cookie

Saturday, November 21, 2015

தண்ணீர்! தண்ணீர்!! கண்ணீர்? கண்ணீர்??

ஒரு கையாலாகாத தமிழனின் புலம்பல்   


மூன்றுபக்கம் "குடியாலும்" ஒரு பக்கம் "சுயநலத்தாலும்" சூழப்பட்ட தமிழகம், "தீப ஆவளி"யை ஒட்டி முதலில் தண்ணீரிலும் பின்பு இருளிலும் மூழ்கியதை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று ஓடத்திலும் வண்டியிலும் மாறி மாறி பயணம் செய்ய நாம் தயாராகிவிட்டோம். இதேநிலை தொடரும் பட்சத்தில், நம்முடைய அனுசரித்துப் போகும் குணம் அதன் உச்சத்தை எட்டி, பன்றிகளைப் போல சாக்கடையில் புரள மிகச்சில வருடங்களில் நாம் பழகிக்கொள்வோம்.

மாமியாரை மிஞ்சி அன்புகாட்டும் வீட்டு உரிமையாளர்கள் காரணமாகவோ!,  சுற்றமும் நட்பும் அவர்களின் புதுமனைப்புகுவிழாவில் ஏற்றிய ஹோமகுண்டத்தில் தங்கள் வயிறு எரிந்ததின் காரமாகவோ!அல்லது "இன்னமுமா வாடக வீட்ல இருக்கீங்க" என அதீத அக்கரையில் கேட்கும் அன்பர்களின் அன்புத்தொல்லை காரணமாகவோ! குளத்திலும், குட்டையிலும் கட்டப்பட்ட காங்கிரீட் கூடுகளை அவசர, அவசரமாக கோடிகளில் வாங்கியாகிவிட்டது. இனி என்ன? மழைநீர் புகுந்தாலும், மாடு புகுந்தாலும் வாங்கிய கடனுக்கு சாகும்வரை சந்தோசமாக வட்டி கட்டலாம். நமக்கு கொடுப்பினை இருந்தால் சுமங்கலியாக முதலில் நாம் போய் சேரலாம் அல்லது நமக்கு முன்பாகவே கூடு பரலோகத்தில் இருக்கும் பிதாவை சென்றடையும்.

மக்கள் தொகை பெருகிவிட்டது. அதற்க்கேற்ப்ப குடியிருப்புப் பகுதிகளும் புதர்களாக மண்டிவிட்டன. கடைசி மரத்தையும் வெட்டியாகிவிட்டது. இனி மழையே வராது என்ற நம்பிக்கையில் நாம் குழியிலும் குடியிருக்க தொடங்கிவிட்டோம். "மெடிக்கல் மிராக்கிளாக" அவ்வப்போது கொட்டித்தீர்க்கும் மழைக்கு விடைதேட வேண்டிய அவசியம் இல்லை அது வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் நாமும், நமது "அம்மாவும்" "அய்யாவும்". 

இதுக்கு வேற வழியே இல்லையா?

இதே போன்ற நிலையில் இருந்த அமெரிக்க நகரம் ஒன்றில் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம். 

விவேகானதர் சமய உரையாற்றுவதற்கு 38 வருடங்களுக்கு முன்பு "சிகாகோ"வில் நடந்த நிகழ்வு. உலகத்தை தட்டை என தவறாக புரிந்த கொண்ட மேற்கு உலகம், "சிகாகோ"வை தட்டை என சரியாகப் புரிந்துகொண்டது. தட்டையான நிலப்பரப்பு, அதற்கு மிக அருகில் கடல் போன்ற "மிச்சிகன்"ஏரி. நீர்மட்டத்திலிருந்து ஒரு அடிக்கும் குறைவான உயரத்திலேயே நிலபரப்பு இருந்தது. கழிவு நீர் மட்டுமல்ல, எந்த நீரும் வெளியேற வழியில்லை, பள்ளம் இருந்தால்தானே பாய்ந்தோடும் நீர்!

தங்கள் நகரத்தின் "நரக" நிலையைப் புரிந்துகொண்ட மாநகராட்சி ஆணையர்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவையெடுத்து அதை செயல்படுத்த முனைந்தனர். கழிவுநீர் வெளியேறும் குழாயை ஒவ்வொரு கட்டடத்திற்கும் குழிதோண்டி அமைப்பது நடைமுறை மற்றும் பொருளாதார சிக்கல்களை உருவாக்கும் என்பதால் கட்டிடங்களின் அடித்தளத்தை உயர்த்த முயன்றனர். 

என்னது, அடித்தளத்தை உயர்த்தவா? தவறாக படித்துவிட்டோமா? என்று நினைக்கவேண்டாம். நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். அடித்தளத்தை உயர்த்துவதுதான் அவர்களின் நோக்கம். அங்கிருந்த கட்டடம் ஒவ்வொன்றும், அவை இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு 4 முதல் 14 அடிவரை உயர்த்துவதாக திட்டம் தீட்டினர். 



"திருகாணி" தத்துவத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் "ஜாக்ஸ்க்ரு" எனும் கருவியால் அடுத்த சில வருடங்களில் ஒவ்வொரு கட்டிடமாக உயர்த்தப்பட்டது. அதே இடத்தில் உயரத்தை அதிகரிக்க முடியாத கட்டிடங்கள், மர உருளைகளின் உதவிகொண்டு வேறு இடத்திற்கு உருட்டிச் செல்லப்பட்டது. இப்படியாக சில வருடங்களில் மைய நகரத்தில் இருந்த அனைத்து கட்டடங்களும் உயர்த்தப்பட்டு நிலைமை சீரமைக்கப்பட்டது.

கோவில்பட்டியில் எங்கள் வீட்டுக்கு நன்னீர் இணைப்பு கொடுக்க வந்த நகராட்சி ஊழியர்கள் பாதாளக்குழியைத் தோண்டி இரண்டு நாட்கள் மக்களை சிறைப்பிடித்து இன்னமும் எனக்கு நினைவில் நிற்கிறது. அவ்வாறிருக்கையில் சிகாகோ நகரம் இந்த வேலைகள் நடந்த சமயம் எவ்வாறு இருந்திருக்கும் என்று மலைப்போடு அந்த தகவலைத் தேட எனக்கு மேலும் ஆச்சர்யம்.

"The Brigg's  House" என்ற மிகவும் புகழ்பெற்ற அந்த தங்கும்விடுதி, இந்த வேலை நடந்த சமயத்தில் ஒரு மணித்துளி கூட தன்னுடைய சேவையை நிறுத்தவில்லை என்பது கூடுதல் தகவல்.



இது நடந்தது 19ஆம் நூற்றாண்டில். வெறும் திருகாணியை மட்டும் வைத்து தங்கள் நகரத்தின் விதியை திருத்தி எழுதினார்கள் சிகாகோ மக்கள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதன் உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் இன்னமும் நாம் யாரை குறை கூறிக்கொண்டிருக்கப் போகிறோம்?



தகவல் உதவி 
"How We Got to Now" - Steven Johnson  

படங்கள் உதவி 
Chicagology

Friday, August 14, 2015

முருகனின் வேலும், அஜைலும்


"என்னது, அஜைலும், வேலுமா? ஓ.... ஆரம்பிச்சிடீங்களா, வழக்கம் போல, சோதனை குழாய் குழந்தை, விமானம், க்ளோனிங் வரிசைல அஜைலையும் உலகத்துக்கு  சொன்னது ஆறு கோடி வருசத்துக்கு முன்னாலையே நாங்கதானு பெரும பேசப் போறீங்களா?"   

இது  போன்ற எந்த நோக்கம் இந்தப் பதிவிற்கு இல்லை...      
இந்தப் பதிவை நான் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. தேடிய சில தகவல்கள் கிடைக்காததால் கிடப்பில் போட்டு வைத்திருந்தேன். இருக்கும் தகவலை வைத்து இன்று இதை எழுதி முடிக்க வேண்டும் என்ற உறுதியோடு மீண்டும் தொடர்கிறேன்.

பல மாதங்களுக்கு முன்பு "ஸ்க்ரம்" எனும் செயல் திட்ட வரைமுறை பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது அங்கிருந்த பயிற்சியாளர், "T" வடிவ திறன்கள் குறித்து விளக்கினார். 

"இவ்வளவு காசு குடுத்து இங்க வந்து உக்காந்தா, இவரு நமக்கு 'அ'னா ,'ஆ'வன்னா கத்து கொடுத்துக்கிட்டு இருக்காரு. குடுத்த காசு எல்லாம் வீனா போச்சு..."     

இந்த " T " வடிவத்தில், மேலே கிடைமட்டமாக ஒன்றும், அதன் கீழே நடுவில் செங்குத்தாக ஒன்றுமாக இரண்டு கோடுகள் உள்ளன.

"அது தான் பாத்தாலே தெரியுதே, மேல சொல்லு..."

இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன வென்றால்!

"இவரு இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றாரு..."

கிடைமட்டமாக இருக்கும் கோடு குறிப்பது, நாம் சார்ந்திருக்கும் ஒரு துறையில் மட்டுமில்லாமல், அதனோடு நேரடி அல்லது மறைமுகத் தொடர்புடைய  பல்வேறு துறைகளில், பிரிவுகளில் இருக்கும் நடைமுறைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

"சரித்தான், அப்பதான எல்ல வேலையும், இளிச்ச வாயன் ஒருத்தன் தலைமேல கட்டிரலாம்..." 

நடுவில் இருக்கும் செங்குத்தான கோடு குறிப்பது, நாம் சார்ந்திருக்கும் அந்த துறையில் நமக்கு ஐயம் நீங்கிய நுணுக்கமான, ஆழமான அறிவு "நுண்ணறிவு" வேண்டும் என்பதையே குறிக்கிறது.

"எவ்வளவு ஆழம்? பெட்ரோல் வந்தாப் போதுமா? சும்மா எரிச்சல கெளப்பிகிட்டு....

போறியா இல்ல தூக்கி அடிக்கவா..."

இவ்வாறு, அந்த பயிற்சியாளர் விளக்கி கொண்டிருக்க. மூளையின் பின் பகுதியில் சுருள் சுருளாக வளையங்கள் நெளிந்து வளைந்து சுற்றி காலயந்திரம் இல்லாமல் 1995 ஆம்  ஆண்டுக்கு சென்றேன்.

அன்று ஞாயிறு, மாலை மணி சரியாக தெரியவில்லை. கோவில்பட்டியில் புதுப்பிக்கப் படாமல் இருந்த அதே பழைய வீடு. தொலைக்காட்சி பெட்டி இல்லாத இடத்தில் ஏதோ ஒரு பெட்டி இருந்தது. நான் படப்பிடிப்புடன் தயாராகி கொண்டிருக்கிறன். கோகுல் சந்தன பொடியை கொண்டு முகத்தில் வெள்ளையடித் கொண்டிருக்கிறேன். இருந்தும் பெரிதாக எந்த பலனும் தெரியவில்லை.

"பவுடர் அடிச்சது போதும் டா..." என்று அரசாணை வந்தவுடன் அப்படியே புறப்பட்டேன் அந்த அற்புத அனுபவத்திற்கு. ஒரே ஓட்டத்தில் "கீதா" அக்கா வீட்டை அடைந்தேன் ("சங்கீதா" அக்காவின் கடந்த கால வாழ்க்கை பாதிக்கப் படக்கூடாது என்பதால் அவரின் பெயர் கீதா என்று மாற்றப் பட்டுள்ளது). "கீதா" அக்காவின் வீட்டில் அனைவரும் அன்பானவர்கள். என்னை எப்போதும் கொலைவெறியுடன் பார்க்கும் அவரின் அப்பா, சமயம் கிடைக்கும் போதெல்லாம் விரட்டியடிக்கும் அவரின் அம்மா. அவர்களின் அன்புக்கு இன்றுவரை நான் அடிமைதான்.            

அன்று, எனக்காக காத்திருந்த "கீதா" அக்கா. என்னைப் பார்த்தவுடன். "என்னடா இவ்வளவு நேரம்?" என்று அக்கறையுடன் கேட்டு கொண்டே அந்த சிறிய கதவை திறந்து அந்த வட்ட வடிவமான பொத்தனை திருகினார். சடக் என்ற ஒலியுடன் திரை முழுவதும் ஒளியை நிரப்பியது அந்தப் பெட்டி. முதலில் புள்ளிகள் பின்பு "ப்பா ஆங் , பப்பப்பப் பா.... ஆங்" வென வெள்ளையாக சுற்றி நிழல்கள் நிஜமாகின. 

"சாரதா" எனும் திரைக்காவியம் ஒளிபரப்பாகியது. விரிவுரையாளராக அந்தப் படத்தில் நடித்தவர் என் மனம் கவர்ந்த "SSR" அவர்கள். சில நிமிடங்களில் அந்தகாட்சி, இன்னும் என் மனதை விட்டு நீங்காத அந்தகாட்சி விரிந்தது. வசனம் சரியாக நினைவில் இல்லை ஆனால் அதன் சாரம் இதுதான்.

கதையின் நாயகி, நாயகனிடம் கேட்கிறார் "அன்பின் வடிவமான அன்னை பார்வதி ஏன் முருகன் கையில் வேலை கொடுத்தார்?"

அதற்கு "SSR" அவர்களின் பதில் சிறிய விளக்கமாக இருக்கும்...  

"நம் அறிவு கூர்மையா இருக்க வேண்டும்" என்று கூறிவிட்டு கூறிய முனையை வரைவார். பின்பு அதைத் தொடர்ந்து 

"கூர்மையான அறிவு விசாலமானதாக, அகலமாக இருக்க வேண்டும்" என்று வேலின் முகப்பை வரைவார். பின்பு 

"அந்த அகலமான அறிவு, ஆழமானதகவும் இருக்க வேண்டும்" என்று வேலின் முழு வடிவத்தையும் வரைந்து முடிப்பார்.

நமக்கு வரும் இன்னல்களை ஆயுதத்தால் அல்ல அறிவால் வெல்ல வேண்டும். அந்த அறிவின் அம்சமே வேல் என்று முடிப்பார்.

இப்போது முருகனின் வேலை ஒருமுறை கூர்ந்து கவனியுங்கள்...

முருகனின் கையில் அஜைல்...                     

Sunday, July 26, 2015

இதோ எந்தன் தெய்வம்

சில நாட்களுக்கு முன்பு "கனெக்டிகட்" மாகாணத்தில் "மிடில் டவுன்" எனும் ஊரில் இருக்கும் கோவிலில் நடந்த சம்பவம்.

அன்று ஞாயிறு காலை, கோவிலில் சில பக்தர்களும் பொழுதுபோகாமல் நேரத்தை தொலைக்க வந்தவர்களுமாய் சில பலரும் அங்கிருந்தனர். எனினும் கூட்டம் அதிமாக இல்லை. அப்போது கோவில் வாசலில் இருட்டை போர்த்திக் கொண்டு வந்து நின்றது புத்தம் புதிய "நிசான் முரானோ". அது தனது சிறகுகளை மெல்ல விரிக்க அளவான, அழகான குடும்பம் பெருமையுடன் அதிலிருந்து தரையிறங்கியது. மனைவி, அப்பா, அம்மா...

மனைவி, மகிழ்வுந்தின் பின் இருக்கையில் சென்று பாதுகாப்புப் பட்டையை விலக்கி சில மாதங்களேயான தனது இளம் நகலை வெளியில் கொணர்ந்தார். கடவுளை கோவிலுக்கு வெளியிலேயே கண்ட பேரின்பத்தில் ஆனந்த தாண்டவமாடியது மழலை. 

அனைவரும் இறங்கிய பின்பு கணவன் வாகனத்தை சரியாக நிறுத்தியுள்ளோமா என மீண்டும் மீண்டும் பரிசோதித்து கொண்டிருக்கும்போது, "எல்லாம் சரியாத்தான் இருக்கு, வா(ங்க) போகலாம்" என்று  மனைவி தெலுங்கில் அழைக்க(?), வெளியேறினார் கணவன். அனைவரையும் வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, கணவன் மட்டும் கோவிலுக்கு உள்ளே சென்று சில நிமிடங்கள் கழித்து கடவுளிடம் பேசும் மொழிபெயர்ப்பாளரை உடன் அழைத்து வந்தார். அட்சரேகை, தீர்கரேகை, மகரரேகை மற்றும் கடகரேகைகள் தாறுமாறாக அவரின் நெற்றில் ஓடி, அண்டங்களின் காவலரின் காவலர் இவர்தான் என்பதை தெளிவாக உணர்த்தின.

"மொழி" வல்லுநரை கண்டதும், காத்திருந்த குடும்பத்தினர் அனைவரும் பயபக்தியுடன் வணங்கினர். அவரும் தலைதாழாமல் ஏதோ செய்தது வணங்குவது போல் தெரிந்தது. புதிய வாகனத்தின் பெயர் ராசி நட்சத்திரம், குலம், மோத்திரம் அனைத்தையும் கேட்டுக்கொண்டு பின்பு கடவுளுக்கு புரிந்த மொழியில் ஏதோ  பிதற்றினார்.  நடுவுல, நடுவுல நமக்கும் புரியும் "நிசான்", "முரானோ", மானே தேனே பொன்மானே என்று சேர்த்து கொண்டார். 

தங்கள் பெயரையும், வாகனத்தையும் கடவுளிடம் பரிந்துரை செய்ததற்காக அந்தக் குடும்பம் ஏழேழு பிறவிக்கும் அந்த மொழி பெயர்ப்பாளரிடம் நன்றி கடன்பட்டது புரிந்தது. இனி அந்த வாகனம் பெட்ரோல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்ஜின் ஆயில், உதிரிப்பாகம் பழுதானால் உதிரிப்பகத்தின் விலையை விட இரண்டு மடங்கு அதை மாற்ற கேட்கும் நியாமான பழுது நீக்கும் அமெரிக்க நிறுவனங்களின் தன்னிகரற்ற சேவை இவை எதுவும் இல்லாமல் பல தலைமுறைக்கும் ஓடும்.

இந்த கடவுளின் ஒப்பந்தம் குறித்து முன்பே தெரியாமல், அதிக்கப்படியாக மூவாயிரம் அமெரிக்க டாலர்கள் செலுத்தி, மூன்று வருட கூடுதல் உத்திரவாதம் மற்றும் AAA உறுப்பினர் அட்டை என தேவையில்லாமல் செலவு செய்தது. கணவருக்கு மிகவும் மனவேதனை அளித்தது. 

சில நிமிடங்களில், கடவுளிடம் உரையாடலை முடித்து விட்டு. பூ உலகிற்கு திரும்பிய "மொழி" பெயர்ப்பாளர். மனித மொழியில் ஏதோ கணவரிடம் கூறினார். உடனே கணவர், கால்ச் சட்டையின் பின் பையில் இருந்த பணப் பையை எடுத்து அதிலிருந்து 18வது அமெரிக்க அதிபரின் படம் பதிக்கப் பட்டிருந்த காகிதத்தை தட்டில் வைத்தார். அந்த காகிதத்தை சாதாரணமா பார்த்துவிட்டு, தட்டில் வாடிப்போயிருந்த மலர்களில் சிலவற்றை கைமற்றினார். பணக்கார நாடல்லவா (?) அதனால் கொழுப்பு நிறைந்த முந்திரியும், பாதாமும் கைநிறைய, பிரசாதமாக கடவுளிடம் வரம் பெற்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

ஒருவழியாக கடவுளின் ஒப்பந்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இது விடைபெறும் தருணம். கடவுள் வரம் கொடுத்தாலும், இவர்களிடம் வரம் கிடைக்காதே என்ற எண்ணமோ, என்னவோ தெரியவில்லை. கணவர், மொழி பெயர்ப்பாளரின் காலில் விழுந்தார். குழந்தையை மாமியாரிடம் கைமாற்றிவிட்டு மனைவியும் கணவன் வழி தொழுதார். இப்போது குழந்தை பாட்டியின் கையில்  சிரித்துக் கொண்டிருந்தது.

விழுந்து எழுந்த மனைவி மாமியாரிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அப்பாவும் மொழி பெயர்ப்பாளரின் காலில் விழுந்தார். அவரைத் தொடர்ந்து அம்மாவும். அப்பாவின் வயது, மொழி பெயர்ப்பாளரின் வயதை விட குறைந்தது 10தாவது அதிகமாக இருக்கும். அப்பாவும் யோசிக்க வில்லை, மொழி பெயர்ப்பாளரும் தடுக்க வில்லை. 

அம்மாவின் கையில் குழந்தை சிரிக்க வில்லை. இதை காண எனக்கும் சகிக்க வில்லை, நான் புறப்பட்டேன்...        

Sunday, February 1, 2015

நதி தேடும் கடல்...


ராக்கி ஹில் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழாவிற்காக எழுதப்பட்ட நாடகம்...



காட்சி 1

கதாப்பாத்திரங்கள்
அப்பாசெல்வம்
அம்மாராஜி (35)
மகன்அமுதன் (12)
மகள்குமுதா  (8)

இடம்அமுதனின் வீடு (அமெரிக்கா)

நேரம்இரவு, 09:30 மணி

வீட்டின் தொலைபேசி மணிஅழைத்தது...

செல்வம்ராஜிபோன்ல யாருன்னு பாரு.

மூன்றாவது மணி ஒலித்துக் கொண்டிருக்கும்போதே சட்டென அமைதியானது தொலைபேசி...

ராஜிஇந்நேரத்துக்கு missed கால் நா உங்க வீடாத்தான் இருக்கும்..

புத்தகம் படித்துக் கொண்டிருந்த செல்வம் தொலைபேசியை எடுத்துப் பார்த்துஅழைப்பு தன்னுடைய வீட்டிலிருந்துதான் வந்துள்ளது என்பதைஉறுதிசெய்துகொண்டுதன்னுடைய  அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தார்.

செல்வம்சொல்லுங்கப்பாஎப்பிடி இருக்கீங்க?..... ஆமாப்பாலீவ் கன்பார்ம் ஆயிரிச்சி , இந்த தடவ கண்டிப்பா வந்துருவோம்.

செல்வம் பேசிக்கொண்டிருக்கும் போதுஅருகில்வந்து நின்றுகொண்டு செல்வம் பேசிமுடிக்கும் வரை காத்திருந்தார் ராஜி செல்வம் பேசி முடித்தவுடன்

ராஜிநான் இன்னும் பசங்க கிட்ட இத பத்தி பேசல... நீங்களாச்சுஅதுகளாச்சு..

செல்வம்குமுதாகிட்ட சொல்றதுல ஒன்னும் பிரச்சனையில்லஆனா அமுதன்கிட்டதான்…….. பாப்போம்...

புதிய பாப் இசை காதுகளில் அலறஒளியை மிஞ்சும் வேகத்தில் விரல்கள் அலைபேசியின் விசைப்பலகையை பதம்பார்க்ககண்கள் இரண்டும் அலைபேசியின்திரையில் குடிகொண்டிருக்கஅனிச்சைசெயலாகஅமுதன் தன்னறையை விட்டு அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கும் நடுவீட்டிற்க்கு வந்தான்.

அமுதனை அழைத்து அருகில் அமரவைதுக் கொண்டார் செல்வம்

செல்வம்இந்த வருஷம் வெக்கேஷனுக்கு நாமெல்லாம் இந்தியாவுக்கு தமிழ்நாட்டுக்குப்போறோம்.

அமுதன்: .........

செல்வம்என்னடாஒன்னுமே சொல்ல மாட்டேன்கிற

அமுதன்என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் அமெரிக்கால இருக்குற ஃபேமஸ் அட்டராக்ஷன்ஸ்க்கு போறாங்கநாமட்டும் டமில் நாட்ல வெயில்லையும்,டஸ்ட்லையும் ஊரசுத்துனேன்னு சொல்லனுமா?

செல்வம்டிரஸ்ட் மீ அமுதாநம்ம ஊர்லையும் நல்ல இடங்கள் நெறையா இருக்குகண்டிப்பா நீ என்ஜாய் பண்ணுவ.

அமுதன்: Statue of liberty இருக்கா?

செல்வம்காலத்தால் அழியாத உலகப்புகழ் பெற்ற வள்ளுவர் சிலைசுத்தமா இருக்கு.

அமுதன்Hoover dam இருக்கா?

செல்வம்: 2000 வருசத்துக்கு முன்னால கட்டுன கல்லணை இருக்கு

அமுதாநான் சும்மா கவுன்ட்டர் ஆர்கியுமென்ட்க்காக பேசல... நம்ம ஊரோட சிறப்ப உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அங்க போயி பார்த்தா உனக்கே புரியும்.

எனக்காக இந்த ஒரு தடவ வாப்பா….

டீல் ?

அமுதன்டீல்

காட்சி 2

புதிய அனுபவத்திற்கு புறப்படவேண்டிய நாள்

உற்றார்உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாங்கிய பரிசுப்பொருட்களை பெட்டிகளில் நிரப்பி , தாய்நாட்டிற்குச் செல்ல செல்வத்தின் குடும்பம்தயாராகிக்கொண்டிருந்தது.

பெட்டிகள் அனைத்தும் எடைபோடப்பட்டு விமானநிலையத்திற்கு எடுதுவரப்பட்டுவிட்டதுசரியான நேரத்திற்கு விமானமும் புறப்பட்டு தமிழ்நாட்டின் தலைநகரைஅடைந்தது.

அத்தையும் மாமாவும் விமான நிலையத்தில் வரவேற்க காத்திருந்தனர்.
வாசலில் காத்திருந்த அத்தையும்மாமாவும் தம்பியின் குடும்பத்தைக் கண்டவுடன்.

அத்தைமாமாவாங்கவாங்கஎல்லாரும் வாங்க. journey லாம் நல்லா இருன்ச்சா?

செல்வம்மாமா எப்பிடி இருக்கீங்கஅக்கா நீ எப்பிடி இருக்க?

அத்தைநாங்கலாம் நல்லா கீறோம்நீங்க எப்டி கீரிங்க

செல்வம்: நல்லா இருக்கோம், அப்பா எங்க, வரலையாக்கா?

அத்தை: ஊராண்ட ஒரு முக்கியமான பஞ்சாயத்து இருந்ததால வரமுடியலயாமா, நீங்க தம்பி வூட்டுக்குப் போகசொல நைனாவ கண்டுகலாம்.       

செல்வம்: சரிக்கா  

அத்தை: எங்க என் மருமவனும்மருமவளும்?

செல்வம்குமுதாஅமுதாரெண்டு பேரும் அத்தைக்கும் மாமாவுக்கும் வணக்கம் சொல்லுங்க.

அமுதன்ஹலோ ஆன்டிஹலோ அங்கிள்

குமுதாவணக்கம் அத்தைவணக்கம் மாமா

அத்தை குமுதாவை அருகில் அழைத்து வைத்துக் கொண்டார் 

அத்தைஅமுது செல்லம்

அமுதன்ஆன்டி"அமுதுஇல்லகால் மீ "அமுதன்"

அத்தைஅது கெடக்கட்டும் செல்லம்இந்த "ஆண்டியெல்லாம் வேண்டாம்நீ என்னைய "அத்தன்னுகூப்புடு.

அமுதன்OKKKWhatever….

செல்வம்அக்காசென்னைய சுத்திப்பாக்க நாளைக்கிப் போலாமாஅமுதன் ரொம்ப ஆசையா இருக்கான்.

அத்தைஇன்னிக்கி வூட்ல நல்லா ரெஸ்ட் எடுங்க, அப்பாலிகா நாளைக்கு போவலாம்உன் மாமனுக்கு இண்டுஇடுக்கு அல்லாம் கரீட்டா தெரியும்.

அமுதன்டாடிஇவங்க பேசுறது டமிலா?

அத்தைடே அமுதா, இது டமில் இல்ல, "மெட்ராஸ் பாஷ ப்பா

காட்சி 3

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம், அத்தை, மாமா  
இடம்சென்னை கடற்கரை

மெரினா கடற்கரையில் அனைவரும் நடந்துகொண்டிருக்கையில்...

அமுதன்அங்கிள்சென்னையைப் பத்தி சொல்றதுக்கு முன்னாலMadras டமில பத்தி சொல்லுங்க.

மாமா: மெட்ராஸ் தமிழ்செமயானமெர்சலான லாங்குவேஜ்இதோட Vocabulary வேற எந்த லாங்குவேஜ்லையும் கெடியாதுஇப்போ example எடுத்துக்கினா ‘ஊட்டாண்ட’, ‘கோயிலாண்ட’  வர்ற "அண்ட"க்கு மீனிங் "க்ளோஸ்பக்கத்துல.

இது ஓல்டு ஆனா கோல்டு கண்ணு..இதே மாதிரி "அப்பால", "குந்து", "ஒத்து", "மெய்யாலுமே", "கலாய்எல்லாமே ப்யூர் தமிழ் வேட்ஸ்.

அமுதன்நீங்க பேசுறதுல நெறைய இங்கிலீஷ் வோர்ட்ஸ் இருக்கே?

மாமாமெனி இயர்ஸ் இங்கிலீஷ் பீபள் இந்தாண்ட இருந்ததால அத்த அவாய்ட் பண்ணமுடியிலஆனா ஒன்னுகீதுபாஇந்த ஜாதி மதம் இனம் எதுவும்மெட்ராஸ்க்கும் கெடியாதுமெட்ராஸ் தமிழுக்கும் கெடியாது.

"இது வந்தாரை வாழவைக்கும் சென்னை"

அமுதன்ஓ awesome மாமா..  இப்போ இந்த ஊர பத்தி சொல்லுங்க.

இவர்கள் பேசிக்கொண்டே கடற்கரையில் நடந்துகொண்டிருக்க அங்கே கானா பாடல் பாடும் குழுவைக் கண்டனர்.

மாமாசென்னையைப்பத்தி நான் செல்றத விட இவங்க சொன்ன இன்னும் குஜால இருக்கும்.

அமுதன்: மாமா, நீங்களும் இவங்ககூட பாடப் போறீங்களா?

மாமா: பாட்டு மட்டுமில்ல டான்சும்...     

"சென்னையின் சிறப்பை விளக்கும் கானா பாடல்"

காட்சி 4

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்
அத்தையின் குடும்பம்

செல்வம்சரிக்கா நாங்க கிளம்புறோம்

அமுதன்அத்தைமாமா நானு சென்னைய செம்மயா என்ஜாய் பண்ணேன்.. "கானாwas cool.

குமுதாஅமுதா happy, குமுதா happy

அனைவரும் சிரிக்க, அமுதனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அத்தை குடும்பத்திடம் விடைபெற்றுக் கொண்டுபுறப்பட்டனர் கோவைக்கு.

காட்சி 5

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தியின் குடும்பம்,
மகன்சிவா (அமுதனுக்கு தம்பி)

இடம்சித்தி வீடு

அவர்களை வரவேற்க தயாராக காத்திருந்தனர் சித்தி குடும்பத்தினர்சித்தியை கண்டவுடன்...

அமுதன்ஹாய் ஆன்டிநோ.... வணக்கம் அத்தை

சித்தி: "அத்தஇல்ல கண்ணு "சித்தி"

அமுதன்: சுத்சுத்தி... இஸ் தட் ரைட்?

சிவாஹிஹிசுத்தி இல்ல சித்தீஈஈஈஈ......


அமுதன்வணக்கம் சித்தி.

குமுதாசித்திஎனக்கு தர்ஷ்டியா இருக்குவாட்டர் வேணும்.

சித்திஇதோ கொண்டுவாரேன் கண்ணு

குமுதாசித்திஇந்த வாட்டர் ரொம்ப ஸ்வீட்டா இருக்குசுகர் மிக்ஸ் பண்ணீங்களா?

சித்தி : அஸ்கா சேக்கல சாமிஇது சிறுவாணித் தண்ணி.

அமுதன்சென்னைல பேசுன டமில் டடிப்ரெண்ட்டா இருந்தது. நீங்க பேசுற டமில் டடிப்ரெண்ட்டா இருக்கே?

சித்திஇது கொங்குத் தமிழ் கண்ணுரொம்ப மரியாதையான தமிழ்.

அமுதன்ஓ அப்பிடியாஇந்த டமில்லோட ஸ்பெஷலிட்டி என்ன?

சித்திகொங்குத் தமிழோட அம்சமே 'வும் 'ங்கும் தான்.என்னோட உன்னோட கிறத "என்ற", "உன்றனு சொல்லுவோம்.

சிவா: "என்னடாகிறத "என்றானு சொல்வோம்அதோட நீதிடா,நேர்மைடா,எருமைடா னு கூட சொல்வோம்.

சித்திஅப்பிடி பேசக்கூடாது கண்ணு

சிவா: சரிங் மா  

அமுதன்டாடிஇந்த சிட்டியோட ஸ்பெஷலிட்டி என்ன?

செல்வம்கோயம்புத்தூர் இஸ் "மான்செஸ்டர் ஒப் சௌத்இண்டியா".

அமுதன்"மான்செஸ்டர்னாஅமெரிக்கால ஹார்ட்போர்ட் பக்கதுல இருக்கே அதுவா?

செல்வம்இல்லஇந்த மான்செஸ்டர் இங்கிலாந்துல இருக்கு.

சிவா:  அது மட்டும் இல்ல.. வருஷம் முழுசும் வெயிலே தெரியாதுகுளுகுளுன்னு இருக்கும்.

செல்வம்இந்தியாவின் எடிசன் ஜி.டி நாயிடு பிறந்த ஊரு இது தான்

அமுதன்இங்க வேற என்னவெல்லாம் இருக்கு?

சித்தி: நெறையா இருக்கு, முதல்ல நாமெல்லாம் மலைக்கிப் போறோம்.

குமுதா: மலையா, அது என்ன மலை?    

சிவா:  

BMG: https://www.youtube.com/watch?v=uLcXLvAPCkE (15 முதல் 23 நொடிகள்)

அங்கிருந்த துண்டு ஒன்றை எடுத்து முட்டியில் இழுத்து வைத்துக்கொண்டு நடனமாட

சித்தி: சிவா, என்னடா பண்ற....

சிவா: (துண்டை கீழே போட்டுவிட்டு  உடனே)

BGM:  https://www.youtube.com/watch?v=82qfhI7uZf0  (முதல் 42 நொடிகள்....) 

போலாமா? 

அமுதன், குமுதா:   போலாமே....  


காட்சி 6

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தியின் குடும்பம்,
மகன்சிவா 

(மேடையை விட்டு வெளியே சென்று மீண்டும் சில நொடிகளில் திரும்பி வருகிறார்கள்.
காவடி ஆட்டக் குழுவினர் தயாராக இருக்கின்றனர்)  

குமுதா: அவங்கல்லாம் யாரு? shoulder ல என்ன வச்சிருக்காங்க?

சித்தி: அதுக்குப் பேரு காவடி கண்ணு, அவங்க ஆடப்போற ஆட்டத்துக்குப் பேரு "காவடியாட்டம்".

காவடியாட்டம்... 


காட்சி 7

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தியின் குடும்பம்,

சித்திஇன்னும் ரெண்டு நாளு இருந்துபோட்டு போலாமுல்லங்க்கா

ராஜிஇல்லமாஇன்னும் ரெண்டு ஊருக்கு போகவேண்டியது இருக்கு.

சிவாஅடுத்து எங்க போறீங்க?

அமுதன்ஸ்டோன் டம்ஹொவ் டு சே இன் டமில் டாடி

செல்வம்கல்லணைக்கு போறோம்அங்கிருந்து அப்படியே மதுரைகிப்போறோம்.

சித்தி:உங்க friend வூட்டுக்கா அத்தான்?

செல்வம்: ஆமா, அவரு எனக்கு அண்ணன் மாதிரி.  

சித்தி: நல்லபடியா போயிட்டு வாங்க.    

ராஜிசரிம்மா .


காட்சி 8

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
செல்வத்தின் நண்பரின் குடும்பம் (பெரியப்பா)


ஹாலில் உட்கார்ந்து பெரியப்பா பேப்பர் படித்துக்கொண்டிருக்க, அமுதன் காபி பருகிக்கொண்டே வருகிறான்

அமுதன்பெரியப்பாஇங்க கல்லணை என்ன அவ்வளவு ஸ்பெசலா?

பெரியப்பாஆமா அமுதாsecondu century’layeகரிகாலன் கட்னதாக்கும் இந்த அணை.

அமுதன்: வாவ்

பெரியப்பாகல்லையும்களிமண்ணையும் மட்டும் வச்சிண்டு கட்னதாக்கும் இது. இந்த லோகத்துக்கே பாசனத்த சொல்லி கொடுத்தது நம்ம முன்னவா தான்..

அமுதன்தஞ்சாவூர் பத்தி கொஞ்சம் explain பண்ணுங்களேன்.

(பெரியம்மா உள்ளே வருகிறார்)

பெரியம்மாநான் சொல்றேண்டா ராஜா.
நம்மளோட நெற்களஞ்சியம் தஞ்சாவூர்தான்சோழர்களோட தலைநகரமாகவும் இருந்திருக்கு டா அம்பி.

அமுதன்சோழர்கள்னா யாரு?

பெரியம்மாதமிழ்நாட்டை பல மன்னர்கள் ஆண்டாஅவாள்' முக்கியமானவா சோழர்கள்.

அமுதன்கரிகாலனும் சோழ மன்னனா?

பெரியம்மாஆமாஅதுல most important ராஜராஜசோழன்.
பெரியகோவில கட்டினது வாதான்இவரோட புள்ளாண்டான்
 ராஜேந்திரசோழன். அவரும் ரொம்ப popular டா அம்பி

அமுதன்பெரிய கோவிலா?

பெரியப்பாஇந்தியால பெரிய கோயில் ரொம்ப ப்ரெசித்தம் டா கண்ணா வா உன்ன நான் கோவிலுக்கே அழைச்சிண்டு போயி காட்றேன்..

காட்சி 9


கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
பெரியப்பா குடும்பம் 

இடம்: பெரிய கோவில்  

அமுதன்இந்த temple'கு அப்டி என்ன importance?

பெரியம்மாகிரானைட் கல்லால 1000 வருசத்துக்கு முன்னால கட்னா.  தமிழரின் கட்டடக்கலைக்கு இதான் பெஸ்டு proofஅங்க இருக்குற சிலைகள் எல்லாமேகலை நயத்தோட இருக்கும்..

அமுதன்அது எப்படி? 

பெரியம்மாஇந்த சிலையைப் பாருநோக்கு என்ன புரியர்துன்னு சொல்லு? 

அமுதன்பாம்ப மிதிச்சிக்கிட்டு ஒருத்தர் நிக்கிறாரு

பெரியம்மாநன்னா  பாருயானை எத்தன பெருசு.. அதையே பாம்பு விழுங்கர்து

குமுதாயானை big animal’nu தமிழ் ஸ்கூல்ல படிச்சிருக்கேன்.

பெரியம்மாசரியாசொன்னபோ,
யானையையே முழுங்கற பாம்ப, கால்'ல மிதிச்சிண்டு நிக்கற த்வாரபாலகர் எத்தன powerful'ஆ இருப்பார்?

அவரே கும்பிடுறார்னாஅப்ப சாமீ எவ்ளோ பெரியவரு?

அத சொல்ற சிலைதான் இது.

அமுதன்இப்ப புரியிது

(வேறொரு சிலையக் காட்டிஇந்த சிலை என்ன சொல்லுது பெரியப்பா?

பெரியப்பா: நம்ம பரதக் கலையோட விசேஷத்த குறிகர்து

அமுதன்பரதம்னா?

பெரியப்பாஅது ஒரு திவ்யமான நாட்டியம். நோக்கு பாக்கணுமா?

அமுதன்ஓ பாக்லாமே..
  
பரதம்

காட்சி 10

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
மாமாவின் குடும்பம்
மாமா: செந்தில்
மகன்கார்த்தி

மாமா வீட்டு வாசலில்...

அமுதன்Momஅங்கிள் வீட்ல பேசுற டமில் டிப்ரெண்ட்டா இருக்குமா?

ராஜிஆமா அமுதன்அவங்க மதுரைத் தமிழ் பேசுவாங்க.

செல்வம்சங்கம் வச்சி தமிழ் வளர்த்த ஊருடா..

வாசலில் காத்திருந்த மாமவின் குடும்பத்தினர்அனைவரையும் உபசரித்து உள்ளே அழைத்துவந்தனர்.

மாமாபிரயாணமெல்லாம் எப்படி இருந்துச்சுகா?

ராஜிநல்லா இருந்தது செந்தில்நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?

மாமாஎல்லாரும் நல்லா இருக்கோம்.

செல்வம்கார்த்தி எங்க செந்தில்?

மாமாவெளிய போயிர்க்கான்வெள்ளனே வந்திருவான்

குமுதா, முக்குல பிள்ளைய வெளையாட்ரத அப்டி என்ன வெறிச்சு பாக்குறீக?

குமுதாWait maama, lemme go and see..

குமுதா தெருவில் பிள்ளைகள் விளையாடுவதை பார்க்கிறாள். ஒரு குரூப் பாண்டி ஆடி கொண்டிருக்கிறார்கள்.

குமுதா: நீங்க என்ன பண்றீங்க?

Group Member 1: நாங்கலாம் வெளையாட்றோம்.
குமுதா: என்ன விளையாட்டு இது?

Group Member2இதுதான் பாண்டி ஆட்டம்.

Group Member3: நீயும் வரியா?

குமுதா: so nice. நீங்க continue பண்ணுங்க.. நான் நாளைக்கு join பண்ணிக்கிறேன்.

இதற்கிடையில் மாமவின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் சிலர் அமுதன் குடும்பத்தைக்காண அங்கு வந்தனர்.

இளம் வயது பாட்டி ஒருவர்செந்துலுசெந்துலுஒன்னோட வீட்டுக்கு அமெரிக்காவுல இருந்து யாரோ வந்துர்க்காங்கலாமேயாரது?

மாமா: என்னோட அக்கா வீட்ல இருந்து வந்துருக்காக.

பாட்டி1: அவிகள  கூப்புடு

மாமா: அக்காஅமுதாகுமுதா கொஞ்சம் இங்க வாங்க.

குமுதா: அமுதாஹூ ஆர் தே (என்று அமுதனிடம் கேட்டாள்)

அமுதன்ஹொவ் டூ  நொவ்ஆஸ்க் அங்கிள்.

பாட்டி2: (பாட்டி 1 ன்னிடம்சின்னப் புள்ள என்னமா இங்கிலீபீஷ் பேசுது

பாட்டி1: அடி என்னாடி லந்து பண்றவ?அமெரிக்காவுலஇத விட சின்னப் புள்ளைங்கெல்லாம் இங்கிலீபீஷ் பேசுமாமே?

பாட்டி2: ஆமாஇவ வண்டியூர் தெப்பக் குளத்த தாண்டினதில்ல பெருசா அமெரிகாவப்பத்தி பேச வந்துட்டாம்ம்க்கும்

பாட்டி 1: செந்திலுஊம் மருமவன செத்த நேரம் இங்கிலீபீஷ்ல பேசச்செல்லேன்?

மாமாஅமுதாஅவிக கூட எதாவது இங்கிலீஷ்ல பேசேன்

அமுதன்Really??? அங்கிள்ஜஸ்ட் லைக் தட் டாக் னா வாட் கேன்  டாக்?

மாமா:(பாட்டிகளிடம்) அக்கா நீங்க எதாவது கேளுங்கஅவன் பதில் சொல்லுவான்.
பாட்டி1: (பாட்டி 2  பார்த்துநீ எதாவது இங்கிலீபீஷ்ல கேளு.

பாட்டி2: நா பெரிய எலிசபெத்து ராணி பேத்திபக்கி… நீதானடி அஞ்சாங் கிளாச விருதுநகர்ல அஞ்சி வருஷம் படிச்சவநீ கேளு?

பாட்டி 1: அமுதாஅமுதா வாட் இச் யுவர் நேமு?

அமுதன்(பெரு மூச்சுடன்) oh no…நாட் அகைன்...

பாட்டி 2: அமுதான்னு நல்ல பேர வுட்டுட்டு வாயிலையே வராத "நாட்டு" "பூட்டுனுஎதோ பேரு வச்சிருக்காங்க.

இதற்கிடையில் கார்த்தி வந்துவிட

கார்த்தி(பாட்டிகளை பார்த்து) என்னம்மா நீங்க இப்பிடிப் பண்றீங்கலேம்மாஅதுக்குள்ள பட்டறைய போட்டீங்கலேம்மா?
“பாட்டிகள் வினோதமாக கார்த்தியைப் பார்க்க”

கார்த்திஅமெரிகாவுலேர்ந்து மாமா வந்துர்காக, அத்தை வந்துர்காக, அமுதா-குமுதா லாம் வந்துர்காக.. நீங்கலாம் போயிட்டு அப்புறம் வாங்கம்மா மின்னல்...

All Paati’s: அதுக்கு ஏன் ஹெ ஹெ னு அலப்பறைய போட்ற ? நாங்க போயிட்டு பைய வாரோம் (பாட்டிகள் அனைவரும் புறப்பட்டு விட்டனர்)

அமுதன்ஹாய் கார்த்திக்

கார்த்திஹாய் அமுதன்நைஸ் டு மீட் யூ.

அமுதன்கார்த்திநீ டமில்லையே பேசலாம்எனக்கு டமில் புரியும்.

கார்த்திஅப்பிடியாதமிழ்நாட்ல எந்த ஊர்லாம் போனீங்க?

அமுதன்சென்னைகோவைதஞ்சை

கார்த்தி:  சூப்பர், இன்னைக்கி இங்க ஒரு மியூசிக் ப்ரோக்ராம் இருக்கு, நாம எல்லாரும் அங்க போலாமா?
  
அமுதன்: நல்ல பீட் சாங் வித் புல் எனெர்ஜியோட கேட்கமுடியுமா? எக்ஸாம்பில் சொல்லனும்னா, "மைகேல் ஜாக்சன்" பாட்டு மாதிரி.

இந்தா, இதக் கேட்டுப்பாரு... 

கார்த்தி: இதென்ன பெரிய விஷயம்,  "மைகேல் ஜாக்சன்" னோட professor ரே இங்க இருக்காரு.

அமுதன்: வாட் டூ யு மீன்?

கார்த்தி: இதோ அவங்களே வந்துட்டாங்களே....

கார்த்தி பறை குழுவிடம்                                

அண்ணே, நம்ம பையன் வேற மாதிரி ட்யூன் ஆகியிருக்கான். அதனால நீங்க கத்துக்கிட்ட மொத்த விதையையும் முழுசா இறக்கி செம குத்து குத்துங்க    

பறை குழு நபர் 1: என்னப்பு அவ்ளோ லேசா சொல்லிப்புட்டே. பொறபுக்கும் இறப்புக்கும் பறை உண்டுப்பே. பறைன்னா ச்சொல்ரதுன்னு அருத்தம். அப்பெல்லாம் ஊர்காறேங்களுக்கு பறை அடிச்சிதான் சேதி சொல்லுவாங்கே தெர்யுமா? தோல் வாதியத்துக்கு எல்லாம் இவுக தான் முன்னோடி. இது நம்மவூட்டு பாரம்பரியம்.. தமிழனோட அடையாளம். இப்போ இத கேளு ராசா.  


பறை...

காட்சி 11

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
மாமாவின் குடும்பம்
மாமா: செந்தில்
மகன்கார்த்தி

கார்த்திஎன்ன அமுதா பறை எப்பிடி இருந்தது?

அமுதன்ரொம்ப நல்ல இருந்ததுஇண்டியா  கிளாச்சிக் டான்ஸ் மட்டும்தான் இருக்கும்னு நெனச்சேன்.

கார்த்திசென்னைகோவைமதுரை எந்த தமிழ் பிடிச்சிருக்கு?

அமுதன்எல்லாமே நல்லாத்தான் இருக்கு?

கார்த்திஇதுவரைக்கும் நீ கேட்காத ஒரு தமிழ் இருக்கு

அமுதன்என்னது அது?

கார்த்திசொல்றேன் நீ கேளு இப்போ

அமுதன்ஒன்னு மே புரிலையே

கார்த்தி: சரியா சொன்னீங்க your honor... இதுல தமிழ் இருக்கும்ம்... ஆனா இருக்காது... :)

செந்தில்டேய் அகராதிஇதெல்லாம் சொல்லி அமுதன் பேசுற தமிழ கோளாறு பண்ணாத

அமுதன்நோ அங்கிள்வி ஆர் ஹவிங் பன்

செந்தில்: சீக்கிரமா தூங்குங்க.. நாளைக்கி வெள்ளனவே நீங்க கெளம்பனும்கன்னியாகுமரிக்கு போறீக இல்ல

காட்சி 12

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தப்பா குடும்பம்

இடம்கன்னியாகுமரி veedu

அமுதன் சித்தப்பா சித்தப்பா என்று அழைத்தபடியே உள்ளே வருகிறான்
சித்தப்பா என்னப்பா என்றபடியே உள்ளே வருகிறார்..

அமுதன்: வந்த உடனே கேக்கணும் நு நெனச்சேன்... தாத்தா எங்கஅவர பாக்க தானே ஆசையா வந்தோம்.

chitthi: தாத்தா பக்கத்துக்கு ஊரு பஞ்சாயத்துக்கு போயிர்காக.... ரவைக்கு வந்ருவாக

அமுதன்: OK… சித்தப்பாஇந்த வள்ளுவர் சிலைய நேர்ல பார்க்கப் போலாமா?

சித்தப்பாவள்ளுவர் யாருன்னு தெரியுமா மக்கா ?

குமுதா: O, தெரியுமே, எவ்ரி வீக் எங்க டமில் ஸ்கூல ஒரு திருக்குறள் சொல்லுவோம்.

சித்தப்பாஎங்க ஒரு குறள் சொல்லு மக்கா ?

குமுதா: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

சித்தப்பாபிரம்மாதம் மக்காபிரம்மாதம்வள்ளுவர் சிலையோட உயரம் 133 அடிஇது திருக்குறள்ள உள்ள 133 அதிகாரத்த குறிக்கி.

அமுதன்அது என்ன பாறை?

சித்தப்பாஅதுவா மக்கா விவேகானந்தர் பாறைஅவரு யாருன்னு தெரியுமா?

அமுதன்சிகாகோல நடந்த Conference’la ஹிந்து ரிலீஜியன் பத்தி பேசுனாரு

குமுதா: "நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்னு சொன்னவரு.

சித்தப்பாஅண்ணே அமுதனையும்குமுதாவையும் நெனைச்சா எனக்கு
எத்தரை பெருமையா இருக்கு கேட்டியா .

செல்வம்எல்லாம் தமிழ் ஸ்கூல்ல கத்துக்கிட்டது

சித்தப்பா: பசங்களா, இந்த ஊருக்கு இன்னொரு சிறப்பு இருக்கு கேட்டியா. .

அமுதன்: அது என்ன சித்தப்பா?

சித்தப்பா: வில்லுப் பாட்டுஇன்னிக்கி உச்சத்துல நடக்குது.. நாம போவோம்.. எத்தரை வட்டம் கேட்டாலும் சலிக்காது...

அமுதன்heyyy… sooopereee... 

வில்லுப்பாட்டு

காட்சி 13

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
தாத்தா

செல்வம்அமுதா வீட்டுக்கு போனவுடனேதாத்தா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ.

அமுதன்Why Paa?

செல்வம்பெரியவங்கள பாத்தா கால்ல விழுந்து ஆசீ வாங்கனும்அது நம்ம பண்பாடு.

அமுதன்: ......

பேரப்பிள்ளைகளை கண்டவுடன் தூக்கியணைகத்து முத்தமிட முன்சென்றார் தாத்தா.

அமுதன் அம் நாட்  பேபி (என்று ஒதுங்கிக் கொண்டான் அமுதன் )

செல்வம்அப்பா டோன்ட் மிஸ்டேக் ஹிம்...

தாத்தாபரவாயில்ல செல்வம்நா அவனோட தாத்தாஅவன் என்னோட பேரன்இது என்னைக்கும் மாறாது.

செல்வம்உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு?

தாத்தா: எனக்கென்ன... நான் நல்லவே இருக்கேன் பா.

செல்வம்உங்களைப் பத்தி நாங்க வொர்ரி பண்ணாத நாளே இல்ல பாநீங்க எங்ககூட வந்து ஸ்டே பண்ணலாம்லகிட்ஸ்ம் என்ஜாய் பண்ணுவாங்க.

தாத்தாஅது இருக்கட்டுமப்பாநீ பேசுன 10,15 வார்த்தைலஎத்தன ஆங்கில வார்த்தைகள் பரு.

குழந்தைங்ககிட்ட "பண்ணிதமிழ் பேசாத செல்வம்பண்பட்ட தமிழ் பேசு.

செல்வம்சாரி ப்பா.... கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேம்பா...

தாத்தாநல்லது செல்வம்

(குழந்தைகளைப் பார்த்து )

ரெண்டு பேரும் இங்க வாங்கதாத்தா உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்.

அமுதன்: "ஆபத்தில் உதவா நண்பன்கதையா தாத்தா?

குமுதாஅது எங்க தமிழ் ஸ்கூல்லையே சொல்லிக் கொடுத்தாங்க.

தாத்தாஇது வேற கதை

குமுதாOhh. That’s exciting

குழந்தைகள் இருவரும் தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்தனர்

தாத்தாஒரு காட்லஅம்மா சிங்கம் இரை தேடி வெளிய போச்சுஅப்போ குட்டி சிங்கம் விளையாடிகிட்டே வழிமாறி எங்கையோ போயிரிச்சி.

குமுதாஅப்புறம் என்னாச்சி தாத்தா

தாத்தாஅப்போஅந்த வழியா வந்த ஆட்டுக்கூட்டம்கூட சேந்துக்கிச்சி சிங்கக்குட்டி.

குமுதாஅப்புறம்

தாத்தாஇப்படி ஆடுங்ககூட இருந்த சிங்கம் தன்ன ஆடுன்னே நெனைசிருச்சி.

குமுதாஅப்பிடீன்னாசிங்கம் புல்லைத் தின்னதா?

அமுதன்குமுதா, ஸ்டோரியக் கேளுசும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணாத.

தாத்தாஒரு நாள்அங்க வேட்டைக்கு வந்த இன்னொரு சிங்கம்ஆடுங்கூட இருந்தஇந்தக் குட்டி சிங்கத்தப் பாத்தது.

குமுதா: நோ

தாத்தாஅந்த சிங்கம்குட்டி சிங்கத்துக்கிட்ட சொன்னதுநீ ஆடு இல்ல "சிங்கம்னு.

குமுதாஅதுக்கு, குட்டி சிங்கம் என்ன சொன்னது?

தாத்தாமுதல்லகுட்டிக்கு தான் யாருன்னு புரியலஅப்புறமா புரிஞ்சிக்கிச்சிஆடு கூட இருந்ததால நாம ஆடு ஆகமாட்டோம்எங்க இருந்தாலும் சிங்கம்சிங்கம்தான்னு.

......

அந்த வழி தவறிப்போன சிங்கம் மாதிரி இல்லாமயார் கூட இருந்தாலும்எந்த ஊர்ல இருந்தாலும் நாம தமிழர்கள்ங்கிறத மறக்கவே கூடாது.

அமுதன்நாங்கதான் தமிழ் பேசுறோமே தாத்தா.

தாத்தாபேச்சில மட்டும் தமிழ் இருந்தா போதாது அமுதா , உனக்கு மூங்கில் தெரியுமா?

அமுதன்தெரியும் தாத்தாபேம்பூ ட்ரீ

தாத்தாமூங்கில் மரம் இல்ல அமுதாஅது புல்உள்ளீடு இல்லாத எதுவும் மரம் ஆகமுடியாது.

அமுதன், அப்பிடியா?

தாத்தாநம்மோட தனித்தன்மைய நாம இழந்துட்டோம்னாநாமளும் உள்ளீடு இல்லாத புல்லுக்குச் சமம்தான்.

கதையை தாத்தா கூறி முடித்தவுடன்அமுதன் ஓடிவந்து தாத்தாவை அணைத்துக்கொண்டான்.


================


காணொளி 

https://www.youtube.com/watch?v=32Kv-o_M5ko&feature=youtu.be