cookie

Tuesday, January 20, 2015

ஆரஞ்சு மிட்டாய்...

தங்கராஜ் சிறுகுறிப்பு வரைக?


எனது துவக்கப்பள்ளி நாட்களையும் தங்கராஜையும் பிரிதல் இயலாது. பிறர்நலம் போற்றிப் பேணுவதில் அவனுக்கு நிகரில்லை. அவனுக்கு இருந்த தொலைநோக்குப் பார்வைக்கும் நுண்ணறிவுக்கும் நிச்சயம் இச்சமயம் சிகரங்களைத் தொட்டிருப்பான்.

தங்கராஜ் பற்றி பெருங்குறிப்பு வேண்டுவோர் கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும்

http://arun-radhakrishnan.blogspot.com/2012/09/blog-post.html

பெருஞ்சுவர்  


தங்கராஜின் ஞானக் கண்களின் அறிவுத் தேடுதலுக்கு தகுந்த விடை மூன்றாம் வகுப்பில் அந்த ஆண்டு கிடைக்காததால், அடுத்த ஆண்டும் அதே மூன்றாம் வகுப்பில் தொடர்ந்து தேடினார். என்னுடைய பூனைக் கண்கள் எதையும் தேடாததால் அடுத்த வகுப்பிற்கு விரட்டப் பட்டேன். துவக்கப்பள்ளியில் அதுவரை சேர்ந்து படித்த இருவரும் விதியின் சதியால் முதன் முறையாகப்  பிரிக்கப்பட்டோம். 

துக்கம் தொண்டையை அடைக்க விம்மலுடன் விடைபெற்றேன் என் மானசீக குருவிடம். ஆசி வழங்கி அடுத்த வகுப்பிற்கு அனுப்பினார் "தங்கமான ராஜ்". ஒரு சுவர் மட்டுமே எங்களைப் பிரித்தது. வகுப்பு நேரம் தவிர மற்ற அனைத்து தருணங்களிலும் எங்களுடைய சிந்தனைப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தன.

புதிய உலகம்


அன்று வெள்ளிக் கிழமை, மதியம் உணவு இடைவேளையில் உண்டமயக்கம் களைய நடை பயிற்சியில் இறங்கினோம் நானும், அவரும். பள்ளியைவிட்டு சிறிது தூரம் வெளியே வந்தவுடன், வழக்கமான வழியில் செல்லாமல் புதிய திருப்பத்தில் திருப்பினார் குரு. நானும் அவரைத் தொடர்ந்தேன். அந்தப் புனிதப் பயணம் ஒரு "பாய்" கடையை அடைந்தது. 

பெரிய "பாய்"ன் வாரிசு, சின்ன "பாய்" அங்கே வீற்றிருந்தார். அவரையும் "பாய்" என்றே அழைத்தார் தங்கராஜ். சின்ன பாயின் காதுகளில் ஏதோ மந்திரங்களை தங்கராஜ் ஜெபிக்க, ஒரு வஸ்துவை வெளியே எடுத்து கடையின் முன்புறம் தொங்கவிட்டார் சின்ன "பாய்".

வகுப்பில் வழக்கம்போல திருதிருவென்று விழிப்பதைப் போல ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த வஸ்துவை. "தங்கராஜூ, இது என்னதுடா?" என்று பயபக்தியுடன் நான் கேட்டதற்க்கு, "இது தான் லக்கி ப்ரைஸ்" என்று விளக்கமளித்து, அந்தப் புதிய உலகத்தின் கதவுகளைத் திறந்து,  எனக்குப் பிறவிப் பயனையளித்தார் தங்கராஜ்.

லக்கி ப்ரைஸ்


செவ்வகமான அட்டையில் மேல்புறம் சில பரிசுப் பொருட்கள் எண் குறிப்பிடப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு தொங்கவிடப் பட்டிருக்கும். செவ்வக அட்டையின் கீழ்புறம், சதுரம், சதுரமாக கிழிப்பதற்கு ஏதுவாக காகிதத்தில் செய்யப்பட்ட உறை போன்ற ஒன்று ஒட்டப்பட்டிருக்கும் . 25 பைசா கொடுத்தால்(விலை மாறுதலுக் குட்பட்டது), அதில் ஒரு உறையை கிழிக்கலாம். அந்த உறையினுள் இருக்கும் மற்றொரு சிறிய காகிதத்தில் எதாவது எண் இருக்கும். அந்த எண்ணும், மேலே தொங்கவிடப் பட்டிருக்கும் பரிசுப்பொருட்களில் உள்ள ஏதாவது எண்ணும் பொருந்துமேயானால் அந்தப் பரிசு கிழிப்பவருக்குக் கிடைக்கும்.        
                 

என் செல்லப் பெயர் 


இந்த விதிமுறையை எனக்கு விளக்கிவிட்டு, "லிக்கி ப்ரைஸ்" கிழிக்க தயாரானார் தங்கராஜு. அப்போது எனக்கு ஒரு ஐயம் எழுந்தது. பொதுவாக குருநாயரிடம் சட்டையிருக்கும், சட்டையில் பையிருக்கும் ஆனால் பணம் ?

அப்போதுதான் குரு அவருடைய குருவான "ராபின் ஹூட்" என்பவரைப் பற்றி விளக்கினார். "ராபின் ஹூட்"டின் அறிவுரைப்படி தங்கராஜு, பணமிருக்கும் அவரின் அப்பாவின் சட்டைப் பையிடமிருந்து பணத்தை எடுத்து பணம் இல்லாத வேறொரு சட்டைப் பையிடம் கொடுத்துவிட்டார். அந்த வேறொரு சட்டையைத்தான் இன்று அவர் அணிந்து வந்துள்ளார்.      

தங்கராஜ் வாஸ்துசாஸ்த்திரத்திலும் வல்லுனர் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். அவர் விரும்பிய பரிசுப்பொருளில் தன் வலதுகை கட்டைவிரலைப் பதித்து இரண்டு "ஜான்" கீழ்நோக்கி அளந்தார். இரணடாவது "ஜான்" முடிந்த இடத்திலிருந்த அந்தச் சதுர உரையைக் கிழித்தார். உள்ளே ஒரு எண், அந்த எண்ணும் அவர் விரும்பிய பரிசுப்பொருள் எண்ணும் ஒத்திருந்தது. அன்றுதான் எனக்குத் தெரியும் தங்கராஜூவின் "செல்லப் பெயர் அதிர்ஷ்டம்" என்பது. 

என்னையும் ஒரு உறையை கிழிக்கப் பணித்தார். என்னிடம் 10 பைசா மட்டுமே இருந்தது. அதனால் திங்கள்கிழமை கிழிப்பதாக உறுதிமொழி எடுத்துவிட்டு , இருந்த 10 பைசாவிற்க்கு மிட்டாய் வாங்கிக் கொண்டு திரும்ப வந்துவிட்டோம்.

அந்த 25 பைசா


மறுநாள், என் அம்மாவிடம் 25 பைசா கேட்டேன். தன் நலனைவிட என் நலன் பேணும் என் அக்கா, நான் "லக்கி ப்ரைஸ்கிழிக்கத்தான் காசு கேட்கிறேன் என்பதை அம்மாவிடம் போட்டு உடைக்க, வழக்கமாக கிடைக்கும் 10 பைசாவும் அன்று கிடைக்கவில்லை.    

அன்றிரவு மீண்டும் மீண்டும் "ராபின் ஹூட்" என் கனவில் வந்து ஆசி வழங்கினார். மறுநாள் (ஞாயிறு)  காலை, "ராபின் ஹூட்"டின் முழு ஆசியுடன் என்னுடைய அம்மாவின் சிறுவாடில் இருந்து 25 பைசா என்னுடைய கால்சட்டைக்கு இடம் மாறியது.

ஞாயிறு மதியம், ஒரு கோழிக்கு மோட்சமளித்த திருப்தியில் எங்கள் வீட்டில் அனைவரும் உறங்கிவிட, எனக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. மற்றவர்களையும் உறங்கவிடாமல் தொல்லை கொடுத்ததால், பக்கத்துக்கு வீட்டுக்கு விரட்டியடிக்கப் பட்டேன். பக்கத்துவீட்டு மேரியக்கா அவர் போகும் "சண்டே க்ளாசுக்கு" என்னையும் அழைத்துக் கொண்டுபோனார். 

"சண்டே க்ளாஸில்" வெள்ளை அங்கி அணிந்த அந்த மனிதர் இயேசு பெருமான் மகளுக்காகப்  பட்ட துன்பங்கள் அனைத்தையும் விளக்கினர். அதைக் கேட்டு கிளிசரின் இல்லமல் என் கண்கள் நீரைக் கசிந்தன. அவரின் கதை என் அப்பாவிடம் நான் வாங்கிய பல சன்மானங்களை கண்முன் நிறுத்தியது. 

பின்பு, ஒரு வழியாக ஞாயிறு வகுப்பு முடிவுக்கு வந்தது. நாங்கள் புறப்பட தயாராக இருக்கும்போது, அதுவரை உருக்கமாக கதைசொன்ன அந்த மாந்தர் கையில் உண்டியலுடன் எங்கள் முன் வந்து நின்று ஏதோ காரணம் சொல்லி தங்களால் இயன்றதை கொடுக்கும்படி கேட்டார். சற்றும் யோசிக்காமல் கால்சட்டையில் இருந்த 25 பைசாவை உண்டியலுக்கு இடம்பெயரச்செய்தேன். முகமலர்ச்சியுடன் அந்த கதைசொல்லி எனக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த பிறகுதான் என் தானத்தின் பக்கவிளைவு புரிந்தது. 25 பைசா போனதின் பாதிப்பு மிகப் பலமாக இருந்தது. சாப்பிடக்கூட முடியவில்லை. மீண்டும் அம்மாவின் சிறுவாட்டிடம் போகலாம் மென்றால் பயம், வேறு வழியில்லை, வெறுங்கையுடன் திங்கள் காலை பள்ளிக்குச் சென்றேன்.        


மீண்டும் அதிர்ஷ்டம் 


சொன்ன சொல் மாறாத தங்கராஜ் மீண்டும் 25 பைசவுடன் அன்று பள்ளிக்கு வந்திருந்தார். உணவு இடைவேளையில் மீண்டும் பாய் கடைக்கு சென்றோம். என்னிடம் பணம் இல்லை என்பதையும், அதன் காரணத்தையும்  தங்கராஜிடம் கூறினேன். அதைக்கேட்டு "பயந்தாங்கொலிப் பக்கடா" என்று எள்ளி நகையாடினார் குரு.        

இந்த முறை  பாய் கடையில் அப்பா "பாய்" இருந்தார். "லக்கி ப்ரைஸ்" அட்டையில் இன்று அழகான "சுவர் கடிகாரம்" இருந்தது. வாஸ்து வல்லுனர் தங்கராஜ், சுவர் கடிகாரத்தை தனதாக்கிக் கொள்ள அன்று செய்தது போலவே இன்றும் தன் சித்து வேலையைக் காட்டினார். 

என்னை ஏளனம் செய்து எள்ளி நகையாடிய குருவிற்க்கு பரிசு விழக்கூடாது என்று இயேசு பெருமானை மனதிற்க்குள் வேண்டிக் கொண்டேன். ஒன்று நான் கொடுத்த 25 பைசாவை திருப்பிகொடு, இல்லை தங்கராஜுக்கும் பரிசு விழக்கூடாது என்று அவரிடம் உடன்படிக்கை செய்துகொண்டேன்.

இதற்கிடையில் தங்கராஜு அந்த சதுர உறையை கிழித்துவிட்டார். உறையை பிரித்து அவர் அந்த எண்ணை பார்ப்பதற்க்கு முன்னர் படபடப்பில் என் இதயம் வெளியே வந்து விழுந்து விடும் போலானது.

ஒரு வழியாக உள்ளே இருக்கும் அந்த எண்ணைப் பார்த்தார் தங்கராஜு, அதில் அன்று மதியம் நாங்கள் சாப்பிட்ட முட்டை பப்பறப்பா வென்று படுத்துக்கிடந்தது. சில நொடிகளில் தங்கராஜு ஓ வென்று அழத்தொடங்கி விட்டார். குரு அழுவதைப் பார்த்து நானும் ஏனென்று புரியாமல் அழுதேன். 

நாங்கள் அழுவதைப் பார்த்த அப்பா "பாய்" நடந்தது புரியாமல் என்னவென்று விசாரித்தார். பின்பு இருவருக்கும் ஆறுதல் கூறினார். தங்கராஜு சமாதானம் அடைவதாக தெரியவில்லை. பின்பு "பாய்" இருவருக்கும் "ஆரஞ்சு மிட்டாய்" கொடுத்து, இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது என்று விரட்டியடித்தார்.       

4 comments:

  1. antha தங்கராஜூ ippa enna panrar

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தெரியவில்லை, இன்னமும் அவரை தேடிக்கொண்டிருக்கிறேன்

      Delete
  2. Arun...this is a very good beginning... Good Tamil words - iyyam, elli nagaiyaadinaar, kaalsattai, etc...
    Innum sila aangila vaarthaigalai kuraithu thodarnthu ezhuthavum...

    ReplyDelete