cookie

Saturday, March 13, 2021

அனார்கலி

"ஒரு நாளாசும் சண்ட போடாம, அழுகாம, சந்தோசமா பள்ளிக்கூடம் போறியா டா? தினமும் இதே வேலயாப் போச்சு. பள்ளிக்கூடம் போறதுன்னா உனக்கு ஏன் அவ்வளவு வருத்தமா இருக்கு? உன்னைய என்ன பக்கத்து வீட்டு புள்ளைங்க மாதிரி கட்டையடுக்க சொல்றமா? இல்ல வேற வேலை ஏதாவது சொல்றமா? படிக்கிறது மட்டும்தானடா உனக்கு வேல! அதுக்கு உனக்கு எங்க வலிக்குது? "செல்வி"யப்பாரு ஒரு நாளாவது பள்ளிக்கூடம் போக அழுத்திருப்பாளா?" என்று அம்மா சொல்லும்போதே செல்வம் ஏறெடுத்து செல்வியைப் பார்த்தான். செல்வி வேண்டுமென்றே இன்னமும் அகலமாக சிரித்து தம்பியின் முகத்தில் அவமானத்தை அள்ளிப் பூசினாள். இப்போது ஏதாவது செய்தாகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டான் செல்வம். தப்பிக்கும் வழியில் தடைகள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக சுற்றும் முற்றும் பார்த்தான்.

அடுப்படியில் அம்மா தோசை சுட்டுக் கொண்டிருந்தார், அம்மாவின் அம்மா "பாப்பா கிழவி", சுவற்றில் தன்னை சாய்த்துக் கொண்டு சேலையும் பாவாடையும் சேர்த்து செய்தித்தாள் போல முட்டிக்கு மேலே உருட்டி வைத்துவிட்டு கால்வலி தைலத்தை முட்டியில் தேய்த்துக் கொண்டு "எனக்கு ஒரு சாவு வரமாட்டேங்கிது!" என்று எமனிடம் புகார் கொடுத்துக் கொண்டிருந்தார், செல்வி இரண்டாவது தோசையை மடக்கி தன்னுடைய "அண்டா" வாயில் திணித்துக் கொண்டிருந்தாள். இதெற்கெல்லாம் மேலாக வீட்டில் அப்பா வேறு இல்லை. இதுதான் சமயம் யாரும் தன்னை பிடிக்க முடியாது என்பதை உறுதி செய்துகொண்டு, "கூடலிங்கம்" மஞ்சப்பையில் நோட்டு புத்தகங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு, இடது கையில் பையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, வலது கையை மடக்கி தயாராக வைத்துக் கொண்டு செல்வியின் அருகில் மெதுவாகச் சென்றான்.

தோசை + சாம்பாரின் ருசியில் மயங்கி இருந்த செல்வி, தம்பியை கவனிக்கவில்லை. செல்வம் தான் வந்த அதே வேகத்தில் செல்வியின் தலையில் "நறுக்" வைத்தான். செல்வி அழுவதற்கு முன்பாகவே, பாப்பா கிழவி ஒப்பாரியை ஆரம்பித்து விட்டார், "கொலகாரப் பாவி, ஏன்டா தங்கச்சிய இப்படி போட்டு அடிக்கிற" என்று செல்வத்திடம் கோபிக்க, "செல்வி எனக்கு அக்கா, தங்கச்சி இல்ல கிழவி, உனக்கு சாவு தானே வேணும் இந்த தர்றேன்" என்று சுவரில் சாய்ந்திருந்த பாட்டியை முன்புறம் இழுத்து குனிய வைத்து முதுகில் கும்மினான். "அய்யய்யோ, என்னைய கொல்றான், என்னைய கொல்றான்" என்ற கூப்பாடு தொடங்கும் போது, தாவி குதித்து வீட்டிலிருந்த தப்பித்தான் செல்வம். பள்ளியின் மீதிருந்த கோபத்தை அக்காவின் மீதும், பாட்டியின் மீதும் திருப்பிய திருப்தி நெடுநேரம் நீடிக்கவில்லை. அதற்குள் பள்ளி வந்து விட்டது, தான் வந்த வேகத்தை விட வேகமாக பள்ளி தன்னிடம் வந்து விட்டது என்பதை அறிந்து, கலக்கும் வயிறுடன் உள்ளே செல்ல மனமில்லாமல் வாசலிலேயே நின்று தெருவை கவனித்தான்.  

அந்த குறுகிய தெருவில், வலதுபுறம் பள்ளி இருந்தது. வேகமாக இடதுபுறம்  இருந்த மீனாட்சி பாட்டி கடையின் அருகில் சென்று நின்று கொண்டான் செல்வம். சாக்கடையின் மீது ஒரு பெரிய பலகையைப் போட்டு, அதன் மீது வகை வகையான பண்டங்களை அடுக்கியிருந்தாள் மீனாட்சி பாட்டி, பண்டங்களை மேலும் அலங்கரித்தன ஈக்கள். ஈக்களைப் பார்க்க செல்வத்திற்கு பொறாமையாக இருந்தது. அவைகளைப் போல இங்கேயே மாலை வரை உட்கார்ந்து விட்டு, அப்படியே வீட்டுக்கு போய் விடலாம் என்ற எண்ணம் வந்தபோது, தண்டவாள கம்பியில் சுத்தியால் அடித்து செல்வத்தின் கனவை களைத்தார் பள்ளியின் காவலர். மணியோசை கேட்டு அனைவரும் பள்ளியின் உள்ளே ஓட, செல்வமும் அந்த மந்தையில் இணைந்தான். 

முதல் வகுப்பு தொடங்கும் வரைதான் செல்வத்திற்கு பள்ளியின் ஒவ்வாமை இருக்கும், பின்பு அது மறைந்து விடும் அப்படி ஒரு வினோத நோய் அவனுக்கு. முதல் வகுப்புக்கு வழக்கம் போல வகுப்பாசிரியர் முத்தையா வந்தார். வருகைப் பதிவு முடிந்தவுடன், கரும்பலகையில் வந்தவர்கள் மற்றும் வராதவர்களின் புள்ளி விவரங்களை பதித்துவிட்டு தனது பாடத்தை தொடர்ந்தார். செல்வத்தின் கண்கள் கரும்பலகையில் மையல்கொள்ள, மனம் மட்டும் மீனாட்சி பாட்டியின் பண்டத்தில் மொய்க்கப் பறந்தது. 

திடீரென "முட்டா மூதேவி, செத்த பயலே, இங்க நான் கழுதையா காத்திக்கிட்டு இருக்கேன், அங்க நீ என்னால பண்ணுத?" என்று முத்தையா ஆசிரியர் கனிவுடன் குசலம் விசாரிக்க, திடுக்கானான் செல்வம். நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்து மெல்ல எழுந்து நின்று ஒன்றும் புரியாமல் விழித்தான், மனதுக்குள் அன்று காலை அக்காவையும், பாட்டியையும் மொத்தியது நினைவில் வந்து மிரட்டியது. "சரி, இன்னைக்கி கோட்டா கலையிலையே கெடைக்கப் போகுது" என்று மனதை திடப்படுத்திக்  கொண்டு,  பூசைக்கு தயாரானான். "ஏ! செத்த கூவ, செனக் கூவ, செல்வம்! நீ எதுக்குல நிக்க? உக்காருல" என்று பரிவுடன் செல்வத்தை அமரச் சொன்னார் ஆசிரியர் முத்தையா. அப்போதுதான் தனக்கு பின்னால் மாப்பிள்ளை பெஞ்சிலிருந்து "நல்லை புன்னை வனம்"மும் "சொல்லுக்கினியவன்"னும் நிற்பதை  கண்டான். 

கையில் பிரம்புடன் வந்த ஆசிரியர், தன்னைக் கடந்து கடைசி பெஞ்சுக்கு சென்ற பின்பு தான் செல்வத்துக்கு பீதி குறைந்தது. ஆசிரியர் முத்தையா, பிரம்பை முறுக்கிய படி "இவனுக பேரப் பாரு, பேர... அடங்காப் பிடாரி பயலுவளுக்கு பேரு 'நல்ல வனமாம்' , அப்புறம் உன் பேரு என்னால? ஆ... " என்று ஆசிரியர் யோசிக்கும்போதே, அவரின் பின்புறமிருந்து ஒரு மாணவன் "குச்சிதின்னி சார்" என்றான்.  பதில் கேட்டு ஆத்திரமடைந்த ஆசிரியர், "அடங்காப்பிடாரி வாய்மூடு" என்று அவனை அடக்கி விட்டு, "உன்பேரு சொல்லுக்கினியவன் தான... வெளக்கமாறு... வெளக்கமாத்துக்குப் பேரு பட்டுக் குஞ்சம்னு வச்ச மாதிரி,  நீட்டுங்கல கைய..." என்று பாரபட்சம் ஏதுமின்றி இருவருக்கும் சமமாக சன்மானங்களைப் பகிர்ந்தளித்தார். குற்றம் நடந்தது என்ன? அதன் பின்னணியில் இருக்கும் அன்னிய சக்திகள் யாவை என்று தெரிந்து கொள்ள நாங்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தோம். எதுவாக இருந்தாலும் மதிய உணவு இடைவேளை வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. சில சமயங்களில் பூசை வாங்கியவருக்கும் கூட காரணம் என்னவென்று தெரியாது, அதனால் மர்மமுடிச்சு அவிழாமலே போய்விடும் அபாயமும் உண்டு. 

ஒருவழியாக உணவு இடைவேளை மணியடித்தது, ஆசிரியர் முத்தையா வகுப்பை விட்டு வெளியேறியதும் மாணவர்கள் அனைவரும் துக்கம் விசாரிக்க கடைசி பெஞ்சில் கூடினார்கள். "டேய் குச்சிதின்னி, நீங்க ரெண்டு பேரும் என்னடா பண்ணீங்க, ஏன் சாரு உங்கள அடிச்சாரு?" என்று தொடங்கினான் ஒருவன். இனியவன் தன்னுடைய கணக்குப் புத்தகத்தை திறந்து உள்ளேயிருந்து வட்டமான சிறிய காகிதம் ஒன்றை வெளியே எடுத்தான். அதை தனது நாசிக்கு அருகில் கொண்டு வந்து பலமாக உறிஞ்சினான். காகிதம் உயிர்பெற்று துடித்தது. "நேத்து சாய்ங்காலம் சாப்டது, இன்னும் எப்பிடி மணக்குது பாரு" என்று மற்ற மாணவர்களுக்கு அருகில் காகிதத்தை கொண்டு சென்றான். செல்வத்திற்கு மெய்யாகவே அந்த மனம் தித்திப்பை நினைவூட்டி நாவினை நனையச் செய்தது, உடனே நனைந்த நாவினால் இதழ்களையும் ஈரமாக்கி, மேலும் தகவலை கேட்க ஆர்வமானான். "இதுக்கு பேரு என்னடா?" என்று அதில் ஒருவன் கேட்க. "இதுதாண்டா அனார்கலி" என்று தேவரகசியம் உடைத்தான் இனியவன். "அனார்கலி யா அப்பிடின்னா..." என்று வந்த கேள்விக்கு, "இந்த தேர்வர்கள்லாம் இருக்காங்கல்ல, அவங்க சாப்பிர்ரதாம்" என்று இனியவன் அளக்கத் தொடங்கும் போதே, ஒருவன் குறுக்கிட்டு, "நாங்க கூட தேவர் தான், ஆனா இத சாப்ட்டதில்லையே" என்றான். இனியவன் சலிப்புடன், "நான் சொன்னது மேல உள்ள தேவர்கள், அவங்க சாப்பிடுறது" என்று கூறிவிட்டு மதிய உணவைச் சாப்பிட்ட தொடங்கிவிட்டான்.         
             
இனியவன் கூறியதைக் கேட்டதிலிருந்து, செல்வத்திற்கு அனார்கலியை ஒரு முறையாவது சாப்பிட்டே தீரவேண்டும், அதுவும் வகுப்பில் இனியவனுக்கு அடுத்து சாப்பிட்டது தானாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிலைத்து விட்டது. மதிய வகுப்பு முழுவதும் அனார்கலியின் நினைவிலேயே கடந்தது. மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் நடந்ததை கூறி தனக்கு "அனார்கலி" வேண்டும் என்றான். இதைக் கேட்ட அவன் அம்மா "அதெல்லாம் சரி, அனார்கலிக்கும், தேவர்களுக்கும் என்னடா சம்மந்தம்" என்று சிரித்தார். "அதெல்லாம் எனக்குத் தெரியாதுமா, இந்த ரெண்டு நாள்ல அப்பாகிட்ட சொல்லி வாங்கிக் குடுமா, திங்ககெலம பள்ளிக்கூடம் போகும்போது எல்லார்கிட்டையும் நான் அனார்கலி சாப்ட்டத சொல்லணும்" என்று மிரட்டலாக கெஞ்சினான் செல்வம். "சரி ஒரு நாளாவது நீ சந்தோசமா பள்ளிக்கூடம் போவேன்னா, கண்டிப்பா அப்பாகிட்ட சொல்லி வாங்கிட்டு வரச்சொல்றேன்" என்று அம்மா நம்பிக்கையளித்தார்.

"பாப்பா" பாட்டி, அக்கா அனைவரும் தூங்கியாகி விட்டது, செல்வம் போர்வைக்குள் தன்னை புதைத்துக் கொண்டு தூங்குவது போல அப்பாவுக்காக காத்திருந்தான். இரவு நெடுநேரம் கழித்தே அப்பா வீட்டுக்கு வந்தார். சில நிமிடங்களில் அம்மா, அப்பாவுக்கு இரவு உணவை பரிமாறத் தொடங்கினார். அப்போதுதான் குளிப்பாட்டி ஈரம் காயாத "புதிய" பழைய சோற்றை பிழிந்து தட்டில் குவித்தார். பழைய சோற்றைக் கண்டதும் அப்பாவின் முகம் துவண்டது, "பூரி, பொங்கல், வட அந்தமாதிரி ஏதாவது பண்ணலாம்ல" என்ற அப்பாவின் பரிந்துரையை புறக்கணித்து விட்டு, "சாம்பார இப்பதான் சுடவச்சேன் ஊத்தவா?" என்று கேட்டபடியே அப்பாவின் பதிலுக்காக காத்திராமல், தட்டில் குவிக்கப் பட்டிருந்த  பழையசோற்றின் மீது சாம்பாரை வாரி இறைத்தார். சாப்பிடாமல் போய் தூங்கிவிடலாமா என்ற எண்ணம் தோன்றினாலும், மீதி இருந்தால் நாளையும் இதே பழைய சோறுதான் எனவே மனமில்லாமல் சோற்றையும், குழம்பையும் பிசையத் தொடங்கினார்.        





அமைதியின் சப்தம் காதைப் பிளக்கவே, "வேலைக்கு போன எடத்துல என்னாச்சு?" என்று தொடங்கினார் அம்மா. "எட்டு மணிக்கே வந்திருப்பேன், வீட்டுக்கு கெளம்பும்போது ஒரு வேல சொல்லிட்டாரு, அத முடிச்சிட்டு வர இவ்வளவு நேரம் ஆயிடுச்சி" என்று பதிலளித்து விட்டு, மனமில்லாமல் முதல் கவளத்தை வாயில் திணித்தார் அப்பா. "சரி, வேல முடிஞ்சதுல்ல, உங்க சார் காசு கொடுத்தாரா?" என்று அம்மா கேட்டதும், அப்பா சலிப்புடன் "எங்க, தேங்க்ஸ்னு சொல்லிட்டாரு" என்றார் குனிந்தபடியே. "அந்த தேங்க்ஸ வச்சி அண்ணாச்சி கடையில ஒரு கிலோ அரிசி வாங்க முடியுமா? இனிமே அந்த ஆளு வேலைக்கு கூப்பிட்டா போகாதீங்க" என்று அம்மா கொதிக்க, "ஏய் நீ என்ன, என் வேலைக்கு வேட்டு வச்சிருவ போல. ஆபீஸ்ல அவருக்கு கீழ நான் வேல பாக்குறேன். கொஞ்சம் அப்பிடி இப்படி தான் இருக்கும். வேற ஒரு வேல பாக்கும் போது சேத்து கொடுப்பாரு. விடு, விடு... சரி பசங்க தூங்கிட்டாங்களா?" என்று பேச்சை திசை திருப்பினார். "எல்லாரும் தூங்கிட்டாங்க, செல்வம் தான் ஏதோ 'அனார்கலி'னு புதுசா ஒரு ஒரு ஸ்வீட் பாம்பே கடையில வந்துருக்காம் அது  வேணும்னு கேட்டான், அடுத்து நீங்க பஜாருக்கு போகும் போது வாங்கிட்டு வந்துருங்க" என்று அம்மா சொன்னது கேட்ட பிறகு தான் செல்வத்துக்கு நிம்மதியாக இருந்தது. திருப்தியாக அனார்கலியின் நினைவுகளைச் சுமந்து தூங்கச் சென்றான்.

மறுநாள் காலையிலிருந்தே செல்வம் அனார்கலியின் தரிசனத்திற்காக காத்திருந்தான். ஒவ்வொருமுறை அப்பா வெளியில் சென்று வரும் போதெல்லாம் அனார்கலியைச் சுமந்து வருகிறாரா என்றே முதலில் பார்த்தான். அவளின் புண்ணிய தரிசனம் சனிக்கிழமை கிடைக்கவில்லை, ஆசை தீர அழுதுவிட்டு தூங்கிவிட்டான். ஞாயிறு மதியம் வெளியில் வேலைக்குச் சென்ற அப்பா வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. மீண்டும் அவளின் தொலைவுத் துயர் தாங்காமல் அழுதது செல்வத்திற்கு நினைவிருக்கிறது, ஆனால் அயர்ந்து எப்போது தூங்கினான் என்பது நினைவில்லை. 

திடீரென விழித்தெழுந்தவன் விடிந்து விட்டதை உணர்ந்தான். பொறுப்பில்லாமல் தூங்கியதை நினைத்து வருந்திவிட்டு, சமையலறைக்கு ஓடினான். அங்கே ஓரத்தில் ஒரு மூலையில் மிகவும் பரிட்சயமான அந்த காகிதம் சுருண்டு கிடந்தது. பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டான் செல்வம். அது நிச்சயமாக அனார்கலி போர்த்திவந்த முகத்திரைதான். "இந்த முள்ளுவாங்கி செல்விதான் ராத்திரி சாப்ட்டிட்டு பேப்பர இங்க போட்ருக்கா சோம்பேறி" என்று திட்டிக்கொண்டே அங்கே சமைத்துக் கொண்டிருந்த அம்மாவை சட்டை செய்யாமல் பல தட்டுகளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பாத்திரங்களை உருட்டினான். "என்னடா வேணும், ஏன் எல்லாத்தையும் உருட்டிக் கிட்டிருக்க?" என்று அம்மா கேட்க, "அனார்கலி எங்கம்மா, அப்பா வாங்கிட்டு வந்தாரா?" என்று கேட்டுவிட்டு ஆர்வமுடன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். "ஆமா, அப்பா வாங்கிட்டு வந்தாரு" என்று சிரித்துக் கொண்டே அம்மா சொல்ல, ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான் செல்வம். "எங்க என்னோட பங்கு, குடு, வேகமா எடும்மா" என்றான் செல்வம் ஏக்கமாக.

அம்மா சற்று குழப்பத்துடன், "நீ தான் நேத்தே சாப்ட்டையேடா, மறுபடியும் கேட்டா எங்க போறது? இனிமே வாங்கினாத்தான் உண்டு" என்றார். ஒன்றும் புரியாத செல்வம் எரிச்சலுடன், "என்னமா சொல்ற, நேத்தே சாப்பிட்டேனா? நான் தான் தூங்கிட்டேனே பெறகு எப்பிடி சாப்ட்டிருப்பேன்?" என்று மேலும் குழம்ப. "ஆமாடா, அப்பா நேத்து ரொம்ப லேட்டா தான் வந்தாரு, வந்த உடனே உன்ன எழுப்பி சாப்பிட வைக்கச் சொன்னாரு. நானும் உன்னையம், செல்வியையும் எழுப்பி சாப்பிட வச்சேனே! ஓ மறந்துட்டியா? அதோ அங்க பாரு, சாப்பிட்டு  நீ போட்ட பேப்பர் கூட அங்கேயே இருக்கு. அதை எடுத்து குப்பையில போட்று" என்று சொல்லிவிட்டு வேலையத் தொடர்ந்தார்.   

செல்வத்துக்கு தலை சுற்றுவது போலிருந்தது, "ஓ" வென்று அழுதான். அதுவரை அமைதியாக இருந்த அம்மா "டேய் குண்டி மறந்த எடுபட்ட பயலே, தின்னுபோட்டு மறந்துட்டா அதுக்கு யாரென்ன செய்ய? மிட்டாய் கேட்ட வாங்கி குடுத்தாச்சு, ஒழுங்கா அழுகாம பள்ளிக்கூடம் போயிரு, இல்ல பாத்துக்கோ" என்று கொஞ்சம் சர்க்கரையை அள்ளி செல்வத்தின் வாயில் போட்டுவிட்டு, "எந்த பேர்ல இருந்தாலும் இனிப்பு இனிப்புதான்" என்று சொல்லி செல்வத்தின் _____  அங்கேயே புதைத்தார்.     

வேறு வழியில்லாமல் செல்வம் துக்கத்தை அடக்கிக் கொண்டு அனார்கலியின் முகத்திரையை பத்திரப் படுத்தினான். எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் அன்றும் அழுதுகொண்டே பள்ளிக்குச் சென்றான் செல்வம் என்கிற அந்த  சலீம்.

"என்னுடைய காதலியின் முகத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க இறைவன் கருணனை காட்டினால், நான் இறந்த பின்னும் கூட அவருக்கு நன்றிக்கடன் செலுத்திக் கொண்டே இருப்பேன்"
- மஜ்னூன் சலீம் அக்பர்    


"அனார்கலி" - 1990 களில் கோவில்பட்டியில் இருக்கும் ஒரு வடஇந்திய இனிப்பக்கத்தில் விற்கப்பட்ட மிகவும் சுவையான இனிப்பு. அனார்கலியின் புகைப்படம் கிடைக்கவில்லை, ஒரு கோணத்தில் அனார்கலி இப்படித்தான் இருக்கும். 

   Buy the best Champakali online at lowest prices in Bangalore from ...    

Saturday, March 14, 2020

சிவப்பு மிதிவண்டி

எங்கள் வகுப்பு சட்டாம்பிள்ளை மணியின் தந்தை ஒரு மிதிவண்டி நிலையத்தின் உரிமையாளர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த சிவப்பு நிற "அட்லஸ்" வண்டியில் நாங்கள் வசிக்கும் முதல் தெருவில் காலை முழுவதும் வீதியுலாவிலேயே இருப்பான் மணி. அந்த வார விடுமுறையில் நானும், குருநாதர் தங்கராசும் அங்கிருந்த அடிகுழாயின் அருகில் அமர்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தோம். திடீரென ஞானம் பிறந்து குருநாதர் என்னிடம், "இந்த மணிப்பய என்ன ரொம்ப பந்தா பண்றான்! அவங்கிட்டதான் சைக்கிள் இருக்கா? நானும் சைக்கிள்" என்று கூறிக்கொண்டிருந்த போதே நான் இடைமறித்து "வாங்கப் போறியா?" என்றேன். அதற்கு அவர் "ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்து, ஒரு நாள் முழுக்க ஓட்டப் போறேன்" என்றார். "அது எப்பிடி ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்து ஒருநாள் முழுக்க ஓட்டுவ?" என்ற என் தர்க்க வாதத்தை, "சொன்னா புரியாது, செஞ்சி காட்டுறேன் பார்" என்று "முடக்குவாதம்" செய்தார் குருநாதர். 
   
"நீதி எப்போதும் நியாயத்தின் பக்கமே தலைசாயும்" என்பதை மீண்டும் உணர்ந்த சமய"மது". குருநாதரின் மாமா சுமைதூக்கும் தொழிலாளி, நேற்று மாலை சந்தையில் அரிசி மூட்டைகளை சரக்கு வண்டியிலிருந்து உணவுக்கிடங்கிற்கு மாற்றிவிட்டு அசதியுடன் வந்து "அஞ்சால் அலுப்பு மருந்தை" 8ஆம் நம்பர் கடையில் வாங்கி குடித்துவிட்டு நினைவு தப்பி வாசலிலேயே துயில் கொண்டிருந்தார்.

காலை 07:30 மணி, குருநாதர் என்னை அழைத்துக்கொண்டு மாமாவின் வீட்டிற்கு சென்றார். தூரத்தில் வரும் போதே மாமா சட்டையில்லாமல் வாசலிலேயே மட்டையாகி கிடந்ததை கண்ட குருநாதர் அவ்விடம் நோக்கி ஓடினார். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் வரிகளுக்கு வாழும் உதாரணம் என் குருநாதர். இந்தப் பயிர் கொஞ்சம் "தண்ணீ"ர் மிகுதியால் வாடியுள்ளது. அதனால் என்ன? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

மின்னலாகப் பாய்ந்த குருநாதர் குப்புறக்கிடந்த மாமாவையும் தாண்டிப் போய் எதையோ தேடினார்! சற்று குழம்பிய நான், "என்னடா தேடுற?" என்றேன். அதற்கு அவர் "அதுவா, மாமா சட்டையை இங்கதான் எங்கயாவது போட்டிப்பாரு, உள்பாக்கெட்ல காசு இருக்கும், அதத்தான் தேடுறேன், நீயும் கூட சேர்ந்து தேடுடா, எங்க அத்த வர்றதுக்குள்ள கண்டுபிடிக்கணும்" என்றார். சுற்றிமுற்றித் தேடியும் சட்டையின் அடையாளத்தை யொட்டிய எந்த வஸ்துவும் அங்கு தென்படவில்லை. சிறிது நேரத்தில் கையில் கரித்துணியுடன் வந்த குருநாதர் அதை விரித்து சட்டையாக்கி வித்தை காட்டினார். "இதுவாடா சட்ட?" என்று கேட்ட எனக்கு, "ஆமா, சமீபத்துலதான் தொவச்சிருப்பாங்க போல, அதான் அடையாளம் தெரியுது" என்று கூறிக்கொண்டே உள்பாக்கெட்டில் தேடினார். ஒன்றும் அகப்படவில்லை. ஏமாற்றத்தின் எல்லைவரை சென்று, வீட்டின் வாசலிலேயே அமர்ந்துவிட்டார். சில மணித்துளிகளில் அத்தை கூந்தலை முடிந்து கொண்டையாக சுற்றிக்கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தார்.

"என்னடா தங்கராசு? இங்க என்ன பண்ற? இப்பதான் வந்தியா?" என்று கேள்விகளை அடுக்கினார். குருநாதருக்கு பதில் வரவில்லை. நல்ல வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே என்ற ஏமாற்றம் வேறு. "என்ன, மாமா சட்டையில காசு இல்லையா?" என்று அடுத்த கேள்வியை தொடுத்தார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. குருநாதரோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், "காசா, என்ன காசுத்தே" என்றார். அத்தை பதிலேதும் சொல்லாமல் தனது இடது காலால் பதி பக்தியுடன் குப்புறக் கிடந்த மாமாவை மிதித்து மல்லாக்க புரட்டினார். பின்பு தங்கராசை பார்த்து "மாமா டவுசர் பாக்கெட்ல காசிருக்கும் பாரு" என்றார். குருநாதரும் புதையலைத் தேட, சில ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லரையும் கிடைத்தது. நோட்டுகளை எடுத்துக்கொண்டு சில்லறைகளை மட்டும் குருநாதரிடம் கொடுத்துவிட்டு, கும்பகர்ணனை கர்ணனாக்கிவிட்ட மகிழ்ச்சியில் அத்தை வீட்டின் உள்ளே சென்றுவிட்டார். நாங்களும் அங்கிருந்து புறப்பட்டோம்.

"அதான் காசு கெடச்சிருச்சே, அப்புறம் ஏன் உம்முனு இருக்க" என்று நான் குருநாதரிடம் கேட்க, "10 ரூபா கெடச்சிருக்கும், இப்போ பாரு சில்லறை காசு ஒரு ரூபா. இத வச்சி என்ன பண்ண?" என்று வருந்தினார். "ஒரு ரூபாய்க்கு, ரெண்டு மணிநேரம் சைக்கிள் வாடகைக்கு கிடைக்கும், அது போதாதா?" என்று நான் குருநாதரை தேற்ற முயன்றேன். அதற்கு பதிலேதும் கூறாமல் மணி சைக்கிள் மார்ட்டை நோக்கி நகர்ந்தார் குருநாதர்.

இதற்குள் மணி 08:30 ஆகிவிட, மணியின் தந்தை கடையை திறக்க, முதல் ஆளாக குருநாதர் உள்ளே சென்று சிகப்பு மிதிவண்டியை வாடகைக்கு கேட்டார். அதற்கு மணியின் தந்தை, "உங்கள எனக்கு யாருன்னு தெரியாதே, தெரியாத பசங்களுக்கு சைக்கிள் குடுக்க மாட்டேன்" என்றார், அதற்கு குருநாதர் "அண்ணாச்சி, நாங்க மணியோட பிரெண்ட்ஸ், ஒரே வகுப்புல தான் படிக்கிறோம், மணிதான் எங்க கிளாஸ் லீடர்" என்றார். இதில் மணியின் தந்தை எதை நம்பினார், எதில் மயங்கினார் என்று தெரியவில்லை! ஒரு வழியாக மிதிவண்டியை கொடுக்க சம்மதித்தார்.

ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா வீதம் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு, "சரிய்யா பத்தரை மணிக்கு திருப்பி கொண்டு வந்துரணும்" என்ற கட்டளையுடன் மிதிவண்டியை குருநாதரிடம் கொடுத்தார் மணியின் தந்தை. குருநாதர் வண்டியை முழுவதும் ஆக்கிரமிக்கும் முன்பு, மணியின் தந்தை "ஆமா, உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா?" என்றார். "போங்க அண்ணாச்சி, நா டபுள்சே அடிப்பேன்" என்று கூறிவிட்டு என்னை பார்த்து "சொல்லுடா அண்ணாச்சிகிட்ட என்றார்". நானும் குருநாதர் கூறியதை ஆமோதிப்பதுபோல எல்லாப் பக்கமும் தலையை சுற்றினேன். "சரி பாத்து ஓட்டுங்க" என்று கூறிவிட்டு கடையின் உள்ளே சென்றார் மணியின் தந்தை. குருநாதர் முன் மற்றும் பின் சக்கரங்களில் காற்றின் அளவை சோதித்துவிட்டு என்னிடம் "போலாமா?" என்றார். நானும் சரியென தலையசைக்க அங்கிருந்து இருவரும் புறப்பட்டோம்.

முகமது சாலிகா புறம் பொட்டலுக்கு மிதிவண்டியை உருட்டிக் கொண்டே சென்றோம். பொட்டாலின் நடுவில் வண்டியை நிறுத்தி, என்னைப் பார்த்து புன்னகையுடன் "ஆரம்பிக்கலாமா?" என்று கூறிக்கொண்டே, தன் இடது திருப்பாதத்தை வண்டியின் மிதியடியில் வைத்து "டக்"கடிக்க ஆரம்பித்தார் குருநாதர். ஆரம்பமே அட்டகாசமாக இருக்கிறதே என்று நானும் அதிசயித்து பார்த்துக் கொண்டிருந்தேன். "டக்"கடித்தே ஒரு வட்டத்தை முடித்துவிட்டு, "இப்போ நீ ஓட்டு" என்ற கட்டளையுடன் மிதிவண்டியை என்னிடம் கொடுத்தார்.

"தங்கராசு, இதுக்கு முன்னால நா சைக்கிள் ஓட்டுனதில்ல" என்றேன் தயக்கத்துடன். "பயப்படாத, நான் இங்கதான இருக்கேன் பாத்துக்கிறேன், நீ தைரியமா ஒட்டு" என்று என்னை வண்டியின் மீது ஏற்றிவிட்டார் குருநாதர். ஏறும்போது எளிதாகவே இருந்தது, பின்பு வண்டியின் கைபிடி எட்டுத்திக்கும் சுழன்றது. உடனே சுதாரித்த குருநாதர், "கேண்டில் பார நேரா புடிடா, முன்னால பாரு, டிக்கியை ஆட்டாத, பெடலை மிதி அவளவுதான்!" என்று "5 நொடியில் மிதிவண்டி ஓட்டுவது எப்படி" என்ற வகுப்பெடுத்துவிட்டு வண்டியை முன்னே தள்ளினார். தள்ளிய அதேவேகத்தில் தறிகெட்டு ஓடிய மிதிவண்டி, அங்கே கொட்டியிருந்த ஆற்றுமணலில் சொருகியது, நான் சரிந்து அங்கே பரப்பியிருந்த சீனிக்கல்லில் என் கால் முட்டியால் அமர்ந்தேன். நல்ல வேலையாக கல்லிற்கோ, வண்டிக்கோ எதுவும் ஆகவில்லை. என் முட்டிதான் சிவப்பாக சிரித்தது.

வேகமாக ஓட்டிவந்த குருநாதர், முதலில் வண்டியையும் பின்பு என் முட்டியையும் கவனித்தார். "சின்ன அடிதான் ஒன்னும் பண்ணாது, கீள விளாமமெல்லாம் சைக்கிள் பளக முடியுமா?" என்று என் மனதுக்கு இதமாக ஆறுதல் கூறினார். அவமானதை சமாளிக்க முடியாமல் ஓரமாக நின்று அழுதேன். "அளாத, இப்போ நா உனக்கு எப்பிடி சைக்கிள் ஓட்டுறதுன்னு காட்டுறேன், கவனிச்சுக்கோ கத்துக்கோ" என்று கூறி இரண்டாவது சுற்றை தொடங்கினார் குருநாதர்.

முன்னம் செய்தது போலவே, இரண்டாவது சுற்றிலும் "டக்"கடித்து ஏறி, சில அடிகளிலேயே வலது காலை லாவகமாக சுழற்றி வண்டியின் இருக்கையில் அமர்ந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான், "சே, தங்கராசுக்கு எப்பிடி எல்லாமே தெரியுது!" என்று புலங்காங்கிதம் அடைத்தேன். இரத்தம் இன்னும் வருகிறதா என்று குனிந்து கீழே பார்ததேன், "தொபுக்கடீர்" என்று ஒரு சத்தம், குருநாதர் அங்கிருந்த செம்மணல் குன்றில் முகத்தை பதித்து ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார், வண்டி மறுபுறம் இளைப்பாறிக் கொண்டிருந்தது. நான் அருகில் செல்வதற்கு முன்பே இயல்பு நிலைக்கு திரும்பி எழுந்தார்.

"ஏன்டா, தங்கராசு உனக்கும் சைக்கிள் ஓட்ட தெரியாத? பெறகு எதுக்குடா அவருகிட்ட டபுள்ஸ் அடிப்பேன்னு புருடா விட்ட?" என்று கோவமாக கேட்க, "சைக்கிள் ஓட்ட தெரிஞ்சா நான் எதுக்குடா காசு கொடுத்து வண்டிய வாடகைக்கு எடுக்குறேன்" என்று சலமேயில்லாமல் என்னை வாயடைக்கச் செய்தார்.

இன்னும் 100 நிமிடங்கள் உள்ளன, இருவராலும் இனி வண்டி ஓட்டமுடியாது. கொடுத்த காசையும் மணியின் தந்தை திருப்பி கொடுக்க மாட்டார். அடுத்து என்ன செய்யலாம்? என்று யோசிக்க தொடங்கினோம். அப்போது அங்கு விளையாட சில சிறுவர்கள் வந்தனர். இதைப் பார்த்த குருநாதருக்கு உன்னதமான ஒரு யோசனை தோன்றியது. சிறுவர்களிடம் மிதிவண்டியை உள்வாடகைக்கு விடலாம் என்பதுதான் அந்த யோசனை.

படித்தவர்கள் எல்லாம் வேலைதேடி வெளிநாடு செல்ல, படித்துக் கொண்டிருக்கும் மேதை என் குருநாதர் "தொழில் முனைவோர்" என்ற புது அவதாரம் எடுத்தார். சிறுவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, "ஒரு ஆளுக்கு 25 நிமிடத்திற்கு 25 பைசா" என்று நான்கு பேரிடம் ஒப்பந்தம் செய்து மொத்தம் ஒரு ரூபாய்க்கு ஏற்பாடு செய்தார்.

திட்டம் என்னவென்றால், ஒவ்வொருவராக வண்டியில் ஏற, நானும் குருநாதரும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக்கொண்டு நான்கு வட்டங்கள் சுற்றி வருவோம் பின்பு சிறிது நேரம் ஓய்வு. அதன்படி,  முதல் இரண்டு சுற்றுகள் சமாளித்து விட்டோம், முதல் சிறுவனின் மூன்றாவது சுற்று, சுமையை தாங்க முடியாமல் வண்டியை இருவரும் விட்டுவிட, சிறுவன் என்மீது விழ, வண்டி உருண்டோடி சாக்கடையில் விழுந்தது. அடுத்த நொடி எல்லா சிறுவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர் காசேதும் கொடுக்காமல். சாக்கடையில் இருந்து மிகுந்த சிரமத்துக்கு இடையில் வண்டியை வெளியே தூக்கிப் பார்க்க, வண்டியின் முன் சக்கரத்தில் மூன்று குறுக்க கம்பிகள் உடைந்து தொங்கிக் கொண்டிருந்தன.

வண்டியை மீண்டும் உருட்டிக்கொண்டு அடிபம்பு சென்று கழுவிட்டு பின்பு கடைக்கும் கொண்டு சென்றோம். மணியின் தந்தை வண்டியை கூர்ந்து பார்த்து விட்டு தங்கராசுவிடம் "நீதான் டபுள்ஸ் அடிக்கிறவனா? மூணு ஸ்போக்ஸ் உடைஞ்சிருக்கு, வீல் பெண்ட்டாயிருக்கு எல்லாத்துக்கும் சேத்து 20 ரூபா கொண்டுவா என்றார்" சிறிதும் கலங்காத குருநாதர், "சரி அண்ணாச்சி எங்க அம்மாகிட்ட வாங்கிக் கோங்க" என்றார். "என்னடா, எல்லாரும் அப்பாகிட்ட வாங்கிக்கோங்கன்னு சொல்லுவாங்க, நீ என்ன அம்மாகிட்டங்கிற, யார்ரா உங்கம்மா?" என்று கேட்டார் மணியின் தந்தை.

"ஒண்ணாவது தெருவுல வந்து பத்திரக்காளின்னு கேளுங்க நெறையா சொல்லுவாங்க..."

Tuesday, June 11, 2019

இருதலைக் காதல்

ஆரஞ்சுமிட்டாய் காரணமாக ஏற்பட்ட பிணக்கு, சிலநாட்கள் "குருநாயர்" தங்கராஜுடன் பேசாமல் இருந்தேன். குருநாயர் கைகால் முளைத்த கருந்துளை ("பிளாக் ஹோல்"லாமா), சந்திப்பை தள்ளப்போட முடிந்ததே தவிர, முழுவதும் தவிர்க்க இயலவில்லை! தோல்வியை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு, குருநாயரின் வீட்டுக்கு விரைந்தேன் அவரிடம் அறிவு அமுதம் பருக. 

திருமதி. காளியம்மாள், குருநாயரை இப்பூவுலகிற்கு ஈன்ற புண்ணியவதி. பெரும்பாலும் தலைவாரி நுனிக்கொண்டை தரித்திருப்பர். நெற்றியில் பழைய ஒரு ரூபாய் அளவிலான பொட்டு எப்போதும் சிகப்பாக ஒளிரும். அந்த குறியீட்டின் உள்ளார்ந்த பொருள் அன்றுதான் எனக்கு புரிந்தது. சற்று தூரத்தில் வரும்போதே "மொத்தடீர் மொத்தடீர்" என்று அடுக்குத் தொரடராக ஒலி என்  செவிப்பறையை அறைந்தது. நான் வேகமாக விரைந்தேன் வாசலுக்கு, அங்கு அன்பில் உருவான திருமதி. காளியம்மாள், பத்திரகாளியாக மாறி சூரனை வாதம் செய்துகொண்டிருந்தார். சூரன் காளிதேவியின் காலடியில் கண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தார். சற்று உற்று நோக்கியபோதுதான் தெரிந்தது அன்று "சூரா"அவதாரம் எடுத்திருந்தது குருநாயரே!

இந்த ரணகளத்தில் திரு.காளியம்மாள் எங்கேயென்று தேடினேன், அவரோ அன்று "பல்லி" அவதாரம் எடுத்திருந்தார். சம்ஹாரம் கிட்டத்தட்ட முடிந்தநிலையில், காளிதேவி சாந்தியடைந்து, தன்சிகைகோதி  மீண்டும் நுனிக்கொண்டைக்கு வந்தார். வாசலில் நின்ற என்னை இனம் கண்டு கொண்டு, "உள்ளவாப்பா" என்றார் "புன்" நகைத்த முகத்துடன். நான் சப்த நாடியும் அடங்கி அங்கேயே நின்றுவிட்டேன். இரண்டு அணுகுண்டுகளை அங்கத்தில் வாங்கி, முன்பைவிட வேகமாக முன்னேறிய ஜப்பானின் முன்னோடியே குருநாயர்தான். தன் திருமேனியில் ஒட்டியிருந்த தூசிதட்டி பீனிக்ஸ் போல படிகளில் இறங்கிவந்தார் "புண்"நகையோடு.

"எதுக்குடா உங்கம்மா உன்ன அடிச்சாங்க?" என்ற கேட்ட எனக்கு, "அடிவாங்கி ரொம்ப நாளாச்சா, அதான் அடி மறந்திரக்கூடாதுன்னு நான்தான் அடிக்க சொன்னேன்" என்றார் சிரிப்போடு. "உன் அனுமதியில்லாமல் உன்னை யாரும் அவமதிக்க முடியாது" என்ற சொன்ன புத்தரையே விஞ்சிய சித்தர் என் குருநாயார்!  அவரின் அனுமதியில்லாமல் அம்மாகூட அவரை அடிக்கமுடியாது.  (சிலநாட்கள் கழித்து குருநாயரே தன்னுடைய ராபின்ஹூட் நாடகம் வீட்டில் அரங்கேறியதின் விளைவுதான் அன்று வாங்கிய அடியின் காரணம் என்று தன்னிலை விளக்கமளித்தார்)         

இன்னும் சற்றுநேரம் அங்கே இருந்தால் காளிதேவியின் ருத்ரதாண்டவம் எங்கே மீண்டும் தொடர்ந்துவிடுமோ என்றஞ்சி அங்கிருந்து எங்களை அப்புறப்படுத்திக் கொண்டோம். வீட்டின் முடுக்குசந்தை தாண்டி வெளியேவந்தோம். குருநாயார் எங்கள் தெருவின் சொறிநாய் "அந்தோணியை" தேடினார், என்னது நாய் பேறு "அந்தோனியா"ன்னு தான யோசிக்கிறீங்க? ஆமா, எல்லா தெரு நாய்களைப் போலவும் இதன் பெயரும் "மணி"யாகத்தான் இருந்தது, ஆனால் எங்களுக்கு மணியைவிட அந்தோணி மீதுதான் ரொம்பவும் கோவம். வகுப்பின் சட்டாம்பிள்ளை (மணி கடந்தவருடம் சட்டாம்பிள்ளை என்பதை சொல்லத் தேவையில்லை) அவன்தான். வகுப்பில் "அமைதி" நேரத்தில் எங்கள் பெயரை கரும்பலகையில் நாங்கள் பேசுவதற்கு முன்பாகவே எழுத்துவிடுவான். "நாங்கதான் பேசவேயில்லையே" என்றால், "நீங்க கண்டிப்பா பேசுவீங்க அதான் முதல்லயே எழுதிட்டேன் என்பான்" என்று எதிர்காலம் கணிப்பான். சரிவுடு அதுதான் பேருதான் எழுதியாச்சேன்னு பேச ஆரம்பிச்சா உடனே "மிக, மிக, மிக அதிகம்" என்று சேர்த்துவிடுவான், வகுப்பு முடியும் முன்பாக முத்தாய்ப்பாக "அடங்கவில்லை" என்பதையும் கோர்த்துவிடுவான்.

பேசியதற்கு - ஒன்று
ஒவ்வொரு "மிக"வுக்கும்  - இரண்டு 
"அடங்கவில்லை"க்கு  - மூன்று என்று எங்களின் வகுப்பு ஆசிரியர் புள்ளிவைத்து கோலம் போடுவார்.

காளிதேவியிடம் வாங்கிய வரங்களை கைமாற்ற அன்று அந்தோணி அகப்படவில்லை. ஆனால் அந்தோணியின் முகத்தைப்போலவே சப்பையா, உருண்டையா, சதுரமா ஒரு வண்டி அங்கு வந்து நின்றது. வண்டியில் இருந்து ஓட்டுநர் தவிர்த்து ஒரு குடும்பம் இறங்கியது. வரிசையாக பெட்டிகளை இறக்கியது. குருநாயருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை, நாமளும் போயி அவங்களுக்கு உதவிசெய்யலாமா என்று கேட்டார்? என் பதிலுக்கு காத்திராமல், குடும்பத்தலைவரிடம் போய் "அண்ணாச்சி, நாங்களும் பெட்டியை எடுத்து வைக்கிறோம் என்றார்". குருநாயருக்கு தன்னைவிட வயது முதிர்ந்த அனைத்து ஆண்களும் "அண்ணண்"தான் அனைத்து பெண்களுக்கு "அக்கா"தான். முதலில் அண்ணனின் மனைவி "அக்கா" வந்தார், பின்பு அண்ணனின் மக்கள் "அக்கா" வந்தார். இரண்டு அக்காவுக்குள் குழப்பம் வந்து விடாமல் இருக்க, பின்பு அவர்களின் பெயர்களை "அக்காவுக்கு முன்பு சேர்த்துக்கொண்டோம். மனைவி அக்கா "மீனாட்சி அக்கா" ஆனார். மகள் அக்கா "கவிதா அக்கா" ஆனார். ஒரே ஒரு அண்ணன்தான் என்பதால் அவரின் பெயர் தேவைப்படவில்லை.

எடுத்து வைத்துக்கொண்டிருந்த பெட்டிகளின் இடையில் ஒரு தகரடப்பாவும் இருந்தது. அது அண்ணனுக்கு தெரியாமல் மீனாட்சியக்கா சேர்த்துவைத்த சிறுவாடு. அதை பொறுப்பாக கொண்டுபோய் மீனாட்சியக்காவிடம் கொடுத்துவிட்டார் குருநாயார். அண்ணன் அங்கிருந்து  நகர்ந்த சமயத்தில், தான் டப்பாவில் வைத்திருந்த பணம் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு  எங்களைப் பார்த்து நிம்மதியாக சிரித்தார் மீனாட்சியக்கா. 

குருநாயார் பல தவறுகளை செய்திருக்கலாம், ஆனால் அவர் ஒரு தவறான குருநாயார் அல்ல என்பதை நிரூபித்த பல தருணங்களில் இதுவும் ஒன்று.

அதன் பின்பு பல மாலை வேளைகளில் கவிதா அக்கவுடன்தான் இருப்போம். சாப்பிட மட்டுமே வீட்டுக்கு போவோம். கவிதா அக்கா பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ளார், மேலும் படிக்க தன் தந்தையின் வருமானத்தில் இடமில்லாததால் வீட்டில் இருந்து டியூஷன் எடுக்க ஆரம்பித்தார். சில நாட்களில் அக்காவிற்கு வரன் தேட ஆரம்பித்தனர். பெண்பார்க்க வரும் அனைத்து நாட்களிலும் தவறாமல் நாங்கள் அங்கே இருப்போம் பலகாரங்களை பதம்பார்க்க. சில, பல அண்ணன்கள் வந்தார்கள் யாரையும் எங்களுக்கு பிடிக்கவில்லை.

ஒரு பொன் மாலைப்பொழுதில், மீண்டும் ஒரு பெண்பார்க்கும் படலத்தில், மீனாட்சியக்கா எங்களுக்கு "கவிதாக்கா கல்யாணமாயிட்டா உங்களவிட்டுட்டு போயிடுவா" என்று காரவிருந்து கொடுத்தார். அதைக்கேட்ட  எங்கள் இருவருக்கும் அழுகைவந்தது. ஆண்பிள்ளைகள் அழுவதில்லை ?!(அடிவாங்கும்போது தவிர்த்து) என்பதால், கண்ணீருக்கு கைகளால் கரைகட்டினோம். இருந்தாலும் கடைசிவரை இருந்து மிக்ஸர், பூந்தி சாப்பிட்டுவிட்டுதான் வீட்டுக்கு வந்தோம்.

அதன்பிறகு இரண்டு நாட்கள் நாங்கள் இருவரும் கவிதாக்கா வீட்டுக்கு போகவில்லை, ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தோம். இறுதியாக குருநாயாரின் மகாசிந்தனையில் உதித்த யோசனையை கூறினார்.   

ஆமாம், அந்த யோசனை என்னவென்று நீங்கள் யூகித்தது சரிதான்.

நேராக கவிதாக்காவிடம் போய், "எங்க ரெண்டுபேர்ல ஒருத்தன கட்டிக்கோங்க" என்றோம். அதைக்கேட்டவுடன் கண்ணில் நீர்வரும் வரை சிரித்தார் அக்கா. பொறுமையிழந்த குருநாயார், "போனவாரம் உங்கள பொண்ணுபாக்க வந்த ஆளவிட நாங்க நல்லாத்தானே இருக்கோம்" என்று அக்காவை மிரட்டினார். "இப்போ ஏண்டா திடீர்னு இப்படி வந்து கேக்குறீங்க" என்ற அக்காவிடம். எங்களின் காரணத்தை கூறியபோது, கண்ணீருடன் அமைதியானார். சோகம் அக்காவுக்கு எப்போதுமே பிடிக்காது என்பதால் உடனே பேச்சை மாற்றிவிட்டார். "உங்க ரெண்டு பேர்ல யாரு முதல்ல நல்ல வேலைக்கு போயி, பெரிய ஆள ஆகுறீங்களோ அவங்கள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று முற்றுப்புள்ளி வைத்தார். நாங்களும் நம்பிக்கையோடு வீட்டுக்கு வந்தோம்.

"பெரிய ஆள ஆக ஒன்னும் செய்யவேண்டாம், சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினா போதும் ஆனா நல்ல வேலைக்கு போக நல்ல படிக்கணுமே?" என்பதை நினைக்கும் போதே எனக்கு துக்கமாக இருந்தது. அப்படியே துக்கத்துடன் நடந்து கொண்டிருக்க, ராஜமாணிக்கம் மாமா (அம்மாவின் தம்பி)  ஒரு காகிதத்தை என்னிடம் தந்தார், அது நான்காக மடித்திருந்தது. அதை பிரிக்க முயன்ற போது, மாமா என்னை தடுத்து, "இதை கவிதாக்காவிடம் கொடுத்துவிடு" என்றார். கணக்குப்பாடம்தான் எனக்கு புரியா நாளாகும், இது உடனே புரிந்து விட்டது. ஏற்கனவே போட்டிக்கு குருநாயார் இருக்கிறார், இதில் மாமா வேற, கடுப்பான நான் கண்டபடி மாமாவை திட்டினேன் (எனக்கும் மாமாவுக்கும் 10 வயதுதான் வித்தியாசம்). இந்த கடிதத்தை பற்றி  தாத்தாவிடமும், அம்மாவிடமும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினேன். கொடுத்த கடிதத்தை வாங்கிக்கொண்டு மாமா ஓடிவிட்டார்.

அதன் பிறகு சிலநாட்கள் கவிதாக்கா வீட்டுக்கு நாங்கள் இருவரும் போகவில்லை. பின்பு ஒருநாள் நான் போனேன் வீடு பூட்டிக்கிடந்தது. என்ன வென்று அண்டை வீட்டில் விசாரிக்க, கவிதாக்கா வீட்டைக்காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக சொன்னார்கள். அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துவிட்டேன். சில நாட்களில் கவிதாக்கா ஏன் வீட்டை காலிசெய்தார்கள் என்ற செய்தி என்னை யெட்டியது.

நான் தரமறுத்த மாமாவின் கடிதம், வேறுவழியில் கவிதாக்காவை அடைந்துள்ளது. கடிதம் வந்த செய்தி, அக்காவீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து பெரிய சச்சரவாகி வீட்டை காலிசெய்துள்ளனர். எப்படி அந்தக் கடிதம் மாமாவிடம் இருந்து அக்காவிடம் சென்றது என்று அறியமுற்பட்டபோது, அதை கொண்டுசேர்த்தது சாட்சாத் என் குருநாயரேதான்.

ஆத்திரமும் கோபமும் அடைந்த நான். குருநாயரிடம் இதுபற்றி விசாரித்தபோது. குருநாயார் அமைதியாக "நமக்கு தேவை கவிதாக்கா நம்மைவிட்டு போக கூடாது அவ்வளவுதான். நீயும் நானும் பெரியாளாக ரொம்ப வருசம் ஆகும். அதான் உங்க மாமாவுக்கு உதவி செஞ்சேன்" என்றார். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.

எப்படி யோசித்தாலும் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. மாமாவை ஒன்றும் செய்யமுடியாது. அதானால் அந்தோணியின் பெயரை "ராஜமாணிக்கம்" என்று மாற்றிவிட்டு, அதன் மீது கல்லைவிட்டு வீசினேன். 

Sunday, April 15, 2018

அவள் பெயர் ரெங்கநாயகி

ஏன் வரலாற்றின் தீராத பக்கங்களில் காலம் ஒரு சில நாயகிகளின் பெயர்களை நிரப்பாமலேயே விட்டுவிடுகிறது?

அவள் பெயர் ரெங்கநாயகி

பாப்பா என்றே அனைவராலும் அழைக்கப்பட்டதால் பல ஆண்டுகள் அவளின் இயற்பெயர்  "ரெங்கநாயகி" என்பதே எனக்கு தெரியாது. நம் இதயத்துக்கு அருகாமையில் உள்ளவர்கள் நம்மை "ஒருமையில்" அழைத்தால் கூட ஏனோ நாம் அதை ஆராய்வதில்லை, திருத்தவும் முயல்வதில்லை. "பாப்பா" யெனும் ரெங்கநாயகியை நான் "ஏ கெழவி" என்றுதான் மரியாதையுடன் அழைப்பேன். எனக்கு பின்னால் வந்த சந்ததிகளும் அதையே செய்தனர். 

அனைத்து கேள்விகளுக்கும் பாப்பாவிடம் பதிலுண்டு. அனைத்து சிக்கல்களுக்கும் பாப்பாவிடம் தீர்வுண்டு. எதையும் புதிய கோணத்திலேயே அணுகுவார், எங்களுக்குத்தான் அது புரிய பலவருடங்கள் ஆனது. ஆவேசமாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் "இந்த பால்காரன் இன்னும் வரல" என்பார் வெற்றிலையால் மெருகேற்றிய பற்களை காட்டிய சிரிப்போடு. அவர் வள்ளுவரைப் படித்ததில்லை ஆனால் வள்ளுவம் தெளிந்தவர். "இடுக்கண் வருங்கால் நகுக" என்ற குறளின் நாயகியே பாப்பாதான். பல தத்துவங்களை போகிற போக்கில் வெற்றிலையோடு சேர்த்து உமிழ்ந்துவிட்டுச் செல்வார். அவ்வாறு அவர் கூறிய ஒன்று" இருந்தா  (சோறு) பொங்குவேன் இலேன்னா சும்மாருப்பேன்". 

"உன்னுடைய அனுமதியில்லாமல் உன்னை யாரும் அவமதித்துவிட முடியாது!" என்பதை வாழ்ந்து காட்டியவள் பாப்பா. பலமணிநேர வாக்குவாதத்தை "போடா பொசுக்கி" என்ற ஒரே வார்த்தையில் முடித்துவிடுவாள். பேச்சுவார்த்தை வழக்கம்போல பாப்பாவிடம் தோல்வியில் முடிவதால், பல சமயம் நானும் என்னைத் தொடர்ந்து இளையவாரிசுகள் சிலவும் சட்டத்தை கையில் எடுப்போம். அகிம்சையை தீவிரமாககடைபிடிப்பவள் பாப்பா என்பதால் "சிரிப்பு" மட்டுமே பதிலாக வரும். கடைசியாக தோல்வியிலும், அவமானத்திலும் திரும்புவது நாங்கள்தான்.                  

இப்படி எங்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பாப்பாவின் பின்புலம் தேடியபோது சற்று வியப்பான செய்திகள் கிடைத்தன.  திண்டுக்கல் மாவட்டத்தில் பெயர் சொன்னாலே தெரியக்கூடிய குடும்பத்தில் நான்கு சகோதரர்களுடன் பிறந்தவள் பாப்பா. இரண்டு பள்ளிகளின் நிறுவனர் பாப்பாவின் ஒரு அண்ணன். இரண்டு பள்ளிகளில் ஒன்று ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பள்ளி. இருந்தும் பாப்பாவிற்கு ஏனோ பள்ளி மற்றும் படிப்பின் வாசனை ஒவ்வாமையை ஏற்படுத்தியது. அதனால் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினாள் பாப்பா. மரம் ஏறுதல், நாயை குறிபார்த்து கல்லால் அடித்தல் போன்ற இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்கு தன்னை அற்பணித்துக்கொண்டாள். அந்நிய ஷக்திகளால் திட்டமிட்டே இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாமல் போனது. இந்தியா ஒரு "தங்க"மங்கையை தவறவிட்டது.

சில வருடங்களில், (பொருளாதாரத்தில்) நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு பாப்பா மணமுடிக்கப்பட்டாள். பாப்பாவின் கணவர் ஒரு "புத்தகப்புழு". கடந்த முறை நான் அவரை சந்தித்தபோது "பிணைக்கப்பட்ட தொகுதிகள்" (blockchain) தொழில்நுட்பம் குறித்து கேட்டு என்னை கிறங்கடித்தார். இன்றுவரை எனக்கு புதிராக இருப்பது, எப்படி இவர்கள் இருவரால் இத்தனை வருடங்கள் சேர்ந்துவாழ முடிந்தது? பாப்பாவை தவிர வேறு யாராலும் இவருடன் வாழமுடியாது என்பதுதான் உண்மையோ? 


மண்டோதரி  

பாப்பாவின் வேலை பொழுதுபோக்கு எல்லாமே சமைப்பது, கணவரை கவனிப்பது, அவரின் வாய்மொழியை ரசிப்பது, எப்போதாவது திரைப்படம் பார்ப்பது. வேலை நிமித்தமாக கணவர் வெளியூர் செல்லவேண்டி வந்ததால், ஐந்து குழந்தைகளுடன் தனியாக பாப்பா வாசித்தார். கணவர் வரும்நாள் வீட்டில் அரிசிச்சோறு. வடித்த சோற்றை கணவருக்கும், கஞ்சியை அவரின் சட்டைக்கும் விருந்தாக்கிவிட்டு, (சமயங்களில்) வாசத்தால் மட்டும் வயிற்றை நிரப்பிக்கொள்வார் பாப்பா. மனைவியின் உள்ளமும் உணர்வும் கணவர்களுக்கு என்றுமே புரிவதில்லை, அது அவர்களின் அறியாமை. தாலிக்கொடிக்காக தொப்புள்கொடியைக்கூட தியாகம் செய்த மண்டோதரிகளாகத்தான் (சில) மனைவிகள் இருக்கிறார்கள். "மண்டோதரி" என்றாலும் "ரெங்கநாயகி" என்றாலும் உணர்வு ஒன்றுதான்.

திருமணத்தின் போது அணிந்துவந்த கிலோ தங்கத்தையும், மனைவியின் கழுத்து வலிக்குமேயென அடகுக்கடையில் சிறைவைத்தார் கணவர் தன் உடன்பிறப்புகளை கரையேற்ற. வீட்டில் ஐந்து பிள்ளைகள், வைக்க இடம் இல்லாதால் தேவைப்படுபவர்களுக்கு தானமாக பாப்பா கொண்டுவந்த சீர் பாத்திரங்களை விற்றுவிட்டார். இவை எதுவுமே பாப்பாவை சிறிதும் கலங்கடிக்கவில்லை. அவள் முகத்தில் நீங்காத புன்-நகை.


மொழி
    "இரண்டு மொழிகள் அறிந்தவர், இரண்டு மனிதர்களுக்குச் சமம்"         

பாப்பாவுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது என்னக்கு சரியாக நினைவில்லை. ஆனால் பல்வேறு மொழிகளை அவள் தன்மொழியிலேயே தெளிவாகப் பேசும் தனித்திறமை கொண்டவள். அதை நான் உணர்ந்த சமயம் ஒன்றுண்டு. 

பாப்பாவின் புதல்வர்களில் ஒருவர் தொழிற்சங்கத்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைப்பற்றி பாப்பா என்னிடம் கூறியபோது, தன் அன்புமகன் "அன்னபோஸ்ட்" ல் தலைவரானார் என்றார். தமிழில் புதியவார்த்தை ஒன்றைத் தெரிந்துகொண்ட பேரானந்தத்தில் பள்ளிக்குச் சென்று அனைவரிடமும் கூறி உவகையடைந்தேன். அந்த சமயம் அங்குவந்த ஆங்கில ஆசிரியை தங்கரத்தினம் அவர்கள் என்முதுகில் "unopposed" ல் கபடி விளையாடி களைப்படைந்தார்.  பாப்பாவால் வஞ்சிக்கப்பட்ட வெறியுடன் வீட்டுக்கு வந்த நான், பாப்பாவின் கணவர் அங்கு இருக்கிறார் என்று தெரியாமல் உள்ளே சென்று குறைக்க ஆரம்பிக்க, "புத்தகப்புழு" என்னை புரட்டியெடுத்து வெளியே விரட்டினார். தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினேன் என்னுடைய வீட்டிற்கு.

வேறொருமுறை சில கிந்தி வார்த்தைகளையும் பேச்சின் நடுவே கிண்டிவிட்டார். அப்போது நான் பிராத்மிக் சாராத அக்காவிடம் படித்துக்கொண்டிருந்தேன் அதனால் தப்பித்துக்கொண்டேன். 


குறியீடும் குறியாக்கமும்  

அப்போது எங்கள் ஊரில் ஐந்து திரையரங்கங்கள் உண்டு. அதில் ஒன்று "மூர்த்தி", எங்கள் வீட்டின் அருகிலேயே இருந்தது. அதில் திரையை விலக்கும் பெருநிகழ்வுக்கென்றே விநாயகர் பாடல் ஒன்று ஒலிபரப்பப்படும். அந்தப்பாடலை எப்போது எங்கு கேட்டாலும் "மூர்த்தி"யின் நினைவு மனதில் ஆக்கிரமித்து விடும். ஒவ்வொரு வெள்ளியன்றும் பழைய-புதிய படம் திரையிடப்படும். வாரம் முழுவதும் தீப்பெட்டி கட்டை அடுக்கியவர்கள் கந்தக நெடியை மறப்பது இங்குவந்துதான்.

வெள்ளிமாலை பள்ளிமுடிந்து வீட்டுக்கு வரும்போது பாப்பாவின் தரிசனம்பெற அவளின் வீட்டுக்குச் சென்றேன். பேசிக்கொண்டிருக்கும்போதே நாளை படம் பார்க்கச் செல்வதாக கூறினாள் பாப்பா. என்ன படம் என்று நான் கேட்க, "அதான் மூர்த்தியில ஓடுதுல்ல அதுதான்" என்றால், எனக்கு தெரியவில்லை. கடைசியாக திருவாய் மலர்ந்தாள் பாப்பா. அதுதான் "பூ சிந்துகிறது"...  நான் ஒன்றும் புரியாமல் என்னது "பூ சிந்துகிறதா"? இப்படியெல்லாமா பேரு வைக்கிறாங்க என்று எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தேன் அவள் சுடும் பலகாரத்தை காலிசெய்வதற்காக. 

சிறிது நேரத்தில் பாபாவின் கணவர் வந்துவிட்டார். பாப்பா படத்திற்கு போவதற்கு கணவரிடம் அடிக்கல் நாட்டிக்கொண்டிருந்தார். ஒருவழியாக "புத்தகப்புழு"வும் சம்மதித்து விட்டார். என்ன படம் என்று அவர் கேட்க சற்றும் தயங்காமல் "பூ சிந்துகிறது" என்றாள் பாப்பா. எந்தவித சலனமுமில்லாமல் அவரும் சரி "நாளைக்கு சாயங்காலம் போகலாம்" என்று கூறிவிட்டு எழுந்துபோய் புத்தகத்தில் தன்னை புதைதுக்கொண்டார். படம் பெயர் என்னவென்று புரியாததால்  எனக்கு மூளையை குடைய ஆரம்பித்துவிட்டது. பலகாரத்தை முடிந்தவரை வயிற்றில் அப்பிஅடைத்துக் கொண்டு அவரிடம்போய் அது என்ன படமென்று கேட்கச்சென்றேன். 

"புத்தகப்புழு"விடம் ஒரு சிக்கல் என்னவென்றால்? நாம் ஒரு கேள்வி அவரிடம் கேட்டால்! நாம் ஏன் இவரிடம் கேள்வி கேட்டோம் என்று வருந்துமளவுக்கு பிதாமகர் பீஷமர் போல நம்மை கேள்விக்கணைகளின் மீதே படுக்கவைத்துவிடுவார். இருந்தாலும் ஆர்வம் தாங்காமல் எதற்கும் தயாராகவே அவரிடம் சென்றேன். "பூ சிந்துகிறது"னு படமா என்று கேட்க? நீஈஈண்ட விளக்கத்திற்குப் பிறகு படத்தின் பெயரைக்கூறினார்.

அது புதுமைப்பித்தன் அலட்சியமாக எழுதிய "சிற்றன்னை" யெனும் நெடுங்கதையை, காவியமாக மகேந்திரன் இயற்றிய "உதிரிப்பூக்கள்". 

சிலவருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தின் பெயரை குறியாக்கம் செய்தாள் பாப்பா அது "சீவலப்பேரி தேவர்". இதற்கு எனக்கு யாருடைய உதவியும் தேவைப்படவில்லை.

--****--

கடந்த வாரத்தோடு பாப்பா சிந்திப்பதை நிறுத்தி ஒருவருடமாகிறது. புத்தகப்புழுவும், பாப்பாவின் பிரிவிற்குப்பின்பு யாரிடமும் கூறாமல் எங்கேயோ போய்விட்டார்.         

அதீத அறிவும் சமயங்களில் அலுப்படையச் செய்கிறது. குறைகள்தான் மனிதர்களை முழுமையாக்குகிறது. 
           

பாப்பாவின் பிரிவில் நானும் புத்தகப்புழுவும்...

Saturday, February 17, 2018

அறிமுக காட்சிகளும் ஒளவையாரும்

பேர்லண்ட் பள்ளியின் 2018 பொங்கல் விழாவிற்காக எழுதிய நாடகம்.

இந்த நாடகத்தின் காணொளி
https://www.youtube.com/watch?v=eTMnkiY82Cw

காட்சி: 1
இடம்: புலிகேசியின் அரண்மனை
கதாப்பாத்திரங்கள்: புலிகேசி மன்னர், மங்குனி அமைச்சர்

(புலிகேசி மன்னர் ஐபேடில் ஏதோ பார்த்துக் கொண்டுள்ளார், மங்குனி அமைச்சர் சோகமாக அமர்ந்திருக்கிறார்...)

புலிகேசி: அமைச்சர் மங்குனி, இதை கவனித்தீரா?

மங்குனி: எதை மன்னா... (அங்கும், இங்கும் தேடுகிறார்)

புலிகேசி: என்னுடைய facebook இல் 5000 நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால்....

மங்குனி: ஆனால், என்ன மன்னா?

புலிகேசி: எந்த புகைப்படத்தை upload செய்தாலும் 100 லைக்குகளுக்கு மேல் வருவதில்லை... பொறாமை பிடித்தமனிதர்கள்.

அமைச்சரை நோக்கி

மங்குனி அமைச்சரே, என்னுடைய check-in ஐ நீர்கூட லைக் செய்யவில்லை... ம்ம்ம், இருக்கட்டும்  உம்மை appraisalலில் பார்த்துக் கொள்கிறேன்...

மங்குனி: மன்னிக்கவேண்டும் மகாபிரபு, நேற்று என் மனைவி போஸ்ட் செய்த "ரசம் சாதத்தை" லைக் செய்யவில்லை என்று இன்னும் ஒரு வாரம் ரசம் மட்டும்தான் என்று கூறிவிட்டார். அந்தக் கவலையில் உங்கள் checkin ஐ லைக் செய்யாமல் விட்டுவிட்டேன்...

புலிகேசி: என்ன ஆணவம், மனைவியின் போஸ்ட்டை லைக் செய்ய மறந்தீரா! உமக்கு இது தேவைதான்...

புலிகேசி: மங்குனி

மங்குனி: மன்னா...

புலிகேசி: இதைக் கேளும்...

(ஐபேடில் ஏதோ ஒரு புகைப்படத்தை பார்த்து வாசிக்கிறார் மன்னர்)

மக்களே, நீங்கள் இந்தப் புகைப்படத்தில் பார்ப்பது, சிங்கப்பூரோ, துபாய்யோ அல்ல... சக்கரவர்த்தி "அதியமான்"னின் நாடுதான்...

அமைச்சர் மன்னரின் அருகில் சென்று, அவரின் மடியில் அமர்ந்துகொண்டு புகைப்படத்தை பார்க்கிறார்... 

மன்னர் மெல்ல அமைச்சரை பார்த்து முறைக்க...  

மங்குனி: மன்னிக்க வேண்டும் மன்னா... (மெல்ல விலகி நிற்கிறார்)  படம் நன்றாக உள்ளது மன்னா...

நாமும் நம்முடைய பக்தாளை வைத்து போட்டோஷாப் செய்து நம் நாட்டின் புகைப்படத்தை பேஸ்புக்கில் உலவவிட்டால் என்ன?

புலிகேசி: வேண்டாம் மங்குனி, அதை செய்ய நம் நாட்டில் வேறு கும்பல் உள்ளது.          

என்னிடம் அதைவிட ஒரு அருமையான யோசனைஇருக்கிறது...

மங்குனி: கூறுங்கள் மன்னா...

புலிகேசி: நாம் அதியமான் மீது போர் தொடுப்போம்...

மங்குனி:  அதியமான் பற்றி எதுவும் தெரியாமல் வேண்டாம் இந்த விசப் பரிட்சை மகாபிரபு

புலிகேசி: முழுவதும் கேளும் மங்குனி...

மங்குனி: கூறுங்கள் மன்னா...

புலிகேசி: நாம் அதியமான் மீது போர் தொடுப்போம், நிச்சயமாக தோற்றுவிடுவோம்...

மங்குனி: அது உலகறிந்தது தானே மன்னா...

புலிகேசி: ம்ம்ம்... உண்மையாக இருந்தாலும் அதை இப்படி உறக்கவா சொல்வது...

மங்குனி: சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் மன்னா

புலிகேசி: இருக்கட்டும்... நாம் போரில் தோற்றுவிட்டால், நம் நாடு அதியமானின் நாட்டுடன் இணைந்து விடும். பின்பு அதியமானின் செலவிலேயே பெரிய பெரிய மால்கள், multiplex theaterகள், theme parkகள் கட்டிவிடுவார்...

மங்குனி: அருமை மன்னா... அருமை...

புலிகேசி: சில வருடங்களில், அதியமானின் கை கால்களில் விழுந்து தனி நாடு வாங்கிவிடலாம். பின்பு நான் மீண்டும் மன்னன்.

மங்குனி: அப்போது நான் மன்னா?

புலிகேசி: நீர் மங்குனி

மங்குனி: பலே மன்னா, பலே... இந்த மகாச்சிந்தனை தங்களுக்கு எப்படி தோன்றியது மன்னா?

புலிகேசி: forward message ல் படித்தது மங்குனி...

மங்குனி: மன்னா, ஒரு வேலை போரில் நம்மிடம் அதியமான் தோற்றுவிட்டால்...

புலிகேசி: (அதிர்ச்சியுடன்)  அப்படியெல்லாம் எதுவும் நடக்காது மங்குனி... (யோசனையுடன்) ஆமாம், இந்த கேள்வி உமக்கு எப்படி தோன்றியது...

மங்குனி: இதுவும் forward message ல் படித்ததுதான் மன்னா

புலிகேசி: அதுதானே பார்த்தேன், சரி சரி... உடனே போருக்கு SMS அனுப்புங்கள் மங்குனி. நம் வீரர்கள் தயாரா?

மங்குனி: கோழி பிரியாணியும், 1000 ரூபாயும் தருவதாக கூறி R.K நாட்டில் இருந்து சிலபேர் வந்து நம் ஐந்து படைகளையும் வாடகைக்கு கூட்டிச்சொன்றுள்ளனர் மன்னா...

புலிகேசி: சரியான வேலை செய்தீர்கள் மங்குனி, project இல்லாவிட்டால் பெஞ்சில் சும்மா உட்கார்ந்து விடுவார்கள். அவர்களை சும்மா இருக்க விடவே கூடாது. வீரர்கள் திரும்பி வந்தவுடன், அனைவரிடமும் 1000 ரூபாய்க்கு மறக்காமல் GST வாங்கிவிடுங்கள்... இல்லையென்றால் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து விடுவேன்... ஜாக்கிரதை...

மங்குனி: எத்தனை விழுக்காடு GST வசூலிப்பது மன்னா?

புலிகேசி: கடந்த முறை எவ்வளவு வசூலித்தோம்?

மங்குனி: 100% மன்னா

புலிகேசி: அப்போது இந்த முறை 200% வசூலித்து விடு...          

மங்குனி: ஆகட்டும் மன்னா...

                                                                                                                                                

காட்சி - 2
இடம்: போர்க்களம் ல்லும் வழி    
கதாப்பாத்திரங்கள்: புலிகேசி மன்னர், மங்குனி அமைச்சர், அவ்வையார் 5.0, தளபதி மற்றும்  வீரர்கள்


தளபதி: கும்தலக்கடி கும்மாவா

வீரர்கள்: புலிகேசின்னா சும்மாவா     

தளபதி: கும்தலக்கடி கும்மாவா

வீரர்கள்: புலிகேசின்னா சும்மாவா

தளபதி: பன மரத்துல வவ்வாலா  

வீரர்கள்: புலிகேசிக்கே சவாலா

தளபதி: பன மரத்துல வவ்வாலா  

வீரர்கள்: புலிகேசிக்கே சவாலா

தளபதி: போடுங்கம்மா ஒட்டு...

புலிகேசி: நிறுத்துங்கள் மங்குனி வீரர்களா... என்ன இது மன்னர் ஆட்சியில் ஓட்டா... இதை நிறுத்து முதல் இரண்டு துதியை மட்டும் மறுபடியும் பாடு...

(அதற்குள் அங்கு அவ்வை 5.0 வந்துவிட... புலிகேசி அனைவரையும் அமைதிப் படுத்துகிறார்...)

புலிகேசி: அம்மா... தாங்கள் யார்?

தளபதி: என்ன, அம்மா திரும்ப வந்துட்டாங்களா? 

(என்று ஓடிச்சென்று அவரின் காலில் விழுகிறார், அவரைத் தொடர்ந்து வீரர்களும் காலில் விழுகின்றனர்...)

தளபதி: அம்மா நீங்க இல்லேன்னு, UPS ம், USPS ம் அட்டகாசம் செய்றாங்கம்மா...

அவ்வை 5.0: மகனே நீ தவறாக புரிந்துகொண்டாய், நான் தமிழ்க்கு அம்மாவாகிய "அவ்வை"யின் latest  version 5.0                   

மங்குனி: "செயல் தளபதி" இனி இவ்வாறு நீ அதிகப்பிரசிங்கி வேலை செய்தாய், உன்னை மன்னரிடம் கூறி  செயல்படாதா தளபதியாக அறிவித்து விடுவேன்... ஜாக்கிரதை...

தளபதி: (மன்னரை நோக்கி)  மன்னிக்க வேண்டும் மகாபிரபு, RK நாட்டில் கொடுத்த training ல் சற்று தடுமாறிவிட்டேன்.

புலிகேசி: (அவ்வையை வணங்கி விட்டு)  புதிய அவ்வையே, தங்கள் இங்கு வந்ததன் நோக்கம் என்ன?

அவ்வை 5.0: புலிகேசி, அதியமானின் நாட்டின் மீது நீ படையெத்து வருவதாக forward message படித்தேன். அதனால் உன்னையும் உன் மக்களையும் காக்கவே நான் இங்கு வந்தேன்.

மங்குனி: புரியவில்லையே தாயே, அதற்கு ஏன் தாங்கள் இங்கு வரவேண்டும்...

அவ்வை 5.0: அதியமானின் வீரம் தெரியாமல் நீங்கள் சிறுபிள்ளைகள் போல் போருக்கு  வந்துள்ளீர்கள்...

இதைக்கேட்டு அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க

அவ்வையார் 1.0 அதியமானின் வீரம் குறித்து ஏற்கனவே புறநானூற்றில் பாடல்  பாடியுள்ளார். அதை நீ அறிய மாட்டாயா?

புலிகேசி: இல்லை தாயே, என்னவென்று பாடியுள்ளார்?

(களம் புகல்... என்ற பாடலைப் பாடுகிறார் அவ்வையார்...)

தளபதி: இதன் பொருள் என்ன தாயே!

அவ்வை: போர்க்களம் புகும்முன் நன்றாக சிந்தியுங்கள் வீரர்களே. ஒரு நாளுக்கு 8 தேர் செய்யும் தச்சன். ஒரு மாதம் முழுவதும் வேலை செய்து தேரின் ஒரே ஒரு சக்கரம் மட்டும் செய்தால் அது எவ்வளவு வலிமையாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்?

(இதைக்கேட்டு அனைவரும் ஆமாம் என்பது போல் தலையை அசைக்கின்றனர்)

அப்படிப்பட்ட வீரன்தான் அதியமான்... களம் புகுந்த எவரும் மீளமுடியாது. அதனால் உயிர் மேல் ஆசையுள்ள அனைவரும் ஓடி விடுங்கள்...

(புலிகேசி தீவிர யோசனையில் ஆழ்ந்துவிட)

மங்குனி: மன்னர் யோசிக்க ஆரம்பித்து விட்டார், நீங்கள் மீண்டும் ஒருமுறை அந்தப்பாடலைப் பாடுங்கள் தாயே...

அவ்வை மீண்டும் பாட, உயிர்ப யத்தில் அனைவரும் ஓடுகின்றனர்...



இதில் வரும் அவ்வையாரின் பாடல் பாடியவர் எனது நண்பரின் தாயார் திருமதி. ஜெயந்தி ஜகநாதன் அவர்கள்.

Wednesday, April 12, 2017

நிர்வாணம் - யார் குற்றம்?


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் மானம் வரின் 


தமிழக விவசாயிகள் "விவசாயக்கடன்" தள்ளுபடி செய்யவேண்டி போராட்டம் நடத்தி வரும்  வேளையில். அரசின் பாராமுகம் காரணமாக, போராட்டம் அடுத்த கட்டமாக "ஆடை துறப்பு" நிலையை எட்டியுள்ளது. இதைப்பற்றி சமீபத்தில் என்னுடனிருத்தவரிடம் உரையாடியபோது, "தலையை அடமானம் வைத்தாவது கடனை கட்ட வேண்டாமா?  கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று பாடியது உங்கள் ஊரில்தானே என்றார். 

"ஆடை துறப்பு" என்பதை சாதாரண நிகழ்வாக என்னால் எடுத்துக்கொள்ள முடிவதில்லை, அது கடை நிலை. "வந்தார்கள் வென்றார்கள்" எனும் புத்தகத்தில் மதன் இதை உணர்வுப்பூர்வமாக விளக்கியிருப்பார்.

பாபருக்கும், மெதினிராய் (ராஜபுத்திரர், ராணா சங்கா வின் நண்பர்) க்கும் நடந்த யுத்தம்.

பாபரின் படையை தாக்குப் பிடிக்க முடியாமல் ராஜபுத்திரப் படைகள் கோட்டைக்குள் புகுந்து கொண்டு நீண்ட நேரம் வெளியே வரவில்லை. திடீரென்று பாபரை வியப்பில் ஆழ்த்திய அந்த நிகழ்ச்சி நடந்தது.

கோட்டைக்குள்ளிருந்து நெற்றியில் சிவந்த திலகங்களுடன், பிறந்த மேனியுடன், கையில் வாட்கள் பளீரிட ராஜபுத்திர வீரர்கள் சாரி சாரியாக வெளியே பெருங்கோஷத்துடன் ஆவேசமாக பாய்ந்து வந்தனர்!

"என்ன இது" ? என்று குழம்பிய பாபரிடம் அவரது தளபதி கூறினார்.

"போரில் இனி தோல்வி உறுதி என்கிற நிலை ஏற்ப்படும் மாத்திரத்தில் இந்த ராஜபுத்திரர்கள் தங்கள் குடும்பங்களின் மானத்தை காக்கவேண்டி தாய், மனைவி, குழந்தைகளை வாலைப்பாய்ச்சி கொன்று விட்டு, தங்கள் போர் உடைகளை கலைந்து விடுவார்கள். அந்தக் கணமே உயிர் தியாகத்துக்கும், வீர சொர்கத்துக்கும் அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். ராஜபுத்திர இனத்தின் சம்பிரதாயம் அது. இனி இவர்களுடைய உயிரற்ற உடல்களை மிதித்துக்கொன்டுதான் நாம் கோட்டைக்குள் நுழைய முடியும்..."

சரி, அவர்களின் துன்பத்திற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்று நாமிருக்கலாமா? தெரியவில்லை... இது போன்ற சிக்கலான ஒரு வழக்கு தன்னிடம் விசாரணைக்கு வந்தபோது நியூயார்க் நகரின் அப்போதைய மேயர் Fiorello La Guardia என்ன செய்தார்?

1935 ஆண்டு, பொருளாதார சிக்கலில் நகரம் தத்தளித்த தருணம். ஒரு நாள், இரவுநேர வழக்கு விசாரணை. நீபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மேயரே வழக்கை விசாரிக்க தொடங்கினார். சில நிமிடங்களில் கந்தலாடையுடன் வயது முதிர்ந்த பெண்மணி விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் "திருட்டு". அங்கிருந்த வெதுப்பக்கத்தில் ரொட்டித்துண்டை களவாடிவிட்டார். குற்றத்தை அப்பெண்மணியும் ஒப்புக்கொண்டு விட்டார்.

ஒருவேளை உணவுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் தத்தளிக்கும் வேளையில் இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடலாமென மன்றத்தில் இருப்பவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் வெதுப்பாக உரிமையாளர், இதை மன்னித்து விட்டால் திருட்டு தொடர்கதையாகிவிடும், அதனால் தண்டனை கொடுத்தே ஆகவேண்டுமென முறையிட்டார். வேறு வழியில்லாமல் மேயரும் குற்றம் சாட்டப்பட்ட பெண்மணியிடம். "நான் உங்களுக்கு தண்டனை வழங்கியாகவேண்டும், சட்டம் யாருக்கும் விலக்களிப்பதில்லை. தாங்கள் செய்த குற்றத்திற்கு தண்டனையாக 10 அமெரிக்க டாலர்கள் அபராதம் கட்டவேண்டும் அல்லது 10 நாட்கள் சிறைக்கு செல்லவேண்டும்" என்று கூறிக்கொண்டே தனது சட்டைப் பையிலிருந்து 10 டாலர் எடுத்து அபராதத்தொகையை அவரே செலுத்துவிட்டார். அதோடு நிற்காமல், வயது முதிர்ந்த ஒருவர் வாழ வழியில்லாமல் ஒரு வேளை உணவுக்காக திருடும் நிலையில் இந்த சமுதாயத்தை வைத்திருப்பதற்காக இந்த வழக்குமன்றத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் (வெதுப்பாக உரிமையாளரையும் சேர்ர்த்து) 50 சென்ட்ஸ் அபராதம் விதித்தார். அனைவரிடமும் வசூலிக்கப்பட்ட தொகை $ 47.50, குற்றம் சுமத்தப்பட்ட பெண்மணியிடம் வழங்கப்பட்டது.                         

நம் விவசாயிகளை வாழ வழியில்லாமல் செய்து, நிர்வாணமாக்கி மேலும் தற்கொலை வரை கொண்டுசென்றது யார் குற்றம்?  

Sunday, April 2, 2017

குளிர்களி

வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று ஐஸ்கிரீம் சாப்பிட அருகிலிருக்கும் கடைக்கு சென்றிருந்தோம் , அங்கு "பரோட்டா"வையும் "பழைய சோற்"றையும் ஒன்றாக பிசைந்ததுபோல சகிக்கமுடியாத பல நிறங்களில், மணங்களில் மற்றும் சுவைகளில் (?) "ஐஸ்கிரீம்"கள் கிடத்தப்பட்டிருந்தன. அதில் சூரியனை தாங்கிய ஐஸ்கிரீமை ஆளுக்கொன்று வாங்கிக்கொண்டு கடையின் வெளியில் அமர்ந்து சுவைக்க தொடங்கினோம்.

"ஐஸ்கிரீம்" என்பதற்கு தமிழில் என்னவென்று ஆர்யா கேட்க, சரியான மொழிபெயர்ப்பு என்னவென்று யோசிக்கும்போது "பனிக்கூழ்" என்பதை விட "(இனிப்பு) குளிர்களி" என்பதே சரியென தோன்றியது. இதை அவனிடம் விளக்க முயன்று, முயன்று... அவனுக்கு "குளிர்களி"உண்ணும் எண்ணமே போய்விட்டது. அவன் அழுவதற்கு சற்று முன்பாக தமிழ் வகுப்பை முடித்துக்கொண்டேன். "கூழாக" உருகிய "களி"யை உறிஞ்சிக்கொண்டே "குளிர்களி" வரலாற்றை பின்னோக்கி தேடியபோது... 

சரியாக ஆவணப்படுத்தப்படாத பனிக்களியின் வரலாறு தோராயமாக கி.மு நான்காம் நூற்றாண்டு தொடங்ககுகிறது. இந்தியாவை முழுமையாக கைப்பற்ற முடியாமல் தூக்கத்திலேயே இறந்த "அலெக்சாண்டர்", அந்த துக்கத்தின் சூடு தனிய, பனியுடன் கலந்த தேனை பருகியதாக தெரிகிறது. ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது அதன் சுருதிக்கு தப்பாமல் "பிடில்" வாசித்த நீரோ  மன்னன், களைப்பு நீங்க பனிக்கூழ் அருந்தலாமென "ஓட்ட" வீரர்களை மலைக்கு அனுப்பி பனி கொண்டுவர சொன்னதாக ருசிகர தகவலும் உண்டு. "ஒரு" குழந்தைக்கு உரிமைகோரி வந்த இரு தாய்மார்களுக்கு கருணையோடு தீர்ப்பு வழங்கிய "விவிலிய" புகழ் சாலமனும்கூட பனிக்கூழ் போல ஏதோ ஒன்றை விரும்பி சுவைத்துள்ளார். அதன் பின்னர் பலநூறு ஆண்டுகள் உருண்டோடிய பின்னர், "மங்கோலியா"விலிருந்து தாயகம் திரும்பிய மார்கோ போலோ "சீவல் ஐஸ்"சை இத்தாலிக்கு அறிமுகம் செய்துள்ளார். 

ஆவணப்படுத்தப்பட்ட பனிக்கூழின் தோற்றம் கி.பி 1744 லில் அமெரிக்காவில் இருந்து தொடங்குகிறது. அதன் பின்னர் பனிக்கூழ் செய்ய பல வழிமுறைகள் கையாளப் பட்டாலும், பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள், 'நான்ஸி ஜான்சன்' என்பவரின் கண்டுபிடிப்பைத்தான் அங்கீகரித் திருக்கிறார்கள்.  நான்ஸி அமெரிக்காவை சேர்ந்தவர். 1843-ம் ஆண்டு கையால் சுழற்றி இயக்கக்கூடிய ஐஸ்கிரீம் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அந்த இயந்திரத்தைக் கொண்டு உருவாக்கிய ஐஸ்கிரீமையே, அங்கீகரிக்கப்பட்ட முதல் ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பாக உறுதிப்படுத்தி உள்ளனர்

அன்று தொடங்கிய குளிர்களியின் பரிணாம வளர்ச்சி இன்னும் தொடர்கிறது. கியூபாவின் சுருட்டு மணத்தில் கூட குளிர்களி கிடைப்பதில் பெருமை  சுருட்டுக்கா! அல்லது குளிர்களிக்கா! என்பது விடையில்லா கேள்வி. ஒரு ரூபாயில் தொடங்கி கிட்டத்தட்ட 66,000 ரூபாய் வரை குளிர்களி கிடைக்கிறது. 66,000 ($1000) ரூபாயா நம்ப முடியவில்லையா!

நியூயார்க் நகரத்தில் இருக்கும் "செரன்டிபிட்டி 3" எனும் கடையில் இந்த கின்னஸ் புகழ் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. இந்த "செரன்டிபிட்டி" என்ன அவ்வளுவு பெரிய இதுவா? எனும் உங்களின் கேள்விக்கு விடை தெரியவில்லை, ஆனால் ஹாலிவுட்டின் சொப்பன சுந்தரிகளும் அதன் இந்நாள் மற்றும் முன்னால் உரிமையாளர்களும் அடிக்கடி வந்துபோகும் இடம் இது.   

இத்தனை புகழை தன்னகத்தே கொண்ட அந்த குளிர்களியை சாப்பிட முன்பதிவு அவசியம். குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பாக உணவாக அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 66,000 ரூபாய்க்கு அதில் அப்படி என்னதான் இருந்து விடப்போகிறது, எப்படி அதற்கு கணக்கு காட்டப் போகிறார்கள் என்று திகிலுடன் தேடிய போது 

அதன் பெயர் "Golden Opulence Sundae", மூன்று அடுக்குகளால் ஆனா வெண்ணிலா ஐஸ்கிரீம், அதற்க்கு குளிரக்கூடாது என்பதற்காக உண்ணக்கூடிய 23 கேரட் தங்கதாளால் போர்த்தப்பட்டிருக்கும். அதன் தலையில்  செருகியிருக்கும் தங்கப்பூவை நீங்கள் உணவகம் விட்டு வெளியில் வரும்போது உங்கள் காதிலும் செரிக்கிக் கொள்ளலாம்.  கூடுதல் சுவைக்காக அதனுடன் இனிப்பு சுவையூட்டிய "மீன் முட்டை"யும் தரப்படும். 

பின்குறிப்பு: "மீன் முட்டை"யை உண்ணும் முறை என்னவென்றால், அதை  நாவிலிட்டு மேல் அன்னம் வரை கொண்டு சென்று, நாவினால் நசுக்க வேண்டும். பல் படக்கூடாது என்பது மிக முக்கியம். அப்படி செய்யவில்லை என்றால் முன்னறிவிப்பின்றி உங்கள் பெயர் காட்டுமிராண்டி கூட்டத்தில் சேர்க்கப்படும்.




இவ்வளவு காசு கொடுத்து யாரு இத சாப்புடுவா? என்று நினைத்த போதுதான். தோராயமாக ஆண்டுக்கு 50 பேர் வரை சாப்பிடுவதாக தெரிகிறது. சரிதான், "பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான்" என்று நினைக்கத் தோன்றினாலும், காலையில் அது என்னவாக வெளியில் வரும் என்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது. அனைவரும் "tywin lannister" ஆகிவிட முடியாதல்லவா...

பல சமயங்களில் பொருளுக்கல்ல அது தாங்கியிருக்கும் பெயருக்கே விலை... என்று எண்ணிக்கொண்டு டார்லிங் அவ்வையின் பாடலை நினைவு கூர்ந்தேன்...


விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரனிரைய மோதிங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.