cookie

Sunday, November 11, 2012

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

       
1997 என் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டு, நம் சுதந்திர இந்தியாவின் பொன் விழா ஆண்டும் கூட. என்னை எப்படியாவது ஒரு பொறியாளராக மாற்றிட தன்னால் முடிந்த அனைத்து யுத்திகளையும் என் தந்தை முழு முயற்சியுடன் செய்து விட்டு என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

காலை 
     07:00 முதல் 08:00 வரை கணக்கு 
     08:00 முதல் 09:00 வரை இயற்பியல் 

என கூடுதல் பயிற்சி வகுப்புகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து காலை உணவு சாப்பிட்டு முடித்து 09:20 மணிக்கு பள்ளிக்கு செல்வேன். 

மாலை 
   06:00 முதல் 07:00 மணி வரை வேதியல்  

என்னுடைய கணக்கு மற்றும் இயற்பியல் பயிற்சி வகுப்பு பேராசிரியர்கள் என் தந்தை பணி புரியும் அதே கல்லூரியில் தான் பணி புரிந்தார்கள் என்பதால். அன்றைய வகுப்பில் நான் புரிந்த சாகசங்களை அன்றைய தினமே என் தந்தையிடம் சுட சுட தெரிவித்து விடுவார்கள். அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை நான் விளக்க தேவை இல்லை (புரியாதவர்கள் இங்கே செல்லவும் ).

பள்ளியில் எனக்கு வகுப்பு எடுக்கும் அதே ஆசிரியரிடம் தான் வேதியல் கூடுதல் வகுப்பிற்கும் சென்றேன். வேதியல் ஆசிரியர் மிகவும் நல்லவர். மாதா மாதம் அவருக்கு கட்டவேண்டிய கப்பம் சரியாக கட்டிவிட்டால் வேறு எதையும் கண்டு கொள்ள மாட்டார். வருட இறுதில் செய்முறை தேர்வில் 50 மதிப்பெண் கண்டிப்பாக போட்டுவிடுவார். 

அங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் இன்னும் ஒரு படி மேலே போய், தன்னிடம் கூடுதல் பயிற்சி வகுப்பு படிக்காத மாணவர்களுக்கு Internal மதிப்பெண் "20" போடப் போவது இல்லை என்றே பகிரங்கமாக அறிவித்து விட்டார். கடைசி ஒரு மாதம் அவருக்கும் கப்பம் கட்டினேன்.

கூடுதல் பயிற்சி வகுப்புக்கு போகாதது "தமிழ்" பாடத்துக்கு மட்டும் தான். பாவம் தமிழ் ஆசிரியர் கூடுதல் வருமானத்திற்கு வழியில்லமல் போய் விட்டது.     

கணிதம் மற்றும் இயற்பியல் தொல்லைகள் முழு ஆண்டுத் தேர்வு முடிந்த பின்பும் ஒரு மாதம் தொடர்ந்தன. பொறியியல் படிப்பிற்க்கான நுழைவுத் தேர்வு முடிந்தவுடன் அதோடு இந்த தொல்லைகளும் முடிவுக்கு வந்தன. சரியாக ஒரு மாதம் என் மனம் போன போக்கில் மகிழ்ச்சியாக இருந்தேன். 

அன்று தேர்வு முடிவுகள் வெளியாயின. 1100 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால்  என் பெற்றோர்கள் செய்திதாளில் என்னுடைய தேர்வு எண்னை தேடவில்லை. மதிப்பெண் பட்டியலை பெறுவதற்காக மறுநாள் பள்ளிக்கு சென்று காத்திருந்தேன். காலை பத்து மணியளவில் பள்ளி அலுவலகத்திற்கு முன்பு உறங்கிக் கொண்டிருந்த மரப் பலகையில் மதிப்பெண் பட்டியல் ஒட்டப்பட்டது. ஆர்வமுடன் சென்று பார்த்தபோது, என் பெயரருகே  "சாத்தான் எண்" தலை கீழாக உறங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த அரை மணியில் மதிப்பெண் பட்டியல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஏதாவது அச்சுப் பிழையாக இருக்கலாம், நிச்சயம் மதிப்பெண் பட்டியலில் வேறு மதிப்பெண் இருக்கும் என நம்பி, நடுங்கி, வரிசையில் நின்றேன். வேறு மதிப்பெண் வேண்டு மென்றால் வேறொருவருடைய மதிப்பெண் பட்டியலைத்தான் தர வேண்டும் என்பதைப்போல் அதே சாத்தான் மீண்டும் மிரட்டியது.

வேறு வழியில்லாமல் மதிப்பெண் பட்டியலை வங்கிக் கொண்டு என்னுடைய வீட்டுக்கே சென்றேன். என் புறநானுற்றுத் தாய், நான் புற முதுகு காட்டித் திரும்பியுள்ளேன் என்பதை அறியாமல் என்னை வரவேற்க ஆர்வமுடன் காத்திருந்தார். எத்தனை மதிப்பெண் வாங்கியுள்ளேன் என்ற கேள்வி அம்மாவிடம் இருந்து வரும் முன்பு, நானே முந்திக் கொண்டு "எதிர் பார்த்ததை விட கொஞ்சம் குறைஞ்சி போச்சு" என்றேன்.

"குறைஞ்சி" அல்ல சுத்தமாக "தேஞ்சே" போச்சு என்பதை பட்டியலை பார்த்து புரிந்து கொண்டார் என் அம்மா. அனைவரும் காத்திருந்தோம் என் தந்தையின் வரவுக்காக. சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த என் தந்தை, என் அம்மா முகத்தில் "பயக்" கலையையும், என் முகத்தில் "சவக்" கலையையும் கண்டு  நான் அள்ளிக் கொண்டுவந்த மதிப்பெண் என்ன என்பதை புரிந்து கொண்டார்.

அடுத்த ஒரு மணி நேரம் எங்கள் வீட்டில் "பேசும் படம்" ஓடியது.

எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்று விட்டார் அப்பா. திரும்பி வந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொண்டு அப்போதே பெட்டியை கட்டி, சித்தி ஊருக்கு என்னை அனுப்பி விட்டார் அம்மா.

ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு நான் திரும்பி வந்த போதும் நிலைமையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. அம்மா பலமுறை என்னுடைய விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டும் அப்பா தீவிரமாக மறுத்து விட்டார். அதற்க்கு அவர் கூறிய காரணம். "இவன் கண்டிப்பா fail தான் ஆகிருப்பன்,. பாவம்னு Pass Mark போட்டிருப்பாங்க. மறுபடியும் apply பண்றது waste".

சில நாட்கள் சென்றது, என் நண்பர்கள் அனைவரும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். நான்  மட்டும் வீட்டில். கல்லூரி துவங்கி 20 நாட்கள் சென்ற பிறகு ஒரு நாள் என்னை கல்லூரிக்கு வரச் சொன்னார் அப்பா ( அவர் பணிபுரியும் அதே கலை கல்லூரிக்கு). "சிபாரிசு" எந்த மொழியில் இருந்து வந்திருந்தாலும் அது அவருக்கு பிடிக்காத வார்த்தை தான். என்ன செய்ய நான் மகனாக பிறந்த பிறகு அவருக்கு வேறு வழியில்லாமல் போனது.

இயற்பியலில் நான் அதிக ( மற்ற பாடங்களை ஒப்பிடும் போது ) மதிப்பெண் பெற்றிருந்ததால் அதே பிரிவில் இளம்கலை முதல் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன் (குருவியின் தலையில் பனம் பழமல்ல, பலாப்பழம்).

நிறைய அறிவுரைகளும், கொஞ்சம் (அக்கறையுடன்) மிரட்டல்களும் துறை தலைவரிடம் இருந்துவந்தது (இயற்பியல் துறை தலைவர் என் தந்தையின் நலம் விரும்பி).

ஓரளவு சுமாரான படிப்போடு, சிக்கல் ஏதும் இல்லாமல் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று  முதல் பருவத் தேர்வில் தேறி விட்டதால் கல்லூரிக்கு செல்ல "TVS-CHAMP" (அக்காவுக்காக வாங்கியது) கொடுத்தார் அப்பா, அதோடு   சில அறிவுரைகளும் வழங்கினார்.

இயற்பியல் பிரிவில், கணக்கும் ஒரு பாடமாக சேர்க்கப் பட்டிருந்தது. அதே போல் வேதியல் பயிலும் மாணவர்களுக்கும் கூடுதல் பாடமாக கணிதம் இருந்தது. அதனால் அந்த கணக்கு பாடத்திற்கு மட்டும் இயற்பியல் மற்றும் வேதியல் பிரிவு மாணவர்கள் சேர்ந்து ஒரே வகுப்பில் அமர்வோம். அவ்வாறு வந்தவர்களில் எனக்கு நண்பனானவர் தான் "சங்கர்" (பெயர் மாற்றப் படவில்லை).

சங்கர் "ஸ்ரீனிவாச ராமானுஜம்" அவர்களின் பக்கத்து வீட்டுப் பையன் போலும். கணக்கில் புலி. கோவில்பட்டிக்கும் ஈரோடுக்கும் (ராமானுஜம் அவர்கள் பிறந்த ஊர்) தொலைவு அதிகம் என்பதால் எனக்கு கணக்கு "கணக்க" ஆரம்பித்தது. எவ்வளவு முயன்றாலும் 75 க்கு 45 க்கு மேல் வாங்கியதில்லை. 

"முதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு" என்று பள்ளியில் படித்ததாக நினைவு. அதன்படி இருந்து, கணக்கு பாடங்களில் சில பல முறைகள் சங்கரிடம் தெளிவு பெற்றுள்ளேன்.          

நாட்கள் இவ்வாறு செல்ல, என்னைப் பற்றி என் தந்தைக்கு முன்பு இருந்த கருத்து மெல்ல மெல்ல நல்ல விதமாக மாறிக் கொண்டு வந்தது (எப்படி என்று கேட்டல் தெரியாது, ஒரு உள்ளுணர்வுதான்) .          

இந்த சமயத்தில் வந்தது கல்லூரி ஆண்டு விழா...

எப்போதும் கல்லூரி ஆண்டு விழா வெள்ளிக் கிழமை மாலை தான் நடக்கும். அதேபோல் 1997 ம் ஆண்டும் ஒரு வெள்ளிக் கிழமை நடைபெற இருந்தது. மாணவர்கள் எவரும் அன்றைய தினம் வகுப்புகளுக்கு வர வேண்டியதில்லை. மாலை 06:00 மணிக்கு விழாவுக்கு நேராக வந்தால் போதுமானது.

என் தந்தை வழக்கம் போல காலையில் சென்றுவிட மாலைக்காக நான் காத்திருந்தேன். நானும் எனது அக்காவும் அன்றைய தினம் வீட்டில் இருந்ததால், மதிய உணவும் சேர்த்து கலையில் சமைக்கப் படவில்லை அதனால் என் தந்தைக்கு மதிய உணவு நான் எடுத்துச் சென்றேன். எங்கள் வீட்டில் இருந்து கல்லூரி கிட்டத்தட்ட 7 k.m. "TVS CHAMP" பை எடுத்துக் கொண்டு, உணவுப் பையை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன். 

கல்லூரிக்கு செல்லும் வழியில் இருக்கும் ஒரு  பேருந்து நிறுத்தம் "அரச மரம் நிறுத்தம்", அங்கு பேருந்துக்காக காத்திருந்தார் "சங்கர்".  நண்பன் காத்திருப்பது தாளாமல் அவரையும் உடன் அழைத்துச் சென்றேன். கல்லூரியில் சங்கரை இறக்கி விட்டு விட்டு, மதிய உணவை என் தந்தையிடம் கொடுத்து விட்டு திரும்பி கல்லூரியை விட்டு வெளியே செல்லும் வழியில் மீண்டும் சங்கர். என்ன என்று விசாரிக்க, கல்லூரியில் இந்த நேரம் மற்ற நண்பர்கள் யாரும் இல்லை அதனால் தன்னை மீண்டும் அதே "அசர மரம்" நிறுத்தத்தில் விட்டு விடும் படி கேட்டுக் கொண்டார். சரி என்று சங்கரும் நானும் அரசமரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தோம். 

புறப்பட்ட சிறிது நேரத்தில் சங்கர் தான் அந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று வற்புறுத்தியதாலும்,தனக்கு நன்றாக வாகனத்தை செலுத்த தெரியும் என்று உறுதியாக கூறியதாலும், "TVS-CHAMP" சங்கரின் வசம் கை மாறியது. முதலில் தடு மாறினாலும் பின்பு சுதாரித்துக் கொண்டு கவனமாக மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்திய சங்கர்,தேசிய நெடுஞ்சாலையை கடந்தவுடன் வண்டியின் வேகத்தை உச்சத்துக்கு உயர்த்தினார்.சில நொடிகளில் வாகனம் கட்டுப்பாடு இழந்து தடுமாறத் துவங்கியது. பதற்றத்தில் செய்வதறியாது இருந்த சங்கர், சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது வண்டியை மோத விட்டு விட்டார். அடிபட்டவர் அங்கேயே விழ, வண்டி சரிந்த நிலையில் சாலையில் உரசிக் கொண்டே சிறிது தூரம் சென்று நின்றது. அதையும் தாண்டி நானும் சங்கரும் விழுந்தோம்.

வண்டிக்கோ, எங்கள் இருவருக்கோ எந்த பெரிய பாதிப்பும் இல்லை. அங்கங்கே சிறிய சிராய்ப்பு காயங்கள் தான். அந்தத் தருணத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அப்போது எனக்கு தெரிய வில்லை. அடிபட்டவரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிடலாம் என்ற முடிவை எடுத்தோம்.          

 பின்பு வீட்டுக்கு சென்ற நான், யாரிடமும் இந்த விபத்து குறித்து எதுவும் சொல்லாமல், வண்டியை வீட்டில் வைத்து விட்டு பேருந்தில் கல்லூரிக்கு சென்று விட்டேன். ஆண்டு விழாவில் மனம் செல்லவில்லை.   மணி சரியாக இரவு 08:10 இருக்கும், என் தந்தை வந்தார். என்னை தேடி காவல் துறையினர் வந்திருப்பதாக கூறினார். என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார். 

மறுநாள் காலையில், காவல் நிலையம் சென்று விசாரித்து விட்டு வந்த என் தந்தை எங்களிடம் புது கதையை கூறினார்.

 "வண்டியை ஒட்டியது நான், பின்னால் உட்கார்ந்து வந்தது சங்கர். சங்கர் காயம் பட்டவர் அருகில் இருந்துள்ளார். காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த காவலர்களிடம், இந்த விபத்து குறித்த மேலே சொன்ன  அனைத்து தகவல்களையும், என்னுடைய முகவரி தெரியாததால் என்னுடைய தந்தை குறித்தும், கல்லூரி குறித்தும் அனைத்து தகவலையும் கூறியது சங்கர்". இதனால் விபத்தின் முழுப் புகாரும் என் மேல் அதனால் என்னை (கைது செய்து) அழைத்துச் சென்று விசாரிக்கவே நேற்று இரவு காவல் துறையினர் நேற்று கல்லூரிக்கு வந்துள்ளனர்.   

"குறிப்பு: TVS-CHAMP என்னிடம் கொடுத்த போது என் அப்பா கூறிய அறிவுரைகளில் முக்கியமான ஒன்று யாருக்கும் வண்டியை இரவல் கொடுக்காதே, நீயும் யாரிடமும் இரவல் வாங்காதே". 

அதன் பின்பு நடந்த சம்பவங்கள்... 

காவல் நிலையம்
       அன்று மாலை நான், எனது தந்தை, மாமா, ஒரு அரசியல் பிரமுகர்  நால்வரும்  காவல் நிலையம் சென்று காவலர்களை கவனிக்க வேண்டி இருந்தது.  ஆயிரங்களை வாங்கிக் கொண்டு சம்பிரதாயங்களை முடித்து எங்களை வீட்டுக்கு அனுப்பினார். 

என்னிடம் ஓட்டுனர் உரிமம் கிடையாது...

        சிக்கல்கள் இதோடு முடியவில்லை. மீண்டும் மண்டல போக்குவரத்து அதிகாரியை சந்திக்க வேண்டி வந்தது. அவரும் ஆயிரங்களை வாங்கிக் கொண்டு சில அறிவுரைகளை வழங்கி,முக்கியமான காகிதங்களில் கையெழுத்திட்டு என்னை திரும்ப அனுப்பினார்.

இந்த விபத்து சம்பவம் நடந்ததி லிருந்து சங்கர் என்னிடம் பேசுவது கிடையாது. காவல் நிலையம் செல்லவும், போக்குவரத்து அதிகாரியை சந்திக்கவும் நான் இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டி வந்தது. அப்போது கூட என்ன நடந்தது என்று விசாரிக்ககூட சங்கருக்கு மனமில்லை.

அடிபட்டவருக்கு என்ன ஆயிற்று?

          இதற்கிடையில் அடிபடவருக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க நானும் என் தந்தையும் சென்றிருந்தோம். அவருக்கு ஏற்க்கனவே ஒரு விபத்தில் கால் முறிந்து, இரண்டு மாதங்கள் மருத்துவ விடுப்பு முடிந்து ஓரவுளவு குணமாகி அன்று தான் பணிக்கு திரும்பியுள்ளார்.சங்கரின் தயவாள் மீண்டும் மருத்துவமனைக்கே திரும்பி விட்டார். மீண்டும் முறிந்தது அதே கால் எழும்பு.

வாகன காப்பீடு அப்போது தான் முடிந்துள்ளது

  என்னுடைய வாகனத்திர்க்கான காப்பீடு சமீபத்தில்தான் நிறைவடைந்துள்ளது. இதை நாங்கள் யாரும் கவனிக்க வில்லை. அதனால் விபத்தில் அடிபட்டவருக்கு இழப்பீடு என் அப்பாவின் பணத்தில் தான் கொடுக்க வேண்டும்.     

இந்த பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் என் தந்தை தத்தளிக்க ஆரம்பித்து விட்டார். அந்த கோபம் என்மேல் திரும்பியது....

பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, நான் அதி புத்திசாலியாக  யோசித்து சங்கரிடம் சென்று பேசினேன். இதுவரை இவ்வளவு செலவு ஆகியுள்ளது. எனக்கு அத்தனை பணமும் வேண்டாம் அதில் பாதி கொடுத்தால் கூட போதும், அதனால் உன் தந்தையிடம் இது பற்றி பேசுவாயா? என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் "முடியாது" என்று கூறி விட்டு உடனே அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டார் சங்கர்.
இந்த செய்தி என் அம்மாவின் வாயிலாக என் அப்பாவை அடைய, என் அப்பா நேரடியாக சங்கரின் அப்பாவை சந்திக்க சென்று விட்டார். சங்கரின் அப்பாவும் சரியான பதில் எதுவும் கூறவில்லை ஆனால் சங்கரின் மாமா பாதி பணம் தருவதாக கூறினார்.   

அடுத்து நீதி மன்றம்.

              இதுதான் கடைசி என்று நீதி மன்றத்தையும் பார்த்து விட்டேன். என்னை  நீதி மன்றத்துக்கு வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, என்னுடன் வந்த  காவலர் வேறொரு வழக்கை பார்க்கச் சென்று விட்டார். அதற்கிடையில் மூன்று முறை என் பெயர் அழைக்கப் பட்டுள்ளது. எனக்கு அவர்கள் அழைத்தது கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து வந்த காவலர், "உன்னை அழைத்தார்களா" என்று கேட்க, தெரியாது என்றேன், பதறிக்கொண்டு உள்ளே சென்ற காவலர், அங்கே இருந்த நீதிமன்ற பணியாளரிடம் எதோ சொல்லி மீண்டும் என்னை அழைத்தனர். நாங்கள் உள்ளே சென்ற உடன். நீதிபதி  காவலரிடம் இவ்வாறு கேட்டார். "இவன இங்க திரிய விட்டிட்டு நீ எங்கையா ஊர் மேய போயிருந்த"? (நீதிபதியின் உயர்ந்த உள்ளமும், சொல்வன்மையும் என்னை மிகவும் கவர்ந்தது, இதனால் நீதிபதிகளின் மேல் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் மேலும் பல மடங்காக கூடியது )   

அதற்க்கு எதோ ஒரு பதிலை சொல்லிக் கொண்டிருந்தார் காவலர். அதை சற்றும் கவனிக்காமல் குனிந்து கொண்டார் நீதிபதி.

அடுத்து, விபத்தும் அதன் பின்னணியும் வாசிக்கப்பட்டது. அது எனக்கு,  தமிழ் மிகவும் நுணுக்கமான மொழி என்பதை  உணர்த்தியது. "அதிவேகமாக, கவனக் குறைவாக, ஒலிப்பானை ஒலிக்காமல்.." என்று  எதுகை மோனைகளுடன் சம்பவங்கள் எனக்கு எதிராக புனையப்பட்டிருந்தது.

அனைத்திற்கும் "ஆம்" என்ற பதிலை கூறிவிட்டு, நான் ஒப்புக் கொண்ட தண்டனைக்கு அபராதம் கட்டிவிட்டு, நீதி மன்ற பணியாளர்களுக்கும் அன்பளிப்பு வழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தேன். 


நான் செய்த தவறுகள்

1. ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டியது

2. விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.

3. அனைத்திற்க்கும் மேலாக தந்தையின் சொல்லை மீறியது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
        இடுக்கண் களைவதாம் நட்பு. (788)