cookie

Saturday, September 24, 2016

கம்பனெனும் தமிழ்த்தூக்கி...

கோடை விடுமுறையில் மதுரையில் இருக்கும் எனது அத்தை வீட்டிற்கு சென்றிருந்தபோது, அருகிலிருந்த நூலகத்தில் நெ.ரா. சுப்ரமணிய சர்மா அவர்கள் எழுதிய "கம்பர் சரித்திரம்"மெனும் அறிய புத்தகம் வாசிக்க கிடைத்தது. அதில் கம்பர் குறித்த பல புதியதகவல்களை அருமையாக பதிவு செய்திருந்தார் ஆசிரியர். இறுதி பாகத்தில் கம்பரின் சமாதி, நாட்டரசன் கோட்டையில் இருப்பதாக குறிப்பிட்டிருந்ததை அறிந்து மறுநாள் அங்கு செல்ல நானும் எனது மனைவியும் ஆயத்தமானோம். பலமணிநேரத் தேடுதலுக்குப் பின்னர் அவ்விடம் குறித்து வெகுசில தகவல்கள் கிடைத்தது. 

மறுநாள் காலை பயணம் இனிதே துவங்கியது. சரித்திரப் புகழ் படைத்த தமிழ்த்தூக்கியின் இறுதி மூச்சு உள்வாங்கப்பட்ட இடத்தை தரிசிக்கப் போகிறோம் என்ற உச்சகளிப்பில் நொடிகளை எண்ணிக்கொண்டே சிவகங்கை செல்லும் பேருந்தில் இருவரும் பயணத்தை துவங்கினோம். எங்களுக்கு அருகில் அமர்ந்திருந்த பெரியவரும் சிவகங்கைக்குதான் செல்கிறார் என்று தெரிந்ததும்,  கம்பர் சமாதி குறித்து பேச்சைத் துவங்கினேன். நடராசன் கோட்டையில் மாரியம்மன் கோவில் தெரியும் ஆனால் கம்பர் சமாதி தெரியாது என்றார். அத்தோடு நிற்காமல் அதே பேருந்தில் பயணம் செய்த அவருடைய சுற்றம் மற்றும் நடப்பு வட்டாரத்திடமும் கலந்தாலோசித்துவிட்டு யாருக்கும் எதுவும் தெரியாது என்று தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பித்துவிட்டு, "கொம்பனின்" வீரசாகசங்களை தொலைக்காட்சியில் ரசிக்க துவங்கிவிட்டார்.

முன்னதாக கம்பர் சமாதியை பார்த்துவிடலாம் என்று சிறிதாக துளிர்விட்டிருந்த நம்பிக்கையிலும் "கொம்பன்" ஆடுகளை மேயவிட்டுக் கொண்டிருந்தார். ஒருவழியாக சிவகங்கை பேருந்து நிலையம் வந்தடைந்தோம்.  அடுத்தது நாட்டரசன் கோட்டை செல்லும் பேருந்திற்காக காத்திருந்தோம். அங்கிருந்த இன்னும் சிலரிடம் விசாரிக்க "தெரியாது" என்பதைத் தவிர அவர்கள் வேறு பதில் அறிந்திருக்கவில்லை. இறுதியாக பள்ளி மாணவி ஒருவர் மட்டும் தனக்கு அவ்விடம் தெரியும் என்று கோட்டையில் கொடியேற்றினார்.

சிவகங்கையிலிருந்து வெகுசில பேரூந்துகளே நடராசன் கோட்டைக்குள்ளே செல்லும், பிற வூர்திகளில் ஏறினால் முக்கிய சாலை பிரியும் இடத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் வரை உள்ளே நடக்க வேண்டும். ஊருக்குள்ளே செல்ல அடுத்த வண்டிக்கு இன்னும் இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்பதால் முக்கிய சாலை பிரியும் இடத்தில் இறங்கி நடக்கத்துவங்கினோம்.  தோராயமாக இரண்டு கிலோமீட்டர்கள் கடந்த பிறகு அங்கோர் நவீன குடிலைக் கண்டோம் அதுதான் நாட்டரசன் கோட்டையின் பேருந்து நிலையம் என்பது பின்னர் தெரிவிக்கப்பட்டது.

அருகிலேயே இரண்டு "மூன்று சக்கரத் தேர்கள்" நிறுத்திவைக்கப் பட்டிருந்தன, தேரோட்டிகள் பயணிகளுக்கு காத்திருந்தனர். அதிலொன்றில் ஏறினோம் கைகால்கள் முளைத்த கனிவான உள்ளூர் வரைபடமாக ஓட்டுனர் கம்பரின் சமாதிக்கு எங்களை அழைத்துக்கொண்டு சென்றார். முதல் பலகை எங்களை அன்புடன் வரவேற்றது. 





  


கதவைத் திறந்து உள்ளே சென்றபொழுது, ஓடுகள் வேயப்பட்ட கட்டிடம் அதில் யாருமில்லை. தொடர்ந்து உள்ளே சென்றபொழுது சற்று வயது முதிர்ந்தவர் எதிரேவர, நாங்கள் வந்ததன் காரணத்தை விளக்க தொடந்து உள்ளே செல்லுமாறு கூறினார்.





இந்த கட்டத்தின்னுள்ளேதான் கவிராசர் மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். 

கீழ்க்காணும் புகைப்படத்தில் எனதருகில் இருபவர் திரு.பாலகிருஷ்ணன், நீண்டகாலமாக கம்பர் சமாதியின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.    



அவரிடம் பேசியபோது கிடைத்த கூடுதல் தகவல்...  

நடராசன் கோட்டையில் மட்டுமல்ல, அருகிலிருக்கும் பிற ஊர்களிலிருந்தும் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர், முதலில் இச்சமாதியைத் தம்மக்கள் சுற்றிவரும்படி செய்கிறார்கள். பிள்ளைகள் பிறந்தவுடன் சேனை வைக்கும் பொழுது கம்பர் சமாதி மண்ணையும் அதனோடு கலந்து வைக்கும் வழ்க்கு இன்றுமுண்டு. அப்படிச் செய்வதால் தம் மக்களும் கம்பரைப்போல்   கல்வியிற் பெரியவராய் இருக்க வேண்டுமென்பது பெற்றோர் கருத்து

பிறகு ஏன் உள்ளூர் மக்களுக்கே கம்பரின் சமாதி குறித்து சரியாக தெரியவில்லை என்ற கேள்விக்கு அவரிடம் விடையில்லை.

அவரிடம் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவு கீழே...



படங்கள் உதவி: ராஜேஸ்வரி அருண்