cookie

Tuesday, October 23, 2012

ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse) - 2



காவல் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலித்தது, எடுத்து பேசிய  முருகானந்தத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மீண்டும் திருட்டு..

பெருங்குடி தேவாலய சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டில் கயவர்களின் படையெடுப்பு.

தினேஷ் கவலையுடன் இருக்கையில் அமர்த்திருந்தார், அருகில் மோனிகாவும் வாடிய முகத்துடன் காத்திருந்தார்,காவல்துறையின் வரவுக்காக.

சரவணனும், திருப்பதியும் வீட்டின்  உள்ளே வந்தார்கள். நடுவீட்டின் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி எட்டை நெருங்க 5 நிமிடத்திற்காக காத்துக் கொண்டிருந்தது.  நடு வீட்டில் தள்ளுவண்டியுடன் இணைக்கப்பட்ட பெட்டி தனியாக நின்றது. தினேஷ் மற்றும் மோனிகா இருவர் முகத்திலும் கவலையுடன் சேர்ந்த களைப்பும் காணப்பட்டது.

"Mr தினேஷ், நான் இன்ஸ்பெக்டர்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார் சரவணன்.

இப்போதான் ஊர்ல இருந்து வர்றீங்களா தினேஷ்?என்று தினேஷின் பதிலுக்காக காத்திராமல் தானே உரையாடலை தொடர்ந்தார். 

       ஆமா சார், Close Relative இறந்துட்டாங்கன்னு நேத்து Phone வந்தது, அதான் அவசரமா ஊருக்கு போயிருந்தோம். இப்போ தான் வந்தோம். வந்து பாத்தா...

என்ன வெல்லாம் காணாம போச்சு?

      அடமானம் வைக்கிறதுக்காக 50 பவுன் நகை வீட்ல வச்சிருந்தேன்.  இன்னைக்கு புது வீடு வாங்குறதுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும், அதுக்காகதான் நகையை வீட்ல வச்சிருந்தேன். நேத்து  ஊர்ல இருந்து Phone வந்த உடனே கிளம்பிட்டோம்.

நகைய எங்க வச்சிருந்தீங்க?

    Water Proof Packet ல போட்டு Toilet Tank ல வச்சிருந்தோம். வீட்டுக்குள்ள வந்த உடனே Check பண்ணோம், காணோம் Sir.

நிலைமையை விளக்கும் போதே துக்கம் குரல் வலையை அடைத்ததால்  வார்த்தைகள் கண்களின் வழியாக வழிந்தன. மனைவியின் முன்பு கண்கள் கசிவதை விரும்பாததால் சமாளித்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார் தினேஷ்.

   இது Friend டோட  வீடு Sir, அவன் வெளி நாட்ல இருக்கான். இன்னும் 2 Months ல திரும்ப வரான், அதுக்குள்ள சொந்த வீடு வங்கி போயிரலாம்னு நினைச்சேன். 

வார்த்தைகளை தினேஷ் முடிக்கும் முன்பே உவர் முத்துக்கள் அவர் கண்களின் மடை தாண்டி உதிர்ந்து கொண்டிருந்தன. இருக்கையை விட்டு எழுந்து சென்று சரவணன் வலது கையால் தினேஷின் இடது தோள்பட்டையை ஆதரவாக தட்டினார்.

கவலப்படாதீங்க Mr தினேஷ், காணாமல் போன நகையை நிச்சயம் கண்டு புடிச்சிரலாம். நகை இல்லாம வேற என்ன காணோம்?

Office ல கொடுத்தTablet டும் காணோம் Sir 

உங்க Office லTablet கொடுத்தாங்களா தினேஷ்?

ஆமா Sir, நான் Software கம்பெனி ல Test Lead டா வேலை பார்க்குறேன். Mobile Application Test பண்றதுக்காக கொடுத்தாங்க.

தினேஷின் பதிலை கேட்டவுடன் சரவணன் மூளையின் தேடுபொறி, வலை ஊர்தியை  (Web Crawler) ஓட்டி தகவலை தேடியது, சில நொடியில்...

தினேஷ், உங்க Tablet ல "Locate My Device" Activate பண்ணியிருக்கீங்களா?

எனக்கு அத பத்தியெல்லாம் தெரியாது Sir,எங்க Office ல Develop பண்ற Application ன Test பண்றதோட சரி, மத்தபடி படம் மட்டும் தான் பார்ப்பேன்.

சரி பரவா இல்ல, அதுல என்ன Operating System இருந்தது, I Mean OS Version என்ன இருந்தது தெரியுமா?

Sorry Sir, அதுவும் தெரியாது.

உங்க Office Systems Team கிட்ட கேட்டு உடனே சொல்றீங்களா?

ஐயோ Sir, நான் Phone பண்ணா 10:00 மணிக்கு முன்னால அவங்க Call Pickup பண்ண மாட்டங்க Sir.

 எரிச்சலடைந்த சரவணன், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல். 

"உங்க Systems Team Head டோட Phone Number கொடுங்க நான்பேசுறேன்"  என்று கூறி அலைபேசி என்னை வாங்கிக்கொண்டார். 

மறுமுனையில் அலை பேசி ஒலிக்க, புது எண் பளிச்சிடுவதால் யாரென்று தெரிந்து கொள்ள Systems Head பேசியை எடுத்து அழைப்பை ஏற்றார்.

Hello, நான் Inspector பேசுறேன், நீங்க ".... Company Systems Head" தான?

ஆமா Sir, உங்களுக்கு என்ன வேணும்.

உங்க Office ல வேல பாக்குற Mr. தினேஷ் சோட Tablet ல என்ன OS Version Install ஆகி இருக்கு, கொஞ்சம் அவசரம் உடனே சொல்ல முடியுமா Please?

Sir Office Information வேணும்னா நீங்க Office க்கு  தான் வரனும், அதுமட்டுமில்லாம Information Release பண்றதுக்கு Approval வேணும். 11 மணிக்கு மேல Office வாங்க பேசலாம்.

I Understand That Very Well Mr, Situation கொஞ்சம் Serious அதனால தான் உடனே கேட்குறேன். Information இப்போ கொடுங்க 11 O'Clock Formal லா Constable ல அனுப்பி வக்கிறேன்.   

சரவணன், இவ்வளவு கூறியும், கணினியின் தலைவர் இறங்கி வராததால். நாணயம் சுழன்று சிங்கம் வெளியானது. அடுத்த நொடி அனைத்து விவரங்களும் அட்டவணை படுத்தப் பட்டது.

Locate My Device : Not Activated 

OS Version : 6.0  

3G Enabled : Yes 

தினேஷ், உங்க Tablet ல, OS Version 6.0 இருக்குது அதனால Locate My Device Service Default டா Activate ஆகி இருக்கும். ஆனா உங்க Tablet Switch OFF ஆகி இருந்தா கொஞ்சம் சிக்கல்தான். By Any Chance, Alarm எதுவும் Set பண்ணி இருக்கீங்களா?

"இதுக்காவது ஆமான்னு சொல்லுங்கன்னு" சரவணன் மனதுக்குள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, மோனிகாவிடம் இருந்து பதில் வந்தது.      

ஆமா Sir, இவருக்கு "Diabetes" இருக்கு, After Every Meal, Insulin Injection போடணும். Monday to Friday After Lunch போட வேண்டிய  Injection க்காக இவருடைய Tablet ல நான் Alarm Set பண்ணீருக்கேன். 12:30 க்கு அடிக்கும்.  Morning, Night and Weekend ல நானே அவருக்கு Injection போட்றுவேன். அதனால Weekdays மட்டும் தான் Alarm Set பண்ணிருக்கேன். 

Very Good Mrs தினேஷ், Approximately நமக்கு இன்னும் 4 Hours இருக்கு அந்த Device ச contact பண்றதுக்கு.   

சரவணனின் பதிலை கேட்டு உற்சாகம் அடைந்த மோனிகா "அப்போ காணாம போன எங்க நகை உடனே கிடைச்சிருமா Sir"?

"உடனே கிடைச்சிரும்னு சொல்ல முடியாது Madam, உடனே கிடைக்கிறதுக்கு உண்டான வாய்ப்பு ரொம்ப பிரகாசமா இருக்கு" என்று ஆறுதல் மொழிந்து விட்டு, தினேஷிடம் இருந்து Tablet டை தொடர்பு கொள்ளும் கடவுச்சொல்லை பெற்றுக்கொண்டு தன் "கருப்பு தொப்பி" வேலையை தொடர்ந்தார் சரவணன்.

திருப்பதி, காணமல் போன நகைகள் குறித்த புகாரை எழுதி இருவரிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்டார். சரவணனையும், திருப்பதியையும் சுமந்து கொண்டு காவல் வண்டி தன் நிலையம் நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. வழியில் சரவணனிடம் சில தொழில்நுட்ப சந்தேகங்களை கேட்டார் திருப்பதி.

Switch Off ஆகி இருந்தா எப்பிடி அய்யா அந்த Tablet ட தொடர்பு கொள்ள முடியும்?

முடியும் திருப்பதி, தினேஷ்க்கு கொடுத்த Tablet ல Special Option இருக்கு. Battery Life 4% இருக்கும் போது அந்த Device Switch Off ஆயிரும். Remaining Power, Emergency Alert Service காக Preserve ஆகிஇருக்கும். தினேஷ் Wife சொன்னங்க இல்லையா 12:30 Alarm, அப்போ அந்த Device Switch Off ஆகி இருந்தாலும், தானா On ஆகி Alarm அடிக்கும். அந்த ரெண்டு Second குள்ள கண்டிப்பா நம்மால அந்த Tablet ட Connect பண்ண முடியும். ஆன Device ச Reset பண்ணி இருந்தா, கொஞ்சம் கஷ்டம் தான். 

இந்த பதிலை கேட்டு வியந்து கொண்டே வண்டியை முன்னோக்கி செலுத்தினார் திருப்பதி.


காவல் நிலையத்தில் 


இதுவரை எத்தனையோ வித்தியாசமான வழக்குகளை இந்த காவல் நிலையம் எதிர் கொண்டிருந்தாலும், இந்த வழக்கு சற்று புதிராக இருந்ததால் இன்னும் 30 நிமிடத்தில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு அனைவரையும் பற்றிக் கொண்டது.

நிலைய கடிகாரத்தில் மணி சரியாக 12:00

சரவணன் தன் சோதனைக்கு தேவையான அனைத்தையும் ஆயத்த படுத்திக் கொண்டு காத்திருந்தார். நொடிகள் நிமிடமாகாதா என்ற எதிர்பார்ப்பு அனைவரையும் ஆட்கொண்டது. 

ஒரு நிமிடம் எஞ்சி இருக்கும் போது சரவணன் தன் கணிப்பொறியை தட்டி, தினேஷின் Tablet டை தொடர்பு கொள்ளும் கோரிக்கையை Server வழியாக GPS செயற்கை கோளுக்கு அனுப்பினார்.முதல் இரண்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.

சரியாக 12:30 மணி 23 நொடியில், தினேஷின் Tablet மனம் இறங்கி 12 இலக்க எண்ணை 130418801620 மட்டும் அனுப்பியது . அது அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளை குறிக்கும் எண்கள் என்பதை சரவணன் அறிவார். 

அந்த எண் உலக வரைபடத்தில், Richi Street இல் உள்ள ஒரு இடத்தை காட்டியது.  

Latitude: 13°04'18" N  
Longitude: 80°16'20" E

இந்த தகவலை  காவல் துறை  கட்டுப்பட்டு அறை, எழும்பூர், சென்னை - 8 க்கு  அதிக பட்ச முன்னுரிமையுடன் கவனிக்குமாறு தெரிவித்தார் சரவணன்.

காவல்துறை விரைந்து சென்று Richi Street இல் இருக்கும் ஒரு மின்னணுவியல் பொருட்கள் விற்கும் கடையை கையகப் படுத்தியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் சரவணன் அந்த கடையில் இருந்தார்.

மேசையில் பாவமாக உறங்கிக் கொண்டிருந்தது Tablet. நாற்காலியில் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தார் 45 வயது மதிக்கத்தக்க கடையின் முதலாளி.

உங்க பேரு?

     முரளி

இந்த Tablet உங்களுக்கு எப்படி கிடைச்சது?

      இன்னைக்கு காலைல 10:30 மணிக்கு  ஒரு பையன் வித்துட்டு போனான் Sir

அந்த பையன் யாரு? இதுக்கு முன்னால அவன பாத்துருக்கீங்களா?

     இல்ல, கீழ கிடந்ததுன்னு கொண்டு வந்து கொடுத்தான், அவசரம்னு காசு கேட்டான். காசு கொடுத்துட்டு Tablet ட வங்கிக்கிட்டேன்.

பையன் பாக்குறதுக்கு எப்படி இருந்தான், எவ்வளவு உயரம், கலர், எப்படி  பேசுனான்?

    வயசு 20 இருக்கும், கருப்புன்னு சொல்ல முடியாது ஆனா கொஞ்சம் கலர் கம்மிதான். பேசுனத வச்சி பாத்தா ரொம்ப படிச்சவன் மாதிரி தெரியல, சென்னை பையன்தான். உயரம் 5 அடி இருப்பான் Sir. 

கூட யாராவது இருந்தாங்களா?

   இல்ல Sir, யாரும் இல்ல, கொஞ்சம் தூரம் போய் ஆட்டோ ல ஏறி போயிட்டான்.

"Excellent"

"திருப்பதி, இவர்கிட்ட மத்த Details Collect பண்ணிடுங்க. திருட்டு சாமான வாங்கி விக்கிறதுக்காக இவர் மேல Case போட்ருங்க" என்று கட்டளையிட்டார் சரவணன்.

அதுவரை சாதரணமாக இருந்த கடை முதலாளி அதிர்ச்சியானார்.

"Sir நீங்க வேற எதாவது எதிர் பாக்குரீங்கன்னா, தயங்காம" என்று பேசிக் கொண்டிருந்தவரை திருப்பதி வேகமாக அமைதியாக்கினார்.

அருகில் இருந்த ஆட்டோ நிறுத்தத்தை நோக்கி விரைந்தார் சரவணன்.         

போலிஸ் தங்களை நோக்கி வருவதை உணர்ந்து கொண்ட ஆட்டோ  ஓட்டுனர்கள், எழுந்து நின்றனர்.

"எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? "என்று கேட்டார் சரவணன் 

    எந்த Inspector ரும் இதுவரை இவ்வாறு கேட்டதில்லை என்பதால் சற்று வியப்பாக இருந்தது அவர்களுக்கு. அதுவே சரவணன் கையூட்டுப் பெற வரவில்லை என்பதை அவர்களுக்கு உறுதி செய்தது. கூட்டாக "நல்லா இருக்கோம் Sir"  என்றனர்.

கடைக்காரர் சொன்ன அங்க அடையாளங்களை கூறி யார் அவனை அழைத்துச் சென்றது என்று கேட்டார்.

     "நான் தான் Sir"  என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்  அதில் ஒருவர்.

அந்த பையனை எங்க விட்டீங்க? கூட யாராவது இருந்தாங்களா?

     சத்யம்ல விட்டேன் Sir, கூட ஒரு பொண்ணு இருந்தது Sir. Lover னு நினைக்கிறேன்.

எந்த படத்துக்கு போனாங்க தெரியுமா?

      நல்லாவே இல்லன்னு சொன்னேன் Sir, அப்போதான் கூட்டம் கம்மியா இருக்கும்னு சொல்லிட்டு, சட்டையே போடாம ஒருத்தன் நடிப்பானே, அந்த படத்துக்கு போறேன்னு சொன்னாங்க.

ஹிந்தி படத்துக்கா?

     இல்ல Sir, தமிழ் படம் தான்...

என்ன படம் என்பதை புரிந்து கொண்டார் சரவணன். அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனரையும் உடன் அழைத்துக் கொண்டு சத்யம் விரைந்தார்.  

திரைஅரங்க மேலாளரிடம் பேசிவிட்டு திரைஅரங்க பணியாளரை  உள்ளே சென்று அந்தப் பையனை அழைத்து வரச்சொன்னர் சரவணன்.  எந்த இருக்கை  என்பதை ஏற்க்கனவே CCTV கேமரா மூலமாக உறுதி செய்துவிட்டு  சென்றதால் சுலபமாக அவர்களை அடைந்தார் திரை அரங்க பணியாள். காதல் பறவைகளை பிரித்து பிராமஹத்தி தோசத்திற்க்கும் ஆளானார். ஆண் பறவை மட்டும் வெளிவந்து மாட்டிக்கொண்டது.

"இந்த பருப்பா, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டா உடனே போயிறலாம், எந்த Problem மும் இல்ல OK?" என்று விசாரணையை தொடங்கினார் சரவணன். 

   அவன் எதுவும் பேசவில்லை...    

இன்னைக்கு காலைல ஒரு Electronic சாமான் ஒன்ன Richi Street ல வித்தேல்ல, அத உனக்கு யார் கொடுத்தா (அ) நீ எங்கருந்து எடுத்த?

    நிலவரத்தின் கலவரத்தை புரிந்து கொண்டு பொய் சொல்ல துணியாமல் உண்மையை சொன்னான் அந்த பையன் 

      நேத்து எங்க அப்பா கிட்ட இருந்தது, அது என்னன்னு சரியா தெரியல, படத்துக்கு போக காசு கேட்டேன் குடுக்கல அதான் எடுத்துகிட்டு வந்துட்டேன்.


உங்க வீடு எங்க இருக்கு, உங்க அப்பா யாரு?

விவரங்கள் பெறப்பட்டது.

 "உங்க அப்பா கிடைக்கிற வரைக்கும் நீ போலீஸ் ஸ்டேஷன் ல இருப்பா. யாருக்கும் Phone பண்ணாத " என்று சிந்தாதரிப்பேட்டை காவலரிடம் ஒப்படைத்து விட்டு அந்த பையனின் வீடு நோக்கிப் பறந்தார் சரவணன், உடன் திருப்பதியும் சென்றார். 


போலீஸ் வண்டி, வடபழனி கங்கை அம்மன் கோவில் மூன்றாவது தெருவில் , மூன்று இலக்கங்கள் எழுதப்பட்ட வீட்டின் முன்பு நின்றது. 

மிகவும் மோசமான நிலையில் இருந்த வாயில் கதவின் சட்டத்தின் வழியாக நோட்டமிட்டார் சரவணன். தீப்பட்டியை போல வரிசையாக அடுக்கப்பட்ட சிறிய அளவிலான வீடுகள் அதில் வலது பக்கம் நாலாவது வீடு.

கதவு தட்டும் சத்தம் கேட்டு ஒரு பேரிளம்பெண் வெளியே வந்தார். சரவணன் கூறிய பெயரை கேட்டு, அந்த மணாளனை மணந்தது இந்த மங்கையின் பாக்கியம் என்று ஒப்பாரி வைத்தார்.  

      "அது இப்போ வெளிய போயிருக்கு சார், ரவைக்கு தான் வரும். எதாவது தப்பு தண்டா பன்னிருச்சா? அப்படியெல்லாம் பண்ணாது சார். கோவம் வந்தா என்னதான் அடிக்கும் வேற எந்த தப்பும் பண்ணாது சார்" என்று சரவணனிடம் முன் வாய்தாவுக்கு விண்ணப்பித்தார் அந்த பெண்மணி.

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க, நீங்க பயப்படாதீங்க, சும்மா விசாரிக்கணும் அவ்வளவுதான். இப்போ அவர எங்க பாக்கலாம்?

     தெரியல சார், எதாவது சாராயக்கடைல இருக்கும். வழக்கமா வடபழனி சரயக்கடைலதான் இருக்கும்.

அவரு என்ன வேலை பாக்குறாரு?

       நிரந்தரமா எந்த வேலையும் இல்ல, அப்பப்போ எதோ "கான்ட்ராட்" வேலைக்கு போகும். சந்தோசமா இருந்தா காசு கொடுக்கும் இல்லேன்னா குடிக்கும் அப்புறம் வீட்ல வந்து சண்ட போடும்  (அழுகிறார்)...

நீங்க வேலைக்கு போறீங்களா?

            வீட்டு வேலை பாக்க போவேன் சார்.

உங்க பையன்?

           படிப்பு வரல, வேலைக்கும் போக மாட்ரான், ஊற சுத்தறான் சார்.

உங்க வீட்டுக்காரர் வந்தார்னா, இந்த நம்பருக்கு போன் பண்ணச் சொல்லுங்க. அப்புறம் அவரோட போட்டோ இருக்கா?

       சொல்றேங்க, ஓட்டு போடுற அட்டைல இருக்கு, இருங்க தர்றேன்.

"இந்த  போட்டோவ நான் கொண்டு போறேன், அப்புறமா தர்றேன்" என்று அந்த பெண்மணியிடம் கூறிவிட்டு குடிமகனை தேடி புறப்பட்டார் சரவணன்.

பகலவன் அனலை கக்கிக் கொண்டிருக்க, அரசாங்கம் ஏற்று நடத்தும் மதுபான சேவை மையம் விழா கோலம் பூண்டிருந்தது. மாற்று உடையில் இருந்த திருப்பதி உள்ளே சென்று தேடினார். சிறிது நேரத்தில் அரை மயக்கத்தில் இருந்த ஒருவரை தள்ளிக் கொண்டு வந்தார்.

திருப்பதி, இவர இங்கேயே விட்டிட்டு, பக்கத்து மெடிக்கல் ஷாப் ல  "Dihydromyricetin, 2 mg" வாங்கிட்டு வாங்க.  

அய்யா,  என்ன பேரு சொன்னீங்க?

DHM னு கேளுங்க, 2 mg வாங்கிட்டு வாங்க.    

மருந்து செலுத்தப்பட்ட 10 நிமிடத்தில் தடுமாறி  எழுந்து நின்றவரை பார்த்த சரவணன்.

"நான் கேக்குற கேள்விக்கு சரியா பதில் சொல்லீட்டிங்கன்னா, நாளைக்கு குடிக்கிறத்துக்கு வாய்  இப்போ இருக்குற மாதிரியே இருக்கும், இல்லேன்னா இடம் மாறிப்போகும் " என்று  வலது கையை முழுவதும் மூடி இருந்த சட்டையை  மடித்துக் கொண்டே கேட்டார் சரவணன்.

நேத்து நீங்க அந்த எலேக்ட்ரோனிக் சமான எங்கருந்து எடுத்துட்டு வந்தீங்க? யார் எடுக்கச் சொன்னது? எனக்கு தேவை ஆளு யாருங்கிறது மட்டும் தான். 

     பதில் ஏதும் வரவில்லை


எனக்கு நிச்சயமா தெரியும், யாரோ சொல்லித்தான் இத பண்ணிருக்கீங்க, அது யாரு.

    மீண்டும் மௌனம்.

சரவணனின் கண் சிமிட்டலின் அர்த்தம் புரிந்து கொண்ட  திருப்பதி,அந்த உருவத்தை இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்து குறுகலான  பாதைக்கு சென்றார். மயக்க மருந்து இல்லாமல் அந்த உருவத்தின் வாயில் இருந்த இரண்டு கோரை பற்களை கழட்டினார். 

சில நிமிடங்களுக்கு முன்னால் செலுத்தப் பட்ட DHM தன் வேலையை முழுவதும் காட்டி  திருப்பதியின் வைத்தியத்தை தெளிவான  மூளைக்கு முழுவதும் உணர்த்தியது. இனிமேல் தாங்க முடியாது என்பதை உணர்ந்து தன் பின்னணியை முன்மொழிந்தார் குடிமகன்.



ட்ரோஜன் ஹார்ஸ்


மறுநாள் காலை 07:30 மணி 

24/11 கோ சு மணி தெரு, சூளைமேடு, இரண்டாவது மாடியில் இருக்கும் வீடு   

வெங்கட் வாசலில் இருந்த ஆங்கில பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே வந்தார். சுவாரஸ்யமான தகவல் எதுவும் இல்லை. மூடி வைத்துவிட்டு மடிக்கணினியை எழுப்பினார். தகவல் தளத்தில் சில வினாக்களை தொடுத்துக் கொண்டிருந்தார். அவரின் விருப்பத்திற்கு ஏற்ப தகவல்களை அட்டவணைப் படுத்திக் கொண்டிருந்தது கணினி.

கதவு தட்டப் படும் சப்தம் கேட்டு கதவில் மாட்டப்பட்டிருந்த மீன்கண் ஆடியின் வழியாக யார் வெளியே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு   புன்னகையுடன் கதவை திறந்தார் வெங்கட்.   

வாங்க "Engineer Sir" என்று வந்தவரை வரவேற்று இருக்கையில் அமரச் சொன்னார் வெங்கட்.

இருக்கையில் அமர்ந்தவரை பார்த்து, Coffee யா Tea யா  என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்டார் வெங்கட் 

Coffee   

"Ready யா இருக்கு" என்று குவளையில் இருந்த குழம்பியை இரண்டு கோப்பைகளில் நிரப்பினார். 

கோப்பையில் இருந்த குழம்பியை உறிஞ்சிக்கொண்டே கேட்டார் வெங்கட் "என்ன விசயமா வந்தீங்க Sir"

      குடித்து முடித்த கோப்பையை கீழே வைத்து விட்டு, "  அது, உங்களுக்கே தெரியுமே Mr.வெங்கட்" என்றார்.

Thanks for the Coffee, போலாமா வெங்கட்?

  எதுக்கு, எங்க Sir ?

இதுவரைக்கும்  13 + 1 மொத்தம் 14 திருட்டு, உங்களுக்கு ஒரு Cell ல Reserve பண்ணிட்டு தான் வந்துருக்கேன்.

    Ohh, நீங்க Engineer ரா வரல, Inspector ரா வந்துருக்கீங்க இல்லையா சரவணன்? என்ன ஆதாரம் இருக்கு உங்க கிட்ட Inspector?

  உங்களோட, Outsourcing Manager and Executive ரெண்டுபேரும் already statement கொடுத்துட்டாங்க.

இதழ்களில் புன்னகை மாறாமல் தலையை மட்டும் அசைத்து கேட்டுக் கொண்டிருந்தார் வெங்கட். வேற என்ன Information வச்சிருக்கீங்க Inspector என்னப் பத்தி.

நிறையா இருக்கு வெங்கட்.

           7 வருசத்துக்கு முன்னால பெசென்ட் நகர் பீச் ல  இருந்து பைக் ஒன்ன திருடிட்டு போய் ஒரு மாசம் கழிச்சு செக்க்போஸ்ட் ல மாட்டிகிட்டது. அதுக்கப்புறம் புது பைக் வாங்கி கொடுத்து அந்த கேஸ் ச Close பண்ணது.


              அதுக்கப்புறம் 5 Years  no more activities.

              Last two Years ல 13 திருட்டு.


  Good Inspector, அந்த drunken  stupid idiot, அந்த Tablet ட எடுக்காம இருந்துருந்தா இன்னும் கொஞ்ச நாள் அகிருக்கும்ல.

       May be வெங்கட், ஆனா ரொம்ப நாளைக்கு நீங்க தப்பிக்க முடியாது. நீங்க தான் Master Mind னு கண்டு புடிச்சிட்டேன்.ஆனா ஏன் பண்றீங்கன்னு தான் புரியல. உங்க கிட்ட காசுக்கா குறைச்சல்?

        எல்லா செயலுக்கும் காரண காரியங்கள் இருக்கணும்னு அவசியம் இல்ல Inspector. இது என்னோட Passion. இதுல ஒரு போதை இருக்கு அது வேற எதுலையும் கிடைக்காது. அது உங்களுக்கு சொன்ன புரியாது. A Type of behavior that can not be beaten, once adopted.  This strategy is true for my victims. Ohh, I Shouldn't have told that. உங்களுக்கு தெரியுமா Inspector, நான் கொள்ளை அடிக்கிற இடத்த எப்படி choose பண்றேன்னு?

        தெரியும் வெங்கட்,  Location Based Apps and Social Network.  

       Clever Inspector, காலைல கக்கூஸ் போறதுல இருந்து நைட்டு கட்டிலுக்கு போற வரைக்கும் எல்லாத்தையும் FaceBook ல போட வேண்டியது. Trojan war ல use பண்ண horse மாதிரிதான் எனக்கு இந்த social network.  Social Network க்கு அடிமையான கூட்டம், என்ன பண்றோம், ஏது பண்றோம்னு தெரியாம. எல்லாத்தையும் அதுல post பண்ணவேண்டியது. I am not choosing my victims actually they are choosing me. Just I am using the information. நீங்க என்ன arrest பண்றதால மட்டும் இது நிக்கப் போறது இல்ல Inspector. It is a continuous reaction.

      அத நாங்க பாத்துக்குறோம்  வெங்கட், உங்களுக்காக கீழ ஜீப்பும், ஸ்டேஷன் ல Cell லும் wait பண்ணிக் கிட்டிருக்கு வாங்க போலாம்.


முற்றும்... 


சரவணன் சமர்ப்பித்த குற்றப் பத்திரிகையில் இருந்து 


  • கோபாலின் மனைவி விஜி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தவறாமல் சமூக வலைதளத்தில் பதியும் வழக்கம் உடையவர். ஞாயிறு அன்று திருமணத்திற்கு சென்று வந்ததை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.அதற்க்கு வந்த பின்னூட்டத்தில், தான் அணிந்திருந்த நகைகள் குறித்த முழுத் தகவலும் குறிப்பிட்டிருந்தார். தான் வெளியில் செல்லும் இடங்களில் எல்லாம் மறக்காமல் சமூக வலைதளத்தில் "செக்-இன்"  செய்யும் வழக்கமும் கொண்டவர்.

  • தினேஷ் தான் வீட்டு மனை வாங்க போவதையும், வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கப் போவதையும் சமூக வலை தளத்தில் குறிப்பிட்டிருந்தார். முதல் நாள் ஊருக்கு போனதையும் குறிப்பிட்டிருந்தார். 

  • வெங்கட் சமூக வலை தளங்களில் கிடைக்கும் தகவல்களை கொண்டு யாரை, எப்போது, எப்படி கொள்ளை அடிக்க வேண்டும் என்ற திட்டமிடும் வேலையை மட்டும் செய்பவர். சிறு வயதில் இருந்தே திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருபவர், அதனால் அவருக்கு பல தவறான நபர்களுடன் வெகு நாட்களாக தொடர்பு உண்டு. தான் சேகரித்த தகவல்களை இதற்கென்று ஒருவரை நியமித்து அவரிடம் ஒப்படைத்து விடுவார். கொள்ளை அடிப்பதில் வெங்கட்டுக்கு முக்கிய பங்கு. கொள்ளை அடிக்க தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வெங்கட் கவனித்துக் கொள்வார். 

  • தங்க நகைகளை கொள்ளையடிப்பதை மட்டும் வாடிக்கையாக கொண்டுள்ளார் வெங்கட். வீட்டில் சிறிய அளவில் இரசாயன சோதனை சாலையும் வைத்துள்ளார். nitric மற்றும்  hydrochloric அமிலங்களை கொண்டு சுத்த தங்கத்தை  மட்டும் பிரித்து விடுவார்.

     

சரவணனின் வேட்டை தொடரும்... 

Saturday, October 6, 2012

ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse)


வேளச்சேரி... 


தனக்கு  விருப்பம் இல்லா விட்டாலும் தன்  மனைவி அனுவின் வின் கட்டாயத்திற்காக அந்த நடிகரின் திரைப்படத்திற்கு செல்ல முன்பதிவு செய்த நுழைவுச் சீட்டை அச்சடிக்க அலுவலகத்தின் அச்சுப்பொறிக்கு கட்டளையிட்டான் நந்தா. வெள்ளிக் கிழமை மாலை தன்னை வேலை செய்யச் சொன்ன கோபத்தை வேறு யாரிடமும் காட்ட முடியாமல், காகிதமாக உருமாறிய அந்த மரத்தின் மேல் மையை உமிழ்ந்து, காட்டிக் கொண்டிருந்தது அச்சுப்பொறி. 

மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது, காத்திருந்த நுழைவுச்சீட்டை கையகப் படுத்த ஆயத்தமானான் நந்தா. தன் உயரத்தை குறைத்துக் கொண்டு மெதுவாக சென்று அச்சடித்த காகிதத்தை கைப்பற்றி, தன் இடம் திரும்பினான். 2000 ஒலிம்பிக் போட்டியில் 5 பதக்கம் பெற்ற மரியன் ஜோன்ஸ் போல் தன்னை உணர்ந்தான். மூட்டை, முடிச்சை கட்டிக்கொண்டு வீட்டுக்கு போக தயாரானான்.   

"டக் டக்..." நந்தாவின் மேசை எழுப்பப்பட்டது 

 "நந்தா, நீங்க வீட்டுக் போறதுக்கு முன்னால என்ன மீட் பண்ணிட்டுப் போங்க,  15 Minutes, ஒரு Project Discussion  இருக்கு"  என்றார் Project Manager ஆல்பர்ட். 

ஆல்பர்ட் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று தான் தன் அனைத்து யுத்திகளையும் பயன்படுத்தி தப்பிக்க முயன்றான் நந்தா. 

நான் இப்போ கிளம்பிட்டேன் ஆல்பர்ட், Monday discuss பண்ணலாமா?

இது ரொம்ப  important நந்தா, இன்னைக்கே report அனுப்பனும். quick கா முடிச்சிரலாம். ஒரு 15 minutes?

ஆல்பர்ட் கடிகாரத்தில் ஒரு நிமிடத்திற்கு 600 நொடிகள் என்பது நந்தாவுக்கு நன்றாகத் தெரியும். "2007 டிசம்பர் 12 இல் ஐந்து பதக்கங்களும் திரும்பப் பெறப்பட்ட ஜோன்சின் முகம் நினைவுக்கு வந்தது".

அரை கோடிக்கு அவசரப்பட்டு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் மாத வட்டி விகிதம் பயமுறுத்தியதால், வேறு வழியில்லாமல் அலுவலகத்தின் அனைத்து கட்டளைகளுக்கும் "ஆம்"என்ற பதிலை மட்டும் கூறும் கட்டாயத்தில்  நந்தா.

மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து சொல்ல தைரியம் இல்லாததால், ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி விட்டு அலைபேசியோடு சேர்ந்து  அவனும் ஊமையானான். 

தேவையான தகவல் முழுவதும் கிடைக்காததால், மீண்டும் திங்கள் காலை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டு இரவு 08:00 மணிக்கு கலந்துரையாடல் வழக்கம் போல முடிவை எட்டாமல் முடிக்கப்பட்டது. 

மனைவியை சமாதனம் செய்ய வழிமுறைகளை தேடினான்.அதே திரைப்படத்தின் இரவுக் கட்சிக்கான நுழைவுச்சீட்டு வாங்க முயற்சி செய்தான், கிடைக்கவில்லை. எப்படியும் இரவு உணவு கிடைக்காது என்பது தெரிந்ததால்,ரொட்டித் துகள்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு  கொதிக்கும் எண்ணையில் குழித்த கோழியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

வழக்கத்திற்கு மாறாக அன்று கொஞ்சம் அதிகமாகவே இருட்டி இருந்தது.  மகிழ்வுந்தை நிறுத்தி விட்டு வெளியே இறங்கினான். அதுவரை இரண்டாம் மாடியின் கன்னி மாடத்தில் காத்திருந்த அனு ,கணவன் தன்னை பார்த்து விட்டதை உறுதி செய்து கொண்டு, தன் கோபத்தை காட்டும் விதமாக வேகமாக உள்ளே சென்றார்.     

இது எதிர் பார்த்ததுதான் என்றாலும் சற்று ஏமாற்றத்துடன் படிகளில் ஏறினான்  நந்தா. மேலிருந்து ஒரு பெண் இறங்கிவர, வழிவிட்டு ஒதுங்கினான். முன்பின் பார்த்திராத அந்தப் பெண் நந்தாவின் அருகில் வந்து எதோ கேட்க முயன்றார்.  

"excuse me sir, என்னோட aunt வீட்டுக்கு வந்தேன், She is not here, I forgot my mobile. please உங்க phone தர்ரீங்களா, ஒரு call பண்ணிக்கிறேன்? " என்று அந்த பெண் கேட்க 

"Sure" என்று கால் சட்டையில் அலைபேசியை தேடிகொண்டிருக்கும் போது, ஒரு இளம் வயது வாலிபன் அந்த பெண்ணின் பின்னால் வந்து நின்றான். பரிச்சயம் இல்லாத மேலும் ஒரு வாலிபன் நந்தாவின் பின்புறம் நின்றான்.

விபரீதத்தின் விளிம்பில் நிற்கிறோம் என்பதை உணரும் மும்பு, முன்னால் நின்ற வாலிபனின் முஷ்டி நந்தாவின் கண்களை காயமாக்கியது. நிலை குலைந்து விழுந்தவன் உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்தான். தோளில் மாட்டியிருந்த மடிக்கணினியை பாதுகாப்புக்காக  வேகமாக சுழற்றினான், தன்னால் முடிந்த அளவு பலமாக "உதவி" என அலறினான்.

நெடுந்தொடரிடம் தஞ்சமடைத்த அடுக்குமாடி வாசிகளின் காதுக்கு எதுவும் எட்டவில்லை. விளம்பர இடைவேளையில் அலைவரிசை மாறும் அந்தக் கணத்தில் ஏதோ குரல்  கேட்டு முதல் மாடியில் இருந்த ஒரு வீட்டின் கதவு திறக்கப் பட்டு பின்பு உடனே மூடப்பட்டது.        

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த கும்பல் நந்தாவை அப்படியே விட்டு விட்டு ஓடியது.     

தடுமாறி எழுந்து, மெல்ல நடந்து, நந்தா வீட்டு வாசலை அடையவும் அனு கதவை திறக்கவும் சரியாக இருந்தது. உதிரம் பூசிய முகத்துடன் நின்ற கணவனை கண்டதும் செய்வதறியாமல் திகைத்து நின்றார் அனு.

மனைவியை சமாதானம் செய்துவிட்டு, அவசரம் இல்லாமல் அழைத்தார் அவசர போலீசை. மறுமுனையில் காவல்துறை குசலம் விசாரித்து விட்டு உடனே வருவதாக கூறிய  20 நிமிடத்தில் அங்கு வந்தார் ஒரு காவலாளி.

எத்தன பேரு இருந்தாங்க?

      மூனு பேரு இருந்தாங்க சார், அதுல ஒரு பொண்ணு.

அடையாளம் சொல்லமுடியுமா?

       "இருட்டு சரியா பாக்க முடியல. ஒருத்தன் 6 அடி உயரம் இருந்தான். மாநிறம் . அந்த பொண்ணு பேசுனத வச்சி பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி இருந்தது. மொபைல் போன் கேட்டது"

என்று நந்தா நடந்ததை விவரித்தார். கண்ணில் தாக்கியது அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்பதற்குதான் என்று காவல்துறை விளக்கினார்.

Mr. நந்தா, நீங்க உதவிக்காக யாரையாவது கூப்பிடும் போது கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏன்னா அவங்க பதட்ட மாயிட்டங்கன்னா உங்கள அமையாக்க என்ன வேனா பண்ணலாம். அவன் கைல கத்தி இருந்ததுன்னு வைங்க ரொம்ப சங்கடமா போயிருக்கும். ஒரு போலீஸ் இப்படி சொல்லக்கூடாது இருந்தாலும், உங்கள காப்பாதிக்க வேற வழி இல்ல. நிலமைய சமாளிக்க கைல இருக்குறத கொடுத்துருங்க. குறைந்த பட்சம் சின்ன காயத்தோட போகும்

நாளைக்கு காலைல police station வந்து ஒரு complaint கொடுத்துருங்க

இப்போ சொன்னது போதாதா sir ?

Formal லா complaint வேணும் Mr. நந்தா, மறக்காம documents கொண்டு வந்துருங்க.

"Formal" லுக்கு அர்த்தம் "காசு" என்பதை புரிந்து கொண்டார் நந்தா.


சில மாதங்களுக்குப் பிறகு...

பெருங்குடி...


பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு...

ஞாயிறு மாலை 07:45 மணி, வரும் வாரத்திற்கு தேவையான சாமான்களை வங்கிக் கொண்டு கோபாலும், விஜியும் வீட்டுக்கு திரும்பினர்.

விஜி வாங்கிவந்த காய்கறிகளை குளிர்சாதன பெட்டிக்குள் திணித்துக் கொண்டிருந்தார். கோபால் தளர்வாக மஞ்சத்தில் அமர்ந்தார்.

விஜி, நான் நாளைக்கு office போகும் போது மறக்காம pack பண்ணி குடுத்துரு

எதுங்க?

கல்யாணத்துக்கு போகணும்னு locker ல இருந்து எடுத்துட்டு வந்தோமே...

ஓ "Jewels" சா கண்டிப்பா, மறக்க மாட்டேன்.

மறுநாள் காலை 06:00 மணி

"என்னங்க, என்னங்க, எழுந்திரிங்க, எழுந்திரிங்க" தந்தி அடித்துக் கொண்டு விஜியின் குரல் அயர்ந்து நித்திரையில் இருந்த கோபாலை எழுப்பின...

என்ன விஜி, என்னாச்சு?

நகைய, நகைய...

நகைக்கு என்னாச்சு?

காணோங்க....

என்ன உளர்ற, நேத்து நாந்தானே வச்சேன்

இருவரும் எல்ல இடங்களில் தேடியும் நகை கிடைக்க வில்லை.

வேறு வழி இல்லாமல் கோபால் மூன்று இலக்கங்களை அழுத்தினார் தொலைபேசியில்.

சிறிது நேரம் கழித்து...

கதவு தட்டப்பட்டது, வாசலில் சரவணன்.             

Mr. கோபால், நான் Inspector சரவணன் (மாற்று உடையில் இருந்தார்).

வாங்க Inspector.

கடைசியா எப்போ நகைய பார்த்தீங்க?
  
நேத்து afternoon ஒரு marriage function னுக்கு போயிட்டு வந்து எடுத்து வச்சோம் சார். அதுக்கப்புறம் பார்க்கல.

எவ்வளவு நகை?

ஒரு 30 பவுன் இருக்கும் சார்.

வீட்ல நகைய எங்க வச்சிருந்தீங்க, பீரோலையா ?

இல்ல சார், வளையல் எல்லாம் groceries items கூட சேர்த்து பிளாஸ்டிக் டப்பால போட்டிருந்தோம். செயின் எல்லாம் கட்டிலுக்கு கீழ வச்சிருந்தோம்.

வேற எதுவும் திருடு  போகலையா கோபால் ?

இல்ல சார், நகை மட்டும் தான் காணோம், பீரோ ல கொஞ்சம் பணம் இருந்தது, அது அப்படியே தான் இருக்கு.     

கதவு, ஜன்னல் வேற எதுவும் உடஞ்சி இருக்கா?

இல்ல சார், அந்த மாதிரி எதுவும் ஆயிருந்தா நேத்தே கண்டு புடிசிருப்போம்.

"திருப்பதி, finger print மத்த evidence collect பண்ணனும். அதுக்கு arrange பண்ணுங்க. காணமல் போன jewels details ச correct டா வாங்கிடுங்க" என்றார் சரவணன்.

Mr.கோபால், நல்லா தேடிட்டு சொல்லுங்க வேற எதுவும் காணாம போகலையா?

கோபால் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விஜி அறையில் இருந்து வெளியே வந்து calculator ஒன்றை காணோம் என்றார். கோபால், விஜியை எரிச்சலுடன் பார்த்தார்.

"நகை காணாமப் போனதால எவ்வளவு ரூபா போச்சுன்னு calculate பண்றதுக்காக தேடினேன், வெளிய table ல தான் இருந்தது, இப்போ காணோம்" என்றார் விஜி.

தேங்க்ஸ் மேடம், நல்ல information குடுத்தீங்க.

என்ன சொல்றீங்க inspector?

Mr. கோபால், calculator கூட சேர்ந்து வேற transistor radio எதுவும் காணமான்னு சொல்லுங்க?

மீண்டும் உள்ளே சென்ற விஜி பழைய transistor ஒன்றை காணோம் என்றார்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தார் கோபால்.

ஒரு simple metal detector பண்றதுக்கு தேவையான உபகரணங்கள் தான் calculator மற்றும் transistor என்று விளக்கினார் சரவணன்.

பூட்ட உடைக்காம எப்படி sir திருடன் வீட்டுக்கு உள்ள வந்தான்?

அந்த வீட்டு கதவின் பூட்டை ஆராய்ச்சி செய்த சரவணன், உங்க கதவுல இருக்குறது "Warded lock". இதுக்கு "skeleton key" அல்லது "passing key" ஒன்னு இருக்கு. அத வச்சி சுலபமா திறக்கலாம்.

இப்படித்தான் பண்ணி இருக்காங்கன்னு நிச்சயமா சொல்ல முடியாது. ஆனா இப்படியும் பண்ணியிருக்கலாம்.

இதை எல்லாம் கேட்டு விரக்தியின் உச்சத்துக்கே சென்ற கோபால், அப்ப எப்படி தான் sir பாதுகாப்பா இருக்குறது ? என்று சரவணனிடம் கேட்டார்.

"இந்த கேள்விக்கு என்கிட்டே பதில் இல்ல Mr. கோபால், ஆனா கவலைப் படாதீங்க, உங்க நகை கண்டிப்பா கிடைக்கும். நகை கிடச்ச உடனே உங்களுக்கு call பண்றோம்" என்று கூறி விட்டு. மற்ற வேலைகளை முடித்து விட்டு வருமாறு திருப்பதியை பணித்து விட்டு சென்றார் சரவணன்.       

காவல் நிலையம் 

அய்யா, நம்மகிட்ட இருக்குற criminals list எடுத்து இந்த திருட்டு case ச விசாரிக்கலாமா?

அது ஒரு option னா வச்சிக்கலாம் திருப்பதி, ஆனா இந்த திருட்ட பார்க்கும் போது எனக்கு வேற மாதிரி தோனுது. நகைய திருடுனவன் நல்லா plan பண்ணிதான் செஞ்சிருக்கான். அதனால இதுக்குள்ள நகைய உருக்கிருப்பான். அல்லது வேற எங்கயாவது வித்துருப்பான். இருந்தாலும் நீங்க இந்த திருட்டு நகைய deal பண்றவங்கள பத்தி விசாரிங்க.

சரிங்கய்யா.


நாட்கள் நகர்ந்தன, தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தார் சரவணன்.ஆனால் ஒரு வாரம் ஆகியும் காணாமல் போன நகை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

அன்று...

காவல் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலித்தது, எடுத்து பேசிய  முருகானந்தத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மீண்டும் திருட்டு...

குதிரை ஓடும்... 

Wednesday, September 12, 2012

முதல் நாள் இன்று

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு 
மாடல்ல மற்றை யவை. (400)
(உலகில் அழிவற்ற ஒரே செல்வம் கல்வி மட்டும் தான்) 


மூன்றாவது அகவையை எட்டும் தருணத்தில், கசடறக் கற்று பின்பு அதன் வழி நடக்க, ஆர்யாவின் முதல் முயற்சி இன்று பள்ளியில் (10-Sep-2012).

நாட்கள் எவ்வளவு வேகமாக பயணிக்கின்றன என்பது அவ்வப்போது நினைவுக்கு வருவது இது போன்ற நிகழ்வுகளால் தான்.

மலரும் நினைவு...


1985 ஜூன் மாதம், தேதி நினைவில் இல்லை...

வழக்கம் போல 09:00 மணிக்கு தொடங்கும் அலுவலகத்திற்கு, வெளி வேலை முடித்து விட்டு 08:10 மணிக்கு ஒரே படப்பிடிப்போடு (பட படப்போடு) வீட்டுக்கு வரும் என் தந்தை 20 நிமிடத்துக்குள் குளித்து, சாப்பிட்டு, உடைகளை மாற்றி, அம்மாவுடன் ஒரு சின்ன பெரிய சண்டையும் போட்டுவிட்டு 08:30 மணிக்கு அலுவலகத்திற்கு கிளம்பி விடுவார். அம்மாவிடம் பாதியில் விட்ட சண்டையை மிதி வண்டியிடம்  தொடர்வார். தன்னால் முடிந்த வரை மிதி மிதி என்று மிதித்து, வருகை பதிவேடை மூடி உள்ளே வைக்க வரும் வேலையாளை ஒரு நொடி முந்தி கையெழுத்தை பதித்து விடுவார். என்றைக்கு என் தந்தை இந்த ஒரு நொடியை தவற விடுவார் என காத்துக் கொண்டிருந்தார் அந்த வேலையாள்.

இவ்வளவு இறுக்கமான அட்டவணை இடம் கொடுக்காததால் அன்றைய தினம் என்னை பள்ளியில் சேர்க்க என் தந்தையால் வர இயல வில்லை. கிட்டத்தட்ட ஐந்து வருடம் அம்மாவின் காலடி மட்டுமே உலகம் என்று இருந்த என்னை தாத்தா பாதுகாப்புடன் லாயல் மில் துவக்கப் பள்ளியின் தலை வாசலுக்கு இழுத்து வந்தார். அதுவரை உயிரைப் போல் எங்கிருக்கிறது என்று சொல்ல முடியாதபடி மனதுக்குள் இருந்த பயம், வாசலை அடைந்தவுடன் இரத்தம் போல் உடல் முழுவதும் வியாபித்து தாறு மாறாக ஓடியது. வாந்தி, மயக்கம் என அனைத்து உடல் உபாதைகளும் ஒரு நொடியில் என் உடலில் வாடகை தராமல் குடியேறின.

தாத்தா விடம் அவசரமாக "இரண்டு" க்கு போக வேண்டும் என்று கூறியும், காலையிலேயே மூன்று முறை சென்று விட்டதால் இன்றைய ஒதுக்கீடு முடிந்து விட்டது என்று கூறி என் கோரிக்கையை நிராகரித்து விட்டார். என்னைப் போல் அப்பாவி சிறுவர்கள் பலர், வழுக்கட்டாயமாக தங்களை  கடத்தி வந்த பெற்றோர்களுடன்  வரிசையில் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களோடு நானும், என் கல்விக் கண்ணை திறந்து வைக்க வந்ததாக எண்ணிக் கொண்ட தாத்தாவும். வழக்கமாக வரிசை மெல்லவே நகர்ந்தது. ஒவ்வொரு குழந்தையும் சேர்க்கை முடிந்தது பள்ளிக்கு உள்ள சென்றவுடன், அவர்களை அழைத்து வந்த பெற்றோர் முகத்தில் கடமை முடிந்த வெற்றிக் களிப்பை கண் கூடாகக் காண முடிந்தது. இப்போது என் தாத்தாவின் முறை.

என்னுடைய பிறந்த நாளை கேட்ட அந்த உயரமான ஆசிரியருக்கு, 1980 ம் வருடம் நவம்பரில் ஒரு தேதியை சொன்னார் தாத்தா. இன்னும் 5 வயது முடியாததால்  இந்த வருடம் பள்ளியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்  ஆசிரியர். என் மீது கடவுளுக்கு இவ்வளவு அன்பா? வேண்டுதல் உடனே நிறைவேறி விட்டது, உடனே வீட்டுக்கு போகலாம் என்று எண்ணிய என் எண்ணத்தில் அடுத்த கணமே Paul Tibbets ஆக மாறி என் தாத்தா "Little Boy" யை வீசினார். 

என் பிறந்த தேதி எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி "May" மாதத்திற்கு மாற்றப் பட்டு, என் பள்ளி வாழ்க்கையின் முதல் நாள் துவங்கியது. அன்றைய தினம் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் சற்று அமைதியாகவே கழிந்தது. இரண்டு, மூன்று, நான்கு என நாட்கள் மட்டும் நகர்ந்தன. பள்ளியின் மீது எந்த விதமான ஈர்ப்பும் வரவில்லை. Cuticles நிறைந்த தாமரை இலையும், நீரும் போலவே உறவற்று இருந்தோம். 

அப்போது தான் அந்த ஆபத் பாந்தவன், அநாத ரட்சகன், ஏழைகளின் விடிவெள்ளி என் உயிர் தோழன் "தங்கராஜ்"ன் "நட்பு" எனும் வரம் கிடைத்தது. தங்கராஜ் எங்கள் முதல் வகுப்பில் மூத்த குடிமகன். எதையும் அதன் ஆணிவேர் வரை சென்று பார்க்கும் ஆர்வம் உள்ளவர். முதல் ஆண்டில் தங்கராஜின் தரிசனம் போதுமான அளவு ஆசிரியர்களுக்கு கிடைக்கததால், அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி இரண்டாம் ஆண்டும் அதே முதலாம் வகுப்பில் தனது சேவையை தொடர்ந்தார் தங்கராஜ்.   

Thomas Babington Macaulay ன் கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டு மிகவும் வருந்தினார் தங்கராஜ், அதன் காரணமாக பள்ளியை துறந்து இயற்கையிடம் பாடம் கற்க ஆயத்தமானார். அடியேனின் உள்ளக் கிடக்கையை அறிந்து, அவரின் அறிவுத் தாகம் தீர்க்கும் புனிதப் பயணத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டார்.

நான் முதல் வகுப்பு படித்த அதே பள்ளியில் தான் என்னுடைய மூத்த சகோதரி இரண்டாம் வகுப்பில் படித்தார். வகுப்பில் உள்ள நான்கு சுவர்களுக்குள்ளும், சில அச்சடித்த காகிதங்களுக்குள்ளும் தன்னுடைய உலகத்தை சுறுக்கிக் கொண்டவர். எங்களின் அறிவுத்தாகம் என் அக்காவுக்கு கிடையாது. இதுவே எங்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. பல நேரங்களில் ஐந்தாம் படையாக மாறி எங்களின் உன்னத தேடுதலை பல முறை தடை செய்துள்ளார். அதன் காரணமாக காலை பள்ளி செல்லும் போது அக்காவுடன் செல்வேன். இடைவேளையில் சரியாக அக்கா இருக்குமிடம் சென்று அவரின் கவனத்தை கவர்ந்து விடுவேன். அதே போல் மதியம் உணவு இடை வேளையில் அக்காவுடன் சேர்ந்து வீட்டுக்கு சென்று விடுவேன். மாலை வீடு திரும்பும் போதும் அவருடன் இணைந்து கொள்வேன். இடைப்பட்ட அனைத்து தருணங்களிலும்

ஒவ்வொரு தெருவிலும் எத்தனை வீடுகள் இருக்கின்றன.

எவ்வளவு மக்கள் வசிக்கிறார்கள்.

எத்தனை வண்டிகள் ஓடுகின்றன.      

இது போன்ற உலகத்திற்கு தேவையான புள்ளி விவரக் கணக்கெடுத்து சமூக சேவை செய்வோம். எவ்வளவுதான் சரியாக திட்ட மிட்டாலும் சுறா மீனைப் போன்ற மோப்ப (4 km அப்பால் உள்ள இரையை உணரும் மோப்ப சக்தி சுறாவுக்கு உண்டு) சக்தி கொண்ட என் அக்காவிடம் இருந்து என்னால் தப்ப முடிய வில்லை. எங்களின் இரகசிய நிறுவனம் குறித்த செய்தி வீட்டின் தலைமை செயலகத்தை அடைந்தது.

மறுநாள் பள்ளிக்கு போகும் முன்பு அம்மா எச்சரிக்கை மணி அடித்தார். இனிமேல் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும், எப்போது வேண்டுமானாலும் என் தந்தை ஆய்வுக்கு வரலாம் என்று.

காற்றுக்கென்ன வேலி? என்று வழக்கம் போல நானும், எனது குரு தங்கராஜும் வீதி உலாவுக்கு கிளம்பினோம். அன்று பள்ளியின் அருகிலேயே இருந்த வீட்டில் திருமணம். புது மணத் தம்பதிகள் எண்களின் வருகைக்காக காத்திருந்தது போல் இருந்தது. உள்ளே சென்று திருமண விழாவை சிறப்பித்தோம். அவர்களை வாழ்த்த வயதில்லாததல் வணங்கி விட்டு வெளி ஏறினோம்.

நங்கள் அந்த திருமண வீட்டை விட்டு வெளியே வரவும், அங்கு என் அப்பா வரவும் சரியாக இருந்தது. நான் செய்வதறியாது விழித்தேன். தங்கராஜ் காலத்தை கடந்த ஞானி என்பதால் எதற்கும் சலனமில்லாமல்  நின்றார். என் அப்பாவின் கண்கள் காட்டிய குறிப்பை உணர்ந்து சைக்கிள் கேரியரில் அமர்ந்தேன். சில நொடிகளில் வீட்டை அடைத்தோம். எங்கள் இருவரையும் பார்த்த என் அம்மாவின் கண்கள் அப்போதே கலங்கின.

அப்பாவின் ஆணைப்படி, அம்மா பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார். தூணோடு ஒட்டி நின்ற என் கைகள் கட்டப்பட்டு நிராயுத பாணியாக நின்றேன். எங்கோ இருந்த நைலான் கயிறு அப்பாவின் கையில் தஞ்ச மடைந்தது.

என் முதுகை பலமுறை நைலான் கயிறு முத்த மிட்டது, இறுதியில் சோர்வடைந்த கயிறு தரையில் விழுந்தது. கயிறு பூசை முடிந்தவுடன் மீண்டும் குளிப்பாட்டப்பட்டு சைக்கிள் கேரியரில் ஏற்றப்பட்டேன். நீண்ட நாளைக்குப் பிறகு மீண்டும் வகுப்பாசிரியரை சந்தித்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை 100% வருகைப் பதிவுதான்...


இன்று முதல் நாள் வகுப்பிற்கு ஆர்வமுடன் சென்ற என் மகனை காணும் போது என்னுள் பல கேள்விகள்...








Monday, August 20, 2012

கருப்பு பெட்டி - பாகம் 2

பாகம் 1 - தொடர்ச்சி


கிருஷ்ணனை இனம் புரியாத கலவரம் ஆட்கொண்டது

"சீ சீ  அதெல்லாம் ஒன்னும் இல்ல, சுத்த மூட நம்பிக்கை" என்று சமாதானம் செய்துகொண்டு வேலையை தொடர்ந்தவர், சிறிது நேரத்திலேயே தன்னை அறியாமல் நிமிர்ந்து பார்த்தார். பார்த்தவுடன் உடலின் அனைத்து மயிர்க் கால்களும் சிலிர்த்து நின்றன...




ஒரு நிலையில்லாத பெண்ணைப் போன்ற உருவம் வெளியில் இருந்து வாசலின் வழியாக உள்நோக்கிச் சென்றது. அடுத்த சில நொடிகளில் கிருஷ்ணன் அமர்ந்திருந்த வராண்டாவில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்தது. இந்த அதிர்ச்சியில் தன்னை அறியாமல் வந்த கூச்சலை உணர்ந்த கிருஷ்ணன் உடனே வீட்டைப் பூட்டி விட்டு மிதிவண்டியை கிளப்பினார்.

சிறிது நேரம் சந்தையில் சுற்றி விட்டு, திரைஅரங்க வாசலில் மனைவிக்கு காத்திருந்தார். படம் முடிந்து  வெளியே வரும் மனைவியை பார்த்து ஓரளவு அறுதல் அடைந்தார். மகன் ஏற்க்கனவே தூங்கி இருந்தான். ஆறு கால்களும் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கின. ராணியின் தங்கை, பார்த்த படத்தை விமர்சித்துக் கொண்டிருந்தார். சம்பிரதாயத்துக்கு மட்டும் படம் எப்படி இருந்தது என்பதை மனைவியிடம் கேட்டு விட்டு வந்த பதிலை வாங்கிக் கொண்டு தொடர்ந்து நடந்தனர். வீட்டில் நடந்தது பற்றி இப்போது சொல்லி அனைவரையும் பயமுறுத்த வேண்டாம் என முடிவு செய்தார் கிருஷ்ணன். இரவு உணவு உண்ட பின்பு அனைவரும் தூங்க கிருஷ்ணன் மட்டும் எதோ யோசனையில் மூழ்கி இருந்தார். பின்பு அவரும்.


விளக்கம்       


 மறுநாள் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றாலும், வழக்கமாக பணியில் ஈடுபட அவரால் முடியவில்லை. இதைப் பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழம்பினார். தன் பயத்தையும் வெளியே கட்டிக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. இறுதியில் தன் மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் உரிய இயற்பியல் பேராசிரியர் முனைவர்  ராமசாமியிடம் நடந்தவைகளை கூறினார். 

அனைத்தையும் பொறுமையாக கேட்ட பேராசிரியர்,

இந்த உலகத்ல உயிருள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் "உயிர் மின்சார" சுழற்சி இருக்கு, அது 60 Hz ல இருக்கும். அந்த மின்சாரம் தான் இதயம், மூளை, நரம்பு மண்டலம் என முக்கியமான உறுப்புகள் வேலை செய்ய உதவுது. இது கூட சம்மந்தம் ஆன ஆற்றல் விதி ஒன்னு இருக்கு. அது என்னன்னா "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனா ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்ற முடியும்". இந்த மனித வாழ்வு அல்லது உயிர்னு  நாம சொல்றதுல மூன்றில் இரண்டு பங்கு சிந்தனையிலும் ஆன்மாவிலும் இருக்கு, ஒரு பங்கு மட்டும் தான் இந்த உடம்பு. இரண்டு பங்கு உயிர் கண்ணுக்கு தெரியாத ஆற்றலா இருக்குதுன்னா, நாம இறந்ததுக்கு அப்புறம் அந்த ஆற்றல் எங்க போகுது? science படி அது அழிஞ்சி போக வாய்ப்பு இல்ல.

அதனால ஒரு மனிதர் இறந்த பிறகு இந்த உயிர் சக்தி உடம்ப விட்டு வெளிய போயி சுற்று சூழல் கூட கலந்ரும். அப்புறம் அது செயல் பாடற்ற நிலை ஆற்றலா மாறிடும். இல்லேன்னா ஒரு பொருள் அல்லது இடம்னு எதுகூடவாவது சக பிணைப்ப உண்டாக்கிக்கும். அப்படியும் இல்லேன்னா electron பற்றாக்குறை உள்ள எது கூடவாவது சேர்ந்துக்கும். சரி அப்படி அது அமைதியாகாம unstable லா அலைஞ்சா என்னாகும்னா... 

  1. ஒரு வகையான மின்காந்த அலைகள் உண்டாகும். அது வீட்ல இருக்குற electric devices ச affect பண்ணும்.

 2. வெப்பநிலை மாற்றம் இருக்கும். சாதாரணமா 10 இருந்து 30 டிகிரி பாரன்ஹீட் வரைக்கும் temperature குறையும் அல்லது கூடும்.   

 3. இது ஒளி அலைகளையும் பாதிக்கும் அதனால சில சமயத்ல திடீர்னு ஏதோ  உருவம் எல்லாம் தெரியும்.

புற உலகத்துல இந்த உயிர் மின்சாரத்தின் ஆற்றல்னு பாத்ததா, நீங்க lab ல பாத்திருப்பீங்களே! ஒரு சட்டக் காந்தம் அவ்வளவுதான். அப்படித்தான்  physics சொல்லுது. இது இல்லாம "பேய்" எல்லாம் சுத்த பொய். 

 England ல இருந்த ஒரு மனோதத்துவ வல்லுநர் magnetic field பத்தி ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லைனு prove பண்ணி இருக்கார்.   அதை மக்களுக்கு காட்டுறதுக்காக பேய், பிசாசு இருந்துச்சின்னு  சொன்ன  800 வருட பழங்காலக் கட்டடத்ல பேயினால் பாதிக்கப் பட்டவங்கள வச்சி ஆராய்ச்சி பண்ணார். அதுல பேய் மற்றும் பிசாசு பிடிச்சவங்க, அவங்களுக்கு  பேய் பிடிச்சப்போ திடீர் சத்தம் கேட்டதாவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைஞ்சி போச்சின்னும் சொன்னாங்க.  

பேய், பிசாசு இருக்குன்னு சொன்ன அந்த இடத்துல இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில சில நரம்புகள் பாதிக்கப்பட்டவங்க அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுறவங்க இந்த இடத்துக்கு போகும் போது அந்த அதீத காந்தபுலம் அவங்க சொல்ற மாதிரி பிரம்மைகளை  ஏற்படுத்தி இருக்கலாம், அதனால பேயோ, பிசாசோ அதைச் செய்யலனு விஞ்ஞானக் கருவிய வச்சி அதை நிரூபிச்சார்.  

அதனால என்னோட சொந்த அபிப்ராயம், பேய் பிசாசு இது எல்லாம் நம்ம மனசுக்குள்ள உள்ள பயம் கலந்த ஒரு கற்பனை. 

ஆனா நீங்க முற்ப்போக்கு வாதியாச்சே கிருஷ்ணன்! இதை எல்லாமா நம்புவீங்க?

       இல்ல sir நான் நம்பல, இருந்தாலும் விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெளிவு படுத்திகிட்டா கொஞ்சம் நிம்மதி அதான்...

இருவரும் சிரித்துக் கொண்டனர்...     

உங்க wife கிட்ட இதப்பத்தி எதாவது பேசுனீங்களா?

      இல்ல sir, என் wife க்கு இதுல எல்லாம் நெறைய நம்பிக்கை இருக்கு. அதனால தேவை இல்லாம பயமுறுத்த வேண்டா மேன்னு யாரு கிட்டயும் சொல்லல.
  
நல்லது, நான் அடுத்த வாரம் ஒரு presentation காக வெளியூர் போறேன். இது பத்தி உங்களுக்கு வேற எதாவது தெரியனும்னா நான் ஊருக்கு போயிட்டு வந்த பிறகு பேசலாம்.

பேராசிரியரின் பதில் போதுமான நம்பிக்கை அளித்ததால், நடந்தவைகளை அன்றே முற்றிலும் மறந்து இயல்பான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அடுத்த சில நாட்களாக எந்த விதமான சம்பவமும் நிகழாததால் கிருஷ்ணன் முற்றிலுமாக அமானுட நிகழ்வுகளை மறந்தார்.

மகன் நான்கு கால்களால் நடக்க (தவழ) ஆரம்பித்தான், கிருஷ்ணன் மற்றும் ராணியிக்கு அவர்களுடைய மொத்த மகிழ்ச்சியும் அழகான குட்டி உருவத்தில் அங்கும் இங்கும் திரிவதை கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர்.

முன்பு போல் இல்லாமல் இப்போது மகன் அமுதன் இரவில் அடிக்கடி  முழிப்பதோ, அழுவதோ இல்லை அதனால் கிருஷ்ணன் இரவில் தடையில்லாமல் தூங்க முடிந்தது.

ராணியின் தந்தை ஜாதகங்களில் நிறைய நம்பிக்கை உடையவர். அமுதன் பிறந்த போது, பிறந்த நேரத்தை வைத்து கணித்து சில எழுத்துக்களை கூறி, அந்த எழுத்துக்கள் எதாவது ஒன்றில் குழந்தையின் பெயர் தொடங்க வேண்டும் என்றார். திருமணத்திற்கு முன்பே குழந்தையின் பெயரை முடிவு செய்துவிட்ட கிருஷ்ணன் அதை ஏற்க்கவில்லை.

"அமுதன்" என்ற பெயருக்கான காரணத்தை இவ்வாறாக ராணியிடம் விளக்கினார் கிருஷ்ணன்.

  1.  முதல் எழுத்து "அ" (A) வில் தொடங்க வேண்டும். அப்போதுதான் வகுப்பறையிலும், தேர்வரையிலும் முதலில் அமர்வான். ஆசிரியரின் முதல் கவனம் இவன் மேல் இருக்கும். 

  2. பெயரின் மொத்த எழுத்துக்கள் நான்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


 மீண்டும்... 


அன்று இரவு ஏதோ சத்தம் கேட்டு கிருஷ்ணன் விழித்துக் கொண்டார். மணி சரியாகத் தெரியவில்லை. மின் மினியாய் ஒளிர்ந்த இரவு விளக்கில் சுற்றிலும் பார்த்தார். இருவருக்கும் இடையில் படுத்திருந்த அமுதனை காணவில்லை. விளக்குக்கு உயிர் கொடுத்து மனைவியை எழுப்ப விரும்பாததால் அந்த சிறு வெளிச்சத்திலேயே விழிகளை அகலமாக்கி உற்று நோக்கினார். அவர் கேட்ட அந்த ஒலியின் மூலம் சமையல் அறை கதவின் அருகே அமர்ந்திருந்த அந்த சிறு உருவம், அமுதன். அழுகையா அல்லது சிரிப்பா என்று சொல்ல முடியாத சிறு சப்தம். பரண் மேல் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அருகில் செல்லச் செல்ல அமுதனின் முகம் கொஞ்சம் தெளிவாக தெரிந்தது. அதுவரை சிரிப்பதுபோல சப்தம் செய்தவன் கிருஷ்ணனை கண்டவுடன் சட்டென்று மௌனமானான். பின்பு மௌனம் அழுகையானது. அறையின் விளக்கு உயிர் கொண்டு எழுந்தது ராணியால்.

ஏங்க அழறான்?
 
          தெரியல ராணி, திடீர்னு முழிச்சி பார்த்த இங்க வந்து உட்கார்ந்திருக்கான். சிரிச்சிகிட்டுதான் இருந்தான்.

எங்க பாட்டி சொல்லிருக்காங்க, குழந்தைங்க கண்ணுக்கு கடவுள் தெரிவாராம், கடவுள பார்த்து குழந்தைங்க சிரிக்குமாம்!
   
          ........

கிருஷ்ணன், ராணியின் நம்பிக்கையை கலைக்காமல் தனக்குத் தானே மனதுக்குள் மட்டும் கூறிக்கொண்டார் "கடவுளா இருந்தா சரி".

அமுதனை வாரி அனைத்து தோளில் சாய்த்து தூங்கச் சொல்லி  கட்டாயப்படுத்தினார் ராணி.  அன்று மூவருக்கும் சிவராத்திரி.


இரண்டு வாரங்கள் இனிமையாக சென்ற பிறகு. ஒரு ஞாயிறு நண்பகல் மதிய உணவுக்காக கிருஷ்ணனும் ராணியும் அமர்ந்தனர். எது முதலில் வந்தது என்று தெரியாவிட்டாலும் எதை முதலில் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்த ராணி, முட்டையில் கருவாகி குழம்பில் கறியாகிக் காத்திருந்த அனைத்தையும் கிருஷ்ணனுக்கு இறைத்து, தன் சமையலின் சுவையை கணவர் எவ்வாறு ருசிக்கிறார் என்று அறிய காத்திருந்தார். 

இந்தக் கோழி திரி சங்கின் மறுபிறவியா?  தெரிய வில்லை, கிருஷ்ணனின் தொண்டையை தாண்ட மறுத்தது, அங்கேயே சிக்கிக் கொண்டது. இவ்வளவு பார்த்து பரிமாறிய ராணி தண்ணீரை மறந்தார். தண்ணீரை மறப்பது அவருக்கு புதிதல்ல. கிருஷ்ணனிடம்   வரம் வாங்கும் முன்பு சமையல் அறை நோக்கி ஓடினார் தண்ணீரைத் தேடி. கிருஷ்ணனின் விக்கல் எச்சரிக்கை மணியாக ஒலித்தது.  அதுவரை அமைதியாக தொட்டிலில்  தூங்கிக் கொண்டிருந்த அமுதன் தொட்டிலை விட்டு இறங்கும் முயற்சியில் வெற்றி வாய்ப்பை இழந்து கீழே விழுந்து மூச்சு நின்று போகும் அளவுக்கு கதறினான். 

அமுதனின் அழுகுரல் கேட்டு, டம்ளரின் கால் பகுதி  நிரம்பிய  நீரைத் தூக்கிக் கொண்டு அமுதனிடம் ஓடினார் ராணி அவனை தூக்க. அவர் சமையலறையை விட்டு வெளியேறவும், பரண் மேலிருந்த அண்டா கீழே விழவும் சரியாக இருந்தது. சப்தம் கேட்டு விக்கலுடன் வந்த கிருஷ்ணன் கையில் தஞ்சம் அடைந்தது டம்ளர். சில நொடிகளாக வெளியேற துடித்துக் கொண்டிருந்த உயிருக்கு நீரால் அணைபோட்டார் கிருஷ்ணன். அருந்திய கால் டம்ளர் நீர் வற்றும் அளவுக்கு வரங்களை வாரி வழங்கினார் ராணிக்கு.

சோறு வைக்கிறதுக்கு முன்னால தண்ணிய வைன்னு உனக்கு எத்தன தடவ சொல்லணும் அறிவே வராதா? 

துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதால் தற்காலிக ஊமையானார் ராணி. விழிகள் மட்டும் கங்கையை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. சமயலறையின் உள்ளே சென்று பார்த்த கிருஷ்ணன், மேலே உள்ள பலகையில் இருந்த "அண்டா" எவ்வாறு இறக்குமதியானது என்று புரியாமல் விழித்தார். சரியான சமையத்தில் ராணி வெளியே போயிருக்கா விட்டால்?  ஒருவேளை ஒத்த நிகழ்வாக இருக்கலாம் என்று தேத்திக்கொண்டு வெளியே வந்த கிருஷ்ணன் இரண்டு குழந்தைகள் அழுது கொண்டிருக்க முதல் குழந்தையை சமாதானம் செய்தார்.

இன்றைய நிகழ்வு கிருஷ்ணனுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. எந்த சலனமும் இல்லாமல் ராணி உறங்கி விட்டார், அமுதனும். சிறுது நேரம் சென்ற பிறகு ஏதோ முனுமுனுப்பு சப்தம் கிருஷ்ணனின் தூக்கத்தை  விரட்டியது. மூச்சுவிட முடியாமல் யாரோ சங்கடப்படுவது போன்ற சப்தம். ராணிக்கு சுவாசக் கோளாறு உள்ளது. ஒருவேளை ராணியாக இருக்கலாமோ என்று ராணியை எழுப்பினார்.

திடுக்கிட்டு எழுந்த ராணி, பயத்தையும், பரபரப்பையும் கண்ணில் காட்டினார்.

  
 என்னாச்சு ராணி? எதுவும் பிரச்சனையா?

        என் கழுத்த, என் கழுத்த 

உன் கழுத்த, என்னாச்சி சொல்லு?

        என் கழுத்த யாரோ பிடிச்சி நெரிக்கிற மாதிரி இருந்ததுங்க.

கனவுலையா?
         
         இல்லங்க, நிஜமாத்தான், என்னால மூச்சு விட முடியல, கத்தலாம்னா அதுக்கும் முடியல. நீங்க என்ன எழுப்பின உடனே போயிரிச்சி. 

நீ எதையோ நினைச்சி பயந்திருக்க, அதனால தான் இந்தமாதிரி கனவெல்லாம் வருது, தண்ணிய குடிச்சிட்டு தூங்கு. எல்லாம் சரியாப் போகும் என்று கூறிவிட்டு விளக்கை அணைக்கச் சென்ற கிருஷ்ணனிடம்.

          light ட off பண்ணாதீங்க, எனக்கு பயமா இருக்கு.

என்ன பயம், நான் தான் இருக்கேன்ல, சும்மா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காத. கண்ண மூடி தூங்கு.

         தயவு செஞ்சி  light ட off பண்ணாதீங்க...

ராணியை பார்க்கவே கிருஷ்ணனுக்கு பாவமாக இருந்தது. 

காலையில் மூவரும் வெகுநேரம் கழித்தே விழித்தனர். இன்று அலுவலகம் செல்ல வேண்டாம் எனும் ராணியின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அலுவலகத்திற்கு விடுப்பு விண்ணப்பத்தை அனுப்பினார் கிருஷ்ணன்.

       வேற வீட்டுக்கு மாறி போயிடலாங்க, நேத்துல இருந்து எனக்கு ஒவ்வொரு நிமிசமும் பயம்ம்ம்மா இருக்கு.

  வீடு மாத்துறது என்ன அவ்வளவு சாதரணமா?

        இடம் மாறினா, மனம் மாறும்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க..

  ........
       

சிறிது நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் சம்மதித்தார் கிருஷ்ணன். அதிர்ஷ்ட வசமாக அடுத்த தெருவிலேயே ஒரு வீடு காலியாக இருந்தது. இப்போது இருக்கும் வீட்டின் உரிமையாளர் முன்பணத்தில் இருந்து இரண்டு மாத வாடகையை கழித்துக் கொண்டுதான் மீதியை கொடுத்தார். நண்பரிடம் கடன் வாங்கி புது வீட்டிற்கு முன்பணம் கொடுத்து குடிபெயர்ந்தனர்.

புது வீட்டிற்கு மாறியது  ராணிக்கு மன தைரியத்தை தந்தது.  சில நாட்களிலேயே இயல்பு வாழ்க்கைக்கு இருவரும் திரும்பினர். இந்த வீடு குளத்துக்கு அருகில் இருந்தது. கொசுத் தொல்லையும் அவ்வளவாக இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது.


ஒரு மாதத்திற்குப் பின்... 

அன்று இரவு இருவரும் விரைவாகவே நித்திரையில் ஆழ்ந்தனர். சிறிது நேரம் அமுதன் மட்டும் அவனுக்கு மட்டும் புரியும் மொழியில் ஏதோ பேசிவிட்டு உறங்கி விட்டான். மணி சரியாக தெரியவில்லை, ஆனால் நள்ளிரவு. கதவு திறக்கும் சப்தம் கேட்டு முழித்தார் கிருஷ்ணன். யாரோ செல்வது தெரிந்தது. அருகில் ராணி, குழந்தை இருவரும் இல்லை. உடனே எழுந்து அவர்களை பின் தொடர்ந்தார். நடந்து சென்றவர்கள் ஓடத் தொடங்கினர். கிருஷ்ணனும் ஓடினார். அந்த உருவம் குளம் இருந்த திசை நோக்கி வேகமாக ஓடியது. தன்னால் முடிந்த அளவு வேகமாக ஓடி அந்த உருவத்தை பிடித்தார். அந்த உருவங்கள் ராணியும் குழந்தையும்.  வழுக்கட்டாயமாக இழுத்து வந்தார் ராணியை.

ராணியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, குழந்தையோடு வீட்டுக்கு வெளியில் காவல் நின்றார். காலை 06:00 மணிக்கு அழகாபுரிக்கு தந்தி பறந்தது.

"உடனே புறப்பட்டு வரவும். நலம்,  பயப்படவேண்டாம்".

ராஜரத்தினமும் அவர் மனைவியும்  08:45 க்கு கிருஷ்ணன் வீட்டில், நடந்தவைகளை கூறினார் கிருஷ்ணன். 

மாப்ள இது ஏதோ பயந்த கோளறு மாதிரி தெரியுது, கருப்பசாமி கோவில்ல பூச பண்ணா எல்லாம் சரியாயிடும். இதுக்காக நீங்க வேற மாதிரி முடிவு...

இடைமறித்த கிருஷ்ணன், மாமா நீங்க கண்டதையும் நினைக்காதீங்க. பயந்த கோளாறா, அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. ஒரு நல்ல டாக்டர் கிட்ட போனா சரியாயிடும். இந்த நிலைமைல ராணிய வீட்ல தனியா விட்டிட்டு நான் வேலைக்கு போக முடியாது. கொஞ்ச நாள் வேனா ராணி உங்க கூட ஊர்ல இருக்கட்டும். நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்.

அரை மனதுடன் மகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றார் ராஜரத்தினம்.

பேய் என்பதை மட்டும் நம்ப முடியாமல்,  மன நோய் மருத்துவரைத் தேடிக்கொண்டிருந்தார் கிருஷ்ணன். இதற்கிடையில்  அழகாபுரியில் ராணியின்  நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எம்மதமும் சம்மதம் என தேவாலயம், பள்ளிவாசல் என அனைத்தையும் முயன்றுவிட்டார் ராஜரத்தினம். 

அன்று வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில், தேநீர் கடையின் முன்புறம் அந்த வித்தியாசமான புத்தகத்தைப் பார்த்தார் கிருஷ்ணன்.

"ஆவிகள் உலகம் "

விருப்பம் இல்லா விட்டாலும் அதை வாங்க ஏதோ ஒரு விசை அவரை செலுத்தியது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார் சில பக்கங்களை புரட்டினார். பல அமானுட செய்திகள், எதுவும் நம்பும் படியாக இல்லை. நடுப்பக்கத்தில் இருந்த செய்தி, இதுவரை இந்த புத்தகத்தில் பார்த்ததிலேயே உச்சகட்ட கோமாளித்தனம். "ஆவிகளுடன் பேசலாம் -  மீடியம் ஆவி அனிதா".

மீடியம் என்ற வார்த்தையை அன்று தான் கேள்விப்படுகிறார் கிருஷ்ணன். அதற்க்கான விளக்கமும் அங்கே கொடுக்கப் பட்டிருந்தது. திருநேல்வேலியில் உள்ள ஒரு விலாசமும், தொலைபேசி எண்ணும்  கொடுக்கப் பட்டிருந்தது. தன் நம்பிக்கையை ஒருபுறம் வைத்து விட்டு, முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது கிருஷ்ணனுக்கு. அந்த எண்ணுக்குப் பேசி, நேரில் ஞாயிறு அன்று  சந்திக்க நாள் குறித்து விட்டார்.

"ஆவி" அனிதாவை சந்திக்க தன்னுடன் வருமாறு ராஜரத்தினத்தை அழைத்தார். அவர் தன் மகளுக்கு "ஆவி" பிடிக்க வில்லை என்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார். 

மாமா, நானும் இதெல்லாம் நம்ப மாட்டேன், அது உங்களுக்கே தெரியும் இருந்தாலும் ஒரு முயற்சி பண்ணிப் பாப்போமேன்னு தான். 


வேறு வழியில்லாமல் உடன் வர சம்மதித்தார் ராஜரத்தினம்.

ஞாயிறு காலை 10:00 மணிக்கு அந்த விலாசத்தை அடைந்தனர் இருவரும். குறைந்தது 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியை எதிர் பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். 23 வயதுக்கும்  குறைவான ஒரு பெண் (சிறுமி போல் தோற்றம்). 

சொல்லுங்க, உங்க பிரச்சனை என்ன?

      கிருஷ்ணன் விவரித்தார்.

இதுவரைக்கும் இங்க வந்தவங்க ரொம்ப பேர் சொத்து விவகாரமாத்தான் வந்திருக்காங்க. உங்க பிரச்சனை வேற மாதிரி இருக்கு. முயற்சி பண்ணி பாக்குறேன் ஆனா இப்போ எதுவும் உறுதியா சொல்ல முடியாது.

      எனக்கு உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கனும் மேடம். கேட்கட்டுமா?

தாராலமா கேளுங்க   
    
    இத நான் முதல் தடவையா அனுபவ படும் போது, physics department professor கிட்ட இத பத்தி கேட்டேன். அவர் உயிர் மின்சாரம் பத்தி சொன்னார். அப்புறம் இங்கிலாந்து ல யாரோ இது சுத்த பொய்ன்னு நிரூபிச்சதா சொன்னாரு.


உயிர் மின்சாரம் உண்மைதான், அந்த England news பத்தி நானும் படிச்சிருக்கேன். science ல பல நிரூபணங்கள் அனுமானத்தின் அடிப்படையில் தான் ஆரம்பிக்கும். அனுமானம் சரீன்னா  நிரூபணம் சரி. அனுமானம் தவறுன்னா நிரூபணமும் தவறு. நியூட்டன் புவிஈர்ப்பு விசை பத்தி சொல்றதுக்கு முன்னாலையே அது இருந்தது. கொலம்பஸ் கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாலையே அமெரிக்கா (பேரு வேறையா இருக்கலாம்)  இருந்தது. அந்த மாதிரி நம்மால உணரமுடியாத பல விசயங்கள இல்லேன்னு சொன்னா அது உண்மை ஆகாது. நம்ம கிட்ட அத கண்டு பிடிக்கிறதுக்கான கருவி இல்லேன்னு சொல்லுங்க ஆனா அப்படி ஒன்னே இல்லேன்னு சொல்லாதீங்க. இது என்னோட தாழ்மையான கருத்து.

      அனிதா சொல்வது புரிவது போல் இருந்தாலும் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் எதோ நம்பிக்கையில் அவர் சொல்வதற்கு சம்மதிக்க தொடங்கினர்.

கிருஷ்ணன் சார்,  நாளைக்கு உங்க wife இங்க கூட்டிட்டு வாங்க, நான் பேசுறேன். 

    சரி மேடம்.

கிருஷ்ணன், ராணி, அமுதன், ராஜரத்தினம் நால்வரும் அனிதாவை பார்க்க காத்துக் கொண்டிருந்தனர். இப்போது ராணியிடம் எந்த மாற்றமும் இல்லாதது கிருஷ்ணனுக்கு சற்று வியப்பாகவே இருந்தது. அழைப்புக்கு பின்பு இருவரும் உள்ளே சென்றனர். ராணியை மட்டும் அழைத்தார் அனிதா, குழந்தையும் கிருஷ்ணனும் வெளியே காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து ராணியை  வெளியே இருக்கச் சொல்லிவிட்டு கிருஷ்ணனை அழைத்தார். கிருஷ்ணன் குழந்தையை ராணியிடம் கொடுத்து விட்டு உள்ளே வந்தார். 

கிருஷ்ணன் சார், உங்க wife கிட்ட எந்த மாற்றமும் இல்ல. அவங்கள எந்த விதமான சக்தியும் அலைகழிக்கல.

என்று கூறும்போதே வெளியில் நின்று கொண்டிருத்த watchman உள்ளே வந்தார் ராணியை இழுத்துக்கொண்டு, உடன் ராஜரத்தினம்,

மேடம், இந்தம்மா குழந்தையோட ரோட்டப்பாத்து ஓடினாங்க, நான் தான் புடிச்சி இழுத்துக் கிட்டு வந்தேன். என்று கூறி watchman ராணியை உள்ளே விட்டுச் சென்றார்.

இப்போது ராணி உள்ளே வரும் போதே அனிதா புரிந்து கொண்டார். குழந்தையை ராணியிடம் இருந்து பறித்துக் கொண்டு, குழந்தையை மட்டும் அருகில் இருந்த அறையில் போட்டு அடைத்தார். இதைக் கண்டு பதறிய கிருஷ்ணன்.

என்ன madam பண்றீங்க? சின்னக் குழந்தையை போயி..

    உங்க மனைவிய கவனிங்க (முறைத்துக் கொண்டிருந்த ராணியின் கண்கள் சாதாரண நிலைக்கு திரும்பின, இதை கண்டு ஏதும் புரியாமல் நின்றார் கிருஷ்ணன், அப்போது உள்ளே குழந்தையின் அழுகை கேட்டது.)

     கிருஷ்ணன் சார்,  அலைக்கழிக்கப்படுவது உங்க மனைவி இல்ல, உங்க குழந்தை. உங்க குழந்தை மூலமா மனைவி. இரண்டு பேரையும் பிரிச்சி வைங்க உங்க மனைவி normal லா இருப்பாங்க.

அதிர்ச்சியில் உறைந்தார் கிருஷ்ணன்.

குழந்தையை நீங்க எடுத்துக் கோங்க sir, நான் சொல்ற வரைக்கும் உங்க மனைவி கிட்ட கொடுக்காதீங்க.

சரி

அமுதனை தாத்தாவுடன் ஊருக்கு அனுப்பி விட்டு, கிருஷ்ணனும் ராணியும் அனிதாவுடன் 553 வளமனை முதல் தெருவுக்கு சென்றனர். எதிர்பார்த்த படி வீடு இன்னும் காலியாகவே இருந்தது. உரிமையாளரிடம் இருந்து சாவியை வாங்க சென்றனர் கிருஷ்ணனும், ராணியும். அனிதா அந்த வீட்டைப் பற்றி அருகில் விசாரிக்கச் சென்றார். யாரும் அந்த வீட்டைப் பற்றி பேச தயாராக இல்லை. கடைசியாக ஒரு மூதாட்டி அந்த வீட்டின் முன்கதையை கூறினார். 

சில வருடங்கள் முன்பாக அந்த வீட்டில் வாழ்ந்த குடும்பத்தில் இருந்த ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையின் காரணம் பலவாறு கூறப்படுகிறது. அதன் பின் வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்க்கு குடிவந்த வயோதிக தம்பதிகளில் மனைவி மட்டும் இறந்தார். பின்பு பல  நாட்கள் கழித்து கிருஷ்ணன் குடும்பம் வந்தது. ஆனால் நல்ல வேலையாக அசம்பாவிதம் நடக்கும் முன்பாகவே சென்று விட்டனர். இந்த வீடு பற்றி யாரும் வெளியில் பேசுவது கிடையாது ஏனெனில் பேசினாலே ஆபத்து என்கிற பயம் தான். நான் சாகப் போற கிழவி தான, என்று கூறி விட்டுச் சென்றார்.

சாவியை வாங்கிக் கொண்டு வந்த கிருஷ்ணன், அனிதாவிடம் கொடுத்தார். 

இப்போ என்ன பண்ணப் போறீங்க madam ?

   அந்த "ஆத்மா" கிட்ட பேசிப் பார்க்கலாம். கண்டிப்பா இந்த "ஆத்மா" பேச வரும். 

கிருஷ்ணன் கூறியது அனிதாவுக்கு நினைவுக்கு வந்தது. சமையல் அறை கதவுக்கு மேலிருக்கும் பரண். கிருஷ்ணனிடம் சொல்லி மச்சி வீடு போலிருக்கும் அந்த சிறிய அறையில் என்ன இருக்கிறது என்று பார்க்கச் சொன்னார். 

இங்க ஒரு கருப்பு பெட்டி இருக்கு

அத கீழே கொண்டு வாங்க sir. 

கிருஷ்ணன் பெட்டியை கீழே இறக்க முயல, ராணி வெறியுடன் கிருஷ்ணனின் காலை பிடித்து இழுத்து வீசினார். ராணியின் பற்கள் நறநறக்கும் ஓசை காதுகளை கூசச் செய்தது. 

அனிதா seance  முறை மூலம் அந்த ஆத்மாவை தொடர்பு கொள்ள முயன்றார். அனிதாவும், ராணியின் உடலில் இருக்கும் ஆத்மாவும் ஏதோ தங்களுக்குள்  மொழி இல்லாமல் பேசிக் கொண்டனர். 

சிறிது நேரம் சென்று கிருஷ்ணனிடம் சென்ற அனிதா 

உங்க மனைவிகிட்ட இங்க இருக்குற ஒரு வயசானவங்க இறந்து போன அந்த பொண்ணப் பத்தி சொல்லி இருக்காங்க. வீடு சுத்தம் பண்ணும் போது ராணி அந்த கருப்பு பெட்டிய பாத்திருக்காங்க.

கவலைப்படாதீங்க, இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. நான் house owner கிட்ட பேசுறேன். இந்த வீட்டை இன்னும் 5 வருசத்துக்கு வாடகைக்கு விட வேண்டாம். அதுக்கப்புறம் என்ன வேனா பண்ணிக்கலாம், no problem 

5 வருஷம் என்ன கணக்கு?

    இந்த ஆத்மாவோட மீதி இருக்குற life time

எங்களுக்கு இனி தொல்லை இருக்காதுள்ள?

    தொல்லை இருக்காது, இருந்தாலும் வேற எங்காவது தூரமா போயிடுங்க.

அந்த கருப்பு பெட்டி ல என்ன இருக்கு madam?

     உயிர் மின்சாரம் !!!

அப்ப பேய் உண்மையா?

   ..........................

முற்றும்... 

Thursday, August 16, 2012

கருப்பு பெட்டி

உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டது...  

இடம்: கோவில்பட்டி 
நாள்:  மார்கழி 2 1978
நேரம்: காலை 04:45


"கட்டளை நாள் இரண்டு, கட்டளைக் குரியவர் சுப்பையா. பக்தகோடிகள் அனைவரும் வந்து அம்மனை தரிசித்து, அம்மனின் அருள் பிரசாதம் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவன் கோவில் விழா கமிட்டியார்", என்று அதிகாலையில் சேவலுக்கு முன்பாகவே கூவி அழைத்து கோவிலுக்கு கூட்டம் சேர்க்கும் வேலை தொடங்கியது.

சுப்பையா காசு கொடுத்து வாங்கிய அன்றைய கோவில் மரியாதையை பெருமையுடன் ஏற்றுக்கொண்டார். பொங்கல் பிரசாதம் பெற்றுக்கொண்டு கோவிலின் முன்புறம் நடை பெற்றுக் கொண்டிருந்த  சமய உரையில்  தன்னையும் இணைத்துக்கொண்டார். அப்போது இறைவன் எங்கிருக்கிறான், எப்படிப்பட்டவன் என்று யாரோ கேட்ட கேள்விக்கு, வெள்ளிக் கம்பிகளின் காட்டுக்குள் புதைந்த இரு கண்களை மட்டும் கொண்ட ஒரு ஆத்மா நம்மாழ்வாரின் பாடல் ஒன்றை "திருவாய்மொழி" ந்தது      


உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

அப்போது துர்சக்திகள்? என்ற கேள்விக்கு சிறிய அமைதிக்குப்பின் " இறைவன் அனைவரையும் காப்பார்" என்று மட்டும் கூறி உரைக்கு உறை போட்டுவிட்டு புறப்பட்டுவிட்டார்.  சுப்பையாவும் வீட்டை நோக்கி...

வளமனை தெரு   

         வளமனை முதல்  தெரு, வீட்டு எண் 553 னை அடைந்தார். வெளியில் போடப்பட்ட பூட்டை திறந்து உள்ளே நுழைந்தவருக்காக காத்திருந்த "அதிர்ச்சி" அவரை சந்தித்தது. பரண் மேல் இருந்த பொருட்கள் தரையில், இரும்புக் கட்டிலில் படுத்திருந்த அவர் மனைவி காசியம்மாவின்   தலையில் அவர்கள் திருமணம் முடிந்து வந்த போது உடன் வந்த வெண்கலப் பானை சத்தமில்லாமல் அமர்ந்திருந்தது.  

          பலமுறை மனைவியிடம் கேட்ட "உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?" என்ற கேள்விக்கு விடை பானையில் ஒட்டிக் கொண்டிருந்தது.  அழவும் தெம்பில்லாமல் சாய்ந்தார். சிறுது நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். தாமதமாக வந்தவர்களின் கேள்விக்கு முதலில் வந்தவர்கள்  பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

         உடம்பு சரியில்லாம தூங்கிகிட்டு இருந்த அம்மாவை எழுப்ப வேண்டாம்னு கதவ வெளியில பூட்டு போட்டுட்டு அவரு மட்டும் கோவிலுக்கு போயிருக்காரு. திரும்ப வந்து பார்க்கும் போது  இப்படி ஆயிரிச்சி. பரண் மேல இருந்த "பான" உருண்டு அந்தம்மா மேல விழுந்து இறந்துட்டாங்க.    ஆனா அவ்வளவு கனமான பான எப்படித்தான் கீழ விழுந்ததோ தெரியல. பாவம் அவரு வயசான காலத்துல வேற யாரும் இல்ல. என்று பலரும் தங்களுக்கு தெரிந்த செய்திகளுக்கு கண் காது மூக்கு இணைத்து உருவம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

1979 - அழகாபுரி 

காமராசர் மாவட்டம், விருதுநகர் அருகில் உள்ள குக்கிராமம்

             "ராணி" அந்த வீட்டில் முதல் பெண். ராணி என்பதோடு அல்லாமல் அவருக்கு இன்னும் சில பல பேர்கள் இருந்தன. அன்பு, அமைதி, அறியாமை, வெகுளி.ராணி மட்டுமல்லாமல் அவரை தொடர்ந்து ஆண், பெண் , ஆண் , ஆண் என மேலும் நான்கு குழந்தைகள். அன்றைய தினம் ராணியைப்  பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதால் தன்னிடம் இருப்பதிலேயே சிறந்த தாவணியை கட்டிக்கொண்டு பயத்துடன் காத்திருந்தார். ராணிக்கு வயது 18.

       ஆலமர பிள்ளையாரை சுற்றி தன் அன்றைய தின நேத்திக் கடனை செலுத்தி விட்டு நின்றது அந்த பேருந்து. படிகளில் இறங்கும் ஒவ்வொருவரையும் ஆவலோடு அலசினார் இராஜரத்தினம். கடைசியில் இறங்கிய கிருஷ்ணனை பார்த்ததும் இவர் தான் என்பதை உறுதி செய்து விட்டு உடன் அழைத்துச் சென்றார் தன் மகளை பார்க்க. 

              காபி கொண்டு வந்த ராணியை பார்த்த மறு நொடி சம்மதத்தை சிரிப்பில் தெரிவித்து விட்டார் கிருஷ்ணன். ராணியின் விருப்பத்தை பற்றி யாருக்கு கவலை?.  பையன் அரசாங்க உத்தியோகம், காலேஜ் மெக்கானிக், அது மட்டும் இல்லாம வெளிய வேலைக்கும் போவார்,  நல்ல வருமானம், கூட பொறந்தது அவரையும் சேர்த்து 5, செந்த வீடு விவசாய நிலம்னு வசதி இருக்கு. பெருசா ஒன்னும் எதிர்பாக்கல, 15 பவுன் நகையும் கொஞ்சம் பணமும் கொடுத்துருங்க என்று பிற விவரங்களை பட்டியலிட்டார் இரு வீட்டாருக்கும் பொதுவான ந(ண்)பர்.

            கிருஷ்ணனின் விருப்பப்படி ஓதுதலும், ஊதுதலும் இல்லாமல் "குறள்"    முழங்க சான்றோர் முன்னிலையில் "தமிழ்" முறைப்படி திருமணம் இனிதே நடந்தது. திருமணம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ராணி ஒன்றை மட்டும் நினைத்து மகிழ்ந்தார். இனி தினமும் அரிசி சோறு சாப்பிடலாம், நல்ல துணிமணி  உடுத்தலாம். பணக் கஷ்டம் இல்லை.
                
        உண்மை தான் இனி பணக் கஷ்டம் இல்லை, பணம் மட்டும் தான் கஷ்டமா?

புகுந்த வீடு 

    மறு வீடு முடிந்து மாமியார் வீட்டிற்கு திரும்ப வந்தார் ராணி.  கோவில்பட்டியில் இருந்து சுமார் 7 K.M தொலைவில் இருந்த மற்றொரு கிராமம் "அப்பனேரி", அங்குதான் கிருஷ்ணனுக்கு தவறு கிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான வீடு, நிலம், மாடு இருந்தது இப்போது ராணி.  
             
             கணவர் நல்லவர் தான் ஆனால் இந்த கோபம். அதை வர்ணிக்க 10 வகுப்பு   வரை படித்தும் ராணிக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.   கிருஷ்ணனுக்கு  ஜாதகம் , சம்பிரதாயம், நல்ல நேரம் இவைகளில் நம்பிக்கை இல்லை. அப்பகுதியில் உள்ள கல்லூரியில் mechanic வேலை செய்கிறார்.  தினமும் அலுவலகம்  முடிந்த வீடு திரும்பியவுடன் தன் காதல் மனைவியை அழைத்துக் கொண்டு வலம் சென்று விடுவார். எப்போதாவது ராணியின் வற்புறுத்துதலின் பேரில் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். திருமணம் ஆகி 1 மாதம் ஆகியும் இந்த உலா நின்ற பாடில்லை, இது கிருஷ்ணனின்  அன்னை, அக்கா, அண்ணி எவருக்கும் பிடிக்க வில்லை.  ஏனெனில் அவர்களுக்கு இது  எட்டாக் கனியாக இருந்தது தான்.  

         விவசயக் குடும்பம் என்பதால் வீட்டில் பசுமாடு உண்டு. பிரசவத்திற்கு காத்திருந்த பசு, மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல், கிருஷ்ணனின் மாமா (அக்காவின் கணவர்) தானே மருத்துவரானார் அதன் விளைவு, தன்னுயிரை ஈன்ற குட்டிக்கு ஈந்தது. 

       "எத்தன வருஷமா நம்ம வீட்ல மாடு வளக்குறோம், ஒரு தடவையாது இப்படி ஆயிருக்கா? இந்த "ச..." பிடிச்சவ வந்தவுடனே இப்படி ஆயிருச்சி" என்று கிருஷ்ணனின் அக்கா தன் கணவரின் மருத்துவம் மீது பிறர் பழி போடாமல் முந்திக்கொண்டு தன் பங்கை துவங்கினார். மாலை கிருஷ்ணன் வரும் வரை அந்த வசை மாரி நிற்க வில்லை.  
    
           hospital க்கு கொண்டு போயிருக்க வேண்டியது தானே? உங்கள யாரு பாக்க சொன்னது?  என்று ராணிக்கு குடை பிடித்தார் கிருஷ்ணன்.

                 இவ்வாறாக தொடர்ந்த மாமியார் வீட்டு திருவிளையாடல்களை ஒரு  வருடம் சமாளித்து ஒரு குழந்தைக்கும் தாயனார் ராணி. பிரசவம் முடிந்து  5 மாதம் சென்ற பின்  மீண்டும் புகுந்தார் அந்த வீட்டில், கிருஷ்ணன் அலுவலகம் சென்றவுடன், ஏதோ காரணம்   சொல்லி கிருஷ்ணனின் அக்கா தன் அகலமான கையின் பத்து விரல்களை ராணியின் முதுகில் உரக்க பதித்தார். ராணியின் அலறல் கேட்டதோ என்னமோ   ! கிருஷ்ணன் அன்றைய தினம் விரைவாகவே வீட்டுக்கு வந்து விட்டார். 

                 மனைவியின் நிலை கண்டு வருந்தி, தன் குடும்ப அன்பர்களுடன்  ஒரு மணி நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு  அன்று இரவே தனிக் குடித்தனம்  செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.  மூவரும் கோவில்பட்டிக்கு சென்றனர். தெரிந்தவர் ஒருவர் மூலமாக வீடு பிடித்துத் தரும் இடைத் தரகர் அறிமுகம் மூலம் அன்று இரவே ஒரு வீட்டிற்கு குடி புகுந்தனர்.

                  மறுநாள் அலுவலகத்தில், தன்னுடைய முதல் நாள் அனுபவத்தையும்  புது வீட்டிற்கு சென்றதையும் பற்றி நண்பரிடம் கூறினார். 

                 உடனே எப்படி வீடு கிடைச்சது?
                          புரோக்கர் தான், வாடகையும் ரொம்ப கம்மி தான்.      


                 வீடு எங்க இருக்கு கிருஷ்ணா?
                      First Bungalow street  ராமு, ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வரணும். வீட்டு நம்பர் 553

புது வீடு 
             வீடு முழுவதும் மண்டிக் கிடந்தது தூசு. குழந்தையை வராண்டாவில் தொட்டிலில் தூங்க வைத்து விட்டு, கிருஷ்ணன் வேலைக்கு சென்றதும், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் ராணி. ராணிக்கு கொஞ்சம் சுவாசப் பிரச்சனை உண்டு என்பதால் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தன் வேலையை முடித்தார். மாலை கிருஷ்ணன் திரும்ப வந்ததும் காலை வெறும்  சுவர்களாக இருந்தது இப்போது வீடாக மாறியது புரிந்தது. திருமணமான போது ராணியின் நினைவில் நின்றது (அமைதியான வாழ்வு) இப்போது தான் மெல்ல நனவாகி வந்தது. 

        இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து, சில நல்ல நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன. கிருஷ்ணனுக்கும் நிறைய வெளி வேலைகள் வரத் தொடங்கின.   இந்த புது வீட்டுக்கு வந்து முழுதாக நான்கு மாதங்கள் முடிந்தன.  

அன்று வெள்ளிக்கிழமை...

          கிருஷ்ணன் காலை வேலைக்கு செல்லும்முன் மாலை வெளியே  கூட்டிச் செல்வதாக கூறியது நினைவுக்கு வந்தது. கடிகாரம் தீவிரமாக ஐந்தை  நெருங்கிக் கொண்டிருதது அவசரம் அவசரமாக அலுவலகத்தில் இருந்து வெளிவந்து  மிதி மிதி என மிதித்தார் மிதி வண்டியை   சரியாய் 30 நிமிடத்தில் வீட்டை அடைந்தார். 

         வீட்டில் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்...

      ராணி, ராணி என்ன தூங்கிக்கிட்டு இருக்க, வெளிய போகலாம்னு சொல்லி இருந்தேன்ல, கிளம்பலையா?
                      இல்லங்க, ரொம்ப தல வலியா இருக்கு, நாளைக்கு போகலாமா 

       சரி பரவால்ல நீ தூங்கு. 
                     டீ போடட்டுமா?

      இல்ல, இப்ப வேண்டாம், அப்பறம் போடு.

பதில் கூட சொல்ல முடியாமல் தலை சாய்த்தார் ராணி. வழக்கமாக ஒரு மணிக்கு ஒரு முறை உணவுக்காக அழும் குழந்தையும் இரண்டு மணிநேரம் ஆகியும் அமைதியாக இருந்தது. ராணியும்.

மணி 07:30

           ராணி, ராணி......    ராணி, ராணி.........
                    ..............

           ராணியின் தோளைப் பிடித்து உலுக்கினார் கிருஷ்ணன். மெதுவாக கண் திறந்தார்.

      இப்போ எப்படி இருக்கு? hospital போலாமா?
                    ..............

 மீண்டும் கேள்வி எதுவும்  கேட்காமல், ராணியை தூக்கி விட்டு முகம் கழுவச் சொல்லிவிட்டு. குழந்தையை தூக்கிக் கொண்டு தயாரானர்.

       ரிக்க்ஷா கூட்டிட்டு வரவா?
               இல்லங்க, அதெல்லாம் வேண்டாம், நான் மெல்ல நடந்தே வந்துர்றேன். குழந்த முழிச்சிட்டான் அவன கொடுங்க.

     தளர்ந்த நடையுடன் வீட்டை விட்டு வெளியே வந்த ராணி சிறிது தூரம் நடந்தவுடன்  தெளிவானார். 

               இப்போ கொஞ்சம் பரவா இல்லங்க, சைக்கிள்ள கூட ஏறிக்கிறேன்.

சரி என்று ராணியை குழந்தையுடன்  பின்னால் உட்காரச் சொல்லி விட்டு,  கிருஷ்ணன்  மிதி வண்டியை இயக்க முயற்சிக்க, சற்று தூரத்திலேயே தெரு விளக்கின் அடியில் இரண்டு நாய்கள் எதோ ஒன்றுக்காக வெறிப் பிடித்தது போல சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அந்த குறுகிய தெருவில் ஒதுங்கி செல்லவும் வாய்ப்பில்லை. திரும்பி செல்லவும் மனமில்லாமல் அங்கேயே நின்றார் கிருஷ்ணன். சில நொடிகளில் இரண்டு நாய்களும் கிருஷ்ணனை நோக்கி அதே வெறியுடன் ஓடி வந்தன.  மிக அருகில் வந்த நாய்கள், வந்த  அதே வேகத்தில் நிற்க முயற்சி செய்து நிற்க முடியாமல் வழுக்கிக் கொண்டு சாலையின் இருபுறமும் இருந்த சாக்கடையில் விழுந்து எழுந்து வந்த திசையிலேயே ஓடின. படபடப்பில் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற கிருஷ்ணன் திரும்பினார், பின்னால் உட்கார்ந்திருந்த ராணி குழந்தையுடன்  இறங்கி நின்று கொண்டிருந்தார்.

            "நல்ல வேளை ஒன்னும் ஆகல"  என்று தேற்றிக்கொண்டு மிதிவண்டியை மருத்துவமனைக்கு செலுத்தியவரை ராணி இடைமறித்தார்.
                  
              நல்லா தூங்கினதால தலைவலி சரியாப் போச்சு, hospital போகவேண்டாம். வேற எங்காவது போகலாம்.  

இரவு உணவு உண்டு விட்டு மூவரும் 09:30 மணிக்கு வீடு திரும்பினர்.

 அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் ஒருமுறை தலை வலி, மருத்துவமனை, வழியில் வேறு ஒரு சம்பவம்.

ஒரு மாதம் சென்ற பின்பு, விடுமுறைக்காக ராணியின் தங்கை வந்திருந்தார். வந்து ஒருவாரம் ஆகியும் வெளியில் எங்கும் கூட்டிச்செல்ல முடியாததால் ராணியையும், தங்கையையும் திரைப்படத்திற்கு முதல் காட்சிக்கு சென்று வரச்சொன்னார் கிருஷ்ணன். 

  ராணி, நீயும் உன் தங்கச்சியும் பக்கத்து theater க்கு சினிமாக்கு போயிட்டுவாங்க, எனக்கு இந்த motor re-winding வேலை இருக்கு.

                     நாங்க மட்டும் எப்படிங்க போறது?

   உங்கள நான் theater ல விட்டுர்றேன், படம் முடியிற நேரத்துல வந்து கூப்ட்டுக்குறேன். பக்கத்துல தான நடந்து போகலாம்.
                             
                    சரிங்க, குழந்தையும் நானே கொண்டு போயிர்றேன். அழுதா நாங்க ரெண்டு பேறும்  சமாளிச்சிக்குவோம்.

கூச்சல் 


இருவரையும் திரையரங்கத்தில் விட்டு விட்டு வந்து தன் வேலையை தொடர்ந்தார் கிருஷ்ணன். வயலுக்கு நீர் பாய்ச்ச, கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் 4  குதிரை திறன் கொண்ட  மோட்டாரின் உள் பக்கத்தில் குனிந்து  தாமிர கம்பிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். வேலை மும்மரத்தில் எதையும் அறியாதவர், சட்டென்று தன்னருகில் யாரோ இருப்பதைப் போன்று உணர்ந்தார்.  யாரும் இல்லை என்று தெரிந்தாலும் திரும்பி பார்த்து அதை உறுதி செய்து கொண்டு மீண்டும் பணியை தொடர்ந்தார்.     

வீட்டின் முன்புறம் போடப்பட்ட மரச் சட்டங்களினால் ஆன கதவு திடீரென சத்தமில்லாமல் தானாக மெல்ல ஆட ஆரம்பித்தது. 

குனிந்திருந்த கிருஷ்ணன், தலையை உயர்த்தாமல் கண்களை மட்டும் மேலே உயர்த்திப் பார்த்தார். ஆட்டம் மெல்ல குறைந்து அமைதியானது. மனதுக்குள் எந்த கேள்விக்கும் இடம் கொடாமல், தரைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியை திருப்புளி (screwdriver)  கொண்டு மீண்டும் ஆடாதபடி நிரப்பினார்.

கவனத்தை தாமிர கம்பியின் மீது திருப்பி வேலையை தொடங்க முயற்ச்சித்தார், இனம் புரியாத கலவரம் அவரை ஆட்கொண்டது. 

"சீ சீ  அதெல்லாம் ஒன்னும் இல்ல, சுத்த மூட நம்பிக்கை" என்று சமாதானம் செய்துகொண்டு வேலையை தொடர்ந்தவர், சிறிது நேரத்திலேயே தன்னை அறியாமல் நிமிர்ந்து பார்த்தார். பார்த்தவுடன் உடலின் அனைத்து மயிர்க் கால்களும் சிலிர்த்து நின்றன...

என்ன  அது ?