cookie

Friday, December 12, 2014

மேற்க்கிந்திய கம்பெனி



தலைப்பை பார்த்தவுடன் இது இந்திய சுதந்திர போரட்ட வரலாறு என்றோ, ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களின் அணிவகுப்பு என்றோ புரிந்துகொள்ள வேண்டாம்.

படிப்பிற்க்காகவோ, பணியின் நிமித்தமாகவோ, பஞ்சம் பிழைக்கவோ, பகட்டான வாழ்விற்காகவோ அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்கா பறக்கும் நம் பழம்பெரும் நாட்டின் புதல்வர்களில் சி(ப)லர் சிறுமூளையில் சிந்திக்கத் தொடங்கிவிடுகின்றனர். அவற்றில் சில உங்கள் சிந்தனைக்கு        

கற்புள்ள உடை 

  தன்னுடைய பட்டமளிப்பு விழாவிற்கு மேற்க்கத்திய உடையணிந்து செல்ல விரும்பிய அந்த நபர். இங்லாந்தின் ரகசிய உளவாளி ,திரைப்படத்தில் அணிவதுபோல் ஓர் விலை உயர்ந்த உடையை வாங்கினார். ஏன் இவ்வளவு விலைகொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, இது எனக்கு ஒரு நாள்தான் தேவை, விழா முடிந்தவுடன் இந்த உடையை திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று எந்த குற்ற உணர்வும் இல்லாமல் கள்ளம்நிறைந்த சிரிப்புடன் கூறினார் .       

அப்படியானால் உடையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமே என்று கேட்டதற்க்கு, வாடகை உடையை பலபேர் உடுத்தி இருப்பார்கள். அதை நான் எப்படி உடுத்துவது?

உடையிடமும் கற்பை எதிர்பார்த்த அந்தக்கனவான்,  கடன் அட்டையில் உடையை வாங்கி, சொன்ன சொல் மாறாமல் விழா முடிந்தவுடன் திருப்பபிக் கொடுத்தும்விட்டார். 

அவருக்கு முன்பு அவரைப்போல் எத்தனை பேரிடம் போய் திரும்ப வந்ததோ அந்த கற்புள்ள உடை. 


வந்தது ஆனா வரல

நவம்பர் மாதம் நான்காம் வியாழன்  நன்றிநவிலும் நன்னாளக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. அதற்க்கு அடுத்த நாள் கருப்பு வெள்ளி. அன்றைய தினம் தள்ளுபடி விலையில் பெருட்கள் விற்கப்படும்.

அந்நாளில், மற்றொரு அன்பர் இணையம் வழியாக சில பொருட்களை வாங்கினார். வாங்கிய பொருள் பத்திரமாக வந்து சேர்ந்தவுடன். வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொண்டு தான் பணம்கொடுத்து வாங்கிய பொருள் இன்னும் வந்து சேரவில்லையென்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கூறுவார்.

அப்போதைய தேவைக்கு எற்றாற்படி, அதே பொருளை மீண்டும் அனுப்பவோ அல்லது கொடுத்த பணத்தை திரும்பவோ கேட்பார். 

பல சமயங்களில் வேறு கேள்விகள் எதுவும் கேட்காமல் அந்தக் கடைகள் பணத்தை திருப்பிக் கொடுப்பதும் உண்டு.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நிச்சயம் புரியும். சில ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்ததைவிட தற்போது அனைத்து கடைகளும் பெரும்பாலும் தங்களுடைய விற்பனை செய்த பொருட்களை திரும்பப் பெரும் காலக்கெடுவை வெகுவாக குறைத்து விட்டன.   

ஏமாற்றுவது என்றுமே புத்திசாலித்தனமாகது. நம்முடைய குழந்தைகள் நம்மைப் பார்த்துக்கொண்டும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் நாம் பதியவைக்கப் போகும் செய்தி என்ன?

நம் சந்ததிகளுக்கு சிறப்பான எதிகாலத்தை வழங்குவது மட்டுமல்ல. எதிர்காலத்திற்கு சிறப்பான சந்ததிகளை வழங்குவதும் நம் கடமைதான்.

நல்ல மாற்றம் நம்மிலிருந்து, இன்றிலிருந்து தொடங்கட்டும்...