cookie

Sunday, July 26, 2015

இதோ எந்தன் தெய்வம்

சில நாட்களுக்கு முன்பு "கனெக்டிகட்" மாகாணத்தில் "மிடில் டவுன்" எனும் ஊரில் இருக்கும் கோவிலில் நடந்த சம்பவம்.

அன்று ஞாயிறு காலை, கோவிலில் சில பக்தர்களும் பொழுதுபோகாமல் நேரத்தை தொலைக்க வந்தவர்களுமாய் சில பலரும் அங்கிருந்தனர். எனினும் கூட்டம் அதிமாக இல்லை. அப்போது கோவில் வாசலில் இருட்டை போர்த்திக் கொண்டு வந்து நின்றது புத்தம் புதிய "நிசான் முரானோ". அது தனது சிறகுகளை மெல்ல விரிக்க அளவான, அழகான குடும்பம் பெருமையுடன் அதிலிருந்து தரையிறங்கியது. மனைவி, அப்பா, அம்மா...

மனைவி, மகிழ்வுந்தின் பின் இருக்கையில் சென்று பாதுகாப்புப் பட்டையை விலக்கி சில மாதங்களேயான தனது இளம் நகலை வெளியில் கொணர்ந்தார். கடவுளை கோவிலுக்கு வெளியிலேயே கண்ட பேரின்பத்தில் ஆனந்த தாண்டவமாடியது மழலை. 

அனைவரும் இறங்கிய பின்பு கணவன் வாகனத்தை சரியாக நிறுத்தியுள்ளோமா என மீண்டும் மீண்டும் பரிசோதித்து கொண்டிருக்கும்போது, "எல்லாம் சரியாத்தான் இருக்கு, வா(ங்க) போகலாம்" என்று  மனைவி தெலுங்கில் அழைக்க(?), வெளியேறினார் கணவன். அனைவரையும் வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, கணவன் மட்டும் கோவிலுக்கு உள்ளே சென்று சில நிமிடங்கள் கழித்து கடவுளிடம் பேசும் மொழிபெயர்ப்பாளரை உடன் அழைத்து வந்தார். அட்சரேகை, தீர்கரேகை, மகரரேகை மற்றும் கடகரேகைகள் தாறுமாறாக அவரின் நெற்றில் ஓடி, அண்டங்களின் காவலரின் காவலர் இவர்தான் என்பதை தெளிவாக உணர்த்தின.

"மொழி" வல்லுநரை கண்டதும், காத்திருந்த குடும்பத்தினர் அனைவரும் பயபக்தியுடன் வணங்கினர். அவரும் தலைதாழாமல் ஏதோ செய்தது வணங்குவது போல் தெரிந்தது. புதிய வாகனத்தின் பெயர் ராசி நட்சத்திரம், குலம், மோத்திரம் அனைத்தையும் கேட்டுக்கொண்டு பின்பு கடவுளுக்கு புரிந்த மொழியில் ஏதோ  பிதற்றினார்.  நடுவுல, நடுவுல நமக்கும் புரியும் "நிசான்", "முரானோ", மானே தேனே பொன்மானே என்று சேர்த்து கொண்டார். 

தங்கள் பெயரையும், வாகனத்தையும் கடவுளிடம் பரிந்துரை செய்ததற்காக அந்தக் குடும்பம் ஏழேழு பிறவிக்கும் அந்த மொழி பெயர்ப்பாளரிடம் நன்றி கடன்பட்டது புரிந்தது. இனி அந்த வாகனம் பெட்ரோல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்ஜின் ஆயில், உதிரிப்பாகம் பழுதானால் உதிரிப்பகத்தின் விலையை விட இரண்டு மடங்கு அதை மாற்ற கேட்கும் நியாமான பழுது நீக்கும் அமெரிக்க நிறுவனங்களின் தன்னிகரற்ற சேவை இவை எதுவும் இல்லாமல் பல தலைமுறைக்கும் ஓடும்.

இந்த கடவுளின் ஒப்பந்தம் குறித்து முன்பே தெரியாமல், அதிக்கப்படியாக மூவாயிரம் அமெரிக்க டாலர்கள் செலுத்தி, மூன்று வருட கூடுதல் உத்திரவாதம் மற்றும் AAA உறுப்பினர் அட்டை என தேவையில்லாமல் செலவு செய்தது. கணவருக்கு மிகவும் மனவேதனை அளித்தது. 

சில நிமிடங்களில், கடவுளிடம் உரையாடலை முடித்து விட்டு. பூ உலகிற்கு திரும்பிய "மொழி" பெயர்ப்பாளர். மனித மொழியில் ஏதோ கணவரிடம் கூறினார். உடனே கணவர், கால்ச் சட்டையின் பின் பையில் இருந்த பணப் பையை எடுத்து அதிலிருந்து 18வது அமெரிக்க அதிபரின் படம் பதிக்கப் பட்டிருந்த காகிதத்தை தட்டில் வைத்தார். அந்த காகிதத்தை சாதாரணமா பார்த்துவிட்டு, தட்டில் வாடிப்போயிருந்த மலர்களில் சிலவற்றை கைமற்றினார். பணக்கார நாடல்லவா (?) அதனால் கொழுப்பு நிறைந்த முந்திரியும், பாதாமும் கைநிறைய, பிரசாதமாக கடவுளிடம் வரம் பெற்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

ஒருவழியாக கடவுளின் ஒப்பந்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இது விடைபெறும் தருணம். கடவுள் வரம் கொடுத்தாலும், இவர்களிடம் வரம் கிடைக்காதே என்ற எண்ணமோ, என்னவோ தெரியவில்லை. கணவர், மொழி பெயர்ப்பாளரின் காலில் விழுந்தார். குழந்தையை மாமியாரிடம் கைமாற்றிவிட்டு மனைவியும் கணவன் வழி தொழுதார். இப்போது குழந்தை பாட்டியின் கையில்  சிரித்துக் கொண்டிருந்தது.

விழுந்து எழுந்த மனைவி மாமியாரிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அப்பாவும் மொழி பெயர்ப்பாளரின் காலில் விழுந்தார். அவரைத் தொடர்ந்து அம்மாவும். அப்பாவின் வயது, மொழி பெயர்ப்பாளரின் வயதை விட குறைந்தது 10தாவது அதிகமாக இருக்கும். அப்பாவும் யோசிக்க வில்லை, மொழி பெயர்ப்பாளரும் தடுக்க வில்லை. 

அம்மாவின் கையில் குழந்தை சிரிக்க வில்லை. இதை காண எனக்கும் சகிக்க வில்லை, நான் புறப்பட்டேன்...