cookie

Friday, October 31, 2014

கொக்கு பற பற...

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னைப்பார்க்க நண்பர் ஒருவர் உணவு இடைவேளையில் என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார். அடையாளஅட்டையில்லாமல் அலுவலக கட்டிடத்தினுள்ளே வரமுடியாது என்பதால், அவரை அழைத்துவர நான்காவது மடியில் இருந்த என்னுடைய அலுவலகத்திலிருந்து தரைத்தளத்தில் இருந்த கட்டிடமுகப்பு அறைக்கு மின்னுயர்த்தி (elevator) வழியாக சென்றேன்.   

மின்னுயர்த்தி தரைத்தளத்தை அடைந்தவுடன் "டிங்" என்ற ஒலியுடன் தன்வாயை அகலமாகத் திறந்தது. இரவு முழுவதும் பட்டியில் அடைபட்டுக்கிடந்த செம்மறியாட்டுக் கூட்டம் காலையில் மேய்ப்பர் பட்டியைத் திறந்தவுடன் இலை தளைகளை கடிக்க கண்மண் தெரியாமல் முன்னே ஓடுவதைப்போல, மணிக்குப் பதிலாக, கழுத்தில் அடையாளஅட்டையைத் தொங்கவிட்டுக்கொண்டு பர்கரையும், பீசாவையும் கடிக்கும் கூட்டம் மொதுமொது வென்று உள்ளே நுழைந்தது. 

தரையிறங்க வேண்டியவனை மீண்டும் உள்ளே புகுத்தி, மின்தூக்கியின் சுவற்றோடு சுவராக அறைந்தது அந்தக் கூட்டம். "எக்ஸ்கியூஸ்மீ, எக்ஸ்கியூஸ்மீ" என்று பலமுறை ஏலம் போட்டும் எவர்காதிலும் என் ஓலம் ஏறவில்லை. பன்னிரண்டுபேரை அள்ளிக்கொண்டு மேலே உந்திச்சென்ற மின்தூக்கி மூன்றாவது மாடியில் மூச்சுவாங்கி நின்றது. விட்டால் போதும் என்று நானே என்னை அங்கிருந்து விடுதலை செய்துகொண்டு இருமுடியில்லாமல் படிகளில் கீழ்க்கண்ட பாடலைப் பாடிக்கொண்டே பயணம் செய்து தரையிரங்கினேன்.

கொக்கு பறக்கும்! புறா பறக்கும்!
குருவி பறக்கும்! குயில் பறக்கும்!
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
நான் ஏன் பறப்பேன் நராதிபனே!

மின்தூக்கியை உபயோகிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகளில் முதன்மையானது, உள்ளிருந்து வெளியேவரும் மக்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிர்ப்பது. இதை நான் எதிர்பார்த்தது மெத்தப்படித்த மேதாவிகள் என்று உலகத்திற்குப் பறைசாற்றிக் கொள்பவர்களிடம்.

மற்றோர் ஒற்றுமை என்னை மேலும் அதிரச் செய்தது. சிலசமயம் என் தந்தை வாழ்ந்த கிராமத்திற்க்குச் செல்லும்போது பார்த்ததுண்டு. சாலையைக்கடக்கும் எருமைகள் (buffaloes) வந்துகொண்டிருப்பது முதலுதவி வண்டியா, மகிழ்வுந்தா, பேருந்தா என்பதைப் பற்றி எந்த கவனச்சிதரல்களும் இல்லாமல் கருமமே கண்ணாக முன்னோக்கிச் செல்லும், அதுபோல மூடிக்கொண்டிருக்கும் மின்தூக்கியில் கடைசி நொடியிலாவது இடம்பிடித்து விடலாம் என்று ஓடிவரும் மனிதர்களைப் பார்த்தபின்பும், மின்தூக்கியின் உள்ளே இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு கருமமே கண்ணாக வேடிக்கை பார்க்கும் சில விந்தை மனிதர்கள் என்னை பலசமயம் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

என்குலத்தை எப்படித் திருத்துவது? எங்கிருந்து தொடங்குவது? யாமறியேன் பராபரமே!!!