cookie

Saturday, November 21, 2015

தண்ணீர்! தண்ணீர்!! கண்ணீர்? கண்ணீர்??

ஒரு கையாலாகாத தமிழனின் புலம்பல்   


மூன்றுபக்கம் "குடியாலும்" ஒரு பக்கம் "சுயநலத்தாலும்" சூழப்பட்ட தமிழகம், "தீப ஆவளி"யை ஒட்டி முதலில் தண்ணீரிலும் பின்பு இருளிலும் மூழ்கியதை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று ஓடத்திலும் வண்டியிலும் மாறி மாறி பயணம் செய்ய நாம் தயாராகிவிட்டோம். இதேநிலை தொடரும் பட்சத்தில், நம்முடைய அனுசரித்துப் போகும் குணம் அதன் உச்சத்தை எட்டி, பன்றிகளைப் போல சாக்கடையில் புரள மிகச்சில வருடங்களில் நாம் பழகிக்கொள்வோம்.

மாமியாரை மிஞ்சி அன்புகாட்டும் வீட்டு உரிமையாளர்கள் காரணமாகவோ!,  சுற்றமும் நட்பும் அவர்களின் புதுமனைப்புகுவிழாவில் ஏற்றிய ஹோமகுண்டத்தில் தங்கள் வயிறு எரிந்ததின் காரமாகவோ!அல்லது "இன்னமுமா வாடக வீட்ல இருக்கீங்க" என அதீத அக்கரையில் கேட்கும் அன்பர்களின் அன்புத்தொல்லை காரணமாகவோ! குளத்திலும், குட்டையிலும் கட்டப்பட்ட காங்கிரீட் கூடுகளை அவசர, அவசரமாக கோடிகளில் வாங்கியாகிவிட்டது. இனி என்ன? மழைநீர் புகுந்தாலும், மாடு புகுந்தாலும் வாங்கிய கடனுக்கு சாகும்வரை சந்தோசமாக வட்டி கட்டலாம். நமக்கு கொடுப்பினை இருந்தால் சுமங்கலியாக முதலில் நாம் போய் சேரலாம் அல்லது நமக்கு முன்பாகவே கூடு பரலோகத்தில் இருக்கும் பிதாவை சென்றடையும்.

மக்கள் தொகை பெருகிவிட்டது. அதற்க்கேற்ப்ப குடியிருப்புப் பகுதிகளும் புதர்களாக மண்டிவிட்டன. கடைசி மரத்தையும் வெட்டியாகிவிட்டது. இனி மழையே வராது என்ற நம்பிக்கையில் நாம் குழியிலும் குடியிருக்க தொடங்கிவிட்டோம். "மெடிக்கல் மிராக்கிளாக" அவ்வப்போது கொட்டித்தீர்க்கும் மழைக்கு விடைதேட வேண்டிய அவசியம் இல்லை அது வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் நாமும், நமது "அம்மாவும்" "அய்யாவும்". 

இதுக்கு வேற வழியே இல்லையா?

இதே போன்ற நிலையில் இருந்த அமெரிக்க நகரம் ஒன்றில் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம். 

விவேகானதர் சமய உரையாற்றுவதற்கு 38 வருடங்களுக்கு முன்பு "சிகாகோ"வில் நடந்த நிகழ்வு. உலகத்தை தட்டை என தவறாக புரிந்த கொண்ட மேற்கு உலகம், "சிகாகோ"வை தட்டை என சரியாகப் புரிந்துகொண்டது. தட்டையான நிலப்பரப்பு, அதற்கு மிக அருகில் கடல் போன்ற "மிச்சிகன்"ஏரி. நீர்மட்டத்திலிருந்து ஒரு அடிக்கும் குறைவான உயரத்திலேயே நிலபரப்பு இருந்தது. கழிவு நீர் மட்டுமல்ல, எந்த நீரும் வெளியேற வழியில்லை, பள்ளம் இருந்தால்தானே பாய்ந்தோடும் நீர்!

தங்கள் நகரத்தின் "நரக" நிலையைப் புரிந்துகொண்ட மாநகராட்சி ஆணையர்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவையெடுத்து அதை செயல்படுத்த முனைந்தனர். கழிவுநீர் வெளியேறும் குழாயை ஒவ்வொரு கட்டடத்திற்கும் குழிதோண்டி அமைப்பது நடைமுறை மற்றும் பொருளாதார சிக்கல்களை உருவாக்கும் என்பதால் கட்டிடங்களின் அடித்தளத்தை உயர்த்த முயன்றனர். 

என்னது, அடித்தளத்தை உயர்த்தவா? தவறாக படித்துவிட்டோமா? என்று நினைக்கவேண்டாம். நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். அடித்தளத்தை உயர்த்துவதுதான் அவர்களின் நோக்கம். அங்கிருந்த கட்டடம் ஒவ்வொன்றும், அவை இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு 4 முதல் 14 அடிவரை உயர்த்துவதாக திட்டம் தீட்டினர். 



"திருகாணி" தத்துவத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் "ஜாக்ஸ்க்ரு" எனும் கருவியால் அடுத்த சில வருடங்களில் ஒவ்வொரு கட்டிடமாக உயர்த்தப்பட்டது. அதே இடத்தில் உயரத்தை அதிகரிக்க முடியாத கட்டிடங்கள், மர உருளைகளின் உதவிகொண்டு வேறு இடத்திற்கு உருட்டிச் செல்லப்பட்டது. இப்படியாக சில வருடங்களில் மைய நகரத்தில் இருந்த அனைத்து கட்டடங்களும் உயர்த்தப்பட்டு நிலைமை சீரமைக்கப்பட்டது.

கோவில்பட்டியில் எங்கள் வீட்டுக்கு நன்னீர் இணைப்பு கொடுக்க வந்த நகராட்சி ஊழியர்கள் பாதாளக்குழியைத் தோண்டி இரண்டு நாட்கள் மக்களை சிறைப்பிடித்து இன்னமும் எனக்கு நினைவில் நிற்கிறது. அவ்வாறிருக்கையில் சிகாகோ நகரம் இந்த வேலைகள் நடந்த சமயம் எவ்வாறு இருந்திருக்கும் என்று மலைப்போடு அந்த தகவலைத் தேட எனக்கு மேலும் ஆச்சர்யம்.

"The Brigg's  House" என்ற மிகவும் புகழ்பெற்ற அந்த தங்கும்விடுதி, இந்த வேலை நடந்த சமயத்தில் ஒரு மணித்துளி கூட தன்னுடைய சேவையை நிறுத்தவில்லை என்பது கூடுதல் தகவல்.



இது நடந்தது 19ஆம் நூற்றாண்டில். வெறும் திருகாணியை மட்டும் வைத்து தங்கள் நகரத்தின் விதியை திருத்தி எழுதினார்கள் சிகாகோ மக்கள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதன் உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் இன்னமும் நாம் யாரை குறை கூறிக்கொண்டிருக்கப் போகிறோம்?



தகவல் உதவி 
"How We Got to Now" - Steven Johnson  

படங்கள் உதவி 
Chicagology