cookie

Saturday, March 14, 2020

சிவப்பு மிதிவண்டி

எங்கள் வகுப்பு சட்டாம்பிள்ளை மணியின் தந்தை ஒரு மிதிவண்டி நிலையத்தின் உரிமையாளர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த சிவப்பு நிற "அட்லஸ்" வண்டியில் நாங்கள் வசிக்கும் முதல் தெருவில் காலை முழுவதும் வீதியுலாவிலேயே இருப்பான் மணி. அந்த வார விடுமுறையில் நானும், குருநாதர் தங்கராசும் அங்கிருந்த அடிகுழாயின் அருகில் அமர்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தோம். திடீரென ஞானம் பிறந்து குருநாதர் என்னிடம், "இந்த மணிப்பய என்ன ரொம்ப பந்தா பண்றான்! அவங்கிட்டதான் சைக்கிள் இருக்கா? நானும் சைக்கிள்" என்று கூறிக்கொண்டிருந்த போதே நான் இடைமறித்து "வாங்கப் போறியா?" என்றேன். அதற்கு அவர் "ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்து, ஒரு நாள் முழுக்க ஓட்டப் போறேன்" என்றார். "அது எப்பிடி ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்து ஒருநாள் முழுக்க ஓட்டுவ?" என்ற என் தர்க்க வாதத்தை, "சொன்னா புரியாது, செஞ்சி காட்டுறேன் பார்" என்று "முடக்குவாதம்" செய்தார் குருநாதர். 
   
"நீதி எப்போதும் நியாயத்தின் பக்கமே தலைசாயும்" என்பதை மீண்டும் உணர்ந்த சமய"மது". குருநாதரின் மாமா சுமைதூக்கும் தொழிலாளி, நேற்று மாலை சந்தையில் அரிசி மூட்டைகளை சரக்கு வண்டியிலிருந்து உணவுக்கிடங்கிற்கு மாற்றிவிட்டு அசதியுடன் வந்து "அஞ்சால் அலுப்பு மருந்தை" 8ஆம் நம்பர் கடையில் வாங்கி குடித்துவிட்டு நினைவு தப்பி வாசலிலேயே துயில் கொண்டிருந்தார்.

காலை 07:30 மணி, குருநாதர் என்னை அழைத்துக்கொண்டு மாமாவின் வீட்டிற்கு சென்றார். தூரத்தில் வரும் போதே மாமா சட்டையில்லாமல் வாசலிலேயே மட்டையாகி கிடந்ததை கண்ட குருநாதர் அவ்விடம் நோக்கி ஓடினார். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் வரிகளுக்கு வாழும் உதாரணம் என் குருநாதர். இந்தப் பயிர் கொஞ்சம் "தண்ணீ"ர் மிகுதியால் வாடியுள்ளது. அதனால் என்ன? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

மின்னலாகப் பாய்ந்த குருநாதர் குப்புறக்கிடந்த மாமாவையும் தாண்டிப் போய் எதையோ தேடினார்! சற்று குழம்பிய நான், "என்னடா தேடுற?" என்றேன். அதற்கு அவர் "அதுவா, மாமா சட்டையை இங்கதான் எங்கயாவது போட்டிப்பாரு, உள்பாக்கெட்ல காசு இருக்கும், அதத்தான் தேடுறேன், நீயும் கூட சேர்ந்து தேடுடா, எங்க அத்த வர்றதுக்குள்ள கண்டுபிடிக்கணும்" என்றார். சுற்றிமுற்றித் தேடியும் சட்டையின் அடையாளத்தை யொட்டிய எந்த வஸ்துவும் அங்கு தென்படவில்லை. சிறிது நேரத்தில் கையில் கரித்துணியுடன் வந்த குருநாதர் அதை விரித்து சட்டையாக்கி வித்தை காட்டினார். "இதுவாடா சட்ட?" என்று கேட்ட எனக்கு, "ஆமா, சமீபத்துலதான் தொவச்சிருப்பாங்க போல, அதான் அடையாளம் தெரியுது" என்று கூறிக்கொண்டே உள்பாக்கெட்டில் தேடினார். ஒன்றும் அகப்படவில்லை. ஏமாற்றத்தின் எல்லைவரை சென்று, வீட்டின் வாசலிலேயே அமர்ந்துவிட்டார். சில மணித்துளிகளில் அத்தை கூந்தலை முடிந்து கொண்டையாக சுற்றிக்கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தார்.

"என்னடா தங்கராசு? இங்க என்ன பண்ற? இப்பதான் வந்தியா?" என்று கேள்விகளை அடுக்கினார். குருநாதருக்கு பதில் வரவில்லை. நல்ல வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே என்ற ஏமாற்றம் வேறு. "என்ன, மாமா சட்டையில காசு இல்லையா?" என்று அடுத்த கேள்வியை தொடுத்தார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. குருநாதரோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், "காசா, என்ன காசுத்தே" என்றார். அத்தை பதிலேதும் சொல்லாமல் தனது இடது காலால் பதி பக்தியுடன் குப்புறக் கிடந்த மாமாவை மிதித்து மல்லாக்க புரட்டினார். பின்பு தங்கராசை பார்த்து "மாமா டவுசர் பாக்கெட்ல காசிருக்கும் பாரு" என்றார். குருநாதரும் புதையலைத் தேட, சில ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லரையும் கிடைத்தது. நோட்டுகளை எடுத்துக்கொண்டு சில்லறைகளை மட்டும் குருநாதரிடம் கொடுத்துவிட்டு, கும்பகர்ணனை கர்ணனாக்கிவிட்ட மகிழ்ச்சியில் அத்தை வீட்டின் உள்ளே சென்றுவிட்டார். நாங்களும் அங்கிருந்து புறப்பட்டோம்.

"அதான் காசு கெடச்சிருச்சே, அப்புறம் ஏன் உம்முனு இருக்க" என்று நான் குருநாதரிடம் கேட்க, "10 ரூபா கெடச்சிருக்கும், இப்போ பாரு சில்லறை காசு ஒரு ரூபா. இத வச்சி என்ன பண்ண?" என்று வருந்தினார். "ஒரு ரூபாய்க்கு, ரெண்டு மணிநேரம் சைக்கிள் வாடகைக்கு கிடைக்கும், அது போதாதா?" என்று நான் குருநாதரை தேற்ற முயன்றேன். அதற்கு பதிலேதும் கூறாமல் மணி சைக்கிள் மார்ட்டை நோக்கி நகர்ந்தார் குருநாதர்.

இதற்குள் மணி 08:30 ஆகிவிட, மணியின் தந்தை கடையை திறக்க, முதல் ஆளாக குருநாதர் உள்ளே சென்று சிகப்பு மிதிவண்டியை வாடகைக்கு கேட்டார். அதற்கு மணியின் தந்தை, "உங்கள எனக்கு யாருன்னு தெரியாதே, தெரியாத பசங்களுக்கு சைக்கிள் குடுக்க மாட்டேன்" என்றார், அதற்கு குருநாதர் "அண்ணாச்சி, நாங்க மணியோட பிரெண்ட்ஸ், ஒரே வகுப்புல தான் படிக்கிறோம், மணிதான் எங்க கிளாஸ் லீடர்" என்றார். இதில் மணியின் தந்தை எதை நம்பினார், எதில் மயங்கினார் என்று தெரியவில்லை! ஒரு வழியாக மிதிவண்டியை கொடுக்க சம்மதித்தார்.

ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா வீதம் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு, "சரிய்யா பத்தரை மணிக்கு திருப்பி கொண்டு வந்துரணும்" என்ற கட்டளையுடன் மிதிவண்டியை குருநாதரிடம் கொடுத்தார் மணியின் தந்தை. குருநாதர் வண்டியை முழுவதும் ஆக்கிரமிக்கும் முன்பு, மணியின் தந்தை "ஆமா, உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா?" என்றார். "போங்க அண்ணாச்சி, நா டபுள்சே அடிப்பேன்" என்று கூறிவிட்டு என்னை பார்த்து "சொல்லுடா அண்ணாச்சிகிட்ட என்றார்". நானும் குருநாதர் கூறியதை ஆமோதிப்பதுபோல எல்லாப் பக்கமும் தலையை சுற்றினேன். "சரி பாத்து ஓட்டுங்க" என்று கூறிவிட்டு கடையின் உள்ளே சென்றார் மணியின் தந்தை. குருநாதர் முன் மற்றும் பின் சக்கரங்களில் காற்றின் அளவை சோதித்துவிட்டு என்னிடம் "போலாமா?" என்றார். நானும் சரியென தலையசைக்க அங்கிருந்து இருவரும் புறப்பட்டோம்.

முகமது சாலிகா புறம் பொட்டலுக்கு மிதிவண்டியை உருட்டிக் கொண்டே சென்றோம். பொட்டாலின் நடுவில் வண்டியை நிறுத்தி, என்னைப் பார்த்து புன்னகையுடன் "ஆரம்பிக்கலாமா?" என்று கூறிக்கொண்டே, தன் இடது திருப்பாதத்தை வண்டியின் மிதியடியில் வைத்து "டக்"கடிக்க ஆரம்பித்தார் குருநாதர். ஆரம்பமே அட்டகாசமாக இருக்கிறதே என்று நானும் அதிசயித்து பார்த்துக் கொண்டிருந்தேன். "டக்"கடித்தே ஒரு வட்டத்தை முடித்துவிட்டு, "இப்போ நீ ஓட்டு" என்ற கட்டளையுடன் மிதிவண்டியை என்னிடம் கொடுத்தார்.

"தங்கராசு, இதுக்கு முன்னால நா சைக்கிள் ஓட்டுனதில்ல" என்றேன் தயக்கத்துடன். "பயப்படாத, நான் இங்கதான இருக்கேன் பாத்துக்கிறேன், நீ தைரியமா ஒட்டு" என்று என்னை வண்டியின் மீது ஏற்றிவிட்டார் குருநாதர். ஏறும்போது எளிதாகவே இருந்தது, பின்பு வண்டியின் கைபிடி எட்டுத்திக்கும் சுழன்றது. உடனே சுதாரித்த குருநாதர், "கேண்டில் பார நேரா புடிடா, முன்னால பாரு, டிக்கியை ஆட்டாத, பெடலை மிதி அவளவுதான்!" என்று "5 நொடியில் மிதிவண்டி ஓட்டுவது எப்படி" என்ற வகுப்பெடுத்துவிட்டு வண்டியை முன்னே தள்ளினார். தள்ளிய அதேவேகத்தில் தறிகெட்டு ஓடிய மிதிவண்டி, அங்கே கொட்டியிருந்த ஆற்றுமணலில் சொருகியது, நான் சரிந்து அங்கே பரப்பியிருந்த சீனிக்கல்லில் என் கால் முட்டியால் அமர்ந்தேன். நல்ல வேலையாக கல்லிற்கோ, வண்டிக்கோ எதுவும் ஆகவில்லை. என் முட்டிதான் சிவப்பாக சிரித்தது.

வேகமாக ஓட்டிவந்த குருநாதர், முதலில் வண்டியையும் பின்பு என் முட்டியையும் கவனித்தார். "சின்ன அடிதான் ஒன்னும் பண்ணாது, கீள விளாமமெல்லாம் சைக்கிள் பளக முடியுமா?" என்று என் மனதுக்கு இதமாக ஆறுதல் கூறினார். அவமானதை சமாளிக்க முடியாமல் ஓரமாக நின்று அழுதேன். "அளாத, இப்போ நா உனக்கு எப்பிடி சைக்கிள் ஓட்டுறதுன்னு காட்டுறேன், கவனிச்சுக்கோ கத்துக்கோ" என்று கூறி இரண்டாவது சுற்றை தொடங்கினார் குருநாதர்.

முன்னம் செய்தது போலவே, இரண்டாவது சுற்றிலும் "டக்"கடித்து ஏறி, சில அடிகளிலேயே வலது காலை லாவகமாக சுழற்றி வண்டியின் இருக்கையில் அமர்ந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான், "சே, தங்கராசுக்கு எப்பிடி எல்லாமே தெரியுது!" என்று புலங்காங்கிதம் அடைத்தேன். இரத்தம் இன்னும் வருகிறதா என்று குனிந்து கீழே பார்ததேன், "தொபுக்கடீர்" என்று ஒரு சத்தம், குருநாதர் அங்கிருந்த செம்மணல் குன்றில் முகத்தை பதித்து ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார், வண்டி மறுபுறம் இளைப்பாறிக் கொண்டிருந்தது. நான் அருகில் செல்வதற்கு முன்பே இயல்பு நிலைக்கு திரும்பி எழுந்தார்.

"ஏன்டா, தங்கராசு உனக்கும் சைக்கிள் ஓட்ட தெரியாத? பெறகு எதுக்குடா அவருகிட்ட டபுள்ஸ் அடிப்பேன்னு புருடா விட்ட?" என்று கோவமாக கேட்க, "சைக்கிள் ஓட்ட தெரிஞ்சா நான் எதுக்குடா காசு கொடுத்து வண்டிய வாடகைக்கு எடுக்குறேன்" என்று சலமேயில்லாமல் என்னை வாயடைக்கச் செய்தார்.

இன்னும் 100 நிமிடங்கள் உள்ளன, இருவராலும் இனி வண்டி ஓட்டமுடியாது. கொடுத்த காசையும் மணியின் தந்தை திருப்பி கொடுக்க மாட்டார். அடுத்து என்ன செய்யலாம்? என்று யோசிக்க தொடங்கினோம். அப்போது அங்கு விளையாட சில சிறுவர்கள் வந்தனர். இதைப் பார்த்த குருநாதருக்கு உன்னதமான ஒரு யோசனை தோன்றியது. சிறுவர்களிடம் மிதிவண்டியை உள்வாடகைக்கு விடலாம் என்பதுதான் அந்த யோசனை.

படித்தவர்கள் எல்லாம் வேலைதேடி வெளிநாடு செல்ல, படித்துக் கொண்டிருக்கும் மேதை என் குருநாதர் "தொழில் முனைவோர்" என்ற புது அவதாரம் எடுத்தார். சிறுவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, "ஒரு ஆளுக்கு 25 நிமிடத்திற்கு 25 பைசா" என்று நான்கு பேரிடம் ஒப்பந்தம் செய்து மொத்தம் ஒரு ரூபாய்க்கு ஏற்பாடு செய்தார்.

திட்டம் என்னவென்றால், ஒவ்வொருவராக வண்டியில் ஏற, நானும் குருநாதரும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக்கொண்டு நான்கு வட்டங்கள் சுற்றி வருவோம் பின்பு சிறிது நேரம் ஓய்வு. அதன்படி,  முதல் இரண்டு சுற்றுகள் சமாளித்து விட்டோம், முதல் சிறுவனின் மூன்றாவது சுற்று, சுமையை தாங்க முடியாமல் வண்டியை இருவரும் விட்டுவிட, சிறுவன் என்மீது விழ, வண்டி உருண்டோடி சாக்கடையில் விழுந்தது. அடுத்த நொடி எல்லா சிறுவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர் காசேதும் கொடுக்காமல். சாக்கடையில் இருந்து மிகுந்த சிரமத்துக்கு இடையில் வண்டியை வெளியே தூக்கிப் பார்க்க, வண்டியின் முன் சக்கரத்தில் மூன்று குறுக்க கம்பிகள் உடைந்து தொங்கிக் கொண்டிருந்தன.

வண்டியை மீண்டும் உருட்டிக்கொண்டு அடிபம்பு சென்று கழுவிட்டு பின்பு கடைக்கும் கொண்டு சென்றோம். மணியின் தந்தை வண்டியை கூர்ந்து பார்த்து விட்டு தங்கராசுவிடம் "நீதான் டபுள்ஸ் அடிக்கிறவனா? மூணு ஸ்போக்ஸ் உடைஞ்சிருக்கு, வீல் பெண்ட்டாயிருக்கு எல்லாத்துக்கும் சேத்து 20 ரூபா கொண்டுவா என்றார்" சிறிதும் கலங்காத குருநாதர், "சரி அண்ணாச்சி எங்க அம்மாகிட்ட வாங்கிக் கோங்க" என்றார். "என்னடா, எல்லாரும் அப்பாகிட்ட வாங்கிக்கோங்கன்னு சொல்லுவாங்க, நீ என்ன அம்மாகிட்டங்கிற, யார்ரா உங்கம்மா?" என்று கேட்டார் மணியின் தந்தை.

"ஒண்ணாவது தெருவுல வந்து பத்திரக்காளின்னு கேளுங்க நெறையா சொல்லுவாங்க..."

1 comment: