cookie

Wednesday, September 12, 2012

முதல் நாள் இன்று

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு 
மாடல்ல மற்றை யவை. (400)
(உலகில் அழிவற்ற ஒரே செல்வம் கல்வி மட்டும் தான்) 


மூன்றாவது அகவையை எட்டும் தருணத்தில், கசடறக் கற்று பின்பு அதன் வழி நடக்க, ஆர்யாவின் முதல் முயற்சி இன்று பள்ளியில் (10-Sep-2012).

நாட்கள் எவ்வளவு வேகமாக பயணிக்கின்றன என்பது அவ்வப்போது நினைவுக்கு வருவது இது போன்ற நிகழ்வுகளால் தான்.

மலரும் நினைவு...


1985 ஜூன் மாதம், தேதி நினைவில் இல்லை...

வழக்கம் போல 09:00 மணிக்கு தொடங்கும் அலுவலகத்திற்கு, வெளி வேலை முடித்து விட்டு 08:10 மணிக்கு ஒரே படப்பிடிப்போடு (பட படப்போடு) வீட்டுக்கு வரும் என் தந்தை 20 நிமிடத்துக்குள் குளித்து, சாப்பிட்டு, உடைகளை மாற்றி, அம்மாவுடன் ஒரு சின்ன பெரிய சண்டையும் போட்டுவிட்டு 08:30 மணிக்கு அலுவலகத்திற்கு கிளம்பி விடுவார். அம்மாவிடம் பாதியில் விட்ட சண்டையை மிதி வண்டியிடம்  தொடர்வார். தன்னால் முடிந்த வரை மிதி மிதி என்று மிதித்து, வருகை பதிவேடை மூடி உள்ளே வைக்க வரும் வேலையாளை ஒரு நொடி முந்தி கையெழுத்தை பதித்து விடுவார். என்றைக்கு என் தந்தை இந்த ஒரு நொடியை தவற விடுவார் என காத்துக் கொண்டிருந்தார் அந்த வேலையாள்.

இவ்வளவு இறுக்கமான அட்டவணை இடம் கொடுக்காததால் அன்றைய தினம் என்னை பள்ளியில் சேர்க்க என் தந்தையால் வர இயல வில்லை. கிட்டத்தட்ட ஐந்து வருடம் அம்மாவின் காலடி மட்டுமே உலகம் என்று இருந்த என்னை தாத்தா பாதுகாப்புடன் லாயல் மில் துவக்கப் பள்ளியின் தலை வாசலுக்கு இழுத்து வந்தார். அதுவரை உயிரைப் போல் எங்கிருக்கிறது என்று சொல்ல முடியாதபடி மனதுக்குள் இருந்த பயம், வாசலை அடைந்தவுடன் இரத்தம் போல் உடல் முழுவதும் வியாபித்து தாறு மாறாக ஓடியது. வாந்தி, மயக்கம் என அனைத்து உடல் உபாதைகளும் ஒரு நொடியில் என் உடலில் வாடகை தராமல் குடியேறின.

தாத்தா விடம் அவசரமாக "இரண்டு" க்கு போக வேண்டும் என்று கூறியும், காலையிலேயே மூன்று முறை சென்று விட்டதால் இன்றைய ஒதுக்கீடு முடிந்து விட்டது என்று கூறி என் கோரிக்கையை நிராகரித்து விட்டார். என்னைப் போல் அப்பாவி சிறுவர்கள் பலர், வழுக்கட்டாயமாக தங்களை  கடத்தி வந்த பெற்றோர்களுடன்  வரிசையில் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களோடு நானும், என் கல்விக் கண்ணை திறந்து வைக்க வந்ததாக எண்ணிக் கொண்ட தாத்தாவும். வழக்கமாக வரிசை மெல்லவே நகர்ந்தது. ஒவ்வொரு குழந்தையும் சேர்க்கை முடிந்தது பள்ளிக்கு உள்ள சென்றவுடன், அவர்களை அழைத்து வந்த பெற்றோர் முகத்தில் கடமை முடிந்த வெற்றிக் களிப்பை கண் கூடாகக் காண முடிந்தது. இப்போது என் தாத்தாவின் முறை.

என்னுடைய பிறந்த நாளை கேட்ட அந்த உயரமான ஆசிரியருக்கு, 1980 ம் வருடம் நவம்பரில் ஒரு தேதியை சொன்னார் தாத்தா. இன்னும் 5 வயது முடியாததால்  இந்த வருடம் பள்ளியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்  ஆசிரியர். என் மீது கடவுளுக்கு இவ்வளவு அன்பா? வேண்டுதல் உடனே நிறைவேறி விட்டது, உடனே வீட்டுக்கு போகலாம் என்று எண்ணிய என் எண்ணத்தில் அடுத்த கணமே Paul Tibbets ஆக மாறி என் தாத்தா "Little Boy" யை வீசினார். 

என் பிறந்த தேதி எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி "May" மாதத்திற்கு மாற்றப் பட்டு, என் பள்ளி வாழ்க்கையின் முதல் நாள் துவங்கியது. அன்றைய தினம் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் சற்று அமைதியாகவே கழிந்தது. இரண்டு, மூன்று, நான்கு என நாட்கள் மட்டும் நகர்ந்தன. பள்ளியின் மீது எந்த விதமான ஈர்ப்பும் வரவில்லை. Cuticles நிறைந்த தாமரை இலையும், நீரும் போலவே உறவற்று இருந்தோம். 

அப்போது தான் அந்த ஆபத் பாந்தவன், அநாத ரட்சகன், ஏழைகளின் விடிவெள்ளி என் உயிர் தோழன் "தங்கராஜ்"ன் "நட்பு" எனும் வரம் கிடைத்தது. தங்கராஜ் எங்கள் முதல் வகுப்பில் மூத்த குடிமகன். எதையும் அதன் ஆணிவேர் வரை சென்று பார்க்கும் ஆர்வம் உள்ளவர். முதல் ஆண்டில் தங்கராஜின் தரிசனம் போதுமான அளவு ஆசிரியர்களுக்கு கிடைக்கததால், அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி இரண்டாம் ஆண்டும் அதே முதலாம் வகுப்பில் தனது சேவையை தொடர்ந்தார் தங்கராஜ்.   

Thomas Babington Macaulay ன் கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டு மிகவும் வருந்தினார் தங்கராஜ், அதன் காரணமாக பள்ளியை துறந்து இயற்கையிடம் பாடம் கற்க ஆயத்தமானார். அடியேனின் உள்ளக் கிடக்கையை அறிந்து, அவரின் அறிவுத் தாகம் தீர்க்கும் புனிதப் பயணத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டார்.

நான் முதல் வகுப்பு படித்த அதே பள்ளியில் தான் என்னுடைய மூத்த சகோதரி இரண்டாம் வகுப்பில் படித்தார். வகுப்பில் உள்ள நான்கு சுவர்களுக்குள்ளும், சில அச்சடித்த காகிதங்களுக்குள்ளும் தன்னுடைய உலகத்தை சுறுக்கிக் கொண்டவர். எங்களின் அறிவுத்தாகம் என் அக்காவுக்கு கிடையாது. இதுவே எங்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. பல நேரங்களில் ஐந்தாம் படையாக மாறி எங்களின் உன்னத தேடுதலை பல முறை தடை செய்துள்ளார். அதன் காரணமாக காலை பள்ளி செல்லும் போது அக்காவுடன் செல்வேன். இடைவேளையில் சரியாக அக்கா இருக்குமிடம் சென்று அவரின் கவனத்தை கவர்ந்து விடுவேன். அதே போல் மதியம் உணவு இடை வேளையில் அக்காவுடன் சேர்ந்து வீட்டுக்கு சென்று விடுவேன். மாலை வீடு திரும்பும் போதும் அவருடன் இணைந்து கொள்வேன். இடைப்பட்ட அனைத்து தருணங்களிலும்

ஒவ்வொரு தெருவிலும் எத்தனை வீடுகள் இருக்கின்றன.

எவ்வளவு மக்கள் வசிக்கிறார்கள்.

எத்தனை வண்டிகள் ஓடுகின்றன.      

இது போன்ற உலகத்திற்கு தேவையான புள்ளி விவரக் கணக்கெடுத்து சமூக சேவை செய்வோம். எவ்வளவுதான் சரியாக திட்ட மிட்டாலும் சுறா மீனைப் போன்ற மோப்ப (4 km அப்பால் உள்ள இரையை உணரும் மோப்ப சக்தி சுறாவுக்கு உண்டு) சக்தி கொண்ட என் அக்காவிடம் இருந்து என்னால் தப்ப முடிய வில்லை. எங்களின் இரகசிய நிறுவனம் குறித்த செய்தி வீட்டின் தலைமை செயலகத்தை அடைந்தது.

மறுநாள் பள்ளிக்கு போகும் முன்பு அம்மா எச்சரிக்கை மணி அடித்தார். இனிமேல் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும், எப்போது வேண்டுமானாலும் என் தந்தை ஆய்வுக்கு வரலாம் என்று.

காற்றுக்கென்ன வேலி? என்று வழக்கம் போல நானும், எனது குரு தங்கராஜும் வீதி உலாவுக்கு கிளம்பினோம். அன்று பள்ளியின் அருகிலேயே இருந்த வீட்டில் திருமணம். புது மணத் தம்பதிகள் எண்களின் வருகைக்காக காத்திருந்தது போல் இருந்தது. உள்ளே சென்று திருமண விழாவை சிறப்பித்தோம். அவர்களை வாழ்த்த வயதில்லாததல் வணங்கி விட்டு வெளி ஏறினோம்.

நங்கள் அந்த திருமண வீட்டை விட்டு வெளியே வரவும், அங்கு என் அப்பா வரவும் சரியாக இருந்தது. நான் செய்வதறியாது விழித்தேன். தங்கராஜ் காலத்தை கடந்த ஞானி என்பதால் எதற்கும் சலனமில்லாமல்  நின்றார். என் அப்பாவின் கண்கள் காட்டிய குறிப்பை உணர்ந்து சைக்கிள் கேரியரில் அமர்ந்தேன். சில நொடிகளில் வீட்டை அடைத்தோம். எங்கள் இருவரையும் பார்த்த என் அம்மாவின் கண்கள் அப்போதே கலங்கின.

அப்பாவின் ஆணைப்படி, அம்மா பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார். தூணோடு ஒட்டி நின்ற என் கைகள் கட்டப்பட்டு நிராயுத பாணியாக நின்றேன். எங்கோ இருந்த நைலான் கயிறு அப்பாவின் கையில் தஞ்ச மடைந்தது.

என் முதுகை பலமுறை நைலான் கயிறு முத்த மிட்டது, இறுதியில் சோர்வடைந்த கயிறு தரையில் விழுந்தது. கயிறு பூசை முடிந்தவுடன் மீண்டும் குளிப்பாட்டப்பட்டு சைக்கிள் கேரியரில் ஏற்றப்பட்டேன். நீண்ட நாளைக்குப் பிறகு மீண்டும் வகுப்பாசிரியரை சந்தித்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை 100% வருகைப் பதிவுதான்...


இன்று முதல் நாள் வகுப்பிற்கு ஆர்வமுடன் சென்ற என் மகனை காணும் போது என்னுள் பல கேள்விகள்...