cookie

Wednesday, January 8, 2014

Onsite எனும் அக்கப்போரு - நாடகம்

கதாப்பாத்திரங்கள்

Team Leader - அன்பு
Project Manager - வாசு
Team members - சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

கௌரவ கதாப்பாத்திரங்கள் : DBA, Architect, Peter Babe, Phone    

இவர்களோடு நீங்களும்...


குறிப்பு

இந்த நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே. கதையின் போக்குக்காக சில தர்க்க மீறல்கள் திணிக்கப்பட்டுளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.    


காட்சி - 1

நாள் : வெள்ளிக் கிழமை

நேரம்:  காலை 10:00 மணி.

நடிகர்கள்:  Team Leader (அன்பு)  , Project Manager (வாசு) , Phone

அன்பு கனிப்பொறியில் தீவிரமாக மூழ்கி விசைப்பலகையை பதம் பார்த்துக் கொண்டிருக்க, மேசையின் மேல் இருந்த தொலைபேசியில் மணி ஒலிக்கிறது. மறு முனையில் வாசு.

அன்பு: hello

வாசு: அன்பு, நான் வாசு பேசுறேன், busy யா இருக்கீங்களா? கொஞ்சம் என்னோட cabin க்கு வறீங்களா? please.

அன்பு: No problem வாசு. உடனே வர்றேன்.


காட்சி - 2      

இடம்: வாசுவின் அலுவலக அறை

நடிகர்கள்:   அன்பு, வாசு, SRS document.

knock, knock

வாசு: Yes, come in அன்பு......   take your seat.

அன்பு: thanks ..........   என்ன விஷயமா வரச் சொன்னீங்க வாசு?

வாசு: ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வரச்சொன்னேன். weekend plan என்ன அன்பு?

     அன்புவின் மனக்குரல் : இவரு எதுக்கு நம்ம plan ன கேக்குறாரு? weekend க்கு வேட்டு வைக்கப் போறாரா?

அன்பு: பெரிய plan ஒன்னும் இல்ல வாசு, தீவாளி purchase இருக்கு.

வாசு: very good, very good. அதுக்குள்ள purchase சா? ஓ, தல தீபாவளி இல்லையா? மாமனார் வீட்டு கவனிப்புன்னு சொல்லுங்க.

அன்பு:  (அசட்டுச் சிரிப்புடன்) ஆமா வாசு.

வாசு: உங்களுக்கு ஒரு good news சொல்லத்தான் வரச்சொன்னேன்.

அன்பு, ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு வாசு கூறப்போவதை கேட்க ஆவலாக இருந்தார்.

வாசு: நமக்கு புது US project கெடச்சிருக்கு. இந்த project ட successfully ல complete பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு நிச்சயம் onsite opportunity கிடைக்கும்.

(பின்னணியில் "கண்ணா லட்டு தின்ன ஆசையா ?" என்று கேட்க்கும் குரலுக்கு ஆமாம் என்பது போல தலையை அசைக்கிறார் அன்பு).

அன்புவின் கற்பனையில்

தன் புது மனைவியுடன் அமெரிக்காவின் பல முக்கிய இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போல நினைத்துப் பார்கிறார்.    

வாசு: அதோட மட்டும் இல்ல, உங்களுக்கு GC யும் process பண்ணுவோம்.

(பின்னணியில் "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா ?" என்று கேட்க்கும் குரலுக்கு ஆமாம் என்பது போல தலையை அசைக்கிறார் அன்பு).

அன்புவின் கற்பனையில்

பெரிய சொந்த வீட்டின் முன்பு 

அன்பு, அவரின் மனைவி, 

குழந்தை 1,

குழந்தை 2,

SUV கார் 



முதலியவை வரிசையாக வருவது போல கற்பனை செய்து கொள்கிறார்

அன்புவின் முகத்துக்கு முன்பு கையை அசைத்தவாரே வாசு கேட்கிறார் 

என்ன அன்பு அதுக்குள்ள dream மா ? கார், வீடு, நயாகரா... ?

வாசுவின் குரல் கேட்டு இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புகிறார் அன்பு, அசடு வழிய..

உங்கள சொல்லி ஒன்னும் தப்பு இல்ல, அந்த ஊரோட ராசி அப்படி...

வாசு: SRS document ட உங்களுக்கு share பண்ணிருக்கேன். WBS போட்டு கொண்டு வறீங்களா? weekend நீங்க ஏதோ purchase க்கு போறதா சொன்னீங்கள்ள..

அன்பு: அது ஒன்னும் problem இல்ல வாசு. நா அத உடனே பாத்துர்றேன். நாளைக்கே WBS போட்டுட்டு உங்களுக்கு email அனுப்பீர்றேன்.

வாசு: very good அன்பு. நீங்க போயி உடனே வேலைய ஆரம்பிங்க..

அன்பு: Thanks Vasu.

வாசு: no problem, all the best.

அன்பு அந்த அறையை விட்டு வெளியேறுகிறார்...


காட்சி - 3

நடிகர்கள்: அன்பு, வாசு   
நாள்:  திங்கள்
நேரம்: காலை 10:30 மணி

WBS சை அனுப்பிவிட்டு வாசுவின் பதிலுக்காக ஒரே படப்பிடிப்புடன் காத்திருந்தார் அன்பு...

தொலைபேசி மணி ஒலிக்க மீண்டு மறுமுனையில் வாசு.

வாசு: என்னோட cabin க்கு வாங்க அன்பு.

அன்பு அடுத்த நொடி வாசுவின் அலுவலக அறையில்.
  
வாசு: anbu, what is your plan for this new project?

அன்பு மனதிற்குள், வழக்கம் போல email ல படிக்கலையா

அன்பு: 6 resource, 8 sprint ல project ட முடிச்சிரலாம் வாசு.

வாசு: (இறுக்கமான முகத்துடன்) என்ன அன்பு இந்த POC project டுக்கா 6 resource சும் 4 மாசமும் கேக்குறீங்க?

உங்களுக்கு 6 resource வேணும்னா office security யும் சேர்த்துதான் தரனும்.

Impossible அன்பு,

உங்களுக்கு 4 resource சும் 2 மாசமும் தர்றேன் அதுக்குள்ளே முடிச்சிருங்க. உங்க onsite க்கு நான் guarantee. OK ?

அன்புவின் பதிலுக்காக காத்திராமல் வாசு தொடர்கிறார்.

அன்பு, let me introduce your new team.

வாசு தொலைபேசியில் அழைக்க. ஒன்றின் பின் ஒன்றாக slow motion effect ல்  நால்வரும் உள்ளே வருகின்றனர்

(kakka kakka BGM)

நால்வரும் கைகளை பின்புறம் கட்டி, கால்களை அகற்றி தயாராக நிற்க்கின்றனர்.

வாசு: These guys are handpicked by me and will report directly to you.

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

சேதுவும், சேகரும் சாத்தூர்ல இருந்து வந்துருக்காங்க. கண்ணனும் கார்த்திக்கும் விருதுநகர்ல இருந்து வந்துருக்காங்க. இவங்க நாலு பேரும் ஒண்ணா college ல படிச்சிருக்காங்க.

அதனால அவங்களுக்குள்ள நல்ல chemistry இருக்கும்.

அன்பு mind voice: நான் என்ன ஜோடி நம்பர் 1 சீசன் 8 க்கா ஆள் கேட்டேன் 
ஏன்யா கொல்ற. project பண்ண ஆள் கேட்டா chemistry class எடுத்துக்கிட்டு.

அன்பு: வாசு, I want to have one to one discussion before I commit.

வாசு: off-course. actually you should.  


காட்சி - 4


நேர்முக விவாதம்

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்


அன்பு: tell me about yourself

        சேது: I am சேது, studied B.A (Chemistry)

        சேகர் : I am சேகர், studied B.Com (History)

        கண்ணன்: I am கண்ணன், studied B.B.A (English)

        கார்த்திக்:  I am கார்த்திக், studied B.Com tamil medium.

Studied very old sir, அதனால forgot sir.

அன்பு: நீங்க இப்படி இங்கிலீஷ் பேசுனா மெகா சீரியல் தான் எடுக்கணும். இது short story தான் அதனால தமில்லையே பேசுங்க.

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: இஹி ஹி, thank you sir.

அன்பு: நீங்கெல்லாம் ஒண்ணா படிசீங்கன்னு வாசு சொன்னாரே?

      கார்த்திக்: நாங்கெல்லாம் ஒண்ணா PGDCA படிச்சோம்.

அன்பு: உங்க strength என்ன?

       சேது: நான் நல்லா படம் வரைவேன்.
     
       கார்த்திக்: நல்லா கவிதா sorry sir கவித எழுதுவேன்.
     
       சேகர்: 1 நிமிசத்துல 50 push ups எடுப்பேன் சார்.
     
       கண்ணன்: கோபமே பட மாட்டேன் sir.       

அன்பு: என்ன language தெரியும்?

      சேகர்: தமிழ், தெலுங்கு...  

அன்பு: computer language என்ன தெரியும்னு கேட்டேன்?

      சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: கொஞ்சம் ஜாவா தெரியும்

அன்பு: எதுக்காக இந்த job ல join பண்ணீங்க?

      சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: கல்யாணம் ஆகுறதுக்கு sir. Software மாப்ளைக்குதான் easy யா பொண்ணு கிடைக்குது.

அன்பு: very good     


காட்சி - 5

நடிகர்கள்: அன்பு, வாசு

வாசு: are you comfortable with your new team ?

அன்பு: are you serious vasu? இவங்கள வச்சிக்கிட்டு, இந்தப் project ட two months ல முடிக்கிறது impossible.

வாசு: if it's easily possible then why "anbu". that's why i told you about onsite and GC.
வேலைக்கு சேந்த உடனே onsite போகணும்னு நெனைச்ச முடியுமோ?
team கிடைச்ச உடனே project ட start பண்ணிரலாம்னு நினைக்க முடியுமோ?

இந்த project ல நீங்க training குடுங்க. அடுத்த project ல அந்த பசங்க வேறொரு team க்கு training குடுப்பாங்க. அதெல்லாம் இருந்து பாக்குறதுக்கு நீங்க இங்க இருக்க மாட்டீங்க onsite போயிருவீங்க. ஆனா முதல்ல training "அன்பு" தான் கொடுத்தாரு. இதென்ன உங்களுக்கு பெருமையா? கடம.

அன்பு: (மனதிற்குள்: எல்லா தமிழ் படத்தையும் பார்த்து டயலாக்க மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்து ஏன்யா என் உயிர வாங்குற)

Training எல்லாம் குடுத்து project ட complete பண்றது முடியாது வாசு. என்ன விட்ருங்க நான் போறேன்.

வாசு: அன்பு, நான் என்ன வச்சிகிட்டா வஞ்சன பண்றேன். MD யோட recommendation ல வேலைக்கு வந்த பசங்க வேண்டாம்னு சொன்னா என்னோட வேலை, உன்னோட வேலை ரெண்டும் போயிரும். recession time வேற.

அன்பு: (சிறிது யோசனைக்குப் பிறகு) வாசு, I will do my best.


காட்சி - 6


நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

அன்பு: come on guys let's start our game.

சேது: சார், இப்போ நம்ம project பண்ணப்போறது இல்லையா? விளையாடப் போறமா?.

அன்பு: வேலைய ஆரம்பிப்போம்னு சொன்னேன்...

Requirement documents எல்லாம் Server-72 ல SRS folder ல இருக்கு. Files எல்லாம் உங்க local PC க்கு copy பண்ணிக்கோங்க.

என்று தன் குழுவுக்கு கட்டளை இட்டுவிட்டு தன் இடத்துக்கு அன்பு சென்றுவிட. நால்வரும் ஒருவர் பின் ஒருவராக 72 சர்வர் முன்பு வரிசையில் நின்றனர். முதலில் சேது Server-72 இல் ஏதோ செய்துவிட்டு அவருக்கென்று கொடுத்த கணிப்பொறியில் போய் மீண்டும் ஏதோ செய்தார். அதையே மற்ற மூவரும் செய்தனர். சில நிமிடம் கழித்து அங்கு வந்த அன்பு.

அன்பு: document copy பண்ணியாச்சா?

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: copy ஆக மாட்டக்கிது sir.

அன்பு: copy ஆகலையா, என்ன பண்ணீங்க ?

சேது: Server-72 ல file ல select பண்ணி mouse right click பண்ணிட்டு copy option ன select பண்ணிட்டு. என்னோடோ computer ல போய் paste பண்ணினேன் sir.

அன்பு:   என்ன சொன்னீங்க.....   இப்படி நீங்க எப்படி copy பண்ண முடியும் ?

சேது: எல்ல computer ரும் network ல connect ஆகித்தான sir இருக்கு. அதனால இப்படி பண்ணா copy அகனும்ன்ல, copy ஆகாதா?

சேதுவின் இந்த பதிலைக் கேட்டு, அன்பு பேய் அறைந்ததைப் போல நின்றார்... 

(நான் ஒரு கேள்வி கேட்டா, நானே அசந்து போற மாதிரி என்ன ஒரு கேள்வி கேட்க வேண்டியது)

காட்சி - 7

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக், DBA

அன்பு : (தன் குழுவை நோக்கி) table design பண்ணிட்டு DBA கிட்ட verify பண்ணிட்டு வந்துருங்க.

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: OK sir.

DBA விடம் தாங்கள் தயாரித்த தரவு தள அட்டவனையை (database table design) காட்டினார் அவரிடம் ஓப்புதல் பெறுவதற்கு.

அதனை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போதே...

DBA: ( table ஒன்றை காட்டி) இதுக்கு key இல்லையே

கண்ணன் தன்னுடைய கால்சட்டை பையை துலாவி தன்னிடம் இருந்த சாவியை எடுத்து DBA விடம் நீட்டி விட்டு பெருமிதத்துடன் தன் சகாக்களை நோக்கினான்.

சேது, சேகர், கார்த்திக்: super மச்சி.

அதிர்ச்சியில் DBA...



காட்சி - 7.1

நடிகர்கள்: அன்புசேது, சேகர், கண்ணன், கார்த்திக்

அன்பு: Architect கூட ஒரு discussion இருக்கு.

கண்ணன், கார்த்திக் நீங்க ரெண்டு பேரும் DBA கொடுத்த review comments க்கு ஏத்தபடி table ல modifications பண்ணிடுங்க. 

கண்ணன், கார்த்திக்: O.K sir

அன்பு: சேது, சேகர் நீங்க ரெண்டு பேரும் architect கிட்ட discussion க்கு போங்க. architecture finalize பண்ணிரலாம்.

சேது: Architect என்ன பண்ணுவாரு sir?

அன்பு: ஒரு Software க்கான  structure எப்படி இருக்கணும்கிற recommendations குடுப்பாரு. அவருகிட்ட போய் பேசுங்க உங்களுக்கே ஒரு idea கிடைக்கும்.


காட்சி - 7.2

நடிகர்கள்: architect, சேது, சேகர்

சேது, சேகர் இருவரும் architect இருப்பிடத்தின் முன்பு நிற்க, architect கவனம் சிதறாமல் தன்னுடைய கணினியை நோக்கிக் கொண்டிருந்தார். காதுகள் headphone வசம் இருந்தன.

சேகர்: (மிகவும் பணிவுடன், குனிந்து கொண்டு) சார்.... சார்...

Architect டிடம் இருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை

சேகர்: (மீண்டும்) சார்................... சார்........................

சேது: சேகர், என்ன பிச்சையா எடுக்குற? (பார்வையாளர்களை நோக்கி "ரொம்ப அடக்கமாமாம்")

இருவரும் மீண்டும் மிக அருகில் செல்ல architect நிமிர்ந்தார். என்ன வேண்டும் என்பது போல தலையை அசைத்தார்.

சேகர்: புது project க்கு design discussion க்காக வந்துருக்கோம்.

உட்காருங்க என்பது போல தலையை அசைத்தார். இருவரும் அமர்ந்து கொள்ள.

Architect: Project details சொல்லுங்க.

சேது requirement document முதல் பக்கத்தில் இருக்கும் தகவல்களை வாசிக்கத் தொடங்க...

Architect: Cut the crap, Just tell me the key points.

சேகர்: இந்த project ட முடிச்சாதான் எங்களுக்கு increment டும் அன்பு sir க்கு onsite டும் கிடைக்கும்னு சொல்லி இருக்காங்க.

Architect: (ஸ் சப்பா...) please document ட குடுப்பா, நானே படிச்சிக்கிறேன்...

சில நிமிடங்களுக்குப் பிறகு... architect சொல்லப் போவதை குறிப்பெடுக்க தயாராக இருந்தனர் சேகரும் சேதுவும். உ, விநாயகர் துணை என்று எழுதி முடிப்பதற்கு முன்பே

Architect: different types of output ட publish பண்றதுக்கு factory pattern use பண்ணிக்கோங்க. "publish calculation" னு ஒரு method மட்டும் interface ல இருக்கட்டும். Class diagram போட்டு கொண்டு வாங்க.

என்று தன்னுடைய ஆலோசனையை கூறி முடித்து விட்டு அடுத்த நொடியே அவ்விடம் விட்டு சென்று விட்டார்.

சேது: சேகர், அவரு என்ன சொன்னாருன்னு புரிஞ்சதா?

சேகர்:  எதோ calculation போடுற மாதிரி class room படம் வரையச் சொன்ன மாதிரி எனக்கு புரிஞ்சது.

சேது: ஏன்டா மச்சி class room படம் வரையனும்?

சேகர்: நீ தான அன்பு sir கிட்ட நல்லா படம் வரைவன்னு சொன்ன, அதனால இருக்கும். மச்சி உன்னோட படம் வரையிற திறமையை காட்ட இது நல்ல chance.         

சில நிமிடங்களில் சேது தன் கடமையை முடித்துவிட்டு திறமையை architect டிடம் காட்ட ஆர்வமுடன் காத்திருந்தார்.
இயற்கையின் அழைப்பை முடித்துவிட்டு வந்த architect டிடம் பெருமிதத்துடன் படத்தை காட்டினார் சேது.

படத்தை பார்த்து நிலைமையை புரிந்து கொண்ட architect மனதிற்குள் சேது, சேகர் இருவரையும் மாறி மாறி தலையில் கொட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, 

"உங்க team ல யாராவது பெரியாள் இருந்தா கூட்டிட்டு வாங்க" ன்னு சொல்லி இருவரையும் அனுப்பிவிட்டார்.


காட்சி - 7.3

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

அன்பு: இந்த பசங்க எங்க போனாங்க ?

சுற்றும் முற்றும் தேடினார் அன்பு, சிறிது தூரத்தில் நால்வரும் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. கையை அசைத்து அழைத்துப் பார்த்தார். நால்வரின் கவனமும் அந்த மங்கையிடமே மையல் கொண்டிருந்தது.

அன்பு: (சற்று சப்தமாக) சேகர்...

அன்பு அழைக்கும் சப்தம் கேட்டு அந்தப் பெண் நால்வரையும் உஷார் படுத்தினார். நால்வரும் அன்புவை நோக்கி விரைந்தனர்.

அன்பு: உங்களுக்கு கொடுத்த வேலைய முடிச்சிட்டீங்களா?

சேது, சேகர்: இல்ல, Architect உங்ககிட்டதான் பேசணும்னு சொன்னாரு Sir.

கண்ணன், கார்த்திக்: Database Changes இன்னும் முடியல sir.

அன்பு: Very Good. இந்த ரெண்டு மாசத்துல, Project Work முடிக்கிறோமோ இல்லையோ!கல்யாணம் முடிக்கனும்கிற உங்க லட்சியம் கண்டிப்பா நிறைவேறிடும்.

ஆமா, அந்த "Peter Babe" க்குதான் தமிழ் தெரியாதே ! பின்ன நீங்க என்ன பேசுனீங்க?

சேது: English knowledge ஜ improve பண்ணிக்கத்தான் sir அந்தப் பொண்ணுகிட்ட பேசிக்கிட்டு இருந்தோம்.

அன்பு: ம்....

இப்போதான் Architect ட பாத்து பேசிட்டு வர்றேன். என்ன நடந்ததுன்னு சொன்னாரு...  

உங்களோட English ஆர்வத்த கொஞ்சம் control பண்ணிக்கிட்டு, முதல்ல programming கத்துக்கோங்க.      


காட்சி - 7.4

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

இடம்: அலுவலக வகுப்பறை

அன்பு: முதல்ல உங்களுக்கு Encapsulation, Inheritance, Polymorphism தெரியனும்.

(நால்வருக்கும் வகுப்பை ஆரம்பித்தார் அன்பு...
ஒரு வழியாக அடிப்படை போதனை முடிந்தது)

அன்பு: சேது, Inheritance - real time example  சொல்லுங்க?

சேது: எங்க அப்பா மாதிரி, எனக்கும் திருட்டு முழின்னு எங்க அம்மா சொல்லுவாங்க Sir.

அன்பு: கண்ணன் Polymorphism பத்தி சொல்லுங்க.

கார்த்திக்: அன்புங்கிற ஒன்னு, நாம யாரு கிட்ட காட்டுறமோ அவங்க வயசுக்கு ஏத்தமாதிரி வேற வேற அர்த்தம் வரும்.

சின்ன குழந்தைன்னா - அன்பு / பாசம்
வயசுப் பொண்ணுன்னா - காதல் (வெட்கத்துடன்)
வயசான வங்கன்னா - பரிவு

அன்பு: நீங்க தான கவித எழுதுவேன்னு சொன்னீங்க?

கார்த்திக்: ஆமா sir.

அன்பு: ஒரு கவித சொல்லுங்க.       

கார்த்திக்:

உன் விழி ஈர்ப்பு விசையில் பயின்றேன் இயற்பியல்.
உன் அருகாமையில் என் உடலுக்குள் வேதியல்.
எப்போது நாம் இருவரும் பயில்வோம் உயிரியல்.               

கண்ணன்: அடடே ஆச்சர்யக் குறி...

மற்ற மூவரும் கரகோஷம் செய்கின்றனர்...   

அன்புவும் சிரிக்கிறார்...

அன்பு: அடுத்து முக்கியமான ஒன்னு, debugging. debugging ன்னா program ல இருக்குற mistakes எல்லாம் correct பண்றது.

கண்ணன்: sir, அப்ப coding னா, program ல mistakes ச போடுறதா sir.

அன்பு: .....   உங்களையெல்லாம் இப்படி கேக்கச் சொல்லி யாரு சொல்லித் தர்றது... ?      


காட்சி - 8

நடிகர்கள்: அன்பு,  DBA


DBA: அன்பு இந்த பசங்கள வச்சி நீங்க எப்படி project ட முடிக்கப் போறீங்களோ தெரியல?

அன்பு: புன் சிரிப்பு...

DBA: table ல key எங்கன்னு கேட்டா? pocket ல இருந்து எடுத்துக் காட்டுறாங்க.

அன்பு: மீண்டும் சிரிப்பு...

அன்பு: அந்த பசங்க கிட்ட, இந்த வேலைக்கு ஏன் வந்தீங்கன்னு கேட்டேன்? அதுக்கு அவங்க கல்யாணம் அகுரதுக்குன்னு சொன்னங்க. அவங்க நேர்மை எனக்கு புடிச்சது. அது மட்டும்மில்லாம அவங்ககிட்ட ஒரு fire இருக்கு. நிச்சயமா எங்களால இந்த வேலைய முடிக்க முடியும். அதுக்கு என்கிட்டே ஒரு plan இருக்கு.


காட்சி - 9

நடிகர்கள்: அன்பு, வாசு


கையில் பெட்டி படுக்கையுடன் அன்பு அலுவலகத்திற்குள் நுழைகிறார். அதே வேளையில் வாசுவும் அலுவலகத்திற்குள் வர.


வாசு: அன்பு என்ன பெட்டியோட வர்றீங்க.

அன்பு mind voice: பண்றதையும் பண்ணிட்டு கேள்வியப்பாறு

அன்பு: என்னோட wife அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டேன். apartment ட காலி பண்ணிட்டு இங்கயே வந்துட்டேன். ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம் தங்குறதுக்கு எதுக்கு வீடு. வீட்டு வாடகையவது மிச்சமாகும் பாருங்க அதுதான்.

கடமைதான் முதல் மனைவின்னு என்னைக்கு சொன்னானோ தெரியல....

வாசு mind voice பையன் செம கடுப்புல இருக்கான் போல...


காட்சி - 10

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

பெட்டி படுக்கையுடன் அலுவலகம் வந்தது அன்பு மட்டுமல்ல அவனது குழுவும் தான்.


விக்ரமன் படத்தில் இருந்து ஒரு பாடல் ஒளிபரப்பாகிறது....  வேலையும் விரைவாக முடிகிறது.


காட்சி - 11

Delivery Date 

அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு deployment க்கு அனுப்பியாகி விட்டது.

waiting for the client response.

நகம் கடித்துக்கொண்டு ஐவரும் காத்துக் கொண்டிருக்க. தொலை பேசி அழைப்பு வருகிறது.

வாசு: அன்பு, client கிட்ட இருந்து call வந்திருக்கு.

அன்பு: Issues எதுவும் இருக்கா வாசு? 

வாசு: ஒரே ஒரு Issue தான் வந்திருக்கு. "unable to login".

அன்பு: என்ன username / password use பண்ணாங்க?

வாசு: admin/admin.

அன்பு: correct தான். one minute வாசு?

அன்பு: கார்த்திக் login module நீங்க தானே check பண்ணீங்க? hard-code எதுவும் பண்ணீட்டீங்களா ?

.......

கார்த்திக்: sorry sir, password is "PRIYA"...

அன்பு: இந்த ரணகலத்துளையும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குது.

சிறிது நேரம் கழித்து...

வாசு: அன்பு  first level UAT completed. client QA team will continue their testing. you did it அன்பு.

அன்பு: no வாசு, we did it...