cookie

Saturday, December 31, 2016

இரண்டாம் காதலி... முதல் மனைவி...

(கிட்டத்தட்ட) எல்லா மகன்கள் போல, எனக்கும் அம்மாதான் முதல் காதலி...  

"அழகு என்பது நிறத்திற்கு அப்பாற்பட்டது" என்பது "கனகவள்ளி" எனும் அந்த தேவதையை கண்டபின்புதான் புரிந்துகொண்டேன், சுருங்க சொல்வதென்றால் "கனகவள்ளி"  கோவிலில் இருக்கும் அலங்கரிக்கப்பட்ட "சாமி"சிலை. அந்த சிலையை தினமும் பார்க்க, "திட்டு"மட்டுமல்ல அடிகூட வாங்க ஒரு கூட்டமே காத்துக்கிடந்தது.

அன்றைய தினம் நாங்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, கனகவள்ளி அங்கு வந்தார். "ஆறுமுகம்" என்று அவர் அழைக்க, அவனும் ஓடி அருகில் சென்றான் பவ்யமாக. எங்கள் அனைவரின் முன்பாக ஆறுமுகத்திடம் ஒரு காகிதஉறையை நீட்டி, "உங்க எல்லாருக்கும் சேத்து இந்த பத்திரிக்கையை ஆறுமுகம் கிட்ட கொடுக்குறேன், நீங்க எல்லாரும் என்னோட கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்" என்று கூறிவிட்டு, "7B மாணவர்கள்" என காகித உறையில் எழுதினார்.

"டீச்சர், டீச்சர் அப்போ உங்கள நாங்க இனிமே பாக்கவே முடியாதா?" என்று ஆறுமுகம் சோகமாக கேட்க, கனகவள்ளி டீச்சர் கண்ணீரை மறைத்து கொண்டு "முழுஆண்டு பரீட்சை முடுஞ்சதும் நான் கண்டிப்பா வருவேன்" என்று உறுதிமொழிந்தார். இரண்டு மாதம் தேர்வு விடுமுறை முடிந்ததும் மீண்டும் பள்ளிக்கு திரும்பியபோது, ஒருவர் விடாமல் நாங்கள் அனைவரும் "7B" வகுப்பை பார்த்துவிட்டு வந்தோம், ஆறுமுகத்தை அனுப்பி ஆசிரியர்கள் அறையிலும் சென்று பார்த்துவர அனுப்பினோம், எங்குமே கனகவள்ளி டீச்சரை காணவில்லை.

அந்த துயரத்திலிருந்து மீள்வதற்க்கு முன்பாகவே அடுத்தஇடி இறங்கியது "8B"யில். பள்ளியிலேயே மிகவும் கெடுபிடியான ஆசிரியை எங்கள் "வகுப்பு ஆசிரியை"யாக வருவதாக ஆறுமுகம் கூறினான். மறுநாளே அது வதந்தியானது. கெடுபிடி ஆசிரியைக்கு பதிலாக "சீனிவாசன்" சார் எங்கள் வகுப்புக்கு வந்தார். "சீனி" சார் "8B"க்கு வருகிறார் என்றவுடன் மற்ற வகுப்பில் இருந்து மாணவர்கள் எறும்பாக "8B"க்கு படையெடுத்தனர். தலைமை ஆசிரியர் அனுமதியுடன் விருப்பமாற்று பெற்றுக்கொண்டு, பிரிவுக்கு இரண்டு மாணவர்கள் வீதம் பத்துபேர் அதிகமாயினர் எங்கள் வகுப்பில்.

சீனிவாசன் சார் எங்கள் வகுப்பிற்கு வந்ததிலிருந்து எங்கள் அனைவருக்கும் ஒரே குதூகலமாக இருந்தது. பாடம்தவிர, சூரியஒளி தழுவும் அனைத்தையும் பற்றி விவாதிப்போம். அவ்வாறான விவாதம் ஒன்றில், தனக்கு "வானவியல்" தெரியுமென்றும் எதிர்காலத்தை கூட தன்னால் கணிக்கமுடியுமென றும் சீனிவாசன் சார் கூற, நாங்கள் எங்களுக்குள் "டூப்பு டூப்பு" என்று மெதுவாக கூறிக்கொண்டு வாயைமூடி சிரித்தோம்.

நாங்கள் சிரிப்பத்தை கண்டுகொண்ட சீனிவாசன் சார் அதோடு நில்லாமல், தன்னுடைய சாகசத்தை அடுத்த படிக்கு உயர்த்தினார். என்னால் உங்களுடைய மனைவியின் பெயரை கூட சொல்லமுடியும் என்று ஒரு பந்தில் சதமடித்தார். வகுப்பில் கிளுகிளுப்பு விண்ணைத்தொட்டது. இருந்தாலும் சிலர் சீனிவாசன் சாரின் "அமானுஷ ஷக்தியை" நம்பாமல் தொடர்ந்தது இளித்தனர். பொறுமையிழந்த சீனிவாசன் சார், "சரிடா இன்னும் நீங்க நம்பலேன்னா வரிசையா இங்க வாங்க உங்க வருங்கால பொண்டாட்டி பேர இப்போவே நான் சொல்றேன்" என்று கட்டளையிட...

...
...              
...      
...

ஆசை அனைவரையும் தள்ளினாலும், நல்ல பையன் என்ற பிம்பத்தை உடைக்க யாருக்கும் விருப்பமில்லை. அதனால்... 

...
...              
...      
...

"என்னடா? யாரும் வரலையா? சும்மா நடிக்காதீங்கடா! வாங்கடா!!!" என்று சார் அன்புடன் அழைக்க.
...
...

நான் முதலில் சென்றேன்...

"என்னடா, ஒருத்தந்தான் வந்துருக்கான், வேற யாருக்கும் பொண்டாட்டி பேரு தெரியவேண்டாமா ?"என்று சார் தூண்டில்போட

ஆறுமுகம்
செல்லத்துரை
தவமணி
மகேஷ்

என ஐவர் வரிசையில் நின்றோம்...

மறுபடியும் சீனிவாசன் சார் தூண்டில் வேறு திசையில் வீச, புதிதாக எந்த மீனும் மாட்டவில்லை. "சரி, வராட்டி போங்க..." என்று சலித்துக்கொண்டு என்னிடம் "வலதுகை" என்றார். சிலநொடிகள் உற்றுநோக்கிவிட்டு

"உன்னோட wife பேரு..." என்று இடைவெளி விட்டு மொத்த வகுப்பையும் நோக்கினார்... வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன்கூட சீனிவாசன் சாரின் அடுத்த வார்த்தைக்கு காத்திருந்தான்.

....

"உன்னோட wife பேரு..."

...
...
...

பொறுமையிழந்த மொத்த வகுப்பும் "சொல்லுங்க சார்..." என்று கெஞ்ச...

"உன்னோட wife பேரு... Mrs. அருண்..." 

Saturday, December 3, 2016

கட்டபொம்மனும்...நெப்போலியனும்... எனது ஒன்றுவிட்ட தாத்தாவும்...

விடுமுறைக்கு சொந்தஊருக்கு சென்றிருந்த பொழுது நிகழ்ந்த மற்றொரு சம்பவம்...

பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் அடுத்ததாக இருந்தது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, அதைக்கண்டு வரலாமென்று அன்று காலையே புறப்பட்டோம் கோட்டைக்கு. மதி மலரும் வேளையில்தான் வீடுதிரும்பினோம். மறுநாள்காலை எங்களின் நலம் விசாரித்துவிட்டு அப்படியே ஏகாதிபத்திய மண்ணில் வாங்கிய மின்கல விளக்கை கப்பமாக பெற்றுச்செல்ல எனது ஒன்றுவிட்ட தாத்தா எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்.

மின்கலம் மறுஊட்டம் செய்யவியலாததால் விளக்கில் அவருக்கு திருப்தியில்லை சலிப்புடன் அடுத்த கேள்வியை சம்பிரதாயமாக துவங்கினர்.

"அப்புறம், நேத்து எங்க போயிருந்தீங்க?"

"பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு போயிருந்தோம் தாத்தா, நல்லாயிருந்தது. நீங்க போயிருக்கீங்களா?"

"இல்ல, அதுக்கெல்லாம் நமக்கு எங்க நேரம் இருக்கு, சிவாஜி நடிச்ச கட்டபொம்மன் படம் பார்த்ததோடு சரி" என்று கூறிக்கொண்டே என் மகனை அருகில் அழைத்தார். அவனும் தயங்கிக்கொண்டே அவர் அருகில் சென்றான். 

இந்த தாத்தா நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர பக்தர். வரலாற்றுப் பேராசிரியருக்கே வரலாறு கற்றுக்கொடுக்கும் பேரறிவை பிறப்பிலேயே கொண்டவர். இவரின் சின்ன தலைக்குள் இவ்வளவு தகவல்களா! என்று நான் பலமுறை வியந்துள்ளேன். ஒரு சமயம் அவர் இவ்வாறு கூறியது இன்னும் என் நினைவில் உள்ளது. "நடிகர் திலகம்(1928-2001) அவர்களே முந்தைய பிறவிகளில் "வீரபாண்டிய கட்டபொம்மு"வாகவும்(1760-1799), கப்பலோட்டிய தமிழனாகவும் (1872-1936), ஒரு படிமேலே போய் மகாகவியாகவும் (1882-1921) வாழ்ந்தார்".

"ஆரியா, கோட்டையில என்ன பாத்தேன்னு தாத்தாகிட்ட சொல்லு!" வழக்கம்போல அதற்கு அவன்  கேள்வி புரியாமல் என்னைப்பார்க்க. நானும் வழக்கம்போல அவனுடைய பதிலை என் வாய்மொழிந்தேன்...

சிறிது நேரத்தில் கோட்டை கட்ட பாஞ்சாலங்குறிச்சி ஏன் தேர்வானது என்ற கேள்வி வரவே. நான் அங்கு சுற்றுலா வழிகாட்டியிடம் கேட்டதையும் அதற்கு முன்பு புத்தகத்தில் படித்ததையும் அவரிடம் சொன்னேன்.

"ஒரு நாள் கட்டபொம்மனின் முன்னோர்கள் வேட்டைக்கு அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு சென்றபொழுது, அவர்களுடன் வந்த வேட்டைநாய் அங்கோர் முயலை கண்டது. உடனே அதனைப்பிடிக்க விரட்டியது. உயிருக்குப் பயந்து ஓடத்தொடங்கிய முயல், தொடர்ந்தது ஓடியது, வேட்டைநாயும் விடாமல் விரட்டியது.  அதுவரை ஓடிய முயல் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும் ஓடுவதை நிறுத்திவிட்டு வேட்டைநாயை எதிர்த்தது. இதைக்கண்ட கட்டபொம்மனின் முன்னோர்கள், முயலுக்கே வீரம் கொடுத்த இந்த மண்ணில்தான் நாம் கோட்டை கட்டவேண்டும் என்று முடிவுசெய்து கோட்டையை கட்டிமுடித்த ஆண்டு கி.பி 1101" என்று கூறி முடிக்க.

"என்னது! முயல் நாய்கூட சண்டை போட்டுச்சா? அதுவும் வேட்டைநாய் கூடவா? இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு? நம்ம ஆளுங்க ஒண்ணுன்னா நூறுன்னுதான் சொல்லுவாங்க" என்று வரலாற்றின்(?) மீது பிராது கொடுத்தார். 

சில நொடிகள் நாம் அமைதியாக இருந்தேன் பிறகு முன்பு படித்த நெப்போலியனின் நிகழ்வு நினைவில் வரவே...

"1807 ஆண்டு, ருசியா பேரரசின் படைகளை வென்ற நெப்போலியன் அந்த வெற்றியை கொண்டாட  அவரின் படைத்தலைவர் "லூயிஸ் பெர்த்தியர்" என்பவரிடம் முயல் வேட்டைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அவரும் ஆணையை ஏற்று வேட்டைக்கு முயல்களை சேகரித்தார். மொத்த முயல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000. மதிய உணவு உண்டபிறகு வேட்டைக்கு அனைவரும் துப்பாக்கியுடன் தயாராக, கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து முயல்களும் புல்வெளிக்கு திறந்து விடப்பட்டன. கையில் துப்பாக்கியுடன் வீர்கள், அவர்களின் முன்னே (அப்போது) உலகின் சக்திவாய்ந்த மனிதன் நெப்போலியன், எதிரே அப்பாவி முயல்கள். துப்பாக்கிகளின் விசைகள் அழுத்தத்துக்கு தயாராக இருந்தன. முயல்கள் ஓட வேண்டும் அவ்வளவுதான்"

"அப்புறம் என்னாச்சு" என தாத்தா தோட்டாவை வீசினார் 

"ஓடுவதற்கு பதிலாக முயல்கள் வீரர்களை நோக்கி முன்னே வரத்தொடங்கின. இதைக்கண்டு அனைத்து வீரர்களும் சிரித்தனர், நெப்போலியனும்" அவர்களுடன் எனது ஒன்றுவிட்ட தாத்தாவும் சிரித்தார்.

"பெறகு?"

"முன்னே வந்த முயல்கள் வீரர்களின் மீது பாய்ந்தன, இதில் சிறப்பம்சம் என்னவென்றால்! ஒரு சிறிய முயல் கூட்டமே நெப்போலியன் மீது பாய்ந்தது ஒன்றின்மீது ஒன்றாக ஏறி தலைவரை சென்றுவிட்டது. இதே நிலைதான் அனைவருக்கும். வேட்டையாட வந்த கூட்டம் முயல்களால் வேட்டையாடப்பட்டது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று நெப்போலியன் அங்கிருந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து அவருடைய வீரர்களும்"

"உண்மையாவா!"

"ஆமா தாத்தா, இதப்பத்தி அவருடைய படைத்தலைவர் (Paul Thiébault) சொல்லியிருக்கார்"

"ஓ வெள்ளைக்காரனே சொல்லிட்டானா அப்ப உண்மையாத்தான் இருக்கும்..."

Saturday, September 24, 2016

கம்பனெனும் தமிழ்த்தூக்கி...

கோடை விடுமுறையில் மதுரையில் இருக்கும் எனது அத்தை வீட்டிற்கு சென்றிருந்தபோது, அருகிலிருந்த நூலகத்தில் நெ.ரா. சுப்ரமணிய சர்மா அவர்கள் எழுதிய "கம்பர் சரித்திரம்"மெனும் அறிய புத்தகம் வாசிக்க கிடைத்தது. அதில் கம்பர் குறித்த பல புதியதகவல்களை அருமையாக பதிவு செய்திருந்தார் ஆசிரியர். இறுதி பாகத்தில் கம்பரின் சமாதி, நாட்டரசன் கோட்டையில் இருப்பதாக குறிப்பிட்டிருந்ததை அறிந்து மறுநாள் அங்கு செல்ல நானும் எனது மனைவியும் ஆயத்தமானோம். பலமணிநேரத் தேடுதலுக்குப் பின்னர் அவ்விடம் குறித்து வெகுசில தகவல்கள் கிடைத்தது. 

மறுநாள் காலை பயணம் இனிதே துவங்கியது. சரித்திரப் புகழ் படைத்த தமிழ்த்தூக்கியின் இறுதி மூச்சு உள்வாங்கப்பட்ட இடத்தை தரிசிக்கப் போகிறோம் என்ற உச்சகளிப்பில் நொடிகளை எண்ணிக்கொண்டே சிவகங்கை செல்லும் பேருந்தில் இருவரும் பயணத்தை துவங்கினோம். எங்களுக்கு அருகில் அமர்ந்திருந்த பெரியவரும் சிவகங்கைக்குதான் செல்கிறார் என்று தெரிந்ததும்,  கம்பர் சமாதி குறித்து பேச்சைத் துவங்கினேன். நடராசன் கோட்டையில் மாரியம்மன் கோவில் தெரியும் ஆனால் கம்பர் சமாதி தெரியாது என்றார். அத்தோடு நிற்காமல் அதே பேருந்தில் பயணம் செய்த அவருடைய சுற்றம் மற்றும் நடப்பு வட்டாரத்திடமும் கலந்தாலோசித்துவிட்டு யாருக்கும் எதுவும் தெரியாது என்று தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பித்துவிட்டு, "கொம்பனின்" வீரசாகசங்களை தொலைக்காட்சியில் ரசிக்க துவங்கிவிட்டார்.

முன்னதாக கம்பர் சமாதியை பார்த்துவிடலாம் என்று சிறிதாக துளிர்விட்டிருந்த நம்பிக்கையிலும் "கொம்பன்" ஆடுகளை மேயவிட்டுக் கொண்டிருந்தார். ஒருவழியாக சிவகங்கை பேருந்து நிலையம் வந்தடைந்தோம்.  அடுத்தது நாட்டரசன் கோட்டை செல்லும் பேருந்திற்காக காத்திருந்தோம். அங்கிருந்த இன்னும் சிலரிடம் விசாரிக்க "தெரியாது" என்பதைத் தவிர அவர்கள் வேறு பதில் அறிந்திருக்கவில்லை. இறுதியாக பள்ளி மாணவி ஒருவர் மட்டும் தனக்கு அவ்விடம் தெரியும் என்று கோட்டையில் கொடியேற்றினார்.

சிவகங்கையிலிருந்து வெகுசில பேரூந்துகளே நடராசன் கோட்டைக்குள்ளே செல்லும், பிற வூர்திகளில் ஏறினால் முக்கிய சாலை பிரியும் இடத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் வரை உள்ளே நடக்க வேண்டும். ஊருக்குள்ளே செல்ல அடுத்த வண்டிக்கு இன்னும் இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்பதால் முக்கிய சாலை பிரியும் இடத்தில் இறங்கி நடக்கத்துவங்கினோம்.  தோராயமாக இரண்டு கிலோமீட்டர்கள் கடந்த பிறகு அங்கோர் நவீன குடிலைக் கண்டோம் அதுதான் நாட்டரசன் கோட்டையின் பேருந்து நிலையம் என்பது பின்னர் தெரிவிக்கப்பட்டது.

அருகிலேயே இரண்டு "மூன்று சக்கரத் தேர்கள்" நிறுத்திவைக்கப் பட்டிருந்தன, தேரோட்டிகள் பயணிகளுக்கு காத்திருந்தனர். அதிலொன்றில் ஏறினோம் கைகால்கள் முளைத்த கனிவான உள்ளூர் வரைபடமாக ஓட்டுனர் கம்பரின் சமாதிக்கு எங்களை அழைத்துக்கொண்டு சென்றார். முதல் பலகை எங்களை அன்புடன் வரவேற்றது. 





  


கதவைத் திறந்து உள்ளே சென்றபொழுது, ஓடுகள் வேயப்பட்ட கட்டிடம் அதில் யாருமில்லை. தொடர்ந்து உள்ளே சென்றபொழுது சற்று வயது முதிர்ந்தவர் எதிரேவர, நாங்கள் வந்ததன் காரணத்தை விளக்க தொடந்து உள்ளே செல்லுமாறு கூறினார்.





இந்த கட்டத்தின்னுள்ளேதான் கவிராசர் மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். 

கீழ்க்காணும் புகைப்படத்தில் எனதருகில் இருபவர் திரு.பாலகிருஷ்ணன், நீண்டகாலமாக கம்பர் சமாதியின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.    



அவரிடம் பேசியபோது கிடைத்த கூடுதல் தகவல்...  

நடராசன் கோட்டையில் மட்டுமல்ல, அருகிலிருக்கும் பிற ஊர்களிலிருந்தும் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர், முதலில் இச்சமாதியைத் தம்மக்கள் சுற்றிவரும்படி செய்கிறார்கள். பிள்ளைகள் பிறந்தவுடன் சேனை வைக்கும் பொழுது கம்பர் சமாதி மண்ணையும் அதனோடு கலந்து வைக்கும் வழ்க்கு இன்றுமுண்டு. அப்படிச் செய்வதால் தம் மக்களும் கம்பரைப்போல்   கல்வியிற் பெரியவராய் இருக்க வேண்டுமென்பது பெற்றோர் கருத்து

பிறகு ஏன் உள்ளூர் மக்களுக்கே கம்பரின் சமாதி குறித்து சரியாக தெரியவில்லை என்ற கேள்விக்கு அவரிடம் விடையில்லை.

அவரிடம் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவு கீழே...



படங்கள் உதவி: ராஜேஸ்வரி அருண்

Sunday, May 15, 2016

வட போச்சே!

--------------------
பியர்லண்ட் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழாவிற்காக (05/14/2016) எழுதப்பட்ட நாடகம்.
--------------------



இந்நாடகத்தில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாப்பதிரங்கள் அனைத்தும் கற்பனையே
யாரையும் குறிப்பிடுவன அல்ல.  

துரிதஉணவு உடல்நலத்திற்கு தீங்கானது மற்றும் கேடு விளைவிப்பது 


காட்சி 1

கதாப்பாத்திரங்கள்
  1. கயல்விழி
  2. கயல்விழியின் மாமா
  3. மாமாவின் தொண்டர்கள் 5 கோடி பேர்
  4. வாசகப்பலகைகள்  

இடம்: தொடர்வண்டி நிலையம்

கயல்விழி சில பல வருடங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்து தன் குடும்ப உறவுகளைக் காண தமிழ்நாடு வருகிறார். அவரை வரவேற்க தாய்மாமா தன்னுடைய பட்டாளம் சகிதமாக புகைவண்டி நிலையத்தில் காத்திருக்கிறார். புகைவண்டி பெருமூச்சுடன் "கயல்விழிபுரம்" வந்தடைகிறது.

கயல்விழி திருமுக தரிசனம் கண்டநொடி மாமா சமிக்கை செய்கிறார். அதற்காகவே காத்திருந்த கூட்டம் முன்பாகவே எழுதி வைத்திருந்த வாசக அட்டையை உயர்த்திப்பிடித்து கூச்சலைத் தொடங்கியது.

தொண்டர் தலைவன்: தமிழகத்தின் விடி வெள்ளியே!
தொண்டர்கள்: வருக வருக 

தொண்டர் தலைவன்: தமிழகத்தின் "ஒலி" விளக்கே!
தொண்டர்கள்: வருக வருக 

தொண்டர் தலைவன்: வருங்கால முதல்வரே!
தொண்டர்கள்: வருக வருக 

தொண்டர் தலைவன்: வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே!
தொண்டர்கள்: வருக வருக 

இதற்குள் கயல்விழி அருகில் வந்திவிட மாமா தொண்டர்களை அமைதிப்படுத்துகிறார். சப்தமும் அடங்குகிறது.

கயல்விழி: அங்கிள், இவங்கல்லாம் யாரு? ஏன் இவ்வளவு சத்தம் போடுறாங்க?

மாமா: அதுவா கண்ணு, இவங்கல்லாம் உன்னோட புரட்சிப்படை... (இரு கைகளால் தலையை சொறிகிறார்) , போரட்டப்படை (இடது கையில் சொறிகிறார்)... வெற்றி....

கயல்விழி: எனக்கு எதுவும் புரியல...

மாமா: இது அரசியல், கேள்வி கேட்கக்கூடாது. தியாகம்தான் உன்னை உயர்த்தும்...

கயல்விழி: இப்பவும் புரியல... whatever... 

"தமிழகத்தின் "ஒலி" விளக்கே" என்ற பலகையை பிடித்திருந்த தொண்டரைப் பார்த்து. 

கயல்விழி: hello tall uncle, "ஒலி" விளக்கே ல... spelling mistake இருக்கு... அத correct பண்ணுங்க...

மாமா: அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் கயல்...

தொண்டர்: Correct பண்றோம் கயல்... 

மாமா: என்றா? மரியாத இல்லாம பேர சொல்ற, "அம்மா"ன்னு சொல்றா...

தொண்டர்: (நிமிர்ந்தபடியே) சரிங்கம்மா...

மாமா: body language.... body language...

தொண்டர்: (நன்றாக குனிந்தபடி) சரிங்கம்மா...             

மாமா: (குனிந்த தொண்டரைப் பார்த்து)  நீதான் கண்ணு அடுத்த நிதி அமைச்சரு...

கயல்விழி: அங்கிள், எங்கப்பா xoom ல transfer பண்ண டாலரா இப்படி flex banner ராவும், புரட்சிப்படையாவும் மாறியிருக்கு?

மாமா: இதுவும் அரசியல்ல சாதாரணம் கண்ணு...

இந்த மாமாவும், இந்த அஞ்சு கோடி தொண்டர்களும் இருக்குற வரைக்கும். தமிழ்நாட்ல உன்ன யாரும் எதுவும் பண்ணமுடியாது.

கயல்விழிஅங்கிள் இங்க 5 people தான இருக்காங்க, ஆனா நீங்க 50 மில்லியன்  people இருக்காங்கன்னு சொல்றீங்க ?

மாமா: நம்மகிட்ட போடோஷாப் பண்றதுக்கு திறமையான ஆளிருக்கு, வெறும் அஞ்ச, அஞ்சு கோடியா மாத்திரிவோம்பல கண்ணு. அப்பதான ஒரு இதுவா இருக்கும்.

முதல்ல மாமா உன்ன வச்சி ஒரு சினிமா எடுக்குறேன். நீயும் நெறைய "பஞ்ச" டயலாக் பேசி ஆக்ட் பண்ணு, அப்புறம் பாரு. நீ எங்கையோ போயிடுவ. தமிழ்நாட்டு அரசியல்ல பெரியாளா வர அதுதான் கண்ணு first qualification.

கயல்விழி: அங்கிள்! I don't like politics, leave me alone... நா இங்க வந்தது உங்க எல்லாரையும் பாக்கத்தான்... first my dear பாட்டிய பார்க்கப்போறேன். Bye bye uncle, see you later...

மாமா: அய்யையோ கட்சிக்கு வளர்ச்சி நிதி வாங்காம உட்டோமே... (தொண்டர்களைப் பார்த்து)
நீங்க ஏண்டா காச வாங்கிட்டு கத்தாம சும்மா நிக்கிறீங்க... கத்துங்கடா...

தொண்டர் தலைவன்: வருங்கால முதல்வரே!
தொண்டர்கள்: வருக வருக 

மாமா: அதான் அம்மா போயாச்சில்ல... இப்போ என்னக்கு கோசம் போடுங்க.      

தொண்டர் தலைவன்: வருங்கால முதல்வரின் மாமாவே!
தொண்டர்கள்: வாழ்க  


தொண்டர் தலைவன்வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் மாமாவே!
தொண்டர்கள்: வாழ்க 


காட்சி 2

கதாப்பாத்திரங்கள்

  1. கயல்விழி
  2. பாட்டி
  3. பேரன் 
  4. வடைசட்டி, காணாமல்போன வடை   
  5. குள்ளநரி 
  6. வேப்பமரம் 
இடம்: பாட்டியின் வீடு  

பாட்டி:  பேராண்டி, இன்னிக்கி என்னப்பெத்த ஆத்தா கயலு இந்தப்பாட்டிய பாக்க வர்றா...

பேரன்: இதையே எத்தன தடவ சொல்லுவ பாட்டி? எனக்கு எப்ப வடையத் தருவ, அத சொல்லு?

பாட்டி: பொறுடா பேராண்டி! சுட்டது ஒரு வட கயலு வரட்டும், உனக்குப்பாதி கயலுக்குப்பாதி...

என்று கூறிக்கொண்டே சுட்ட ஒரு வடையை எடுத்து தட்டில் வைக்க...   

பேரன்: இந்த ஒரு வடைக்குதான் இந்த build up ஆ... அதுசரி, ஏன் வீட்டுக்குள்ள வடைய சுடாம இந்த வேப்பமரத்துக்கு கீழ உக்காந்துக்கிட்டு இருக்க...

பாட்டி: அப்பதான நரி வந்து வடைய தூக்கிட்டுபோகும். அதுதான நம்ம பண்பாடு...

பேரன்: ஆ... என்னது நரிக்குத்தான் வடைய சுட்டியா?

பாட்டி: இல்ல பேராண்டி, நா... சும்மா உன்னைய கலாய்ச்சேன்...

என்று பாட்டி சொல்லிகொண்டிருக்கும் போதே குள்ளநரி வடையை தூக்கிக்கொண்டு ஓடியது...

பேரன்: அய்யய்யோ... வட போச்சே!!!

......


இதற்கிடையில் அங்கு கயல் வந்துவிட, பாட்டி சோகமாக இருப்பது கண்டு...

கயல்விழி: பாட்டி.. பாட்டி...

பாட்டி: வா செல்லம் வா, நல்லா இருக்கியா கண்ணு...

கயல்விழி: நான் நல்லா இருக்கேன் பாட்டி. ஆமா நீங்க ஏன் சோகமா இருக்கீங்க?

பேரன்: நான் சொல்றேன்... நான் சொல்றேன்...

கயல்விழி: சரி சொல்லு...

பேரன்: பாட்டி 

             சுட்ட 

கயல்விழி: ஒன்னுக்கு கீழ ஒன்னா?

பேரன்: அதுதான கவித...

கயல்விழி: சரி சொல்லு

பேரன்:  பாட்டி சுட்ட வடைய சுட்டது குள்ளநரி...

கயல்விழி: அடடடே ஆச்சர்யகுறி... 

பாட்டி: பேராண்டி சும்மா இருடா

கயல்விழி: பாட்டி, வடைய எடுத்த நரிய விரட்டப்பிடிக்க வேண்டியதுதானே? ஏன் பிடிக்கல?

பேரன்: அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்...

கயல்விழி: (சற்று எரிச்சலுடன்) சம்மந்தம் சம்மந்தம்  இல்லாம பேசுறானே, யாரு பாட்டி இவன்?

பாட்டி: இவன தெரியாதா? இவன்தான் உங்க மாமா பையன் "நாஞ்சில் சர்பத்"...

கயல்விழி: ஓ... அவனா நீ?

பேரன்: yeah that's me...

பாட்டி: உனக்கு கொடுக்க இந்த பாட்டிகிட்ட எதுவுமே இல்லையே கண்ணு...

கயல்விழி: உங்க அன்பு மட்டும் போதும் பாட்டி. 

பாட்டி கயல்விழியை அணைத்துக்கொள்கிறார் 

ஆனாலும் பாட்டி அந்த நரிய நான் சும்மா விடமாட்டேன்.

பாட்டி: கண்ணு அது பொல்லாத நரி...

கயல்விழி: பாட்டி எம் பேரு கயல்விழி... எனக்கு இன்னொரு பேரும் இருக்கு "டோரா கயல்விழி"

பேரன்: "கயல்விழி"ங்கிறது உன்னோட பேரு, "டோரா"ங்கிறது நீ படிச்சி வாங்குன பட்டமா?

பாட்டி: அவன் உன்னைய கலாய்ச்சிட்டாணாமா...

கயல்விழி: "நாஞ்சில் சர்பத்து"... அப்புறமா ஞாபகப்படுத்து கண்டிப்பா சிரிக்கிறேன்...

பாட்டியைப் பார்த்து

பாட்டி, வடைக்கு பதிலா இவன ஏன் நரி தூக்காமப்போச்சு?

பாட்டி: அவன உடுமா...

கயல்விழி:வடைய சுட்டது சாதாரண நரியில்ல, அது swiper the sneaky fox... நான் போயி வடைய மீட்டுட்டு வர்றேன். என்னைய ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி.

பாட்டி: வடையோட திரும்பிவா கண்ணு... அப்பிடியே இவனையும் கூட்டிகிட்டுப்போ...

கயல்விழி: திரும்பி வந்தா வடையோட வருவோம்... இல்லேன்னா வடைய வாங்கி சாப்டிட்டு வருவோம்...
       

    
காட்சி 3

கதாப்பாத்திரங்கள்
  1. கயல்விழி
  2. பேரன்  
  3. தேநீர் கடை மற்றும் கடைக்காரர்  
  4. பச்சைத்தமிழன் 
  5. Smartphone with Siri 
இடம்: தேநீர் கடையருகில் 

பச்சைத்தமிழன்: நான் யாரு! என்னோட background என்ன? என்னப்பாத்து இப்பிடி ஒரு வார்த்த சொல்லிட்ட... வீரத்தமிழன்டா... மானத்தமிழன்டா... கவரிமான் சாதிடா... ஒரு முடி விழுந்தாலும் உசிரவிட்ருவோம் ல... யாருகிட்ட?

தேநீர் கடைக்காரர்: ஏ தம்பி... இங்க வா!

பச்சைத்தமிழன்: (மிகவும் பணிவுடன்சொல்லுங்கண்ணே...

தேநீர் கடைக்காரர்: உனக்கு இப்போ என்ன பிரச்சன?

பச்சைத்தமிழன்: அண்ணன், நான் யாரு, எவ்வளவு பெரிய ஆளு...

தேநீர் கடைக்காரர்: அந்த details எல்லாம் போன வாரம்தான் times of india ல படிச்சேன்... நேர விசயத்துக்கு வா...

பச்சைத்தமிழன்: இலவச மிக்ஸி வாங்கப்போன, என்னைய வரிசையில வரச்சொல்றான்...

தேநீர் கடைக்காரர்: நீ.. கவரிமான் சாதியா? போரியா இல்ல சுடுதண்ணிய புடிச்சி மூஞ்சியில ஊத்தவா?

வீரத்தமிழன் உயிர்பயத்தில் அவ்விடம் விட்டு ஓடுகிறான்

இவ்வேளையில் கயலும், சர்பத்தும் அங்கு வருகின்றனர்...

சர்பத்: கயலு! இப்போ அந்த நரிய் எப்பிடி கண்டுபிடிக்க?

கயல்விழி: அதுக்கு என்கிட்ட ஒரு super idea இருக்கு.

சர்பத்: என்னது அது?

கயல்விழி: Smartphone, இது கிட்ட கேட்டா நமக்குத் தேவையான answer கிடைக்கும்.

சர்பத்: cool

கயல்விழி: Siri...

சர்பத்: ஹி ஹி...

கயல்விழி: Siri...

சர்பத்: ஹி ஹி...

கயல்விழி:  "Siri" ன்னு நான் உன்னைய சிரிக்கச் சொல்லல. என் smartphone கிட்ட பேசுறேன்

சர்பத்: ஆஹாங்

கயல்விழி: Siri எங்க அந்த நரி?

Siri: This feature is not available in கயல்புறம். Please install டீகடை plugin...

சர்பத்: இந்தா புள்ள சிரி.. தமிழ்... தமிழ்ல சொல்லு... 

Siri: இந்த வசதி கயல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது இல்லை. எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் உங்களுக்கு அருகில் இருக்கும் தேநீர் கடையில் கேட்கவும்.         

சர்பத்: ஹா... ஹா... அசிங்கப்பட்டாள் அமெரிக்காகாரி...

கயல்விழி: :(

சர்பத்: எங்கவந்து, யாருகிட்ட என்ன பேச்சு பேசுற... follow me...

இருவரும் தேநீர் கடையை அடைந்தனர். கடைக்காரரிடம் 

சர்பத்: அண்ணே! இந்தப்பக்கம் நரி ஒண்ணு வடையக் கவ்விகிட்டு ஓடிவந்ததா?

கடைக்காரர்: ஆமாப்பா.. இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால போச்சு... அதோ அந்த ஒத்தையடிப் பாதைக்குள்ளதான் போச்சு...

சர்பத்: ரொம்ப thanks அண்ணா... you saved my day...

கடைக்காரர்: நான் சேவிங் எல்லாம் பண்றதில்லப்பா. ஆமா, வடைக்காகவா நரியத் தேடுறீங்க? அண்ணன் கடையில வடை fresh சா இருக்கு, ரெண்டு அள்ளுங்க!

சர்பத்: Sorry ண்ணா ஒரு மாசத்துக்கு முன்னால சுட்ட வடையெல்லாம் நாங்க சாப்பிடுறதில்ல...

கடைக்காரர்: எவ்வளவு திமிறா பேசுறான்!

சர்பத்: அப்புறம்ணே யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க?

(தேநீர் கடைக்காரர் மீண்டும் சுடுநீரை குவளையில் ரொப்ப...)

கயல் வா ஓடிறலாம்...

                             
காட்சி 4

கதாப்பாத்திரங்கள்

  1. கயல்விழி
  2. பேரன்
  3.  கலைக்குழுவினர் 
  4. சிற்றுண்டி விடுதி 
இடம்: தமிழ்ப்பள்ளி    

சர்பத்: கயல், அந்த ஒத்தையடிப் பாதைக்கு போற வழியில்தான் எங்க தமிழ்ப்பள்ளி இருக்கு. இன்னைக்கு அங்க ஆண்டுவிழா. அங்க போயிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமா...

கயல்விழி: வேண்டாம்னு சொன்ன விட்ருவியா?

சர்பத்: மாட்டேன்!

கயல்விழி: அப்புறம் எதுக்கு கேட்டுகிட்டு... தமிழ்ப்பள்ளி போகலாம்...                
     

கலைநிகழ்ச்சி...


கலைநிகழ்ச்சி முடிந்தவுடன்

சர்பத்: கயல் எனக்கு பசிக்குது...

கயல்விழி: சரி வா, canteen போகலாம்

சிற்றுண்டி வேலையாள்: என்ன வேணும்?

சர்பத்: என்ன இருக்கு?

சிற்றுண்டி வேலையாள்: donut, pizza, burger, fries, cola...

(வேலையாள் ஒவ்வொன்றாக கூறக்கூற அதே வரிசையில் திரையில் அவர் கூறும் உணவுப்பொருள் தோன்றி அதன் கீழே 

இவை அனைத்தும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்)


கயல்விழி: அதெல்லாம் வேண்டாம், இளநீர் கொடுங்க...                     


காட்சி 5

கதாப்பாத்திரங்கள்
  1. கயல்விழி
  2. பேரன்
  3. அவ்வை V 5.0
  4. அதியமான் V 2.0  
  5. மறைந்து நின்ற நரி 

இடம்: அரசமரம், அவ்வையின் உறைவிடம்   

ஒத்தையடிப் பாதையை பின் தொடர்ந்து கயலும், சர்பத்தும் செல்கின்றனர்...   

கயல்விழி: ஒத்தையடிப்பாதை இந்த இடத்துல முடியுது (வேட்டையாடு விளையாடு பின்னணி இசை).

சர்பத்தைப் பார்த்து

அந்த மரத்துக்கு பக்கத்துல யாரு?

சர்பத்: வா போய்ப் பார்க்கலாம்...

இருவரும் அருகில் சென்று பார்க்க அங்கு ஒரு பாட்டி கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருக்கிறார் அருகில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருக்கிறார்.

கயல்விழி அங்கிருந்த வாலிபரிடம்

கயல்விழி: நீங்க யாரு? இந்த பாட்டி யாரு? இங்க என்ன பண்றீங்க?

சர்பத்: எத்தன கேள்வி, கேப்ப கயல்? இப்பிடியெல்லாம் கேட்கக்கூடாது. இப்போ இதையே நான் தமிழ்ல தெளிவா கேக்குறேன் பாரு, 

dude what's up

வாலிபர்: சத்தம் போடாதீர்கள், அம்மாவின் தியானம் கலைந்துவிடும்.

சர்பத்: என்னது, இவங்கதான் அம்மாவா!

என்று ஆச்சர்யத்துடனும், பயபக்தியுடனும் அம்மாவின் கால்களின் விழுந்து வணங்குகிறான்...  

வாலிபர்: பெரியவர்களிடம் மிகுந்த மரியாதையுடைய சிறுவன் போல.

கயல்விழி: (பரிகாசத்துடன்...நீங்க, அம்மான்னு சொன்னீங்கள்ள அதனாலதான், எங்களுக்கு urgent டா ஒரு question கேக்கணும்!

வாலிபர்: உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் அம்மாவிடம் பதில் கிடைக்கும், சிறிது நேரம் காத்திருங்கள்.

சர்பத்: அதுக்கு முன்னால இவங்க யாருன்னு சொல்லுங்க?

வாலிபர்: இவங்கதான் அவ்வை.

கயல்விழி அவ்வையை வணங்குகிறார்

கயல்விழி: "அறம் செய்ய விரும்பு" ன்னு சொன்னாங்களே அந்தப் பாட்டியா?

வாலிபர்: இல்ல, அவங்க அவ்வை version 1

சர்பத்: அப்ப, இவங்களோட version என்ன?

வாலிபர்: இவங்க latest release, version 5

கயல்விழி, சர்பத்: ஓ....

சர்பத்: அப்போ, நீங்க யாரு?

வாலிபர்: நான் அதியமான் version 2

சர்பத்: அதியமான், அவ்வைக்கு ஆயுள் நீடிக்க நெல்லிக்கனி கொடுத்தார். நீங்க இந்த புது அவ்வைக்கு என்ன கொடுத்தீங்க?

அதியமான்: நான் ஆப்பிள் கொடுத்தேன்.

கயல்விழி: ஆப்பிள்ளா !!!

அதியமான்: அவ்வை up to date டா இருக்க நான் கொடுத்தது, ஆப்பிள் iPad.

இதற்குள் அவ்வை தியானம் முடித்து கண்கள்திறக்க...   

அதியமான்: (அவ்வைக்கு வணக்கம் செலுத்திவிட்டு) அம்மா, தங்களைக் காண இந்த சிறுவர்கள் வந்துள்ளனர்.

கயல்விழி: அவ்வை பாட்டி, உங்ககிட்ட ஒரு question கேட்கணும்.

சர்பத்: இரு கயல், நம்ம பண்பாடு படி அவ்வைகிட்ட கேட்கவே கொஞ்ச கேள்விகள் இருக்கு.

கயல்விழி: சர்பத், அதுக்கெல்லாம் நேரம் இல்ல, சரி ஒரே ஒரு கேள்விவேணா கேளு.

சர்பத்: அவ்வையே, கொடியது என்ன?

அவ்வை: கொடியது கேட்கின் நாஞ்சில் சர்பத்
கொடிது கொடிது fast food கொடிது
அதனினும் கொடிது; அம்மாவே அதை வாங்கித் தருவது...

கயல்விழி: நொவ் இட்ஸ் மை turn; அவ்வையே, என் பாட்டி சுட்ட வடைய நரி ஒன்னு திருடிட்டு இந்தப் பக்கம் ஓடி போயிருச்சி. அது எங்கன்னு உங்களுக்கு தெரியுமா?

அவ்வை: நிச்சம் சொல்கிறேன் குழந்தாய், அதற்க்கு முன்னர், இந்த ஊரின் பெயர் என்ன சொல்?

சர்பத்: "கயல்விழிபுரம்"

அவ்வை: அது, கயல்விழின் தந்தை அமெரிக்கா சென்று டாலர்களை இங்கே கொட்டிய பிறகு.  அதற்கு முன்னர் இந்த இடத்தின் பெயர் "நரிக்காடு".

சர்பத்: இது எனக்கு தெரியாதே!

அவ்வை: காடுகளை அழித்து இப்போது நீங்கள் புகுந்துள்ளது நரிகளின் வீட்டுக்குள். உண்ண உணவும் இல்லாமல், இருக்க இடமும் இல்லாமல் அண்டை தேசத்தில் புலிகளும், இங்கே நரிகளும் தவிக்கின்றன.

கயல்விழி: அப்போ பாட்டி, காடுகளை அழிக்கக் கூடதுன்னா நாம எங்க stay பண்றது?

அவ்வை: குழந்தாய், இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மண்புழுவுக்கும் சொந்தம். பரிணாம வளர்ச்சியில் பின்தங்கிய சிறுபான்மை மனித இனம் பெரும்பான்மை விலங்குகளையும், காடுகளையும் அழிப்பது நியாமா?

சர்பத்: தப்புதான் பாட்டி

அவ்வை: பசுவிடம் பாலைத் திருடிக்கொண்டு, பசு நமக்கு பால் கொடுக்கும் என்று தன் செயலை நியாப்படுத்திக் கொள்கிறது மனித இனம்.

கயல்விழி: நீங்க சொல்றது சரிதான் பாட்டி. இப்போ அந்த வடைய என்ன பண்ண?

அவ்வை: இருந்தாலும், திருடுதல் தவறு.

மரத்தின் பின்னால் மறைந்திருந்த நரியை அழைக்கிறார் அவ்வை. நரியும் தயக்கத்துடன் அவ்வையின் அருகில் வந்து நிற்கிறது. பின்பு தன்னிடம் இருக்கும் வடையை அவ்வையிடம் தருகிறது. அதை 

அவ்வை: "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை"

என்று வடையை பிட்டு மூவரிடமும் கொடுக்கிறார். மூவரும் வடையை மகிழ்ச்சியுடன் உண்கின்றனர்.


 
---சுபம்--- 
    
இந்த நாடகத்தின் ஒலிச்சித்திரம்