cookie

Friday, August 14, 2015

முருகனின் வேலும், அஜைலும்


"என்னது, அஜைலும், வேலுமா? ஓ.... ஆரம்பிச்சிடீங்களா, வழக்கம் போல, சோதனை குழாய் குழந்தை, விமானம், க்ளோனிங் வரிசைல அஜைலையும் உலகத்துக்கு  சொன்னது ஆறு கோடி வருசத்துக்கு முன்னாலையே நாங்கதானு பெரும பேசப் போறீங்களா?"   

இது  போன்ற எந்த நோக்கம் இந்தப் பதிவிற்கு இல்லை...      
இந்தப் பதிவை நான் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. தேடிய சில தகவல்கள் கிடைக்காததால் கிடப்பில் போட்டு வைத்திருந்தேன். இருக்கும் தகவலை வைத்து இன்று இதை எழுதி முடிக்க வேண்டும் என்ற உறுதியோடு மீண்டும் தொடர்கிறேன்.

பல மாதங்களுக்கு முன்பு "ஸ்க்ரம்" எனும் செயல் திட்ட வரைமுறை பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது அங்கிருந்த பயிற்சியாளர், "T" வடிவ திறன்கள் குறித்து விளக்கினார். 

"இவ்வளவு காசு குடுத்து இங்க வந்து உக்காந்தா, இவரு நமக்கு 'அ'னா ,'ஆ'வன்னா கத்து கொடுத்துக்கிட்டு இருக்காரு. குடுத்த காசு எல்லாம் வீனா போச்சு..."     

இந்த " T " வடிவத்தில், மேலே கிடைமட்டமாக ஒன்றும், அதன் கீழே நடுவில் செங்குத்தாக ஒன்றுமாக இரண்டு கோடுகள் உள்ளன.

"அது தான் பாத்தாலே தெரியுதே, மேல சொல்லு..."

இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன வென்றால்!

"இவரு இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றாரு..."

கிடைமட்டமாக இருக்கும் கோடு குறிப்பது, நாம் சார்ந்திருக்கும் ஒரு துறையில் மட்டுமில்லாமல், அதனோடு நேரடி அல்லது மறைமுகத் தொடர்புடைய  பல்வேறு துறைகளில், பிரிவுகளில் இருக்கும் நடைமுறைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

"சரித்தான், அப்பதான எல்ல வேலையும், இளிச்ச வாயன் ஒருத்தன் தலைமேல கட்டிரலாம்..." 

நடுவில் இருக்கும் செங்குத்தான கோடு குறிப்பது, நாம் சார்ந்திருக்கும் அந்த துறையில் நமக்கு ஐயம் நீங்கிய நுணுக்கமான, ஆழமான அறிவு "நுண்ணறிவு" வேண்டும் என்பதையே குறிக்கிறது.

"எவ்வளவு ஆழம்? பெட்ரோல் வந்தாப் போதுமா? சும்மா எரிச்சல கெளப்பிகிட்டு....

போறியா இல்ல தூக்கி அடிக்கவா..."

இவ்வாறு, அந்த பயிற்சியாளர் விளக்கி கொண்டிருக்க. மூளையின் பின் பகுதியில் சுருள் சுருளாக வளையங்கள் நெளிந்து வளைந்து சுற்றி காலயந்திரம் இல்லாமல் 1995 ஆம்  ஆண்டுக்கு சென்றேன்.

அன்று ஞாயிறு, மாலை மணி சரியாக தெரியவில்லை. கோவில்பட்டியில் புதுப்பிக்கப் படாமல் இருந்த அதே பழைய வீடு. தொலைக்காட்சி பெட்டி இல்லாத இடத்தில் ஏதோ ஒரு பெட்டி இருந்தது. நான் படப்பிடிப்புடன் தயாராகி கொண்டிருக்கிறன். கோகுல் சந்தன பொடியை கொண்டு முகத்தில் வெள்ளையடித் கொண்டிருக்கிறேன். இருந்தும் பெரிதாக எந்த பலனும் தெரியவில்லை.

"பவுடர் அடிச்சது போதும் டா..." என்று அரசாணை வந்தவுடன் அப்படியே புறப்பட்டேன் அந்த அற்புத அனுபவத்திற்கு. ஒரே ஓட்டத்தில் "கீதா" அக்கா வீட்டை அடைந்தேன் ("சங்கீதா" அக்காவின் கடந்த கால வாழ்க்கை பாதிக்கப் படக்கூடாது என்பதால் அவரின் பெயர் கீதா என்று மாற்றப் பட்டுள்ளது). "கீதா" அக்காவின் வீட்டில் அனைவரும் அன்பானவர்கள். என்னை எப்போதும் கொலைவெறியுடன் பார்க்கும் அவரின் அப்பா, சமயம் கிடைக்கும் போதெல்லாம் விரட்டியடிக்கும் அவரின் அம்மா. அவர்களின் அன்புக்கு இன்றுவரை நான் அடிமைதான்.            

அன்று, எனக்காக காத்திருந்த "கீதா" அக்கா. என்னைப் பார்த்தவுடன். "என்னடா இவ்வளவு நேரம்?" என்று அக்கறையுடன் கேட்டு கொண்டே அந்த சிறிய கதவை திறந்து அந்த வட்ட வடிவமான பொத்தனை திருகினார். சடக் என்ற ஒலியுடன் திரை முழுவதும் ஒளியை நிரப்பியது அந்தப் பெட்டி. முதலில் புள்ளிகள் பின்பு "ப்பா ஆங் , பப்பப்பப் பா.... ஆங்" வென வெள்ளையாக சுற்றி நிழல்கள் நிஜமாகின. 

"சாரதா" எனும் திரைக்காவியம் ஒளிபரப்பாகியது. விரிவுரையாளராக அந்தப் படத்தில் நடித்தவர் என் மனம் கவர்ந்த "SSR" அவர்கள். சில நிமிடங்களில் அந்தகாட்சி, இன்னும் என் மனதை விட்டு நீங்காத அந்தகாட்சி விரிந்தது. வசனம் சரியாக நினைவில் இல்லை ஆனால் அதன் சாரம் இதுதான்.

கதையின் நாயகி, நாயகனிடம் கேட்கிறார் "அன்பின் வடிவமான அன்னை பார்வதி ஏன் முருகன் கையில் வேலை கொடுத்தார்?"

அதற்கு "SSR" அவர்களின் பதில் சிறிய விளக்கமாக இருக்கும்...  

"நம் அறிவு கூர்மையா இருக்க வேண்டும்" என்று கூறிவிட்டு கூறிய முனையை வரைவார். பின்பு அதைத் தொடர்ந்து 

"கூர்மையான அறிவு விசாலமானதாக, அகலமாக இருக்க வேண்டும்" என்று வேலின் முகப்பை வரைவார். பின்பு 

"அந்த அகலமான அறிவு, ஆழமானதகவும் இருக்க வேண்டும்" என்று வேலின் முழு வடிவத்தையும் வரைந்து முடிப்பார்.

நமக்கு வரும் இன்னல்களை ஆயுதத்தால் அல்ல அறிவால் வெல்ல வேண்டும். அந்த அறிவின் அம்சமே வேல் என்று முடிப்பார்.

இப்போது முருகனின் வேலை ஒருமுறை கூர்ந்து கவனியுங்கள்...

முருகனின் கையில் அஜைல்...