cookie

Tuesday, December 18, 2012

கள்வரின் கள்வன்


காலை 07:00 மணி 

மாமாவின் வீட்டில் அமர்ந்திருந்தான் ராஜு.

"என்ன ராஜு, காலைலயே வந்துட்ட, எதாவது அவசரமா?"  என்று மாமா விசாரிக்க. அவர் என்ன நினைத்து கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு.

"அவசரம் எதுவும் இல்ல மாமா, அப்பா நல்லாத்தான் இருக்கார். ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் வந்தேன்" என்றான் ராஜு.

"சொல்லு ராஜு" என்று கேட்ட மாமாவுக்கு, தன்னுடைய அலைபேசியில் எதோ ஒரு படக் காட்சியை ஓடச் செய்து கொடுத்தான். படக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த மாமா திடீரென பதட்டமானர்.

"ராஜு, இது?"

"சந்தேகம் இல்லாம அவன் தான் மாமா" என்று உறுதி படுத்தினான் ராஜு.

"இது எப்படி உனக்கு கிடைச்சது? இத வச்சிக் கிட்டு என்ன பண்ணப் போற?" என்றார் மாமா.

"நேத்து, நான் தான் இத எடுத்தேன். இத வச்சிதான் அவங்களுக்கு தண்ணி காட்டப் போறேன்" என்றான் ராஜு.

"வேண்டாம் ராஜு, இது பெரிய பிரச்சனை யாயிடும்" என்று அறிவுரை வழங்கிய மாமாவுக்கு

"விட்டத பிடிக்க இதவிட்டா வேற வழியில்ல மாமா" என்று எதற்கும் துணிந்தான் ராஜு


சில நாட்களுக்கு முன்பு...    

வியாழன் காலை 07:30 மணி.

ராஜு Power House மைதானத்தை இரண்டு வட்ட மடித்து மூன்றாவது சுற்றை ஆரம்பிக்கும் போது, அலைபேசியில் பாடிக் கொண்டிருந்த புதிய பாடலை பின்னுக்கு தள்ளி விட்டு விட்டு, அவசரமாக தொலைபேசி அழைப்பு முன்னுக்கு ஓடி வந்தது. மறுமுனையில் ராஜுவின் அம்மா.

காலையில் எதிர்பார்க்காத நேரத்தில் அம்மாவின் அலைபேசியில் இருந்து அழைப்பு வரவும், எடுத்து பேசுவதற்கு முன்பு, அந்த சில மணித் துளிகளுக்குள் அவன் மூளை பலவாறு சிந்திக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு பச்சை பொத்தானை அழுத்தினான்.

"என்னம்மா இந்நேரம் Phone பண்ணிருக்க, என்னாச்சு?" என்று கேட்டான் ராஜு.

"ஒன்னும் இல்லப்பா சும்மாதான் Phone பண்ணேன்" என்று சற்று தடுமாறிய குரலில் ராஜுவின் தாய் பதில் அளித்தார்.

"ஒன்னும் இல்லாம இந்த நேரம் பேச மாட்டியே, சொல்லு என்ன ஆச்சு? யாருக்கும் உடம்பு சரி இல்லையா? அப்பா எங்க? அப்பா நல்லா தான இருக்காரு?" என்று அம்மாவிடம் கேள்விகளை அடுக்கினான் ராஜு.

அதுவரை தேக்கி வைத்த அம்மாவின் "கண்" அணை உடைந்தது.

"அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பா, இப்போ நான் ஜோதி Hospital ல இருந்து தான் பேசுறேன்." என்று தன்னிடம் இருந்த மொத்த பாரத்தை ராஜுவிடம் இறக்கினார் அம்மா.

"அப்பாவுக்கு என்ன? Sugar Level கூடிருச்சா? Dr. என்ன சொன்னாரு? பக்கத்துல Dr யாராவது இருந்தா பேச சொல்லு" என்ற பரபரத்தான் ராஜு.

அருகில் இருந்த மருத்தவரிடம் அலைபேசியை ஒப்படைத்து விட்டு தன் அழுகையை தொடர்ந்தார் ராஜுவின் அம்மா. 

அலைபேசியை வாங்கிய மருத்துவர் அவன் தந்தையின் உடல் நிலையை விளக்க ஆரம்பித்தார்.

"உங்க அப்பாவுக்கு Type 1 Diabetes இருக்குறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், கொஞ்ச நாளுக்கு முன்னால அவருக்கு கால்ல சின்ன காயம் பட்டிருக்கு, அத கவனிக்காம விட்டுட்டாரு. அது பெருசாகி ஒரு Stage க்கு மேல அவர் Blood ல Ketoacidosis Form ஆக ஆரம்பிச்சிருச்சி. இன்னைக்கி Morning  Ketoacidosis Level Very High ல இருந்து இருக்கு அதனால இப்போ உங்க அப்பா COMA ல இருக்காரு" என்று அலை பேசி வழியாகவே மருத்துவர் ராஜுவுக்கு மயக்க மருந்து கொடுத்தார்.

இந்த செய்தியை கேட்டதும் ராஜு தடுமாறித்தான் போய் விட்டான். வீட்டுக்கு ஒரே மகன். எதுவாக இருந்தாலும் இப்போது அவன்தான் செய்தாக வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள மருத்துவரையே கேட்டான்.     

"Situation கொஞ்சம் Serious தான் ராஜு, ஆன நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. உங்க Father COMA ல இருந்து Recover ஆகுற வரைக்கும் Insulin கொடுத்து Monitor பண்ணிக்கிட்டு இருப்போம். Don't Worry இன்னும் Maximum 18 Hrs குள்ள COMA ல இருந்து Recover அகிருவார், அதுக்கு அப்புறம் தான் வேற என்ன Problem இருக்குதுன்னு பார்க்கணும்." என்று மருத்துவர், சற்று ஆறுதலையும் மேலும் பயத்தையும் ஏற்றினார். 

மருத்துவரிடம் பேசிவிட்டு, அம்மாவுக்கும் அறுதல் சொல்லிவிட்டு, மைதானத்தில் இருந்து வீட்டை நோக்கி ஓடினான் ராஜு. 

ராஜு, முதுகலை கணிப்பொறி பயின்று விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தான்.ஒரு வருடம் கழித்து ஒரு சுமாரான வருமானத்தில் இப்போது தான் ஒரு வேளையில் அமர்ந்திருக்கிறான். உடன் தங்கி இருக்கும் ராஜுவின் மற்ற நண்பர்கள் ஏற்க்கனவே பல பன்னாட்டு மூன்றெழுத்து நிறுவனங்களில் பணியில் இருந்தனர். 

தன் தந்தையின் நிலையை நண்பர்களிடமும், அலுவலக மேலாளரிடமும் விளக்கி விட்டு, விடுப்பு எடுத்துக் கொண்டு தன் ஊர் கோவில்பட்டிக்கு பயணத்தை தொடங்கினான்.

12 மணி நேர பேருந்து பயணத்திற்கு பின்பு கோவில்பட்டி பேருந்து நிலையத்தை  அடைந்தான்.

பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ஜோதி மருத்துவமனையும் இருந்ததால், சில நிமிடங்களில் மருத்துவ மனை வாசலை நோக்கி வந்த அவன் அம்மாவை சந்தித்து விட்டான்.

"என்னாச்சுமா? அப்பா எப்படி இருக்காரு?" என்று கேட்டான் ராஜு.

"அப்பா முழிச்சி ஒரு மணி நேரம் ஆகுது, வா பார்க்கலாம்" என்று காபி வாங்க போகாமல், கையில் கொண்டு வந்த FLASK கை எடுத்துக் கொண்டு, மகனையும் அழைத்துக் கொண்டு, ராஜுவின் தந்தை அனுமதிக்கப் பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றார் அம்மா.

அப்பாவுக்கு ஆறுதல் வார்த்தை கூறிவிட்டு, அவரின் உடல் குறித்த முழுத் தகவலையும் அறிந்து கொள்ள மருத்துவருக்காக காத்திருந்தான்.

அது தனியார் மருத்துவ மனை என்பதால் மருத்துவர் சரியான நேரத்திற்கு வந்து விட்டார். ராஜு தந்தையின் இதய துடிப்பையும், உடல் வெப்ப நிலையும் சரிபார்த்து விட்டு. நுண்துளை குழாய் வழியாக ஏறிக்கொண்டிருந்த "NS" என்று குறிக்கப் பட்டிருந்த புதிய  க்ளுகோஸ் பையை மாற்றிவிட்டு ராஜுவின் கேள்விகளுக்கு விடையளிக்க வந்தார்.

"உங்க அப்பாவுக்கு வலது பக்க KIDNEY ல INFECTION ஆகியிருக்கு. கொஞ்சம் SERIOUS தான். MONDAY மதுரை அம்மன் HOSPITAL க்கு கொண்டு போங்க. நான் LETTER தர்றேன். Dr.கேசவன் ன MEET பண்ணுங்க, இந்த TREATMENT ல அவர் SPECIALIST, கண்டிப்பா CURE ஆயிரும் பயப்பட வேண்டாம்" என்று நம்பிக்கை மொழிந்தார் அந்த மருத்துவர்.

"எவ்வளவு செலவாகும் Dr?" என்றான் ராஜு.

"இவ்வளவு தான் ஆகும்னு சரியா சொல்ல முடியாது, ஏன்னா அது  உங்க அப்பாவோட உடம்பு எப்படி TREATMENT க்கு COOPERATE பண்ணுதுன்னு வச்சிதான் சொல்ல முடியும். APPROXIMATE டா சொல்லனும்னா 2 லிருந்து 3 லட்ச ரூபாய் ஆகும்." என்று ராஜுவின் தலையில் கதிரேச மலையை எடுத்து வைத்தார் மருத்துவர். (கதிரேச மலை கோவில்பட்டியில் இருக்கும் ஒரே ஒரு மலை).

மாலை பணி முடிந்தது வீட்டுக்கு செல்லும் முன்பு, தான் முன்பு கூறிய கடிதத்தை ராஜுவிடம் ஒப்படைத்து விட்டு சென்றார் மருத்துவர். இரவு 08:00 மணிக்கு ராஜுவின் தாய் மாமா சேகர் மருத்துவ மனைக்கு வந்தார்.

அம்மா, அப்பாவின் அருகில் அமர்ந்திருக்க, தனியாக பேசவேண்டும் என்று,  மாமாவை மட்டும் மருத்துவ மனைக்கு வெளியே அழைத்தான் ராஜு.

மாமா சேகரின் கட்டளையை ஏற்று, அருகில் இருந்த கடையில் இருந்து இரண்டு தேநீர் எடுத்து வந்து ஆளுக்கு ஒன்றாக கொடுத்து விட்டு சேகரிடம் 10 ரூபாய் பெற்றுக்கொண்டு சென்றான் அந்த சிறுவன்.

"என்ன ராஜு" என்று தேநீரின் மேற் பரப்பில் தவழ்ந்து கொண்டிருந்த ஆவியை  ஊதிக் கொண்டே உரையாடலை துவங்கினார் மாமா சேகர்.

"அப்பாவுக்கு OPERATION பண்ண வேண்டி இருக்கும் போலருக்கு, 3 லட்ச ரூபா வர செலகும்னு DOCTOR சொல்றார், MONDAY மதுரைக்கு கொண்டு போகணும். பணத்துக்கு என்ன பண்ணணு யோசனையா இருக்கு" என்று தொடங்கினான் ராஜு.

"என்கிட்டே இப்போ BANK ல 25 ஆயிரம் இருக்கும், உன்கிட்ட எவ்வளவு இருக்கு" என்றார் மாமா.

"என்கிட்டே 10 ஆயிரம் தான் இருக்கு, அம்மாவோட நகையும் அந்த இடம் வாங்குறதுக்கு அடமானம் வச்சாச்சி. FRIENDS கிட்ட தான் கேட்கலாம்னு இருக்கேன்". என்று தன் திட்டத்தை மாமாவிடம் பகிர்ந்து கொண்டான் ராஜு.

"சரி, உன் FRIENDS கிட்ட கேட்டுப்பாரு, நானும் இங்க எதாவது கைமாத்த முடியுமானு பாக்குறேன்" என்றார் மாமா. மேலும் ராஜு தற்போது தான் வேளையில் சேர்ந்துள்ளதால் மேலும் விடுப்பு எதுவும் எடுக்க வேண்டாம் என்றும் தானே மதுரை மருத்துவ மனையில் அப்பாவை திங்கள் அன்று சேர்த்து விடுவதாக கூறினார்"

"உங்க BANK ACCOUNT NUMBER கொடுங்க மாமா, MONDAY உங்க ACCOUNT க்கு MONEY TRANSFER பண்றேன், அப்பாவ  HOSPITAL ல ADMIT பண்ணும் போது தேவைப்படும்" என்றான் ராஜு.

"NUMBER ஞாபகம் இல்ல ராஜு, வீட்ல போயி, எழுதி கொண்டு வர்றேன்" என்று கூறிவிட்டு, சில ஆறுதல் மொழிகளையும் வழங்கி விட்டுச் சென்றார் மாமா சேகர்.

திங்கள் காலை 06:00 மணிக்கு திருச்சி வரை  செல்லும் புகை வண்டியில் மாமாவுடன் சேர்ந்து மதுரைக்கு செல்லுமாறு அம்மாவிடம் கூறிவிட்டு. அம்மாவிடம் மாமா எழுதி கொடுத்திருந்த வங்கிக்கணக்கு எண்ணையும் வாங்கிக் கொண்டு ஞாயிறு இரவு பேருந்தில் ஏறினான் ராஜு.

மறுநாள் காலை தன் அறை நண்பர்களை சந்தித்து தன் தந்தையின் நிலையை விளக்கினான்.

வாங்கும் சம்பளத்தை என்ன செய்ய என்று தெரியாமல், அடுக்குமாடி திரை அரங்குகளிலும், தப்பாமல் இருதய நோயை கொண்டு வரும் உயர்தர உணவகங்களிலும் செலவு செய்யும் ராஜுவின் நம்பர்கள் ஐவர் ஆளுக்கு 50 ஆயிரம் கடனாக (வட்டியில்லாமல்) தருவதாக ஒப்புக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் 2.5 லட்ச ரூபாய் ராஜுவின் வங்கிக் கணக்கில் தஞ்சம் அடைந்தது. அதில் இரண்டு லட்ச ரூபாயை மாமா சேகர் எழுதிக் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு இடம் மாற்றினான் ராஜு.

எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் கிடைத்து ராஜுவிற்கு பெரும் பாரத்தை குறைத்தது.  அலுவலகம் செல்லும் முன்பு பணம் அனுப்பி விட்ட தகவலை மாமாவிடம் தெரிவித்து விட்டான். மாமா சேகர் மருத்துவ மனையில் இருப்பதாகவும், அவன் அப்பா சேர்க்கை முடிந்தவுடன் ருபாய் எடுத்துக் கொள்வதாக கூறினார்.

மதியம் 02:00 மணிக்கு மாமா சேகரிடம் இருந்து அழைப்பு வரவும் என்ன வென்று கேட்க, இன்னும் அனுப்பிய பணம் வந்து சேரவில்லை என்றார் மாமா.

"என்ன மாமா சொல்றீங்க? பணம் இன்னும் Credit ஆகலையா?" என்றான் ராஜு குழப்பத்துடன்.

"ஆமா ராஜு, இப்போதான் Check பண்ணேன், நான் குடுத்த ACCOUNT NUMBER க்கு தான அனுப்பி வச்ச?" என்று சந்தேகத்துடன் கேட்டார் மாமா.

மாமா எழுதிக் கொடுத்த காகிதம் தன்னுடைய மேல் சட்டையின் இடது மேல் பையில், இதயத்துக்கு அருகில் பத்திரமாக இருந்தது.மாமாவை சரி பார்க்கச் சொல்லிவிட்டு, ஒவ்வொரு எண்ணாக வாசிக்க ஆரம்பித்தான் ராஜு.

 0 0 0 1 0 1 5 2 4 9

"ராஜு, இப்போ கடைசியா சொன்னேல்ல, அங்க  9 இல்ல 3 வரணும்" என்று இடியை இருதயத்தில் இறக்கினார் மாமா.

"அய்யையோ!!, மாமா  இதுல நீங்க 9 னு எழுதி கொடுத்திருக்கீங்க" என்று பதறினான் ராஜு.

"BANK PASS BOOK க பாத்துதான் எழுதிக் கொடுத்தேன், இப்போ கூட அதப் பாத்துதான் சொல்றேன். 3 தான் உனக்கு 9 னு தெரிஞ்சிருக்கு போல ராஜு" என்றார் மாமா.

அதற்க்கு மேல் ராஜுவால் பேச முடியவில்லை. மாமாவை வங்கியில் விசாரிக்க சொல்லிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்தான்.

ராஜுவிடம் அவன் பணம் அனுப்பிய எண்ணை வங்கிக் கொண்டு வங்கியை தொடர்பு கொண்டார் மாமா. எந்த தகவலும் அவருக்கு கிடைக்க வில்லை. இந்த தகவலை அறிந்த ராஜு உடனே மீண்டும் ஊருக்கு புறப்பட்டான்.  (முதல் ஒன்பது இலக்கங்கள் மாமாவின் வங்கிக் கணக்கு எண்ணை ஒத்து இருந்ததால், கண்டிப்பாக பணம் அனுப்பிய அந்த எண் நிச்சயம் கோவில்பட்டியை சேர்ந்த எண்ணாக இருக்க வேண்டும் என்று நம்பினான் ராஜு). 

மறுநாள்  


காலை 10 மணிக்கு கோவில்பட்டியின் மாநில வங்கியில் நின்றான் ராஜு. நிலைமையை காசாளரிடம் விளக்கினான்.

"உங்க PROBLEM எனக்கு நல்லா புரியுது, ஆனா என்னால இதுக்கு எதுவுமே பண்ண முடியாது. பெரிய AMOUNT ட INTERNET ல TRANSFER பண்றீங்கன்னா, அதுக்கு முன்னால ஒரு சின்ன AMOUNT ட அனுப்பி அந்த ரூபா போய் சேந்துச்சானு தெரிஞ்சிக் கிட்டு, மீதி பணத்த அனுப்பனும். நீங்க விவரம் இல்லாம இப்படி பண்ணீட்டிங்க. இப்போ ஒண்ணுமே பண்ண முடியாது" என்று தன் பங்குக்கு பீதியை கிளப்பினார் காசாளர்.

"நீங்க வேணா MANAGER ர பாருங்க" என்று சும்மா உட்கார்ந்திருந்த வங்கியின் மேலாளருக்கு வேலை கொடுத்தார் காசாளர்.

சிறுது நேரம் காத்திருந்த பின்பு மேலாளர் அறையினுள் அனுமதிக்கப் பட்டான் ராஜு. காசாளரிடம் வந்த அதே பதில் மேலாளரிடமும் இருந்து வந்தது.

"AT LEAST, அந்த ACCOUNT NUMBER யாருதுனாச்சும் சொல்லுங்க SIR" என்று  மேலாளரிடம் கெஞ்சினான் ராஜு.

"அதுவும் உடனே சொல்ல முடியாது, சட்டப் படி அத சொல்லக் கூடாது" என்று நீதிபதியாகவும் மாரி சட்ட ஒழுங்கை காப்பாற்றினார் மேலாளர்.

"வேற வழியே இல்லையா சார்?" என்று ராஜு விடாமல் முயற்சிக்க.

"நீங்க கைப்பட ஒரு LETTER எழுதிக் கொடுங்க, உடனே ACTION எடுத்து ONE WEEK ல அந்த ACCOUNT OWNER DETAILS ச தருவோம்" என்றார் மேலாளர் அதிரடியாக.
                               
இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, ராஜுவின் உயர் ரத்த அழுத்தம் 180 mm Hg யை தாண்டிக் கொண்டிருந்தது. உடலின் உள் வெப்பம் சதம்மடித்தும் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு மணிநேரத்தில் அதிகபட்சமாக சுரக்கவேண்டிய 4 லிட்டர் வியர்வையை, ராஜுவின் வியர்வை சுரப்பி 15 நிமிடத்தில் சுரந்து வறண்டு கொண்டிருத்தது.

மூளை சிந்திக்கும் திறனை முழுவதும் துறந்திருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், அனிச்சை செயலால் வாசலை நோக்கி நகர்த்தப் படுக்கொண்டிருந்தான் ராஜு.

வாய் முழுவதும் மூடப் பட்டிருந்ததால் வலிப்பில் உடல் உதறிக் கொண்டிருந்த அலைபேசியை இரும்புக் கரம் கொண்டு அனைத்து அடக்கினான் ராஜு.  மறு முனையில் அம்மா.

என்ன சொல்வது... சொல்லவா?  வேண்டாமா?

தெரியாமல் தவித்தான் ராஜு...

"ராஜு, எங்கப்பா இருக்க? அப்பாவுக்கு OPERATION DATE கொடுத்திருக்காங்க. அடுத்த புதன் கிழமை." என்றார் அம்மா.

"சரிம்மா, இப்போ ஊர்ல தான் இருக்கேன். அதுக்குள்ள பணத்துக்கு ஏற்ப்பாடு பண்ணிரலாம். அப்பா இப்போ எப்படி இருக்காரு ?" என்றான் ராஜு.

"அப்பா நல்லா இருக்காரு, நீ HOSPITAL வரும் போது வீட்ல இருந்துஅந்த கட்டப் பைய எடுத்துட்டு வந்துரு. அதுல கொஞ்சம் மாத்திக்க துணி வச்சிருந்தேன், புறப்படும் போது எடுக்க மறந்துட்டேன். இப்போ என்கிட்ட இருக்குற துணி ரெண்டு நாளைக்கு தான் வரும்" என்றார் அம்மா.

"சரிம்மா கொண்டு வந்துர்றேன்" என்று அம்மாவுக்கு பதில் அளித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ராஜுவின் நண்பன் குமாரின் தொலைபேசி அழைப்பு வந்தது.

குமாரின் தந்தை அதே மாநில வங்கியின் திருநெல்வேலி கிளையில் மேலாளராக பணி புரிகிறார். இதை முற்றிலும் மறந்திருந்தான் ராஜு. நல்ல வேளையாக குமாரே அழைத்துவிட, அவனிடம் இந்த தகவலை கூறி அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளரின் விவரங்களை வாங்கி விட்டான் ராஜு.

அந்த வங்கிக் கணக்கின் விலாசம்,  59 சாலிகாபுரம் முதல் தெருவிற்கு ராஜுவை அழைத்துச் சென்றது. பழைய எண், புது எண், என அந்த கதவில் அடித்து அடித்து மூன்று எண்களும், இரண்டு பார்களும் இருந்தன. கோவில்பட்டியில் இப்போது எல்லா வீடுகளிலும் பார்கள் புகுந்து விட்டன.

இரண்டு முறை கதவை தட்ட, அரைக்கால் சட்டையுடன் ஒருவர் வெளியே வந்தார்.

"கண்ணன் இருக்காரா?" என்று ராஜு கேட்க, நான் தான் அது என்பது போல தலையை அசைத்து விட்டு என்ன வேண்டும் என்று கேட்க.

"உங்க கிட்ட தான் SIR பேசணும், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா கொஞ்சம் வீட்டுக்கு உள்ள போயி பேசலாமா?" என்று ராஜு கேட்டான், அரை மனதுடன் ராஜுவை உள்ளே வரச்சொன்னார் கண்ணன்.

உள்ளே சென்று உட்கார்ந்தவுடன் தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்ததன் நோக்கத்தை விளக்கினான் ராஜு.

"தவறுதலா உங்க ACCOUNT க்கு ரூபா அனுப்பிட்டேன், நீங்க அத எடுத்து குடுத்தீங்கன்னா, எனனக்கு ரொம்ப உதவியா இருக்கும். அடுத்த வாரம் எங்கப்பாவுக்கு OPERATION. " என்று ராஜு முடிக்க.

கண்ணன் அமைதியாக இருந்தார்.

உள்ளிருந்து கண்ணனின் மனைவி தண்ணீர் கொண்டு வந்து ராஜுவிற்கு கொடுத்தார். தண்ணீர் குடித்து விட்டு வெற்று குவளையை நன்றியால் நிரப்பி  கண்ணன் மனைவியிடம் கொடுத்து விட்டு கண்ணனின் பதிலுக்காக காத்திருந்தான் ராஜு.

"உங்களுக்கு நான் என்ன சொல்றதுன்னு தெரியல ராஜு, என்ன புடிச்ச சனியன் இப்போ உங்களையும் பிடிச்சிக் கிச்சி" என்று ராஜுவை குழப்பினார் கண்ணன்.

"என்ன SIR சொல்றீங்க, எனக்கு புரியல" என்று ராஜு கேட்க...

"நான் சின்னதா ஒரு MATCH FACTORY நடத்திக் கிட்டு இருந்தேன், அவசரம்னு இங்க ஒருத்தர் கிட்ட கடனுக்கு பணம் வாங்கி இருந்தேன். ரொம்ப வருசமா  பணம் கட்டிக் கிட்டு இருக்கேன், இன்னனும் முடியல. MATCH FACTORY ய வித்துட்டேன். இப்போ பக்கத்து மில்ல்லுக்கு தான் வேலைக்கு போறேன்." என்று கண்ணன் கூறிக் கொண்டிருக்கும் போதே ராஜு இடை மறித்து.

"சரி SIR, அதுக்கும் இப்போ நான் சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்?" என்று கேட்டான்.

"என்னோட சம்பளம் BANK ACCOUNT ல போட்ருவாங்க அதனால என்னோட ATM CARD, CHECK BOOK, PASS BOOK" எல்லாமே அந்த படுபாவி பிடிங்கிட்டு போயிட்டான். என் வீட்டுக்காரி யோட வருமானத்துல தான் இப்போ குடும்பமே ஓடுது" என்று முடித்தார் கண்ணன்.

"உங்களுக்கு ரூபா குடுத்தவர் கிட்ட போய் பேசி பார்க்கலாமா SIR?" என்று ராஜு கேட்க

"என்னங்க நா இவ்வளவு சொல்றேன் நீங்க மறுபடியும் அவங்க கிட்ட பேசலாம்னா நான் என்ன சொல்ல?" என்று பணம் கொடுத்த காந்திய வாதிகளின்  தீவிர வாதத்தின் உயரத்தை விளக்கினார் கண்ணன்.

"DIRECT டா BANK ல போய் பேசி ரூபா எடுக்க எதாவது வழி இருக்கான்னு பாக்கலாமா SIR" என்று மீண்டும் ராஜூ முயற்சிக்க.

"அது முடியவே முடியாதுங்க, நீங்க உங்க ரூபாய மறந்துற வேண்டியதுதான்" என்று அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தார் கண்ணன்.

"உங்களுக்கு பணம் கொடுத்தது யாருன்னு சொல்லுங்க SIR, நா வேணா பேசிப் பாக்குறேன்" என்று கேட்டான் ராஜு.

"வைரம் GROUPS" னு கேளுங்க, பெரிய அரசியல் புள்ளி அடுத்த M. L. A " என்று வில்லனை அறிமுகம் செய்தார் கண்ணன்.

"என் கூட நீங்களும் வர முடியுமா SIR?" என்று ராஜூ கண்ணனை கேட்க.

"நான் சொல்றத நீங்க நம்புரீங்கலான்னு எனக்கு தெரியல, சரி வர்றேன்" என ராஜுவுடன் சிங்கத்தை அதன் குகையில் சந்திக்க தானும் வருவதாக ஒப்புக் கொண்டார் கண்ணன்.

கண்ணனும், ராஜுவும் சாலிகாபுரம் 6 வது தெருவிலேயே பெரிய வீட்டிற்கு சென்றனர். வாசலில் ஆளுயரத்தில் ஒரு நாய், வீட்டுக்குள் ஆட்களாகவே பல திரிந்தன....

பழைய ஆடு, புதிய ஆட்டை உடன் அழைத்து வந்திருப்பதை அறிந்து கொண்டு இருவரும் குகைக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

ராஜு, நடந்ததை விளக்க விளக்க உள்ளுக்குள் குதூகலமானாலும் வெளியில் சலமில்லாமல் உட்கார்ந்திருந்தார் உயர்ந்த உள்ளம் படைத்த அந்த உலக உத்தமர்.

"தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா இத விட்டா, இவர் கிட்ட இருந்து நான் காசு வாங்க முடியாது பாருங்க. நீங்க, இவர் கிட்ட இருந்து காசு வாங்கிக் கோங்க, அவர் எனக்கு குடக்க வேண்டியது கொடுத்ததுக்கு அப்புறம்." என்று அலட்சியமாக முடித்தார் வைரம்.

"SIR எங்க அப்பாவுக்கு OPERATION, ரொம்ப மோசமான நிலைமைல இருக்காரு"என்று ராஜு கெஞ்ச..

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும் தம்பி. கிளம்புங்க எனக்கு நிறைய வேல இருக்கு வசூலுக்கு போகணும்" என்று புறப்பட்டார் வைரம்.  புறப்படும் முன்பு

"தப்பா எடுத்துக்காதீங்க, இதுஎன்னோட தொழில்" என்று முடித்தார்.

அப்போதே கண்ணனும், ராஜுவும் வெளியே அனுப்பப் பட்டனர்.

கோவில்பட்டியின் கிழக்கு பகுதியில் வசிக்கும் ராஜுவுக்கு வைரம் பற்றி எதுவும் தெரிந்திருக்க வில்லை. அவர்கள் பற்றி தன் மாமா விடமும் மற்றவர்களிடமும் விசாரிக்க ஆரம்பித்தான். அதன்படி அவன் அறிந்து கொண்டது.

  • கோவில்பட்டியில் தீப்பெட்டி மூலப் பொருட்கள் விற்பனை செய்யும் சேட்டுகளின் தொடைர்பை, தன் துணையை சில மணிகள், பல நாட்கள்  சேட்டுகளுக்கு  துணையாக்கி பெற்றுக்கொண்டார் வைரம்.  
  • பின்பு, சேட்டுகளுக்கு வட்டி வசூல் செய்யும் முழு உரிமையையும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பின்பு பட்டயம் போட்டு பெற்றுக் கொண்டவரும் இவரே.       
  • இவரின் வட்டிகணக்கில் பிறக்கும் குட்டிகளை எளிதாக TASMANIAN DEVIL  குட்டிகளை மிஞ்சி விடும். 
  • பணம் பெருக பெருக அரசியலிலும் இவர் தவிர்க்க முடியாதவர் ஆகிப்போனார்.  
  • மூன்று மகன்கள், முதலாமானவர் இராபர்ட் கிளைவ் விட்டுப் போன பணியை தொடர சூளுரைத்தவர். இரண்டமானவர் தன் குடும்பத்திற்கு வரும் வெளிநாட்டுச் சதிகளை சமாளிக்க சட்டம் படித்தவர். மூன்றமானவர் ராஜாராம் மோகன் ராய்க்குப்  பிறகு பெண் குலத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர்.       
  • இவர்களிடம் இருந்து பணம் திரும்பப் பெறுவது. சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய கறுப்புப் பணத்தை திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வருவதை விட கடினமானது.  

நேரம் இப்போதே இரவை எட்டி விட்டதால். இனிமேல் மருத்துவ மனைக்கு செல்ல முடியாது. அதனால் அம்மாவை தொடர்பு கொண்டு நாளை வருவதாக தெரிவித்து விட்டான் ராஜு. 

அடுத்து என்ன செய்யலாம் சென்று யோசிக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நிலம் நினைவுக்கு வந்தது. வெகு நாட்களாக அந்த இடத்துக்கு அருகில் தீப்பெட்டித் தொழில் நடத்தி வரும் சாத்தூரை சேர்ந்த ஒருவரின் நினைவு வந்தது. 

அவரை தொடர்பு கொண்டு பேசினான் ராஜு, மறுநாள் மதியம் நிலப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு  ராஜுவை சாத்தூர்க்கு வரச்சொன்னார் அவர்.

அம்மாவிடம் நிலம்  பற்றி இப்போது எதுவும் சொல்லவேண்டாம் என்று தீர்மானித்தான். அதற்க்கேற்ப்ப நிலமும் அவன் பெயரில் இருந்ததால், அதற்க்கான தேவையும் குறைவாக இருந்தது.

அடுத்த நாள் மதியம், முன்பு அம்மா எடுத்துக் கொண்டு வரச்சொன்ன கட்டைப் பையை மறக்காமல் எடுத்துக்கொண்டு  அதனுடன் நிலப் பத்திரத்தின் நகலை எடுத்துக் கொண்டு சாத்தூருக்கு சென்றான். சாத்தூரில் வேலையை முடித்து விட்டு அப்படியே மதுரை மருத்துவமனைக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தான் ராஜு.

அந்த தீப்பெட்டி தொழிற்சாலை அதிபர் சாத்தூரிலும் எதோ தொழில் செய்து கொண்டிருந்தார். பேருந்து நிலையம் அருகில் இருந்த அவரின் அலுவலகம் சென்ற போது அவர் அங்கு இல்லை. சிறிது நேரம் காத்திருந்த பின்பு தொலை பேசியில் அழைத்து ராஜுவை வேறொரு இடத்திற்கு வரச் சொன்னார் தொழில் அதிபர். சாத்தூர் குறித்து அதிகமாக தெரியாததால் எதாவது இடக்குறிப்பு கூறுமாறு கேட்டான். "சவக் கிடங்கு குடவுன்" னு கேட்டா தெரியும் என்று அவர் சொல்ல தேடிக் கண்டுபிடித்து அங்கு சென்றான் ராஜு. அவர் சொன்ன இடத்திற்கு வெகு தொலைவில் சவக் கிடங்கு இருந்தது.

இரண்டாயிரம் சதுர அடி அளவுள்ள இடத்தை 5 லட்ச ரூபாய்க்கு கடைசியாக பேசி முடித்தார் அதிபர். அந்த இடத்தின் மதிப்பு இதை விட மேலும் அதிகம் என்பதால், அப்போது சம்மதம் எதுவும் தெரிவிக்காமல் விளக்கெண்ணை தடவிய பதிலை செல்லி விட்டு புறப்பட்டான் ராஜு.  அன்று மாலை வழக்கத்திற்கு மாறாக சற்று  முன்னதாகவே அந்த இடம் இருள் சூழந்து விட்டது.  பேச்சுவார்த்தை சுவாரசியம் கூட்டாததால், மனக் குதிரையை தட்டி விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன்  நடக்க ஆரம்பித்தான் ராஜு.

சற்று தூரத்தில் ஜீப் ஒன்று, யாரோ ஒருவனை இறக்கி விட்டு விட்டு அப்படியே சென்று விட்டது. பிணவறையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் அந்த ஒருவன். பிணவறையை நெருங்கியதும் அவன் முகம் சற்று மங்கலாக தெரிந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று ராஜுவின் எண்ணத்தில் மின்னல் வெட்டியது.


இன்று 


மாமாவின் வீட்டில் அமர்ந்திருந்தான் ராஜு.

"என்ன ராஜு, காலைலயே வந்துட்ட, எதாவது அவசரமா?"  என்று மாமா விசாரிக்க. அவர் என்ன நினைத்து கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு.

"அவசரம் எதுவும் இல்ல மாமா, அப்பா நல்லாத்தான் இருக்கார். ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான்" என்றான் ராஜு.

"சொல்லு ராஜு" என்று கேட்ட மாமாவுக்கு, தன்னுடைய அலைபேசியில் எதோ ஒரு படக் காட்சியை ஓடச் செய்து கொடுத்தான். படக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த மாமா திடீரென பதட்டமானர்.

"ராஜு, இது?" என்று மாமா கேட்க,

"சந்தேகம் இல்லாம அவன் தான் மாமா" என்று உறுதி படுத்தினான் ராஜு.

"இது எப்படி உனக்கு கிடைச்சது? இத வச்சிக் கிட்டு என்ன பண்ணப் போற?" என்று கேட்ட மாமாவுக்கு

"நேத்து நான் தான் இத எடுத்தேன். இத வச்சிதான் அவங்களுக்கு தண்ணி காட்டப் போறேன்" என்றான் ராஜு.

"வேண்டாம் ராஜு, இது பெரிய பிரச்சனை யாயிடும்" என்று அறிவுரை வழங்கிய மாமாவுக்கு

"விட்டத பிடிக்க இதவிட்டா வேற வழியில்ல மாமா" என்று எதற்கும் துணிந்தான் ராஜு                   

"நேத்து நம்ம நிலத்த விக்கலாம்னு சாத்தூர் வரைக்கும் போயிருந்தேன், அங்க இருந்த ஒரு சவக் கிடங்கில் தான் இவன் இருந்தான். வைரத் தோட மூனாவது பையன்." என்று ராஜு நடந்ததை மாமாவுக்கு விளக்க.

"இத வச்சிக்கி கிட்டு அவங்க கிட்ட பணம் கேட்கப் போறியா? உன்னோட Plan அதுதான்னா. அது ரொம்ப தப்பான Plan ராஜு"

"நிச்சயமா இல்ல மாமா, இவங்க கிட்ட எல்லாம் நாம நேரடியா மோதக் கூடாது. என்னோட Plan வேற."

அந்த நான்கு எழுத்து எதிர் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பள்ளி நண்பனிடம் ஏதோ பேசி அலைபேசியை ஒப்படைத்தான் ராஜு.

"கவலப் படாத ராஜு, உங்க அப்பா OPERATION ன கட்சி பாத்துக்கும்" என்றான் நண்பன்.

"இல்ல, அதெல்லாம் வேண்டாம். எனக்கு கைல காசக் குடுத்துரு, நான் இதுல INVOLVE ஆகி இருக்கிறது வெளிய தெரியக் கூடாது" என்று கட்டளையிட்டான் ராஜு.

"இந்த ஒரு VIDEO போதும், வைரத்த நிரந்தரமா வீட்லையும், அவன் பையன மாமியார் வீட்லயும் உட்கார வச்சிரலாம். உன்னோட பேரு வெளிய வராம நான் பாத்துக்குறேன்" என்று உறுதி அளித்தான் நண்பன்.

கட்சி மேலிடத்தில் கணிசமான பணத்தை வாங்கிக் கொடுத்தான் எதிரிக் கட்சி நண்பன்.        

மாலை பணத்துடன், கட்டைப் பையை எடுத்துக் கொண்டு தந்தையை பார்க்கக் புறப்பட்டான் ராஜு.

வைரத்தின் வார்த்தைகள் எதிரொலித்தன "தப்பா எடுத்துக்காதீங்க, இதுஎன்னோட தொழில்".