.

வாசு: அன்பு, client கிட்ட இருந்து call வந்திருக்கு.

அன்பு: Issues எதுவும் இருக்கா வாசு? 

வாசு: ஒரே ஒரு Issue தான் வந்திருக்கு. "unable to login".

அன்பு: என்ன username / password use பண்ணாங்க?

வாசு: admin/admin.

அன்பு: correct தான். one minute வாசு?

அன்பு: கார்த்திக் login module நீங்க தானே check பண்ணீங்க? hard-code எதுவும் பண்ணீட்டீங்களா ?

.......

கார்த்திக்: sorry sir, password is "PRIYA"...

அன்பு: இந்த ரணகலத்துளையும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குது.

சிறிது நேரம் கழித்து...

வாசு: அன்பு  first level UAT completed. client QA team will continue their testing. you did it அன்பு.

அன்பு: no வாசு, we did it...


Thursday, October 10, 2013

மனக்கணக்கு

செல்வம் நீ அமெரிக்கா போயி மூனு வருஷம் ஆச்சு, எப்போடா திரும்ப வருவ? அம்மாவ பாக்கனும்னு உனக்கு தோணலையா ?

இந்த வருஷம் வந்துருவேம்மா, சென்னைல ஒரு வீடு வாங்கணும். என்னோட friends குமாரு, கணபதி  எல்லாரும் வாங்கிட்டாங்க, நானும் வாங்க வேண்டமா அதுக்குதானமா இங்க இருக்கேன். உனக்கு தெரியாதா?

நமக்குத்தான் ஊர்லையே வீடு இருக்கே கண்ணு அது போதாதா? சென்னைல எதுக்குப்பா வீடு?      

எம்மா, நாலு வருசத்துக்கு முன்னால கணபதி, 25 லட்சத்துக்கு வாங்குன வீடு இப்போ 35 லட்சம் விக்குது.

ஏம்ப்பா கணபதி வீட்ட விக்கப் போறானா?

இல்லம்மா !!!

அப்புறம் அது எத்தன லட்சத்துக்கு வித்தா என்ன?

சும்மா இரும்மா உனக்கும் ஒன்னும் தெரியாது.

பொண்ணு வீட்டுக்காரங்க நேர்ல பார்க்காம எதுவும் பேச முடியாதுன்னு சொல்றாங்க பா.

நேர்ல பார்க்கணும்னா, online ல வரச்சொல்லு  Skype ல பேசுறேன்.

அதுக்கெல்லாம் அவங்க ஒதுக்க மாட்டாங்கப்பா.

இன்னும் ரெண்டு மாசத்துல வந்துருவேன், முதல்ல வீடு அப்புறம் கல்யாணம். சரியம்மா?

நீ வந்தாலே போதும்பா.

--------*******-----------

என்ன செல்வம் போன்ல யாரு அம்மாவா? என்ன சொல்றாங்க?

ஆமா பாலா,  ஊருக்கு வரச்சொல்றாங்க.

ஒரு தடவ போய் பாத்துட்டு வர வேண்டியதுதான?

போகலாம், ticket ஒன்னேகால் லட்ச ரூபாய் ஆகும் அதான் யோசிக்கிறேன். வீடு வாங்குறதுக்கு down payment க்கு மட்டும் 12 லட்ச ரூபாய் சேர்த்துட்டா போதும் அப்புறம் ஊருக்கே போயிடுவேன்.

சேத்துட்டீங்களா?

கிட்ட தட்ட 10 லட்சம் சேத்துட்டேன்.

VISA எப்போ முடியுது செல்வம் ?

2 மாசத்துல முடியுது extension apply பண்ணா இன்னொரு 3 வருஷம் கெடைக்கும்.

Extension க்கு  apply பண்ண வேண்டியதுதான?

போதும் பாலா ஊருக்கு போயிற வேண்டியதுதான். extension approve ஆயிடிச்சின்னா அப்புறம் போக மனசு வராது.

இந்த ஊருக்குன்னு ஒரு ராசி இருக்கு செல்வம். வந்தவங்க யாரையும் திரும்ப விடாது.

கிரீன் கார்டு எல்லாம் வேண்டாமா செல்வம்?

எனக்கு ரேஷன் கார்டே போதும் பாலா.

ஆ ஹா ஹா ஹா...

--------*******-----------

7 நாட்களுக்குப் பிறகு

என்ன செல்வம் தூங்கலையா?

தூங்கிட்டுதான் இருந்தேன் பாலா, லேசா வயிறு வலிக்கிற மாதிரி இருந்தது.

மதியம் சாப்ட சாப்பாடு சேரலையா?

குமார் வீட்ல birthday party ல சாப்டேன். வெல கம்மியா இருக்கணும்னு வால்மார்ட் ல இருந்து expiry ஆன சிக்கன் வாங்கி சமச்சிட்டங்கலான்னு தெரியல !

ஆ ஹா ஹா ஹா...

ஆ, ஐயோ, அம்மா........

இது சரியா வராது செல்வம் வா உடனே ER (emergency room) க்கு போகலாம்.

இந்த நாசமாப் போன நாட்ல govt office மாதிரி 5 மணிக்கு மேல hospital லையும் மூடீர்ரானுங்க.

.......

.......

.......


பாலா கார speed limit க்கு உள்ளயே ஓட்டுங்க, இன்னைக்கி சனிக்கிழம வேற, மாமா எங்க வேணா நிப்பான். அய்யோ அம்மா...

நீங்க பேசாம வாங்க செல்வம் நான் பாத்துக்கிறேன்.



ER ல்


செல்வம், form fill பண்ணனும் உங்க இன்சூரன்ஸ் கார்டு கொடுங்க.

என்னோட wallet ல இருக்கு பாலா எடுத்துக்கோங்க.

.....

.....

.....

செல்வம் எல்லா formalities ம் முடிஞ்சது. நான் இங்க wait பண்றேன். எதாவது வேணும்னா சொல்லுங்க.


--------*******-----------

இரண்டு நாட்களுக்குப் பிறகு

ரொம்ப thanks பாலா.

no problem செல்வம்.

அம்மாகிட்ட இருந்து போன் வந்ததா?

ஒரு தடவ பண்ணாங்க, நானே சமாளிச்சிட்டேன்.

Thanks பாலா.

--------*******-----------

3 வாரங்களுக்குப் பிறகு

செல்வம், உங்களுக்கு mail வந்துருக்கு.

CHASE லிருந்து credit card தர்றேன்னு மெயில் வந்துருக்கா?

இல்ல செல்வம், NT Health னு போட்ருக்கு. hospital bill னு நெனைக்கிறேன்.  

குடுங்க பாக்குறேன்.

.....

.....

.....


எவ்வளவு bill வந்துருக்கு செல்வம்?

$18,393.44

Insurance company எவ்வளவு pay பண்ணுவாங்க?

$2,000.00

Wednesday, September 4, 2013

ஆசிரியர் பா

இறைவன் ஈன்ற
ஆசுடைய மாக்களை
ஆசு இரிய மனிதர்களாக்க - எண்ணையும்
எழுத்தையும் அறிவித்து, இவன்
இவன்தான் என அண்டத்தை அறியவைத்த ஞாயிறு

எங்கள் கண்கள் காணாது காட்சிகளை
ஞானம் எனும் நீங்கள் அருளிய
ஒளி இல்லையெனில்.

விண்ணைத்தொட
எங்களை ஏற்றுவித்த ஏணி
விந்தைகள்
பலவும் அறியவைத்த ஞானி

போற்றுதலுக்கு உரியவ(ர்)ன்  இறைவன்
(மட்டும்)  அல்ல, அவனின் படைப்பை
முழுமையாக்கிய ஆசிரியர்தான்.



என்னை ஏற்றிவிட்ட படிகள்


தொடக்கம்
      திரு. சௌந்திரராஜன்

நடுநிலை
     திருமதி. தங்கரத்தினம் (நிஜப்பெயர் மட்டுமல்ல, காரணப் பெயரும்கூட) 
     திரு. தங்கச்சாமி
     திருமதி. கனலட்சுமி 
     திருமதி. ரீட்டா

மேல்நிலை
     திரு. கந்தசாமி
     திரு. ராமசாமி
     திரு. பாண்டியராஜன்

உயர்நிலை
     திரு. மூர்த்தி 
     திருமதி. அய்யம்மாள்
     திரு. ராஜாமணி
     திரு. ஸ்ரீனிவாசன்

இளங்கலை
      திரு. துளசிதாஸ்
      திரு. ராமசாமி
      திரு. வேலாயுதம்
      திரு. பெருமாள்சாமி
      திரு. சிங்காரவேலன்

முதுகலை
      திரு. வெங்கடேஷ்பாபு
      திருமதி. மாயா
      திருமதி. சோபின் சீலி
      திரு. ஜான்
      திரு. ராமலக்ஷ்மி

Wednesday, July 17, 2013

மிதிலையை தேடி

"ஆறு வருஷமா ஒரே Company ல வேலை பாக்குறேன்னு சொல்லி, பொண்ணு  வீட்ல என்ன வேணாம்னு சொல்லிட்டாங்க" 

சமீபத்தில் மணமகள் தேடி வரும் நண்பர் என்னிடம் கூறியது. 

கம்பராமாயணத்தில் சிறந்த பகுதி "சுந்தர காண்டம்" என்பது பொதுவான கருத்து. ஆனால், எனக்குப் பிடித்த பகுதி "அயோத்தி காண்டம்". அதன் காரணம், (Handsome) ராமனும், (Gorgeous) சீதையும் சந்தித்துக் கொண்ட அந்த நிகழ்வுகளை அவர் விளக்கிய விதம்.

"பெண் பார்க்கும் படலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்".


மன்னிக்கணும், இன்னும் நான், என்னப்பத்தி உங்ககிட்ட அறிமுகம் செஞ்சுக்கல.

எம் பேரு வெங்கடேசன் ராஜாராம்.

நீங்க என்ன "வெங்கட்" ன்னே கூப்பிடலாம். M. C. A படிச்சிட்டு, ஒரு தனியார்   நிறுவனத்துல வேலை பார்க்கிறேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாலதான்  MIDDLE CLASS ங்கிற STATUS  ல  இருந்து UPPER MIDDLE CLASS ங்கிற STATUS க்கு UPGRADE ஆனேன் (ஊதிய உயர்வுக்குப் பின்). 

அப்பா, GOVT. EMPLOYEE (கையூட்டு பெற முடியாத, பெற விரும்பாத துறை), இன்னும் 2 YEARS ல RETIRED ஆயிருவார். அம்மா அன்பான குடும்பத் தலைவி.

கூடப் பொறந்தவங்க  இல்லை. அப்பா, அம்மாவுக்கு ஒரே பையன். அவங்க சொல்றபடி கேக்குற நல்ல பையன் (அப்படீன்னு அவங்க நெனச்சிக்கிட்டு இருக்காங்க).

எனக்கு பொண்ணு பாக்கும் போது நடந்ததத்தான் உங்ககிட்ட சொல்லப் போறேன். 

என்னோட FRIENDS எல்லோரும் CAMPUS லையே SELECT ஆயிட்டாங்க, நான் மட்டும்தான் தேடி அலஞ்சிகிட்டு இருந்தேன்.

என்ன சொல்றேன்னு புரியலையா? படிக்கும்போதே LOVE பண்ணி, அப்புறம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டாங்க. நான் மட்டும்தான் எங்க அப்பா அம்மாவோட RECOMMENDATION காக WAIT பண்ணேன்.

பொண்ணு தேட ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, அம்மா கிட்ட என்னோட REQUIREMENTS எல்லாம் சொன்னேன். அதையே உங்ககிட்டையும் சொல்றேன்.
       
1. SLIM மா அழகா இருக்கணும், குறிப்பா என்ன விட COLOR ரா இருக்கணும்.
     
இதே மாதிரி பொண்ணுங்களும் கேட்டா, உனக்கு எப்படி கல்யாணம் ஆகும்.?

2. B. E / M.C.A / M.Sc படிச்சிருக்கணும்.    

எதுக்கு வேலைக்கு அனுப்பலாம் னு PLAN னா?

3. உயரம் 5, 6" to 5, 8" இருக்கணும்

கல்யாணத்துக்கு பொண்ணு வேணுமா, இல்ல Military க்கு ஆள் வேணுமா?

4. நகை, பணம்னு எதுவும் வேண்டாம்
         
பரவயில்லையே... ஆச்சர்யகுறி

5. UPPER MIDDLE CLASS FAMILY யா, வீட்டுக்கு ஒரே பொண்ணா இருந்தா பரவால்ல.

இப்போ புரியுது உன்னோட தாராள மனசும், தொலைநோக்குப் பார்வையும்.

6. கவிதை எழுத தெரியனும், குறைந்தபட்சம் ரசிக்கவாவது தெரியனும்.

எதுக்கு, உன்னோட கிறுக்கள்கள வசிக்க ஒரு ஆளாவது வேணுமோ?

7. தலைமுடி இடுப்பு வரைக்கும் இருக்கணும்.

இப்பெல்லாம், பொண்ணுங்களுக்கும் வழுக்கை விழுது, ரொம்ப கஷ்டம்....

8. நல்லா "தமில்" பேசத் தெரியனும்.

உனக்கு "தமிழ்" னு  சொல்லவே தெரியலையே...

   
நான் சொன்ன ஒவ்வொரு POINT க்கும் நீங்க உங்க மனசுக்குள்ள பச்ச, பச்சையா என்ன நினைச்சீங்கன்னு, எனக்கு நல்லா தெரியுது.

வேலைக்கு APPLY பண்ணும்போது கூட, நான் இவ்வளவு சிரமப்படலங்க. ஆனா, இந்த பொண்ணுங்க வீட்ல கொடுக்க தயார் பண்ண BIO-DATA இருக்கே, அத முடிக்கிறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடிச்சி. ஒரு வழியாக தரகர் கிட்ட MODEL ஒன்ன வாங்கி, அம்மா, அப்பா, உதவியோடு கடைசியாக எனக்குன்னு ஒரு BIO-DATA தயார் பண்ணிட்டேன்.

அதுக்கு முன்னால வரைக்கும், சினிமா பாக்குறது இல்லாம எனக்கு வேற எந்தப் பொழுது போக்கும் கிடையாது.  எனக்கு BIO-DATA மாதிரி கொடுத்த மகராசன், "புத்தகம் படிப்பது" னு அவரோட பட்டியல்ல போட்டு இருந்தாரு. நல்லா இருந்ததுன்னு அத சுட்டு என்னோட BIO-DATA ல போட்டுக்கிட்டேன். ஒருத்தங்க கிட்ட இருந்து நல்ல விசயத்த கத்துக்கிறது நல்லதுதான, அதுனால தான்.

என்ன கொடுமை சரவணன் இது? 

இப்போதாங்க முக்கியமான கட்டம், "PHOTO".

நம்ம ஊர்ல, ஒரு STUDIO ல கூட யாருக்கும் PHOTO எடுக்கவே தெரியலங்க.

இப்போ என்ன எடுத்துக்கோங்க, நேர்ல பார்க்க எவ்வளவு SMART டா, HANDSOME மா இருக்கேன்.

கடவுளே...

PHOTO ல பார்த்தா, ரொம்ப சுமாராத்தாங்க தெரியுது.

ஜட்டில அய்யய்யோ தப்பு,  சட்டியில என்ன இருக்கோ அது தான அகப்பைல வரும்.

என்ன செய்ய? சுமாரா இருந்தாலும் போதும்னு, இருக்குற PHOTO வ குடுத்தேன். பெருசா எந்த RESPONSE ம் இல்ல.

கல்யாண வீடு, கோவில்னு ஒன்னு விடல. சொந்தகாரங்க யாரு கல்யாண  பத்திரிக்க குடுத்தாலும் சரி, எந்த நாளா இருந்தாலும், எந்த ஊரா இருந்தாலும் பரவாயில்லன்னு OFFICE க்கு LEAVE போட்டிட்டு கூட சுத்திப் பாத்தேன். ஒன்னும் அமையல.

இதுவரைக்கும் ஜாதக பொருத்தம் பார்க்க குடுத்த காசுல சென்னைல ஒரு வீடே வாங்கி இருக்கலாம்.

கொஞ்ச நாள் போனதுக்கப்பறம் எங்க அம்மாவே சொல்லிடுவாங்க. இந்த STAR க்கு, இந்த PLANET க்கு இந்த SATELLITE தான் பொருந்தும்னு. எங்க அம்மா பொருத்தம் பார்த்து சரின்னு சொன்னாதான் அடுத்து ஜோசியர்கிட்ட போறது.

அப்படித்தான் ஒரு நாளு அந்தப் பொண்ணோட ஜாதகம் வந்தது. அம்மாவும் பொருத்தம் இருக்குதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன பொண்ணப் போய் பாக்க வேண்டியதுதான். என்னோட முதல் அனுபவம்.

டார்க் பிரவுன் கலர் புடவை ல வந்தது பொண்ணு. நல்லா இல்லேன்னு சொல்ல முடியாது. ஆனா கொஞ்சம் அதிகமா சதைப்பிடிப்போடு இருந்தது. பெங்களுர்ல வேலை பாக்குறதா சொன்னாங்க.

சினிமா பார்த்து வளர்ந்த பலவீனமான கூட்டத்துல நானும் ஒருத்தன், அதனால பெட்டர்மாஸ் லைட் டேதான் வேணும்னுட்டு, அந்தப் பொண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன்.

அதுக்கு அடுத்த வாரம் எங்க வீட்ல இருந்து போன் பண்ணாங்க, எங்க ஊர்லையே இன்னொரு பொண்ணு இருக்குதுனு. அவங்க அந்தப் பொண்ண ஏற்கனவே பாத்துட்டாங்கலாம், எல்லாருக்கும் புடிச்சிருக்குதாம், நான் வந்தா மட்டும் போதும், பேசி முடிச்சிரலாம்னு சொன்னங்க.

வெள்ளிகிழமை OFFICE க்கு போறதுக்கு முன்னாலையே "லூயிஸ் பிலிப்பே" ஷோ ரூம்க்கு போய் லைட் கலர்ல ஒரு ஷர்ட் வாங்கிட்டேன். அந்த மாதிரி ஷர்ட்லதான் நான் கொஞ்சம் ப்ரைட்டா தெரிவேன். அடுத்த நாள், சலூன்ல போய் ஷேவ் பண்ணிட்டு காலைலையே ரெடி ஆயிட்டு, சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணேன்.

05:00 மணிக்கு கிளம்பி பொண்ணு வீட்டுக்கு போனோம், முதல் மாடில வீடு. படில ஏறி உள்ள போகும் போது பொண்ணோட அம்மா வந்தாங்க. எங்கள ஹால்ல உட்காரச் சொல்லிட்டு, ரூக்குள்ள போயிட்டாங்க கொஞ்ச நேரம் கழிச்சி வந்தாங்க. காபி, பலகாரம் எல்லாம் பொண்ணோட அம்மாதான் குடுத்தாங்க. கடைசி வரை பொண்ணு வெளிய வரவே இல்ல. எங்க மாமா  "பொண்ண கூப்பிடுங்கன்னு" கேட்கவே செஞ்சிட்டாரு. அப்புறமா பொண்ணு வெளிய வந்தாங்க. என்னோட முதுகிக்கு பின்னால நின்னிட்டு அப்படியே உள்ள போயிட்டாங்க. அடுத்த 2 நிமிஷத்துல நாங்களும் கிளம்பிட்டோம். கடைசிவர பொண்ணப் பாக்கவே இல்லை.

ரெண்டு நாள் கிழிச்சிதான் விசயமே தெரியவந்துச்சி, எங்க அம்மா, அப்பாவ பாத்துட்டு நானும் கலரா இருப்பேன்னு பொண்ணோட அம்மா தப்பா நினைசிட்டாங்களாம். என்ன முதல்லையே பாத்திருந்தா, எங்கள பொண்ணு பாக்க வரச்சொல்லி இருக்க மாட்டங்களாம்  

அதுக்கு அப்புறம் தான் கண்ணாடில என் முகத்த இன்னொரு தடவ நல்லா பார்த்தேன். என்னுடைய கற்பனை மனைவிக்கு அதுவரைக்கும் போட்டிருந்த மேக்கப்ப கொஞ்சம் மாத்திட்டேன். ரெண்டு மூணு வாரம் ஆயிரிச்சி மனசுல பட்ட அந்தக் காயம் சரியாக.

அதுக்கப்புறம் எங்க வீட்ல தெளிவா சொல்லிட்டேன், நான் கலர் கம்மிதான்னு முதல்ல சொல்லிரனும்,போட்டோவயும் காட்டிரணும்.அதுக்கப்புறமும் பொண்ணு வீட்ல புடிச்சிருந்தாவேணா  போயி பொண்ணப் பாக்கலாம். இப்படி சும்மா சும்மா அவமானப் படமுடியாதுனு.

நான் சொன்ன மாதிரியே எங்க வீட்லயும்,என்னப்பத்தி சொல்லி போடோவையும் காட்டி ஒரு பொண்ண முடிவு பண்ணாங்க. ரெண்டுபேர் வீட்லையும் எல்லாருக்கும் புடிச்சி போச்சி. நானும், பொண்ணும் நேர்ல பாக்கணும் அவ்வளவுதான். பொண்ணு, சென்னைலதான் வேலை பாக்குறதா சொன்னங்க. அதனால ரெண்டுபேர் வீட்லயும் பெரியவங்க சென்னைக்கு வந்துட்டு, வடபழனி முருகன் கோவில்ல வச்சி பொண்ணு பாக்குறதா பேசி முடிச்சாங்க.

வெள்ளிக்கிழம காலைலே எங்க அப்பா, அம்மா MORNING TRAIN ல சென்னைக்கு கிளம்பிட்டாங்க. கிளம்புறதுக்கு முன்னால எனக்கும்,பொண்ணு வீட்டுக்கும் போன் பண்ணி "கிளம்புரோம்னு" சொல்லிட்டாங்க.

ஒரு மூணு மணிநேரம் கழிச்சி மறுபடியும் எங்க அம்மா எனக்கு போன் பண்ணாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, பொண்ணோட தம்பி எங்க அப்பாகிட்ட போன்ல பேசினதாகவும், நாளைக்கு பொண்ணு வீட்ல இருந்து யாரும் கோவிலுக்கு வரப்போறது இல்லைன்னு சொன்னதாகவும்,  சொன்னங்க. வேற எதுவும் சொல்லாம உடனே கட் பண்ணிட்டாங்காலமா. மறுபடி எங்க அப்பா போன் பண்ணா, யாருமே எடுத்து பேசலன்னு சொன்னங்க.

வெறுப்பின் உச்சத்துக்கே போன என்னோட அப்பாவும், அம்மாவும் அடுத்த ஸ்டாப்லயே இறங்கி அப்படியே திரும்ப ஊருக்கு போயிரலமானு முடிவு பண்ணிட்டாங்க. அப்புறம் நான் தான் சமாதனப் படுத்தி சென்னைக்கு வரச்சொன்னேன்.

திங்கள் கிழமை திரும்ப எங்க ஊருக்கு போன அப்பா, தரகர்கிட்ட விசாரிக்கும் போதுதான் தெரிய வந்தது. அந்தப் பொண்ணு, கூட வேலை பாக்குற பையனை வீட்ல சொல்லாம ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டதாம். இந்த விஷயம் அவங்க வீட்டுக்கே வெள்ளிகிழமதான் தெரியுமாம். கோபமா போன எங்கப்பா, இந்த விஷயம் தெரியவும் பொண்ணோட அப்பாவுக்கு அறுதல் சொல்லிட்டு பாவமா திரும்பி வந்தாரு.    

இந்த மாதிரி மொத்தமா நாலு Incidents நடந்தது எனக்கு. அதுக்கப்புறம், இனிமே பொண்ணே பாக்கப் போறதில்லன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த சமயத்துலதான் வேலை விஷயமா வெளிநாடு போக வேண்டி வந்தது. இத காரணமா வச்சி எங்க வீட்ல சொல்லிட்டேன். நீங்களே ஒரு பொண்ண பார்த்து முடிவு பண்ணி, கல்யாணம் Fix பண்ணிட்டு, என்னக்கு சொல்லுங்க தாலி கட்டுறதுக்கு மட்டும் நான் வர்றேன்னு.

5 மாசத்துக்கு அப்புறமா, மறுபடியும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சது. "பொண்ணு வீட்ல பாக்கணும்னு சொல்றாங்க"னு எங்கம்மா போன் பண்ணாங்க. SKYPE ல பார்க்கலாம்னு DATE, TIME Fix பண்ணிட்டோம்.

அந்த நாளும் வந்துச்சி, SKYPE ல VIDEO வ ON பண்ணா CALL  CUT ஆகுது. LOW BANDWIDTH காரணமா ரெண்டு பேருடைய முகம், ரெண்டு பேருக்கும் தெரியல. மறுபடியும் இன்னொரு நாள் TRY பண்ணினோம், அப்பாவும் இதே PROBLEM தான்.

இதுக்கு இடைல என்ன நடந்ததுன்னு தெரியல, பொண்ணு வீட்ல ஒத்துகிட்டு கல்யாணத்துக்கு நாள் பார்த்துட்டாங்க. நான் இல்லாமலே நிச்சயதார்த்தம் முடிஞ்சது.

நிச்சயதார்த்த போட்டோ தான் எனக்கு அனுப்பினாங்க.போட்டோ வ பார்த்துட்டு மோசம் இல்லன்னு தோணுச்சி.கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலதான் ஊருக்கு போனேன், என் வருங்கால மனைவியை பார்க்க.
            
பொண்ணு, அவங்க பாட்டி வீட்ல இருந்தாங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துலதான் அவங்க பாட்டி வீடு, என்னப் பாக்க  வெட்கப்பட்டுகிட்டு கதவுக்கு பின்னால  போய் ஒளிஞ்சிருந்த டார்லிங்க, எங்க அம்மாதான் வெளிய கூட்டி வந்தாங்க.

1. Slim மா, அழகா, என்ன விட COLOR ரா.

2. M.Sc படிப்பு     

3. உயரம் 5, 6"

4. நகை, பணம் -  (இஹிஹிஹி )

5. Upper Middle Class Family, வீட்டுக்கு ஒரே பொண்ணு.

6. கவிதை ரசிக்க தெரியும்.

7. தலைமுடி இடுப்புக்கு மேல வரைக்கும்.

8. நல்லா "தமில்" பேச தெரியும்.


இன்னமும் நம்ப ஊர்ல யாருக்கும் சரியா PHOTO எடுக்க தெரியல.

கல்யாணத்துக்கு இன்னும் 6 நாள் காத்திருக்கனுமா...?

Tuesday, July 16, 2013

தந்தி

 163 வருடங்களாக இயங்கிவந்த தந்தி சேவைக்கு, ஜூலை 14 ம் நாள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தரித்திரத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட தந்தி சேவை இனி சரித்திரத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும்.

இனிவரும் ஆண்டுகளில், "வரலாற்றில் இன்று" என்று ஜூலை 14 ம் நாள், இந்திய தந்தி சேவையும் சேர்த்து தொலைக்காட்சியில் காட்டப்படும்.    

80 களின் இடையில் விஸ்வரூபம் எடுத்து இயங்கிய இந்த சேவையில், சமயங்களில் 6 கோடி தந்திகள் கூட ஒரே நாளில் அனுப்பிய மெடிக்கல்  மிராக்கில்களும் அடங்கும்.

இது போன்ற பல சாதனை விளக்கப் பட்டியல்களை பல முறை நீங்கள் சமீபத்தில் படித்திருப்பீர்கள் என்பதால், மேலும் உங்களை புள்ளி விவரம் கொடுத்து சலிப்பை ஏற்படுத்த விரும்பாமல் சொல்ல விரும்பிய செய்திக்கு வருகிறேன்.

நான் கொடுத்த முதல் (கடைசி) தந்தி...

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரையாண்டு தேர்வு விடுமுறையில்,வீட்டில் இருப்பவர்களின் உயிரை தவணை முறையில் எடுத்துக் கொண்டிருந்தேன். இதே சமயத்தில் ஊரில் இருந்து மாமாவின் புதல்விகள் இருவர் விடுமுறையில் என்னிடம் அடி வாங்கு வதற்கு என்றே பாட்டி வீட்டிற்கு வந்திருந்தனர்.

பாட்டி வீடும், எங்கள் வீடும் வெகு அருகில் இருந்தன. விடுமுறையில் என்னுடைய முக்கிய பொழுதுபோக்கு என்னவென்றால் அக்கா, தங்கை, தம்பி (தம்பி,தங்கை இருவரும் சித்தியின் வாரிசுகள்) மற்றும் மாமா மகள்கள் அனைவரையும் பட்டியல் போட்டு பந்தாடுவது.

அரைமணிக்கு ஒரு முறை யாராவது ஒருவர் என் அம்மாவிடம்  என்னைப் பற்றிய புகாருடன் பஞ்சாயத்துக்கு போய் நிற்ப்பார்கள். எங்கள் வீட்டின் IRON MAN வரும் வரை இது இப்படியே தொடரும்.

இந்த சமயத்தில் ஒரு நாள், காலை 10:00 மணி ஆகியும் அன்றைய அடிகளை வாங்க அன்னக்கிளிகள் வரவில்லை. சிறுது நேரம் கழித்து பாட்டிதான் வந்தார். மாமாவின் மூத்த மகள் பூப்படைந்து விட்டதாகவும் அந்த செய்தியை மாமாவின் வீட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்தார்.

அன்றைய தினம் எங்களின் உற்றார் உறவினர் யார் வீட்டிலும் தொலைபேசி கிடையாது. விரைவாக செய்தி அனுப்ப தந்திதான் ஒரே வழி, கையில் கொஞ்சம் காசு கொடுத்து (சுருக்கமாக) தந்தி கொடுக்க என்னை அனுப்பினர்.

இந்த நிகழ்விற்கு சில நாட்களுக்கு முன்பு, எங்கள் வகுப்பு ஆசிரியை தங்கரத்தினம் அவர்கள், அவரின் சொந்த ஆர்வத்தாலும், தன்னுடைய மாணவர்களின் நடைமுறை வாழ்விற்கு தேவையான அறிவை வளர்த்துக் கொள்ளவும் பல முயற்சிகளையும் எடுப்பார்கள். அதில் ஒன்றுதான் தந்தி எவ்வாறு அனுப்பவேண்டும் என்பது குறித்த விளக்க வகுப்பு. 

"நானெல்லாம் எதுக்கு தந்தி அடிக்கப் போறேன்", என்ற எண்ணத்தில் அரைகுறையாக ஏதோ கற்றுக்கொண்டதாக நினைவு.

பணத்தை வங்கிக் கொண்டு, கோவில்பட்டி மெயின் ரோடு,  பாரத ஸ்டேட் வங்கிக்கு அருகில் இருந்த தந்தி அலுவகத்திற்கு சென்றேன். அலுவலரிடம் இருந்து படிவம் பெற்றுக்கொண்டேன். அனுப்புநர் மற்றும் பெறுனர் குறித்த விவரம் நிரப்பப்பட்டு விட்டது. அடுத்தது செய்தி...

முதலில் அனுப்ப வேண்டிய செய்தியை தனியாக ஒரு காகிதத்தில் எழுதினேன்.

"<பெயர்> குத்த வச்சிட்டா "

"<பெயர்> சமஞ்சிட்டா."

நல்லா இல்லையே, சரி இப்படி சொல்லுவோம்.

"<பெயர்> பெரிய மனுசி ஆயிட்டா. மஞ்சள் தண்ணி நாளைக்கு ஊற்றுகிறோம். உடனே வரவும் "

அடுத்து தான் "Mission: Impossible", இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது எப்படி?

இத அப்படியே மாத்துவோம், அவ்வளவு தானே. என்று மனதை தேற்றிக் கொண்டு பலமுறை முயன்றும் செய்தியை தொடங்கக்கூட முடியவில்லை.  தந்தி அலுவலரிடமும் உதவி கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அருகில் மிடுக்கான உடை அணிந்த ஒருவர் தந்தி படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். அவரிடம் உதவியை நாடலாம் என்று முயன்று பார்த்தேன்.

நான் கூறிய செய்தி அனைத்தையும் முழுமையாக கேட்டுவிட்டு, என்னைப் பார்த்து  "என்ன படிக்கிற" என்றார். 8 ம் வகுப்பு என்று நான் கூறியதும். என்னையும் இந்த சமுதாயத்தையும் கடுமையாக சாடினார். 8ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இந்த சாமர்த்தியம் கூட இல்லையே என்று. போனால் போகட்டும் நமக்கு உதவி செய்தால் போதும் என்று நினைத்தேன் ஆனால் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டேன், வேறு யாரிடம் உதவி கேட்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் முந்தய அந்த மிடுக்கு மனிதரை கவனித்தேன். அவரும் செய்தியை சொந்தமாக எழுதவில்லை, யாரோ எழுதிக் கொடுத்ததை அச்சு பிறளாமல் பிரதி எடுத்துக் கொண்டிருந்தார்.

இனி யாரிடமும் உதவி கிடைக்காது என்பதால், என்னிடம் இருந்தே உதவியை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்து மீண்டும் நான் ஏற்கனவே எழுதி வைத்த செய்தியை மொழி மாற்றம் செய்ய முயன்றேன்.

            
"<பெயர்> பெரிய மனுசி ஆயிட்டா. மஞ்சள் தண்ணி நாளைக்கு ஊற்றுகிறோம். உடனே வரவும் "

"<NAME> IS BIG LADY NOW. YELLOW WATER TOMORROW. START NOW".

இந்த செய்தி பொறிக்கப்பட்ட படிவம் அலுவலரின் கைக்கு மாறியது. எந்த சலனமும் இல்லாமல் அவரும் வங்கிக் கொண்டார். செய்தியும் காற்றில் பறந்தது.  

அன்று மாலையே என்னுடைய மாமாவும், அத்தையும் வந்ததன் மூலம், நான் அனுப்பிய தந்தி அவர்களுக்கு சென்று விட்டது, புரிந்தும் விட்டது என்பதை நினைத்த போது, கொல்கத்தாவில் இருந்து டைமண்டு ஹார்பர்க்கு முதல் தந்தி அனுப்பியவரின் வெற்றிக்களிப்பை அன்று நான் உணர்ந்தேன். 

Friday, April 19, 2013

A for அம்மா


புவி ஈர்ப்பு விசையை விளக்கிய நியூட்டன் கூட பணமீர்ப்பு விசையை விளக்க வில்லை. வர்க்க பேதம் ஏதும் இல்லாமல் அனைவரையும் எல்லையில்லாத ஆற்றலுடன் தன்னை நோக்கி வசீகரிக்கும் உலகின் உண்ணத விசை. அதன் ஆற்றலுக்கு நானும் தப்பவில்லை.

ஆங்கில வழிக்கல்வியே பெற்றோருக்கு கனவாக இருந்தபோதும், கல்விக்கண் திறந்தவர் பெயரில் இயங்கும் பள்ளிகளில் கூட கட்டணம் கடுமையாக இருந்ததால், வீட்டுக்கு அருகில் இருந்த அரசு உதவி பெறும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் தஞ்சம் அடைந்தேன்.

ஆங்கிலம் எப்போதுதிருந்து என்னை மிரட்டத் தொடங்கியது என்று சரியாக நினைவில்லை, ஆனால் முதல் நடுநிலை (6 -8) வகுப்பில் விடுப்பு விண்ணப்பத்தில் தொடங்கியதாக நினைவு.மிகவும் எளிதான  விண்ணப்பத்தை ஆங்கில ஆசிரியை (பள்ளிக்குப் புதிதாக வந்தவர்) கரும்பலகையில் எழுதிவிட்டார். அப்போது பசுமரத்தாணி போல என் மூலையில் இறங்கியதுதான் "As I am suffering from fever"(இன்றுவரை அதுதான் என்னுடைய எல்லா விடுப்பு விண்ணப்பத்திற்கும் மூலம்).

மறுநாள் வீட்டுப்பாடமும் கொடுத்து விட்டார். "அண்ணனின் திருமணதிற்கு செல்வதற்காக விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்". ஆங்கிலப் புத்தகம் முழுவதும் தேடியும் அண்ணன் திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை. என்ன செய்ய? இருக்கும் கொஞ்ச மூளையும் கசக்கிப் பிழிந்து காகிதத்தில் கொட்டிவிட்டேன்.

அன்று முதல் வகுப்பே ஆங்கிலம் தான். அகர வரிசையில் என் பெயர் முதலில் வருவதால், ஆசிரியை கையில் தானாக வந்து சரணாகதி அடைந்தது நான் எழுதிய விடுப்பு விண்ணப்பம்.அதைப்  படிக்கத் தொடங்கிய ஆசிரியை என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அனைவருக்கும் கேட்கும் வகையில் உரக்க வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

"As i am suffering from my brother's marriage" என்று போனது அந்த விண்ணப்பம். அதை வாசித்த போது, ஆசிரியை மாணவர்களிடம் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்திருப்பார் போல, ஆனால் வகுப்பு அமைதியாக இருந்தது. மற்ற மாணவர்கள் சலமில்லாமல் புத்தர் போல காட்சியளிப்பது ஏன் என்ற காரணம் புரியாமல் மற்ற விண்ணப்பங்களையும் விசாரணைக்கு ஆட்படுத்திய போதே அவருக்கு உண்மை புரிந்தது. அதிக ஓட்டுக்களைப் பெற்று முன்னணியில் இருந்தது நான் எழுதிய விண்ணப்பமே. எங்களின் சமயோசித புத்தியை பாராட்டி ஆளுக்கு 5 பிரம்படிகளை உள்ளங்கையில் பரிசாக வழங்கினார் (பிரம்பும் எங்கள் பணத்தில் வாங்கியது).

ஆங்கிலத்தில்தான் அரைகுறை என்றால் தமிழையும் போற்றிப் படிக்கவில்லை. வாத்தியாருக்கு அடுத்தபடியாக வசைச்சொற்கள் வாங்குவது வள்ளுவர்தான். அவரின் பெரும்பாலான குறள்கள் புரியவில்லை, அதன் சுவையை எவரும் புரியும் படி எங்களுக்குப் புகட்டவில்லை.
     
வருடங்கள் ஓடியது ஆனால் மூளையின் ஆங்கில மொழிப்பகுதி மட்டும் அப்படியே வளராமல் நின்று விட்டது. பொதுத் தேர்வுகளில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்க்கான சில வழிமுறைகளை மட்டும் கண்டறிந்து கொண்டதால் எந்த பொதுத்தேர்வினிலும் தவறியதில்லை.

பள்ளியில் ஆங்கிலப் பாடம் மட்டும் தான் ஆங்கிலம், கல்லூரிக்குச் சென்ற பிறகு தமிழ்ப் பாடம் தவிர்த்து அனைத்தும் ஆங்கிலம். என்னைப் போன்ற மாணவர்களின் மொழிப் புலமையை புரிந்துகொண்டு பெரும்பாலான விரிவுரையாளர்களும், பேராசியர்களும் தமிழ்வழி ஆங்கிலக்கல்வி போதித்து தமிழ்த் தொண்டாற்றினர். இதன் உச்ச கட்டம் ஆங்கிலப் பேராசிரியர்களும் இந்த தமிழ்த் தொண்டில் தங்களை இணைத்துக் கொண்டதுதான்.

கல்லூரி பேராசிரியர்களின் தமிழ்த்தாகத்திற்கு முதுகலை பயிலும் போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.கல்விக்கு மட்டுமல்ல கருத்துப் பரிமாற்றத்திற்கும் கட்டாயமாக்கப் பட்டது கடல் கடந்து வந்த மொழி.

ஆங்கிலத்தில் நடக்கும் (seminar)கருத்துப் பரிமாற்ற வகுப்பில் பங்கேற்கவில்லை எனில் இந்தியர்கள் கண்டுபிடித்த அதே எண்தான்  (zero ) மதிப்பெண்ணாகும் என்ற கட்டாயத்தில் 3 மணிநேர தயாரிப்பிற்குப் பின் 35 நிமிட ஆங்கிலம் முழுமதிப்பெண் வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து மூன்று வார்த்தைகள் பேசப் பயந்த எனக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. சரியோ தவறோ எதற்கும் அஞ்சவில்லை.ஆங்கிலக் கால்வாயை குற்றாலீஸ்வரனுக்கு அடுத்து நான்  கடந்தது போல உணர்ந்தேன். என்னுள் புதைந்திருந்த அந்நியன் வேகமாகவும் விரைவாகவும் வெளிவரத் தொடங்கினான். நாட்கள் நன்றாக நகர்ந்து கொண்டிருக்க பணியில் சேர்ந்தபிறகு  Onsite வடிவத்தில் வந்தது ஆபத்து.

2008 மே மாதம், பல கனவுகளோடு விமானத்தில் ஏறினேன் அமெரிக்காவிற்கு.விமான நிலையத்திலேயே தொடங்கியது சிக்கல். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அமெரிக்க கண்டத்திற்கு குடிபெயர்ந்த, வஞ்சனையில்லாமல் குறுக்கும், நெடுக்கும் வளர்ந்த அந்த விமான நிலையப் பெண் அதிகாரி ஏதோ கேட்டார், புரியவில்லை மீண்டும் கூறுங்கள் என்றேன். மீண்டும் அதையே அதே சுவரத்தில் கேட்டார் (அதைத்தானே முன்பு புரியவில்லை என்றேன், மீண்டும் அதையே கேட்டால் புரிந்து விடுமா?), இம்முறையும் புரியவில்லை என்றேன். பூமாதேவியை மிஞ்சும் பொறுமை உடைய அந்தப் பெண்மணி ஒரு புழுவைப் பார்பதைப் போல என்னை பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். நான் விட்டால் போதும் என்று அந்த இடத்தை காலி செய்தேன்.

மறுநாள் காலையில் அலுவலகம், உள்ளே நுழைந்ததும் சிரித்த முகத்துடன் வரவேற்ப்பு கிடைத்தது, வரவேற்ப் போடு நிற்காமல், "How are you doing?" என்று அவர் கேட்க, "good" என்று கூறிவிட்டு வந்து Google லில் தேடினேன் சொன்னது சரிதானா என்று. அடுத்த 5 நிமிடத்தில் status meeting இருப்பதாக அழைப்பு வந்தது, அதற்குள் முடித்து விடலாம் என rest room க்கு சென்று அவசரமாக கடனைக்  கழித்துக்கொண்டிருக்க, மீண்டும் ஒருவர் "How is it going?" என்றார். எதைக் கேட்கிறார் என்று புரியாததால்,அசட்டுச் சிரிப்பை பதிலாக்கிவிட்டு ஓடிவந்தேன். status meeting ல் இருவர் தவிர பிறர் எவர் பேசிய ஆங்கிலமும் புரியவில்லை. அந்த இருவரும் இந்தியர்கள்.

தவறான முடிவு எடுத்து விட்டோம் என்பது கால தாமதமாகத்தான் புரிந்தது. இங்கேயே சில காலம் இருந்து சமாளிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை நினைவில் நிறுத்தினேன். இப்போது எனக்கிருக்கும் சிக்கல்கள் என்னென்ன வென்று எழுதினேன். பல மறு பரிசீலனைக்குப் பின் ஒரே ஒரு சிக்கல் மட்டும் மிஞ்சியது.

அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் சரியாகப் புரியவில்லை

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு.

"அவர்கள் பேசிய விடயத்தை அவர்களையே  இமெயிலில் அனுப்பச் சொல்லலாம்"

"Status meeting ல் அரைகுறையாக புரிந்ததை, திரும்ப நான் இமெயிலில் அவர்களுக்கு அனுப்பி சரிபார்த்துக் கொள்ளலாம்" 

அல்லது

"ஊருக்கு ஓடிவிடலாம்"  (புறநானூறு படித்துவிட்டு வந்த மாணவன் இந்த முடிவு எடுப்பது சரியாகாது)

மேற்ச்சொன்ன எந்த வழிமுறைகளும் திருப்தி  அளிக்காததால். அமரிக்க ஆங்கிலத்தின் பேச்சு வழக்கை புரிந்து கொள்ள நான் தேர்வு செய்த ஆயுதம் "ஆங்கிலப் படம்".

கவனம் சிதறக் கூடாது என்பதற்காக "G, PG, PG-13" சான்றிதழ் பெற்ற, வசனங்கள் நிறைந்த ஆங்கிலப் படங்களை தேர்வு செய்தேன். தொடக்கத்தில்  "Subtitle" எனும் பேசும் வார்த்தைகளை, எழுத்துக்களாக திரையில் காட்டும் நுட்ப்பத்தை உபயோகித்துக் கொண்டேன்.

சில நாட்கள் கழித்து "Subtitle" சேவையை நிறுத்து விட்டு (சில மணித்துளிகள்) கதாப்பாத்திரங்கள் பேசுவதை மட்டும் கேட்டு அதை எழுதி வைத்துக்கொண்டு மீண்டும் Subtitle உபயோகித்து நான் எழுதியதை சரிபார்ப்பேன்.

இதன் அடுத்த கட்டம், படத்தில் ஒருவர் பேசும் அல்லது கேட்கும் கேள்விக்கு, (படத்தின் ஒலியை சுழியாக்கி விட்டு "mute") நான் பதிலளிப்பேன்.

அலுவலகத்தில் ஒவ்வொரு கலந்துரையாடலின் போதும் புரிகிறதோ இல்லையோ என் கவனம் முழுவதையும் செலுத்தி பேசுபவர் உண்டாக்கும் ஒலி அலைகளை அப்படியே உள்வாங்கிக் கொள்வேன்.

நான் முயற்சி செய்த இந்த பரிசோதனைகள் சிறந்த பலனை அளித்தன. அதோடு நில்லாமல் சந்தர்ப்பங்களை நானே உருவாக்கிக் கொண்டு அமெரிக்கர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். உரையாடலின் பெரும் பகுதி தொழில் சம்பந்தம் இல்லாமல் பொதுவானதாக இருக்கும்படி பார்த்துக் கொண்டேன் (தொழில் சம்பந்தமான கலந்துரையாடலில் எந்த சிக்கலும் இல்லை என்பதால்).

என் தன்னம்பிக்கையை இரண்டு படிகள் குறைத்த ஆங்கிலத்தின் மேல் ஏறி 10 படிகள் உயர்ந்ததாக ஒரு புத்துணர்வு கிடைத்தது.

மனைவி, மகன் என்று ஆனபிறகு மீண்டும் அமெரிக்க வாய்ப்பு. மகன் பேசத் தொடங்கும் முன்பாகவே அமெரிக்கா வந்து விட்டதால், சுற்றிலும் இருந்த ஆங்கிலம் அவனை இருக்கப் பற்றிக் கொண்டது. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசவும் செய்கிறான். ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாங்கள் பேசும் தமிழ் அவனுக்கு ஓரளவிற்குப் புரிந்தாலும் அவனால் தமிழில் பதில் கூற இயலவில்லை. தமிழை முந்திக் கொண்டு வந்து விடுகிறது ஆங்கிலம்.

இன்னும் சிறுது காலம் இங்கே இருந்து பணம் சேர்த்து விட்டு ஊருக்குப் போகலாம் என்றால், என்னை ஆங்கிலம் வாட்டியது போல அவனைத் தமிழ் வாட்டுமோ என்ற கவலையும் சேர்ந்து கொ(ல்)ள்கிறது.

மீண்டும் மொழிப் பாடம் தொடர்கிறது எனக்கு...

A - அ, அ....   அம்மா....

Thursday, April 18, 2013

பால்

திருமணத்திற்குப் பின் சில வருடங்கள் கிராமத்திலேயே வாழ்ந்துவிட்டு, இரத்த உறவுகள் கசந்ததால் அருகில் இருந்த கோவில்பட்டிக்கு தள்ளப்பட்டனர் என் பெற்றோர்கள். கிராமத்தில் இருந்தவரை தொழுவத்தில் மாடுகளும் வீட்டில் பாலும் நிறைவாக இருந்தது. ந(க)ர(க)த்திற்கு வந்த பிறகு புதிதாக வந்த சில பல சிக்கல்களோடு பாலும் சேர்ந்து கொண்டது.

தினமும், காலையில் பாலுடன் வீட்டு வாசலுக்கே வந்துவிடுவார் அண்ணாமலை. ஊரெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடினாலும் அண்ணாமலையின் கிணறு மட்டும் ஜீவ ஊற்றை தன்வசம் கொண்டிருந்ததால் நிறமற்று, மணமற்று, சுவையற்று இருந்த நீருக்கு சிறிதளவு பாலின் குணத்தை புகுத்தி குறைந்த விலையில் விநியோகித்து சமுதாயத் தொண்டாற்றினார் அண்ணாமலை.

ஆசுகவி காளமேகப் புலவர் புகழ்ந்து பாடிய அந்த ஆய்ச்சியின் பேரப்பிள்ளை தான் இந்த அண்ணாமலை.

"கார் என்று பேர் பெற்றாய்

ககனத்தே உறும்போது

நீர் என்று பேர் பெற்றாய்!

நீணிலத்தில் வந்ததன் பின்

வார் என்றும் மென் கொங்கை

ஆய்ச்சியர்கை வந்ததன் பின்

மோர் என்று பேர் பெற்றாய்!

முப்பேரும் பெற்றாயே!"


எங்கள் வீட்டில் அன்னப் பறவை இல்லை, அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கோவில்பட்டி நகராட்சியில் கட்டணம் செலுத்தி தண்ணீர் வாங்குவது போதும்,  மீண்டும் அண்ணாமலையிடமும் வாங்க வேண்டும் என்று அவரிடம் பால்(?) வாங்குவதை நிறுத்தினோம்.

உணர்ச்சி வசப்பட்டு அண்ணாமலையை உதறியதன் பின் விளைவு, எங்கள் வீட்டில் பசுமாடு ஒன்று கன்றுக் குட்டியுடன் தஞ்சமடைந்தது. எங்கள் குடும்பத்திற்குத் தேவையானது போக மீதம் இருந்த பால் விற்ப்பனைக்கு.

பசும் பாலில் இயற்கையாக இருக்கும் 87% சதவீதம் நீரைத் தவிர்த்து மேலும்  அதிகப் படியாக நீர் எதுவும் சேர்க்கக் கூடாது என்பது அம்மாவின் அன்புக்கட்டளை. அதன்படியே பால் வியாபாரமும் நடைபெற்றது. 

சில நாட்கள் சென்ற பிறகு, பல செவிகள் வழியாக திரிந்து வந்தது அந்தச் செய்தி 

"தேனெடுத்தவன் புறங்கையை பின்னாலயா தடவுவான் ?" 

ஏற்கனவே எங்கள் ஊரில் இருந்த அண்ணாமலைகளின் பட்டியலில் நாங்களும் சேர்க்கப் பட்டோம். வருத்தப்பட எதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த என் அம்மா, இந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து, ஆத்திரமடைந்து, கொதிப்படைந்து வழக்கம் போல வேறேதும் செய்ய முடியாமல் சமுதாயத்தை கோபம் தீர திட்டிவிட்டு, பால் விற்ப்பனைக்கு அன்றுடன் முற்றுப் புள்ளி வைத்தார். அடுத்த சில நாட்களிலேயே மாடும் வேறொருவருக்கு விலை போனது. 

மீண்டும் பாலுக்காக தெருவுக்கு வந்தோம்.

இந்த முறை நிச்சயம் அண்ணாமலை அல்ல "ஆவின்" பாக்கெட் பால். அன்றைய காலகட்டத்தில், இப்போது உள்ளது போல பால் விற்கும் வேறு தனியார் நிவனங்கள் இல்லை.பாக்கெட்களில் விற்ப்பனைக்கு வருவது ஆவின் மட்டுமே. முதலில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்த ஆவின் பால் சில            மாதங்களில் எங்களை சிக்கலில் தள்ளியது.

அவ்வாறு பால் தட்டுப்பாடு உள்ள கால கட்டங்களில் ஆவின் பால் விற்கும் முகவர்தான் ஊரில் மிகவும் மதிப்பு மிக்க மனிதர்.அன்றைய தினம் பால் காப்பி குடிக்க வேண்டும் என்றால் காலையில் 5 மணிக்கெல்லாம் வரிசையில் நிற்கவேண்டும். சில நிமிடங்கள் தாமதமானாலும் அன்றைய தினம்  கடுங்காப்பிதான்.

எங்கள் முழுக் குடும்பமும் காப்பியின் போதைக்கு அடிமையாகி இருந்தது. காலையில் காபி குடிக்கவில்லை என்றால் எந்த வேலையும் நடக்காது. அதனால் சரியாக அட்டவணை போடப்பட்டு பால் வாங்கும் வேலை எனக்கும், என் அக்காவிற்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது. 

அன்று என் முறை, தூக்கத்திடம் செய்த உடன்படிக்கையை 10 நிமிடம் மீறியதால், பால் பறிபோனது. என்னையும் சேர்த்து அனைவருக்கும் போதை வஸ்த்து கிடைக்காத ஆத்திரம் தலைக்கு ஏறியது. வேறு யாரிடமும் அதை காட்ட முடியாததால் அனைவரின் ஆத்திரமும் என் மேல் திரும்பியது. நான் மிகுந்த கோபத்தோடு அவை அனைத்தையும் வாங்கிக் கொண்டேன்.

பால் இல்லாததை காரணம் காட்டி அன்றைய தினம் விடுப்பு எடுத்து விடலாமா என்று எண்ணிய போது முதல் நாள் இன்று நினைவுக்கு வர, வாயையும் சேர்த்து மூடிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.   
       
பள்ளியில் அன்று முதல் வகுப்பு "தமிழ்" பாடம். நற்றிணையில் 172 வது பாடலை விளக்க ஆரம்பித்தார் "தமிழ் அம்மா".

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே -
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே,
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடி நீழல் பிறவுமார் உளவே

இந்தப் பாடலை அவர் வாசிக்கும் போது வழக்கம் போல ஒன்றும் புரியவில்லை. அதன் விளக்கத்தை கூறிய போதுதான் நான் வெறியானேன்.

அடிமனதில் ஆத்திரத்தை மூட்டிய இந்தப் பாடல் ஆண்டு முழுவதும் என்னைத் துரத்தியது.

"புன்னை மரத்தின் பெருமைகளாக அன்னை கூறியவை யாவை? " என்ற கேள்வி ஆண்டு இறுதித் தேர்வில் தவறாமல் இடம் பிடித்தது.

அந்தப் பாடலின் விளக்கம்

"குழந்தைப் பருவத்தில் மணலில் விளையாடும் போது தலைவி புதைத்து வைத்த புன்னை விதை துளிர் விடத் தொடங்கியது. அது வளர்வது கண்ட தலைவி அதற்குப் பாலும், தேனும் கலந்து ஊற்றி வளர்த்து வந்தாள்.

அதைக் கண்ட தலைவியின் தயார், இந்தப் புன்னை மரம் உனக்கு தங்கை முறையாகும் என்றரர்"

இந்தச் செய்தியை தோழி, தலைவனிடம் கூறினாள். மேலும் தன் தங்கையின் முன்பு தலைவனோடு காதல் புரிவதை தலைவி விரும்பவில்லை (வெட்கப் படுகிறாள்), அதனால் விரைவாக தலைவியை தலைவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினாள்.