cookie

Friday, June 29, 2012

நீச்சல்...

இன்று முதல் முறையாக இரண்டரை வயதாகும் என் மகன் நீச்சல் கற்றுக்கொள்ள நங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிறுப்பின் நீச்சல் குளத்திற்கு சென்றான். இந்த நிகழ்வு என்னுடைய நீச்சல் அனுபவத்தை நினைவு படுத்தியது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம். அப்போது எனக்கு நீச்சல் தெரியாது அது தேவைப்படவும் இல்லை. குடிக்கவே தண்ணீர் இல்லா ஊரில்(கோவில்பட்டி)  நீச்சலின் தேவை என்ன?

வீட்டருகே இருக்கும் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து விளையாட எங்கள் வீட்டில் தடை. காரணம் அந்த சிறிய வயதிலேயே அவர்களின் உன்னத உலக அறிவும் அனுபவமும் தான். இந்த சமயத்தில் ஒருநாள் எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் வெளியூர் சென்றார்கள். அம்மா பலமுறை சொல்லியும் அப்பா என்னையும் உடன் அழைத்துச் செல்ல கட்டாயமாக மறுத்து விட்டார். எங்கள் வீடும் "சிதம்பரம்" தான். அம்மா அமைதியாக்கப்பட்டார். நான் அடுத்த தெருவில் இருந்த பாட்டியின் வீட்டிற்கு இன்ப சுற்றுலா சென்றேன்.

எனக்கு பாட்டி வீடு என்றால் ஒரே மகிழ்ச்சி தான். ஏனென்றால் பாட்டிக்கு ஏமாற மட்டும் தான் தெரியும். அப்போது நான் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக்குட்டி. அவ்வேளையில் தான் வீட்டருகிலேயே இருந்த அந்த இளம் ஆர்கிமிடீசின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. மிதத்தல் விதிகளை எனக்கு விளக்கினான். அடுத்த நாளைக்கு செய்முறை வகுப்பும் முன்பதிவு செய்யப்பட்டது. பாட்டியிடம் வழக்கம் போல நான் தான் அரிச்சந்திரன் என்பதை உறுதி படுத்திவிட்டு செய்முறை வகுப்பிற்கு புறப்பட்டேன். அரைமணி நடந்தோம் அந்த பொற்றாமரை குளத்தை அடைந்தோம்.


சூரியன் எங்களின் உச்சந் தலையில் மையம் கொண்டிருந்த நேரம். எங்கள் இருவரையும் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. வகுப்பை ஆரம்பிக்க ஆசிரியர் தயாரானார். இடுப்பளவு தண்ணீரில் இறக்கி விடப்பட்டேன். நீரின் அளவு கூட கூட என்மனதில் பயத்தின் அடர்வும் கூடிக்கொண்டே போனது. ஓடிவிடலாமா என்று நினைக்கும் போது, எதற்கும் இருக்கட்டும் என்று அவர் என் மத்திய பிரதேசத்தை சுற்றி கயிறு வேலி அமைத்தார். பின்பு இரண்டு கால்களையும் தரையில் உதைத்து எகிறி நீச்சல் அடிக்கப்  பணித்தார்.

அப்போது அங்கு வந்த நடுத்தர வயது மதிக்கத் தக்க ஒருவர், தான் அணிந்து வந்த லுங்கி எனும் வஸ்திரத்தை உயர்த்தி, நீரின் மேற்பரப்பை ஆக்கிரமிதுக் கொண்டே கேட்டார். "என்னடா நீச்சலா, நடக்கட்டும் நடக்கட்டும்" என்று தான் வந்த வேளையில் மும்மார மானார். விட்டால் போதுமமென இடுப்பில் கட்டிய பாசக்கயிற்றை உதறிவிட்டு ஓடிவந்தவன் தான். இன்றுவரை நீச்சல் ஏட்டு சுரைக்காய் தான்.