cookie

Friday, April 19, 2013

A for அம்மா


புவி ஈர்ப்பு விசையை விளக்கிய நியூட்டன் கூட பணமீர்ப்பு விசையை விளக்க வில்லை. வர்க்க பேதம் ஏதும் இல்லாமல் அனைவரையும் எல்லையில்லாத ஆற்றலுடன் தன்னை நோக்கி வசீகரிக்கும் உலகின் உண்ணத விசை. அதன் ஆற்றலுக்கு நானும் தப்பவில்லை.

ஆங்கில வழிக்கல்வியே பெற்றோருக்கு கனவாக இருந்தபோதும், கல்விக்கண் திறந்தவர் பெயரில் இயங்கும் பள்ளிகளில் கூட கட்டணம் கடுமையாக இருந்ததால், வீட்டுக்கு அருகில் இருந்த அரசு உதவி பெறும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் தஞ்சம் அடைந்தேன்.

ஆங்கிலம் எப்போதுதிருந்து என்னை மிரட்டத் தொடங்கியது என்று சரியாக நினைவில்லை, ஆனால் முதல் நடுநிலை (6 -8) வகுப்பில் விடுப்பு விண்ணப்பத்தில் தொடங்கியதாக நினைவு.மிகவும் எளிதான  விண்ணப்பத்தை ஆங்கில ஆசிரியை (பள்ளிக்குப் புதிதாக வந்தவர்) கரும்பலகையில் எழுதிவிட்டார். அப்போது பசுமரத்தாணி போல என் மூலையில் இறங்கியதுதான் "As I am suffering from fever"(இன்றுவரை அதுதான் என்னுடைய எல்லா விடுப்பு விண்ணப்பத்திற்கும் மூலம்).

மறுநாள் வீட்டுப்பாடமும் கொடுத்து விட்டார். "அண்ணனின் திருமணதிற்கு செல்வதற்காக விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்". ஆங்கிலப் புத்தகம் முழுவதும் தேடியும் அண்ணன் திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை. என்ன செய்ய? இருக்கும் கொஞ்ச மூளையும் கசக்கிப் பிழிந்து காகிதத்தில் கொட்டிவிட்டேன்.

அன்று முதல் வகுப்பே ஆங்கிலம் தான். அகர வரிசையில் என் பெயர் முதலில் வருவதால், ஆசிரியை கையில் தானாக வந்து சரணாகதி அடைந்தது நான் எழுதிய விடுப்பு விண்ணப்பம்.அதைப்  படிக்கத் தொடங்கிய ஆசிரியை என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அனைவருக்கும் கேட்கும் வகையில் உரக்க வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

"As i am suffering from my brother's marriage" என்று போனது அந்த விண்ணப்பம். அதை வாசித்த போது, ஆசிரியை மாணவர்களிடம் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்திருப்பார் போல, ஆனால் வகுப்பு அமைதியாக இருந்தது. மற்ற மாணவர்கள் சலமில்லாமல் புத்தர் போல காட்சியளிப்பது ஏன் என்ற காரணம் புரியாமல் மற்ற விண்ணப்பங்களையும் விசாரணைக்கு ஆட்படுத்திய போதே அவருக்கு உண்மை புரிந்தது. அதிக ஓட்டுக்களைப் பெற்று முன்னணியில் இருந்தது நான் எழுதிய விண்ணப்பமே. எங்களின் சமயோசித புத்தியை பாராட்டி ஆளுக்கு 5 பிரம்படிகளை உள்ளங்கையில் பரிசாக வழங்கினார் (பிரம்பும் எங்கள் பணத்தில் வாங்கியது).

ஆங்கிலத்தில்தான் அரைகுறை என்றால் தமிழையும் போற்றிப் படிக்கவில்லை. வாத்தியாருக்கு அடுத்தபடியாக வசைச்சொற்கள் வாங்குவது வள்ளுவர்தான். அவரின் பெரும்பாலான குறள்கள் புரியவில்லை, அதன் சுவையை எவரும் புரியும் படி எங்களுக்குப் புகட்டவில்லை.
     
வருடங்கள் ஓடியது ஆனால் மூளையின் ஆங்கில மொழிப்பகுதி மட்டும் அப்படியே வளராமல் நின்று விட்டது. பொதுத் தேர்வுகளில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்க்கான சில வழிமுறைகளை மட்டும் கண்டறிந்து கொண்டதால் எந்த பொதுத்தேர்வினிலும் தவறியதில்லை.

பள்ளியில் ஆங்கிலப் பாடம் மட்டும் தான் ஆங்கிலம், கல்லூரிக்குச் சென்ற பிறகு தமிழ்ப் பாடம் தவிர்த்து அனைத்தும் ஆங்கிலம். என்னைப் போன்ற மாணவர்களின் மொழிப் புலமையை புரிந்துகொண்டு பெரும்பாலான விரிவுரையாளர்களும், பேராசியர்களும் தமிழ்வழி ஆங்கிலக்கல்வி போதித்து தமிழ்த் தொண்டாற்றினர். இதன் உச்ச கட்டம் ஆங்கிலப் பேராசிரியர்களும் இந்த தமிழ்த் தொண்டில் தங்களை இணைத்துக் கொண்டதுதான்.

கல்லூரி பேராசிரியர்களின் தமிழ்த்தாகத்திற்கு முதுகலை பயிலும் போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.கல்விக்கு மட்டுமல்ல கருத்துப் பரிமாற்றத்திற்கும் கட்டாயமாக்கப் பட்டது கடல் கடந்து வந்த மொழி.

ஆங்கிலத்தில் நடக்கும் (seminar)கருத்துப் பரிமாற்ற வகுப்பில் பங்கேற்கவில்லை எனில் இந்தியர்கள் கண்டுபிடித்த அதே எண்தான்  (zero ) மதிப்பெண்ணாகும் என்ற கட்டாயத்தில் 3 மணிநேர தயாரிப்பிற்குப் பின் 35 நிமிட ஆங்கிலம் முழுமதிப்பெண் வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து மூன்று வார்த்தைகள் பேசப் பயந்த எனக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. சரியோ தவறோ எதற்கும் அஞ்சவில்லை.ஆங்கிலக் கால்வாயை குற்றாலீஸ்வரனுக்கு அடுத்து நான்  கடந்தது போல உணர்ந்தேன். என்னுள் புதைந்திருந்த அந்நியன் வேகமாகவும் விரைவாகவும் வெளிவரத் தொடங்கினான். நாட்கள் நன்றாக நகர்ந்து கொண்டிருக்க பணியில் சேர்ந்தபிறகு  Onsite வடிவத்தில் வந்தது ஆபத்து.

2008 மே மாதம், பல கனவுகளோடு விமானத்தில் ஏறினேன் அமெரிக்காவிற்கு.விமான நிலையத்திலேயே தொடங்கியது சிக்கல். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அமெரிக்க கண்டத்திற்கு குடிபெயர்ந்த, வஞ்சனையில்லாமல் குறுக்கும், நெடுக்கும் வளர்ந்த அந்த விமான நிலையப் பெண் அதிகாரி ஏதோ கேட்டார், புரியவில்லை மீண்டும் கூறுங்கள் என்றேன். மீண்டும் அதையே அதே சுவரத்தில் கேட்டார் (அதைத்தானே முன்பு புரியவில்லை என்றேன், மீண்டும் அதையே கேட்டால் புரிந்து விடுமா?), இம்முறையும் புரியவில்லை என்றேன். பூமாதேவியை மிஞ்சும் பொறுமை உடைய அந்தப் பெண்மணி ஒரு புழுவைப் பார்பதைப் போல என்னை பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். நான் விட்டால் போதும் என்று அந்த இடத்தை காலி செய்தேன்.

மறுநாள் காலையில் அலுவலகம், உள்ளே நுழைந்ததும் சிரித்த முகத்துடன் வரவேற்ப்பு கிடைத்தது, வரவேற்ப் போடு நிற்காமல், "How are you doing?" என்று அவர் கேட்க, "good" என்று கூறிவிட்டு வந்து Google லில் தேடினேன் சொன்னது சரிதானா என்று. அடுத்த 5 நிமிடத்தில் status meeting இருப்பதாக அழைப்பு வந்தது, அதற்குள் முடித்து விடலாம் என rest room க்கு சென்று அவசரமாக கடனைக்  கழித்துக்கொண்டிருக்க, மீண்டும் ஒருவர் "How is it going?" என்றார். எதைக் கேட்கிறார் என்று புரியாததால்,அசட்டுச் சிரிப்பை பதிலாக்கிவிட்டு ஓடிவந்தேன். status meeting ல் இருவர் தவிர பிறர் எவர் பேசிய ஆங்கிலமும் புரியவில்லை. அந்த இருவரும் இந்தியர்கள்.

தவறான முடிவு எடுத்து விட்டோம் என்பது கால தாமதமாகத்தான் புரிந்தது. இங்கேயே சில காலம் இருந்து சமாளிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை நினைவில் நிறுத்தினேன். இப்போது எனக்கிருக்கும் சிக்கல்கள் என்னென்ன வென்று எழுதினேன். பல மறு பரிசீலனைக்குப் பின் ஒரே ஒரு சிக்கல் மட்டும் மிஞ்சியது.

அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் சரியாகப் புரியவில்லை

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு.

"அவர்கள் பேசிய விடயத்தை அவர்களையே  இமெயிலில் அனுப்பச் சொல்லலாம்"

"Status meeting ல் அரைகுறையாக புரிந்ததை, திரும்ப நான் இமெயிலில் அவர்களுக்கு அனுப்பி சரிபார்த்துக் கொள்ளலாம்" 

அல்லது

"ஊருக்கு ஓடிவிடலாம்"  (புறநானூறு படித்துவிட்டு வந்த மாணவன் இந்த முடிவு எடுப்பது சரியாகாது)

மேற்ச்சொன்ன எந்த வழிமுறைகளும் திருப்தி  அளிக்காததால். அமரிக்க ஆங்கிலத்தின் பேச்சு வழக்கை புரிந்து கொள்ள நான் தேர்வு செய்த ஆயுதம் "ஆங்கிலப் படம்".

கவனம் சிதறக் கூடாது என்பதற்காக "G, PG, PG-13" சான்றிதழ் பெற்ற, வசனங்கள் நிறைந்த ஆங்கிலப் படங்களை தேர்வு செய்தேன். தொடக்கத்தில்  "Subtitle" எனும் பேசும் வார்த்தைகளை, எழுத்துக்களாக திரையில் காட்டும் நுட்ப்பத்தை உபயோகித்துக் கொண்டேன்.

சில நாட்கள் கழித்து "Subtitle" சேவையை நிறுத்து விட்டு (சில மணித்துளிகள்) கதாப்பாத்திரங்கள் பேசுவதை மட்டும் கேட்டு அதை எழுதி வைத்துக்கொண்டு மீண்டும் Subtitle உபயோகித்து நான் எழுதியதை சரிபார்ப்பேன்.

இதன் அடுத்த கட்டம், படத்தில் ஒருவர் பேசும் அல்லது கேட்கும் கேள்விக்கு, (படத்தின் ஒலியை சுழியாக்கி விட்டு "mute") நான் பதிலளிப்பேன்.

அலுவலகத்தில் ஒவ்வொரு கலந்துரையாடலின் போதும் புரிகிறதோ இல்லையோ என் கவனம் முழுவதையும் செலுத்தி பேசுபவர் உண்டாக்கும் ஒலி அலைகளை அப்படியே உள்வாங்கிக் கொள்வேன்.

நான் முயற்சி செய்த இந்த பரிசோதனைகள் சிறந்த பலனை அளித்தன. அதோடு நில்லாமல் சந்தர்ப்பங்களை நானே உருவாக்கிக் கொண்டு அமெரிக்கர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். உரையாடலின் பெரும் பகுதி தொழில் சம்பந்தம் இல்லாமல் பொதுவானதாக இருக்கும்படி பார்த்துக் கொண்டேன் (தொழில் சம்பந்தமான கலந்துரையாடலில் எந்த சிக்கலும் இல்லை என்பதால்).

என் தன்னம்பிக்கையை இரண்டு படிகள் குறைத்த ஆங்கிலத்தின் மேல் ஏறி 10 படிகள் உயர்ந்ததாக ஒரு புத்துணர்வு கிடைத்தது.

மனைவி, மகன் என்று ஆனபிறகு மீண்டும் அமெரிக்க வாய்ப்பு. மகன் பேசத் தொடங்கும் முன்பாகவே அமெரிக்கா வந்து விட்டதால், சுற்றிலும் இருந்த ஆங்கிலம் அவனை இருக்கப் பற்றிக் கொண்டது. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசவும் செய்கிறான். ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாங்கள் பேசும் தமிழ் அவனுக்கு ஓரளவிற்குப் புரிந்தாலும் அவனால் தமிழில் பதில் கூற இயலவில்லை. தமிழை முந்திக் கொண்டு வந்து விடுகிறது ஆங்கிலம்.

இன்னும் சிறுது காலம் இங்கே இருந்து பணம் சேர்த்து விட்டு ஊருக்குப் போகலாம் என்றால், என்னை ஆங்கிலம் வாட்டியது போல அவனைத் தமிழ் வாட்டுமோ என்ற கவலையும் சேர்ந்து கொ(ல்)ள்கிறது.

மீண்டும் மொழிப் பாடம் தொடர்கிறது எனக்கு...

A - அ, அ....   அம்மா....

Thursday, April 18, 2013

பால்

திருமணத்திற்குப் பின் சில வருடங்கள் கிராமத்திலேயே வாழ்ந்துவிட்டு, இரத்த உறவுகள் கசந்ததால் அருகில் இருந்த கோவில்பட்டிக்கு தள்ளப்பட்டனர் என் பெற்றோர்கள். கிராமத்தில் இருந்தவரை தொழுவத்தில் மாடுகளும் வீட்டில் பாலும் நிறைவாக இருந்தது. ந(க)ர(க)த்திற்கு வந்த பிறகு புதிதாக வந்த சில பல சிக்கல்களோடு பாலும் சேர்ந்து கொண்டது.

தினமும், காலையில் பாலுடன் வீட்டு வாசலுக்கே வந்துவிடுவார் அண்ணாமலை. ஊரெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடினாலும் அண்ணாமலையின் கிணறு மட்டும் ஜீவ ஊற்றை தன்வசம் கொண்டிருந்ததால் நிறமற்று, மணமற்று, சுவையற்று இருந்த நீருக்கு சிறிதளவு பாலின் குணத்தை புகுத்தி குறைந்த விலையில் விநியோகித்து சமுதாயத் தொண்டாற்றினார் அண்ணாமலை.

ஆசுகவி காளமேகப் புலவர் புகழ்ந்து பாடிய அந்த ஆய்ச்சியின் பேரப்பிள்ளை தான் இந்த அண்ணாமலை.

"கார் என்று பேர் பெற்றாய்

ககனத்தே உறும்போது

நீர் என்று பேர் பெற்றாய்!

நீணிலத்தில் வந்ததன் பின்

வார் என்றும் மென் கொங்கை

ஆய்ச்சியர்கை வந்ததன் பின்

மோர் என்று பேர் பெற்றாய்!

முப்பேரும் பெற்றாயே!"


எங்கள் வீட்டில் அன்னப் பறவை இல்லை, அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கோவில்பட்டி நகராட்சியில் கட்டணம் செலுத்தி தண்ணீர் வாங்குவது போதும்,  மீண்டும் அண்ணாமலையிடமும் வாங்க வேண்டும் என்று அவரிடம் பால்(?) வாங்குவதை நிறுத்தினோம்.

உணர்ச்சி வசப்பட்டு அண்ணாமலையை உதறியதன் பின் விளைவு, எங்கள் வீட்டில் பசுமாடு ஒன்று கன்றுக் குட்டியுடன் தஞ்சமடைந்தது. எங்கள் குடும்பத்திற்குத் தேவையானது போக மீதம் இருந்த பால் விற்ப்பனைக்கு.

பசும் பாலில் இயற்கையாக இருக்கும் 87% சதவீதம் நீரைத் தவிர்த்து மேலும்  அதிகப் படியாக நீர் எதுவும் சேர்க்கக் கூடாது என்பது அம்மாவின் அன்புக்கட்டளை. அதன்படியே பால் வியாபாரமும் நடைபெற்றது. 

சில நாட்கள் சென்ற பிறகு, பல செவிகள் வழியாக திரிந்து வந்தது அந்தச் செய்தி 

"தேனெடுத்தவன் புறங்கையை பின்னாலயா தடவுவான் ?" 

ஏற்கனவே எங்கள் ஊரில் இருந்த அண்ணாமலைகளின் பட்டியலில் நாங்களும் சேர்க்கப் பட்டோம். வருத்தப்பட எதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த என் அம்மா, இந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து, ஆத்திரமடைந்து, கொதிப்படைந்து வழக்கம் போல வேறேதும் செய்ய முடியாமல் சமுதாயத்தை கோபம் தீர திட்டிவிட்டு, பால் விற்ப்பனைக்கு அன்றுடன் முற்றுப் புள்ளி வைத்தார். அடுத்த சில நாட்களிலேயே மாடும் வேறொருவருக்கு விலை போனது. 

மீண்டும் பாலுக்காக தெருவுக்கு வந்தோம்.

இந்த முறை நிச்சயம் அண்ணாமலை அல்ல "ஆவின்" பாக்கெட் பால். அன்றைய காலகட்டத்தில், இப்போது உள்ளது போல பால் விற்கும் வேறு தனியார் நிவனங்கள் இல்லை.பாக்கெட்களில் விற்ப்பனைக்கு வருவது ஆவின் மட்டுமே. முதலில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்த ஆவின் பால் சில            மாதங்களில் எங்களை சிக்கலில் தள்ளியது.

அவ்வாறு பால் தட்டுப்பாடு உள்ள கால கட்டங்களில் ஆவின் பால் விற்கும் முகவர்தான் ஊரில் மிகவும் மதிப்பு மிக்க மனிதர்.அன்றைய தினம் பால் காப்பி குடிக்க வேண்டும் என்றால் காலையில் 5 மணிக்கெல்லாம் வரிசையில் நிற்கவேண்டும். சில நிமிடங்கள் தாமதமானாலும் அன்றைய தினம்  கடுங்காப்பிதான்.

எங்கள் முழுக் குடும்பமும் காப்பியின் போதைக்கு அடிமையாகி இருந்தது. காலையில் காபி குடிக்கவில்லை என்றால் எந்த வேலையும் நடக்காது. அதனால் சரியாக அட்டவணை போடப்பட்டு பால் வாங்கும் வேலை எனக்கும், என் அக்காவிற்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது. 

அன்று என் முறை, தூக்கத்திடம் செய்த உடன்படிக்கையை 10 நிமிடம் மீறியதால், பால் பறிபோனது. என்னையும் சேர்த்து அனைவருக்கும் போதை வஸ்த்து கிடைக்காத ஆத்திரம் தலைக்கு ஏறியது. வேறு யாரிடமும் அதை காட்ட முடியாததால் அனைவரின் ஆத்திரமும் என் மேல் திரும்பியது. நான் மிகுந்த கோபத்தோடு அவை அனைத்தையும் வாங்கிக் கொண்டேன்.

பால் இல்லாததை காரணம் காட்டி அன்றைய தினம் விடுப்பு எடுத்து விடலாமா என்று எண்ணிய போது முதல் நாள் இன்று நினைவுக்கு வர, வாயையும் சேர்த்து மூடிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.   
       
பள்ளியில் அன்று முதல் வகுப்பு "தமிழ்" பாடம். நற்றிணையில் 172 வது பாடலை விளக்க ஆரம்பித்தார் "தமிழ் அம்மா".

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே -
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே,
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடி நீழல் பிறவுமார் உளவே

இந்தப் பாடலை அவர் வாசிக்கும் போது வழக்கம் போல ஒன்றும் புரியவில்லை. அதன் விளக்கத்தை கூறிய போதுதான் நான் வெறியானேன்.

அடிமனதில் ஆத்திரத்தை மூட்டிய இந்தப் பாடல் ஆண்டு முழுவதும் என்னைத் துரத்தியது.

"புன்னை மரத்தின் பெருமைகளாக அன்னை கூறியவை யாவை? " என்ற கேள்வி ஆண்டு இறுதித் தேர்வில் தவறாமல் இடம் பிடித்தது.

அந்தப் பாடலின் விளக்கம்

"குழந்தைப் பருவத்தில் மணலில் விளையாடும் போது தலைவி புதைத்து வைத்த புன்னை விதை துளிர் விடத் தொடங்கியது. அது வளர்வது கண்ட தலைவி அதற்குப் பாலும், தேனும் கலந்து ஊற்றி வளர்த்து வந்தாள்.

அதைக் கண்ட தலைவியின் தயார், இந்தப் புன்னை மரம் உனக்கு தங்கை முறையாகும் என்றரர்"

இந்தச் செய்தியை தோழி, தலைவனிடம் கூறினாள். மேலும் தன் தங்கையின் முன்பு தலைவனோடு காதல் புரிவதை தலைவி விரும்பவில்லை (வெட்கப் படுகிறாள்), அதனால் விரைவாக தலைவியை தலைவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினாள்.