cookie

Sunday, February 1, 2015

நதி தேடும் கடல்...


ராக்கி ஹில் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழாவிற்காக எழுதப்பட்ட நாடகம்...



காட்சி 1

கதாப்பாத்திரங்கள்
அப்பா: செல்வம்
அம்மா: ராஜி (35)
மகன்: அமுதன் (12)
மகள்: குமுதா  (8)

இடம்: அமுதனின் வீடு (அமெரிக்கா)

நேரம்: இரவு, 09:30 மணி

வீட்டின் தொலைபேசி மணிஅழைத்தது...

செல்வம்: ராஜி, போன்ல யாருன்னு பாரு.

மூன்றாவது மணி ஒலித்துக் கொண்டிருக்கும்போதே சட்டென அமைதியானது தொலைபேசி...

ராஜி: இந்நேரத்துக்கு missed கால் நா உங்க வீடாத்தான் இருக்கும்..

புத்தகம் படித்துக் கொண்டிருந்த செல்வம் தொலைபேசியை எடுத்துப் பார்த்து, அழைப்பு தன்னுடைய வீட்டிலிருந்துதான் வந்துள்ளது என்பதைஉறுதிசெய்துகொண்டு, தன்னுடைய  அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தார்.

செல்வம்: சொல்லுங்கப்பா, எப்பிடி இருக்கீங்க?..... ஆமாப்பா, லீவ் கன்பார்ம் ஆயிரிச்சி , இந்த தடவ கண்டிப்பா வந்துருவோம்.

செல்வம் பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில்வந்து நின்றுகொண்டு செல்வம் பேசிமுடிக்கும் வரை காத்திருந்தார் ராஜி . செல்வம் பேசி முடித்தவுடன்

ராஜி: நான் இன்னும் பசங்க கிட்ட இத பத்தி பேசல... நீங்களாச்சு, அதுகளாச்சு..

செல்வம்: குமுதாகிட்ட சொல்றதுல ஒன்னும் பிரச்சனையில்ல, ஆனா அமுதன்கிட்டதான்…….. பாப்போம்...

புதிய பாப் இசை காதுகளில் அலற, ஒளியை மிஞ்சும் வேகத்தில் விரல்கள் அலைபேசியின் விசைப்பலகையை பதம்பார்க்க, கண்கள் இரண்டும் அலைபேசியின்திரையில் குடிகொண்டிருக்க, அனிச்சைசெயலாக, அமுதன் தன்னறையை விட்டு அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கும் நடுவீட்டிற்க்கு வந்தான்.

அமுதனை அழைத்து அருகில் அமரவைதுக் கொண்டார் செல்வம்

செல்வம்: இந்த வருஷம் வெக்கேஷனுக்கு நாமெல்லாம் இந்தியாவுக்கு , தமிழ்நாட்டுக்குப்போறோம்.

அமுதன்: .........

செல்வம்: என்னடா, ஒன்னுமே சொல்ல மாட்டேன்கிற

அமுதன்: என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் அமெரிக்கால இருக்குற ஃபேமஸ் அட்டராக்ஷன்ஸ்க்கு போறாங்க, நாமட்டும் டமில் நாட்ல வெயில்லையும்,டஸ்ட்லையும் ஊரசுத்துனேன்னு சொல்லனுமா?

செல்வம்: டிரஸ்ட் மீ அமுதா, நம்ம ஊர்லையும் நல்ல இடங்கள் நெறையா இருக்கு. கண்டிப்பா நீ என்ஜாய் பண்ணுவ.

அமுதன்: Statue of liberty இருக்கா?

செல்வம்: காலத்தால் அழியாத உலகப்புகழ் பெற்ற வள்ளுவர் சிலை, சுத்தமா இருக்கு.

அமுதன்: Hoover dam இருக்கா?

செல்வம்: 2000 வருசத்துக்கு முன்னால கட்டுன கல்லணை இருக்கு

அமுதா, நான் சும்மா கவுன்ட்டர் ஆர்கியுமென்ட்க்காக பேசல... நம்ம ஊரோட சிறப்ப உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அங்க போயி பார்த்தா உனக்கே புரியும்.

எனக்காக இந்த ஒரு தடவ வாப்பா….

டீல் ?

அமுதன்: டீல்

காட்சி 2

புதிய அனுபவத்திற்கு புறப்படவேண்டிய நாள்

உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாங்கிய பரிசுப்பொருட்களை பெட்டிகளில் நிரப்பி , தாய்நாட்டிற்குச் செல்ல செல்வத்தின் குடும்பம்தயாராகிக்கொண்டிருந்தது.

பெட்டிகள் அனைத்தும் எடைபோடப்பட்டு விமானநிலையத்திற்கு எடுதுவரப்பட்டுவிட்டது. சரியான நேரத்திற்கு விமானமும் புறப்பட்டு தமிழ்நாட்டின் தலைநகரைஅடைந்தது.

அத்தையும் மாமாவும் விமான நிலையத்தில் வரவேற்க காத்திருந்தனர்.
வாசலில் காத்திருந்த அத்தையும், மாமாவும் தம்பியின் குடும்பத்தைக் கண்டவுடன்.

அத்தை, மாமா: வாங்க, வாங்க, எல்லாரும் வாங்க. journey லாம் நல்லா இருன்ச்சா?

செல்வம்: மாமா எப்பிடி இருக்கீங்க? அக்கா நீ எப்பிடி இருக்க?

அத்தை: நாங்கலாம் நல்லா கீறோம். நீங்க எப்டி கீரிங்க? 

செல்வம்: நல்லா இருக்கோம், அப்பா எங்க, வரலையாக்கா?

அத்தை: ஊராண்ட ஒரு முக்கியமான பஞ்சாயத்து இருந்ததால வரமுடியலயாமா, நீங்க தம்பி வூட்டுக்குப் போகசொல நைனாவ கண்டுகலாம்.       

செல்வம்: சரிக்கா  

அத்தை: எங்க என் மருமவனும், மருமவளும்?

செல்வம்: குமுதா, அமுதா, ரெண்டு பேரும் அத்தைக்கும் மாமாவுக்கும் வணக்கம் சொல்லுங்க.

அமுதன்: ஹலோ ஆன்டி, ஹலோ அங்கிள்

குமுதா: வணக்கம் அத்தை, வணக்கம் மாமா

அத்தை குமுதாவை அருகில் அழைத்து வைத்துக் கொண்டார் 

அத்தை: அமுது செல்லம்

அமுதன்: ஆன்டி, "அமுது" இல்ல, கால் மீ "அமுதன்"

அத்தை: அது கெடக்கட்டும் செல்லம், இந்த "ஆண்டி" யெல்லாம் வேண்டாம். நீ என்னைய "அத்தன்னு" கூப்புடு.

அமுதன்: OKKK, Whatever….

செல்வம்: அக்கா, சென்னைய சுத்திப்பாக்க நாளைக்கிப் போலாமா? அமுதன் ரொம்ப ஆசையா இருக்கான்.

அத்தை: இன்னிக்கி வூட்ல நல்லா ரெஸ்ட் எடுங்க, அப்பாலிகா நாளைக்கு போவலாம். உன் மாமனுக்கு இண்டு, இடுக்கு அல்லாம் கரீட்டா தெரியும்.

அமுதன்: டாடி, இவங்க பேசுறது டமிலா?

அத்தை: டே அமுதா, இது டமில் இல்ல, "மெட்ராஸ் பாஷ ப்பா”

காட்சி 3

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம், அத்தை, மாமா  
இடம்: சென்னை கடற்கரை

மெரினா கடற்கரையில் அனைவரும் நடந்துகொண்டிருக்கையில்...

அமுதன்: அங்கிள், சென்னையைப் பத்தி சொல்றதுக்கு முன்னால, Madras டமில பத்தி சொல்லுங்க.

மாமா: மெட்ராஸ் தமிழ், செமயான, மெர்சலான லாங்குவேஜ். இதோட Vocabulary வேற எந்த லாங்குவேஜ்லையும் கெடியாது. இப்போ example எடுத்துக்கினா ‘ஊட்டாண்ட’, ‘கோயிலாண்ட’ ல வர்ற "அண்ட"க்கு மீனிங் "க்ளோஸ்" ல, பக்கத்துல.

இது ஓல்டு ஆனா கோல்டு கண்ணு... இதே மாதிரி "அப்பால", "குந்து", "ஒத்து", "மெய்யாலுமே", "கலாய்" எல்லாமே ப்யூர் தமிழ் வேட்ஸ்.

அமுதன்: நீங்க பேசுறதுல நெறைய இங்கிலீஷ் வோர்ட்ஸ் இருக்கே?

மாமா: மெனி இயர்ஸ் இங்கிலீஷ் பீபள் இந்தாண்ட இருந்ததால அத்த அவாய்ட் பண்ணமுடியில. ஆனா ஒன்னுகீதுபா. இந்த ஜாதி மதம் இனம் எதுவும்மெட்ராஸ்க்கும் கெடியாது, மெட்ராஸ் தமிழுக்கும் கெடியாது.

"இது வந்தாரை வாழவைக்கும் சென்னை"

அமுதன்: ஓ awesome மாமா..  இப்போ இந்த ஊர பத்தி சொல்லுங்க.

இவர்கள் பேசிக்கொண்டே கடற்கரையில் நடந்துகொண்டிருக்க அங்கே கானா பாடல் பாடும் குழுவைக் கண்டனர்.

மாமா: சென்னையைப்பத்தி நான் செல்றத விட இவங்க சொன்ன இன்னும் குஜால இருக்கும்.

அமுதன்: மாமா, நீங்களும் இவங்ககூட பாடப் போறீங்களா?

மாமா: பாட்டு மட்டுமில்ல டான்சும்...     

"சென்னையின் சிறப்பை விளக்கும் கானா பாடல்"

காட்சி 4

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்
அத்தையின் குடும்பம்

செல்வம்: சரிக்கா நாங்க கிளம்புறோம், 

அமுதன்: அத்தை, மாமா நானு சென்னைய செம்மயா என்ஜாய் பண்ணேன்.. "கானா" was cool.

குமுதா: அமுதா happy, குமுதா happy

அனைவரும் சிரிக்க, அமுதனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அத்தை குடும்பத்திடம் விடைபெற்றுக் கொண்டு, புறப்பட்டனர் கோவைக்கு.

காட்சி 5

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தியின் குடும்பம்,
மகன்: சிவா (அமுதனுக்கு தம்பி)

இடம்: சித்தி வீடு

அவர்களை வரவேற்க தயாராக காத்திருந்தனர் சித்தி குடும்பத்தினர். சித்தியை கண்டவுடன்...

அமுதன்: ஹாய் ஆன்டி, நோ.... வணக்கம் அத்தை

சித்தி: "அத்த" இல்ல கண்ணு "சித்தி"

அமுதன்: சுத், சுத்தி... இஸ் தட் ரைட்?

சிவா: ஹி, ஹி. சுத்தி இல்ல சித்தீஈஈஈஈ......


அமுதன்: வணக்கம் சித்தி.

குமுதா: சித்தி, எனக்கு தர்ஷ்டியா இருக்கு, வாட்டர் வேணும்.

சித்தி: இதோ கொண்டுவாரேன் கண்ணு

குமுதா: சித்தி, இந்த வாட்டர் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. சுகர் மிக்ஸ் பண்ணீங்களா?

சித்தி : அஸ்கா சேக்கல சாமி, இது சிறுவாணித் தண்ணி.

அமுதன்: சென்னைல பேசுன டமில் டடிப்ரெண்ட்டா இருந்தது. நீங்க பேசுற டமில் டடிப்ரெண்ட்டா இருக்கே?

சித்தி: இது கொங்குத் தமிழ் கண்ணு. ரொம்ப மரியாதையான தமிழ்.

அமுதன்: ஓ அப்பிடியா, இந்த டமில்லோட ஸ்பெஷலிட்டி என்ன?

சித்தி: கொங்குத் தமிழோட அம்சமே 'ற' வும் 'ங்' கும் தான்.. என்னோட உன்னோட கிறத "என்ற", "உன்ற" னு சொல்லுவோம்.

சிவா: "என்னடா" கிறத "என்றா" னு சொல்வோம். அதோட நீதிடா,நேர்மைடா,எருமைடா னு கூட சொல்வோம்.

சித்தி: அப்பிடி பேசக்கூடாது கண்ணு

சிவா: சரிங் மா  

அமுதன்: டாடி, இந்த சிட்டியோட ஸ்பெஷலிட்டி என்ன?

செல்வம்: கோயம்புத்தூர் இஸ் "மான்செஸ்டர் ஒப் சௌத்இண்டியா".

அமுதன்: "மான்செஸ்டர்" னா, அமெரிக்கால ஹார்ட்போர்ட் பக்கதுல இருக்கே அதுவா?

செல்வம்: இல்ல, இந்த மான்செஸ்டர் இங்கிலாந்துல இருக்கு.

சிவா:  அது மட்டும் இல்ல.. வருஷம் முழுசும் வெயிலே தெரியாது, குளுகுளுன்னு இருக்கும்.

செல்வம்: இந்தியாவின் எடிசன் ஜி.டி நாயிடு பிறந்த ஊரு இது தான்

அமுதன்: இங்க வேற என்னவெல்லாம் இருக்கு?

சித்தி: நெறையா இருக்கு, முதல்ல நாமெல்லாம் மலைக்கிப் போறோம்.

குமுதா: மலையா, அது என்ன மலை?    

சிவா:  

BMG: https://www.youtube.com/watch?v=uLcXLvAPCkE (15 முதல் 23 நொடிகள்)

அங்கிருந்த துண்டு ஒன்றை எடுத்து முட்டியில் இழுத்து வைத்துக்கொண்டு நடனமாட

சித்தி: சிவா, என்னடா பண்ற....

சிவா: (துண்டை கீழே போட்டுவிட்டு  உடனே)

BGM:  https://www.youtube.com/watch?v=82qfhI7uZf0  (முதல் 42 நொடிகள்....) 

போலாமா? 

அமுதன், குமுதா:   போலாமே....  


காட்சி 6

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தியின் குடும்பம்,
மகன்: சிவா 

(மேடையை விட்டு வெளியே சென்று மீண்டும் சில நொடிகளில் திரும்பி வருகிறார்கள்.
காவடி ஆட்டக் குழுவினர் தயாராக இருக்கின்றனர்)  

குமுதா: அவங்கல்லாம் யாரு? shoulder ல என்ன வச்சிருக்காங்க?

சித்தி: அதுக்குப் பேரு காவடி கண்ணு, அவங்க ஆடப்போற ஆட்டத்துக்குப் பேரு "காவடியாட்டம்".

காவடியாட்டம்... 


காட்சி 7

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தியின் குடும்பம்,

சித்தி: இன்னும் ரெண்டு நாளு இருந்துபோட்டு போலாமுல்லங்க்கா

ராஜி: இல்லமா, இன்னும் ரெண்டு ஊருக்கு போகவேண்டியது இருக்கு.

சிவா: அடுத்து எங்க போறீங்க?

அமுதன்: ஸ்டோன் டம், ஹொவ் டு சே இன் டமில் டாடி

செல்வம்: கல்லணைக்கு போறோம். அங்கிருந்து அப்படியே மதுரைகிப்போறோம்.

சித்தி:உங்க friend வூட்டுக்கா அத்தான்?

செல்வம்: ஆமா, அவரு எனக்கு அண்ணன் மாதிரி.  

சித்தி: நல்லபடியா போயிட்டு வாங்க.    

ராஜி: சரிம்மா .


காட்சி 8

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
செல்வத்தின் நண்பரின் குடும்பம் (பெரியப்பா)


ஹாலில் உட்கார்ந்து பெரியப்பா பேப்பர் படித்துக்கொண்டிருக்க, அமுதன் காபி பருகிக்கொண்டே வருகிறான்

அமுதன்: பெரியப்பா, இங்க கல்லணை என்ன அவ்வளவு ஸ்பெசலா?

பெரியப்பா: ஆமா அமுதா, secondu century’laye, கரிகாலன் கட்னதாக்கும் இந்த அணை.

அமுதன்: வாவ்

பெரியப்பா: கல்லையும், களிமண்ணையும் மட்டும் வச்சிண்டு கட்னதாக்கும் இது. இந்த லோகத்துக்கே பாசனத்த சொல்லி கொடுத்தது நம்ம முன்னவா தான்..

அமுதன்: தஞ்சாவூர் பத்தி கொஞ்சம் explain பண்ணுங்களேன்.

(பெரியம்மா உள்ளே வருகிறார்)

பெரியம்மா: நான் சொல்றேண்டா ராஜா.
நம்மளோட நெற்களஞ்சியம் தஞ்சாவூர்தான். சோழர்களோட தலைநகரமாகவும் இருந்திருக்கு டா அம்பி.

அமுதன்: சோழர்கள்னா யாரு?

பெரியம்மா: தமிழ்நாட்டை பல மன்னர்கள் ஆண்டா. அவாள்'ல முக்கியமானவா சோழர்கள்.

அமுதன்: கரிகாலனும் சோழ மன்னனா?

பெரியம்மா: ஆமா, அதுல most important ராஜராஜசோழன்.
பெரியகோவில கட்டினது இவாதான். இவரோட புள்ளாண்டான்
 ராஜேந்திரசோழன். அவரும் ரொம்ப popular டா அம்பி

அமுதன்: பெரிய கோவிலா?

பெரியப்பா: இந்தியால பெரிய கோயில் ரொம்ப ப்ரெசித்தம் டா கண்ணா வா உன்ன நான் கோவிலுக்கே அழைச்சிண்டு போயி காட்றேன்..

காட்சி 9


கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
பெரியப்பா குடும்பம் 

இடம்: பெரிய கோவில்  

அமுதன்: இந்த temple'கு அப்டி என்ன importance?

பெரியம்மா: கிரானைட் கல்லால 1000 வருசத்துக்கு முன்னால கட்னா.  தமிழரின் கட்டடக்கலைக்கு இதான் பெஸ்டு proof. அங்க இருக்குற சிலைகள் எல்லாமேகலை நயத்தோட இருக்கும்..

அமுதன்: அது எப்படி? 

பெரியம்மா: இந்த சிலையைப் பாரு, நோக்கு என்ன புரியர்துன்னு சொல்லு? 

அமுதன்: பாம்ப மிதிச்சிக்கிட்டு ஒருத்தர் நிக்கிறாரு

பெரியம்மா: நன்னா  பாரு, யானை எத்தன பெருசு.. அதையே பாம்பு விழுங்கர்து

குமுதா: யானை big animal’nu தமிழ் ஸ்கூல்ல படிச்சிருக்கேன்.

பெரியம்மா: சரியாசொன்னபோ,
யானையையே முழுங்கற பாம்ப, கால்'ல மிதிச்சிண்டு நிக்கற த்வாரபாலகர் எத்தன powerful'ஆ இருப்பார்?

அவரே கும்பிடுறார்னா, அப்ப சாமீ எவ்ளோ பெரியவரு?

அத சொல்ற சிலைதான் இது.

அமுதன்: இப்ப புரியிது. 

(வேறொரு சிலையக் காட்டி) இந்த சிலை என்ன சொல்லுது பெரியப்பா?

பெரியப்பா: நம்ம பரதக் கலையோட விசேஷத்த குறிகர்து

அமுதன்: பரதம்னா?

பெரியப்பா: அது ஒரு திவ்யமான நாட்டியம். நோக்கு பாக்கணுமா?

அமுதன்: ஓ பாக்லாமே..
  
பரதம்

காட்சி 10

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
மாமாவின் குடும்பம்
மாமா: செந்தில்
மகன்: கார்த்தி

மாமா வீட்டு வாசலில்...

அமுதன்: Mom, அங்கிள் வீட்ல பேசுற டமில் டிப்ரெண்ட்டா இருக்குமா?

ராஜி: ஆமா அமுதன், அவங்க மதுரைத் தமிழ் பேசுவாங்க.

செல்வம்: சங்கம் வச்சி தமிழ் வளர்த்த ஊருடா..

வாசலில் காத்திருந்த மாமவின் குடும்பத்தினர், அனைவரையும் உபசரித்து உள்ளே அழைத்துவந்தனர்.

மாமா: பிரயாணமெல்லாம் எப்படி இருந்துச்சுகா?

ராஜி: நல்லா இருந்தது செந்தில், நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?

மாமா: எல்லாரும் நல்லா இருக்கோம்.

செல்வம்: கார்த்தி எங்க செந்தில்?

மாமா: வெளிய போயிர்க்கான், வெள்ளனே வந்திருவான்

குமுதா, முக்குல பிள்ளைய வெளையாட்ரத அப்டி என்ன வெறிச்சு பாக்குறீக?

குமுதா: Wait maama, lemme go and see..

குமுதா தெருவில் பிள்ளைகள் விளையாடுவதை பார்க்கிறாள். ஒரு குரூப் பாண்டி ஆடி கொண்டிருக்கிறார்கள்.

குமுதா: நீங்க என்ன பண்றீங்க?

Group Member 1: நாங்கலாம் வெளையாட்றோம்.
குமுதா: என்ன விளையாட்டு இது?

Group Member2: இதுதான் பாண்டி ஆட்டம்.

Group Member3: நீயும் வரியா?

குமுதா: so nice. நீங்க continue பண்ணுங்க.. நான் நாளைக்கு join பண்ணிக்கிறேன்.

இதற்கிடையில் மாமவின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் சிலர் அமுதன் குடும்பத்தைக்காண அங்கு வந்தனர்.

இளம் வயது பாட்டி ஒருவர்: செந்துலு, செந்துலு, ஒன்னோட வீட்டுக்கு அமெரிக்காவுல இருந்து யாரோ வந்துர்க்காங்கலாமே, யாரது?

மாமா: என்னோட அக்கா வீட்ல இருந்து வந்துருக்காக.

பாட்டி1: அவிகள  கூப்புடு

மாமா: அக்கா, அமுதா, குமுதா கொஞ்சம் இங்க வாங்க.

குமுதா: அமுதா, ஹூ ஆர் தே (என்று அமுதனிடம் கேட்டாள்)

அமுதன்: ஹொவ் டூ ஐ நொவ்? ஆஸ்க் அங்கிள்.

பாட்டி2: (பாட்டி 1 ன்னிடம்) சின்னப் புள்ள என்னமா இங்கிலீபீஷ் பேசுது

பாட்டி1: அடி என்னாடி லந்து பண்றவ?, அமெரிக்காவுல, இத விட சின்னப் புள்ளைங்கெல்லாம் இங்கிலீபீஷ் பேசுமாமே?

பாட்டி2: ஆமா, இவ வண்டியூர் தெப்பக் குளத்த தாண்டினதில்ல பெருசா அமெரிகாவப்பத்தி பேச வந்துட்டா, ம்ம்க்கும்

பாட்டி 1: செந்திலு, ஊம் மருமவன செத்த நேரம் இங்கிலீபீஷ்ல பேசச்செல்லேன்?

மாமா: அமுதா, அவிக கூட எதாவது இங்கிலீஷ்ல பேசேன்

அமுதன்: Really??? அங்கிள்? ஜஸ்ட் லைக் தட் டாக் னா வாட் கேன் ஐ டாக்?

மாமா:(பாட்டிகளிடம்) அக்கா நீங்க எதாவது கேளுங்க, அவன் பதில் சொல்லுவான்.
பாட்டி1: (பாட்டி 2 ஐ பார்த்து) நீ எதாவது இங்கிலீபீஷ்ல கேளு.

பாட்டி2: நா பெரிய எலிசபெத்து ராணி பேத்தி, பக்கி… நீதானடி அஞ்சாங் கிளாச விருதுநகர்ல அஞ்சி வருஷம் படிச்சவ. நீ கேளு?

பாட்டி 1: அமுதா, அமுதா வாட் இச் யுவர் நேமு?

அமுதன்: (பெரு மூச்சுடன்) oh no…நாட் அகைன்...

பாட்டி 2: அமுதான்னு நல்ல பேர வுட்டுட்டு வாயிலையே வராத "நாட்டு" "பூட்டுனு" எதோ பேரு வச்சிருக்காங்க.

இதற்கிடையில் கார்த்தி வந்துவிட

கார்த்தி: (பாட்டிகளை பார்த்து) என்னம்மா நீங்க இப்பிடிப் பண்றீங்கலேம்மா, அதுக்குள்ள பட்டறைய போட்டீங்கலேம்மா?
“பாட்டிகள் வினோதமாக கார்த்தியைப் பார்க்க”

கார்த்தி: அமெரிகாவுலேர்ந்து மாமா வந்துர்காக, அத்தை வந்துர்காக, அமுதா-குமுதா லாம் வந்துர்காக.. நீங்கலாம் போயிட்டு அப்புறம் வாங்கம்மா மின்னல்...

All Paati’s: அதுக்கு ஏன் ஹெ ஹெ னு அலப்பறைய போட்ற ? நாங்க போயிட்டு பைய வாரோம்.  (பாட்டிகள் அனைவரும் புறப்பட்டு விட்டனர்)

அமுதன்: ஹாய் கார்த்திக்

கார்த்தி: ஹாய் அமுதன், நைஸ் டு மீட் யூ.

அமுதன்: கார்த்தி, நீ டமில்லையே பேசலாம். எனக்கு டமில் புரியும்.

கார்த்தி: அப்பிடியா? தமிழ்நாட்ல எந்த ஊர்லாம் போனீங்க?

அமுதன்: சென்னை, கோவை, தஞ்சை

கார்த்தி:  சூப்பர், இன்னைக்கி இங்க ஒரு மியூசிக் ப்ரோக்ராம் இருக்கு, நாம எல்லாரும் அங்க போலாமா?
  
அமுதன்: நல்ல பீட் சாங் வித் புல் எனெர்ஜியோட கேட்கமுடியுமா? எக்ஸாம்பில் சொல்லனும்னா, "மைகேல் ஜாக்சன்" பாட்டு மாதிரி.

இந்தா, இதக் கேட்டுப்பாரு... 

கார்த்தி: இதென்ன பெரிய விஷயம்,  "மைகேல் ஜாக்சன்" னோட professor ரே இங்க இருக்காரு.

அமுதன்: வாட் டூ யு மீன்?

கார்த்தி: இதோ அவங்களே வந்துட்டாங்களே....

கார்த்தி பறை குழுவிடம்                                

அண்ணே, நம்ம பையன் வேற மாதிரி ட்யூன் ஆகியிருக்கான். அதனால நீங்க கத்துக்கிட்ட மொத்த விதையையும் முழுசா இறக்கி செம குத்து குத்துங்க    

பறை குழு நபர் 1: என்னப்பு அவ்ளோ லேசா சொல்லிப்புட்டே. பொறபுக்கும் இறப்புக்கும் பறை உண்டுப்பே. பறைன்னா ச்சொல்ரதுன்னு அருத்தம். அப்பெல்லாம் ஊர்காறேங்களுக்கு பறை அடிச்சிதான் சேதி சொல்லுவாங்கே தெர்யுமா? தோல் வாதியத்துக்கு எல்லாம் இவுக தான் முன்னோடி. இது நம்மவூட்டு பாரம்பரியம்.. தமிழனோட அடையாளம். இப்போ இத கேளு ராசா.  


பறை...

காட்சி 11

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
மாமாவின் குடும்பம்
மாமா: செந்தில்
மகன்: கார்த்தி

கார்த்தி: என்ன அமுதா பறை எப்பிடி இருந்தது?

அமுதன்: ரொம்ப நல்ல இருந்தது. இண்டியா ல கிளாச்சிக் டான்ஸ் மட்டும்தான் இருக்கும்னு நெனச்சேன்.

கார்த்தி: சென்னை, கோவை, மதுரை எந்த தமிழ் பிடிச்சிருக்கு?

அமுதன்: எல்லாமே நல்லாத்தான் இருக்கு?

கார்த்தி: இதுவரைக்கும் நீ கேட்காத ஒரு தமிழ் இருக்கு

அமுதன்: என்னது அது?

கார்த்தி: சொல்றேன் நீ கேளு இப்போ

அமுதன்: ஒன்னு மே புரிலையே

கார்த்தி: சரியா சொன்னீங்க your honor... இதுல தமிழ் இருக்கும்ம்... ஆனா இருக்காது... :)

செந்தில்: டேய் அகராதி, இதெல்லாம் சொல்லி அமுதன் பேசுற தமிழ கோளாறு பண்ணாத

அமுதன்: நோ அங்கிள், வி ஆர் ஹவிங் பன்

செந்தில்: சீக்கிரமா தூங்குங்க.. நாளைக்கி வெள்ளனவே நீங்க கெளம்பனும். கன்னியாகுமரிக்கு போறீக இல்ல

காட்சி 12

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தப்பா குடும்பம்

இடம்: கன்னியாகுமரி veedu

அமுதன் சித்தப்பா சித்தப்பா என்று அழைத்தபடியே உள்ளே வருகிறான். 
சித்தப்பா என்னப்பா என்றபடியே உள்ளே வருகிறார்..

அமுதன்: வந்த உடனே கேக்கணும் நு நெனச்சேன்... தாத்தா எங்க? அவர பாக்க தானே ஆசையா வந்தோம்.

chitthi: தாத்தா பக்கத்துக்கு ஊரு பஞ்சாயத்துக்கு போயிர்காக.... ரவைக்கு வந்ருவாக

அமுதன்: OK… சித்தப்பா, இந்த வள்ளுவர் சிலைய நேர்ல பார்க்கப் போலாமா?

சித்தப்பா: வள்ளுவர் யாருன்னு தெரியுமா மக்கா ?

குமுதா: O, தெரியுமே, எவ்ரி வீக் எங்க டமில் ஸ்கூல ஒரு திருக்குறள் சொல்லுவோம்.

சித்தப்பா: எங்க ஒரு குறள் சொல்லு மக்கா ?

குமுதா: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

சித்தப்பா: பிரம்மாதம் மக்கா, பிரம்மாதம். வள்ளுவர் சிலையோட உயரம் 133 அடி. இது திருக்குறள்ள உள்ள 133 அதிகாரத்த குறிக்கி.

அமுதன்: அது என்ன பாறை?

சித்தப்பா: அதுவா மக்கா விவேகானந்தர் பாறை. அவரு யாருன்னு தெரியுமா?

அமுதன்: சிகாகோல நடந்த Conference’la ஹிந்து ரிலீஜியன் பத்தி பேசுனாரு

குமுதா: "நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்" னு சொன்னவரு.

சித்தப்பா: அண்ணே அமுதனையும், குமுதாவையும் நெனைச்சா எனக்கு
எத்தரை பெருமையா இருக்கு கேட்டியா .

செல்வம்: எல்லாம் தமிழ் ஸ்கூல்ல கத்துக்கிட்டது

சித்தப்பா: பசங்களா, இந்த ஊருக்கு இன்னொரு சிறப்பு இருக்கு கேட்டியா. .

அமுதன்: அது என்ன சித்தப்பா?

சித்தப்பா: வில்லுப் பாட்டு, இன்னிக்கி உச்சத்துல நடக்குது.. நாம போவோம்.. எத்தரை வட்டம் கேட்டாலும் சலிக்காது...

அமுதன்: heyyy… sooopereee... 

வில்லுப்பாட்டு

காட்சி 13

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
தாத்தா

செல்வம்: அமுதா வீட்டுக்கு போனவுடனே, தாத்தா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ.

அமுதன்: Why Paa?

செல்வம்: பெரியவங்கள பாத்தா கால்ல விழுந்து ஆசீ வாங்கனும், அது நம்ம பண்பாடு.

அமுதன்: ......

பேரப்பிள்ளைகளை கண்டவுடன் தூக்கியணைகத்து முத்தமிட முன்சென்றார் தாத்தா.

அமுதன்: ஐ அம் நாட் எ பேபி (என்று ஒதுங்கிக் கொண்டான் அமுதன் )

செல்வம்: அப்பா டோன்ட் மிஸ்டேக் ஹிம்...

தாத்தா: பரவாயில்ல செல்வம், நா அவனோட தாத்தா, அவன் என்னோட பேரன், இது என்னைக்கும் மாறாது.

செல்வம்: உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு?

தாத்தா: எனக்கென்ன... நான் நல்லவே இருக்கேன் பா.

செல்வம்: உங்களைப் பத்தி நாங்க வொர்ரி பண்ணாத நாளே இல்ல பா, நீங்க எங்ககூட வந்து ஸ்டே பண்ணலாம்ல, கிட்ஸ்ம் என்ஜாய் பண்ணுவாங்க.

தாத்தா: அது இருக்கட்டுமப்பா, நீ பேசுன 10,15 வார்த்தைல, எத்தன ஆங்கில வார்த்தைகள் பரு.

குழந்தைங்ககிட்ட "பண்ணி" தமிழ் பேசாத செல்வம், பண்பட்ட தமிழ் பேசு.

செல்வம்: சாரி ப்பா.... கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேம்பா...

தாத்தா: நல்லது செல்வம்

(குழந்தைகளைப் பார்த்து )

ரெண்டு பேரும் இங்க வாங்க, தாத்தா உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்.

அமுதன்: "ஆபத்தில் உதவா நண்பன்" கதையா தாத்தா?

குமுதா: அது எங்க தமிழ் ஸ்கூல்லையே சொல்லிக் கொடுத்தாங்க.

தாத்தா: இது வேற கதை

குமுதா: Ohh. That’s exciting

குழந்தைகள் இருவரும் தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்தனர்

தாத்தா: ஒரு காட்ல, அம்மா சிங்கம் இரை தேடி வெளிய போச்சு. அப்போ குட்டி சிங்கம் விளையாடிகிட்டே வழிமாறி எங்கையோ போயிரிச்சி.

குமுதா: அப்புறம் என்னாச்சி தாத்தா

தாத்தா: அப்போ, அந்த வழியா வந்த ஆட்டுக்கூட்டம்கூட சேந்துக்கிச்சி சிங்கக்குட்டி.

குமுதா: அப்புறம்

தாத்தா: இப்படி ஆடுங்ககூட இருந்த சிங்கம் தன்ன ஆடுன்னே நெனைசிருச்சி.

குமுதா: அப்பிடீன்னா, சிங்கம் புல்லைத் தின்னதா?

அமுதன்: குமுதா, ஸ்டோரியக் கேளு, சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணாத.

தாத்தா: ஒரு நாள், அங்க வேட்டைக்கு வந்த இன்னொரு சிங்கம், ஆடுங்கூட இருந்த, இந்தக் குட்டி சிங்கத்தப் பாத்தது.

குமுதா: ஓ, நோ

தாத்தா: அந்த சிங்கம், குட்டி சிங்கத்துக்கிட்ட சொன்னது. நீ ஆடு இல்ல "சிங்கம்" னு.

குமுதா: அதுக்கு, குட்டி சிங்கம் என்ன சொன்னது?

தாத்தா: முதல்ல, குட்டிக்கு தான் யாருன்னு புரியல, அப்புறமா புரிஞ்சிக்கிச்சி. ஆடு கூட இருந்ததால நாம ஆடு ஆகமாட்டோம். எங்க இருந்தாலும் சிங்கம்சிங்கம்தான்னு.

......

அந்த வழி தவறிப்போன சிங்கம் மாதிரி இல்லாம, யார் கூட இருந்தாலும், எந்த ஊர்ல இருந்தாலும் நாம தமிழர்கள்ங்கிறத மறக்கவே கூடாது.

அமுதன்: நாங்கதான் தமிழ் பேசுறோமே தாத்தா.

தாத்தா: பேச்சில மட்டும் தமிழ் இருந்தா போதாது அமுதா , உனக்கு மூங்கில் தெரியுமா?

அமுதன்: தெரியும் தாத்தா, பேம்பூ ட்ரீ

தாத்தா: மூங்கில் மரம் இல்ல அமுதா, அது புல். உள்ளீடு இல்லாத எதுவும் மரம் ஆகமுடியாது.

அமுதன்: ஓ, அப்பிடியா?

தாத்தா: நம்மோட தனித்தன்மைய நாம இழந்துட்டோம்னா, நாமளும் உள்ளீடு இல்லாத புல்லுக்குச் சமம்தான்.

கதையை தாத்தா கூறி முடித்தவுடன், அமுதன் ஓடிவந்து தாத்தாவை அணைத்துக்கொண்டான்.


================


காணொளி 

https://www.youtube.com/watch?v=32Kv-o_M5ko&feature=youtu.be


No comments:

Post a Comment