cookie

Sunday, April 15, 2018

அவள் பெயர் ரெங்கநாயகி

ஏன் வரலாற்றின் தீராத பக்கங்களில் காலம் ஒரு சில நாயகிகளின் பெயர்களை நிரப்பாமலேயே விட்டுவிடுகிறது?

அவள் பெயர் ரெங்கநாயகி

பாப்பா என்றே அனைவராலும் அழைக்கப்பட்டதால் பல ஆண்டுகள் அவளின் இயற்பெயர்  "ரெங்கநாயகி" என்பதே எனக்கு தெரியாது. நம் இதயத்துக்கு அருகாமையில் உள்ளவர்கள் நம்மை "ஒருமையில்" அழைத்தால் கூட ஏனோ நாம் அதை ஆராய்வதில்லை, திருத்தவும் முயல்வதில்லை. "பாப்பா" யெனும் ரெங்கநாயகியை நான் "ஏ கெழவி" என்றுதான் மரியாதையுடன் அழைப்பேன். எனக்கு பின்னால் வந்த சந்ததிகளும் அதையே செய்தனர். 

அனைத்து கேள்விகளுக்கும் பாப்பாவிடம் பதிலுண்டு. அனைத்து சிக்கல்களுக்கும் பாப்பாவிடம் தீர்வுண்டு. எதையும் புதிய கோணத்திலேயே அணுகுவார், எங்களுக்குத்தான் அது புரிய பலவருடங்கள் ஆனது. ஆவேசமாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் "இந்த பால்காரன் இன்னும் வரல" என்பார் வெற்றிலையால் மெருகேற்றிய பற்களை காட்டிய சிரிப்போடு. அவர் வள்ளுவரைப் படித்ததில்லை ஆனால் வள்ளுவம் தெளிந்தவர். "இடுக்கண் வருங்கால் நகுக" என்ற குறளின் நாயகியே பாப்பாதான். பல தத்துவங்களை போகிற போக்கில் வெற்றிலையோடு சேர்த்து உமிழ்ந்துவிட்டுச் செல்வார். அவ்வாறு அவர் கூறிய ஒன்று" இருந்தா  (சோறு) பொங்குவேன் இலேன்னா சும்மாருப்பேன்". 

"உன்னுடைய அனுமதியில்லாமல் உன்னை யாரும் அவமதித்துவிட முடியாது!" என்பதை வாழ்ந்து காட்டியவள் பாப்பா. பலமணிநேர வாக்குவாதத்தை "போடா பொசுக்கி" என்ற ஒரே வார்த்தையில் முடித்துவிடுவாள். பேச்சுவார்த்தை வழக்கம்போல பாப்பாவிடம் தோல்வியில் முடிவதால், பல சமயம் நானும் என்னைத் தொடர்ந்து இளையவாரிசுகள் சிலவும் சட்டத்தை கையில் எடுப்போம். அகிம்சையை தீவிரமாககடைபிடிப்பவள் பாப்பா என்பதால் "சிரிப்பு" மட்டுமே பதிலாக வரும். கடைசியாக தோல்வியிலும், அவமானத்திலும் திரும்புவது நாங்கள்தான்.                  

இப்படி எங்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பாப்பாவின் பின்புலம் தேடியபோது சற்று வியப்பான செய்திகள் கிடைத்தன.  திண்டுக்கல் மாவட்டத்தில் பெயர் சொன்னாலே தெரியக்கூடிய குடும்பத்தில் நான்கு சகோதரர்களுடன் பிறந்தவள் பாப்பா. இரண்டு பள்ளிகளின் நிறுவனர் பாப்பாவின் ஒரு அண்ணன். இரண்டு பள்ளிகளில் ஒன்று ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பள்ளி. இருந்தும் பாப்பாவிற்கு ஏனோ பள்ளி மற்றும் படிப்பின் வாசனை ஒவ்வாமையை ஏற்படுத்தியது. அதனால் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினாள் பாப்பா. மரம் ஏறுதல், நாயை குறிபார்த்து கல்லால் அடித்தல் போன்ற இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்கு தன்னை அற்பணித்துக்கொண்டாள். அந்நிய ஷக்திகளால் திட்டமிட்டே இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாமல் போனது. இந்தியா ஒரு "தங்க"மங்கையை தவறவிட்டது.

சில வருடங்களில், (பொருளாதாரத்தில்) நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு பாப்பா மணமுடிக்கப்பட்டாள். பாப்பாவின் கணவர் ஒரு "புத்தகப்புழு". கடந்த முறை நான் அவரை சந்தித்தபோது "பிணைக்கப்பட்ட தொகுதிகள்" (blockchain) தொழில்நுட்பம் குறித்து கேட்டு என்னை கிறங்கடித்தார். இன்றுவரை எனக்கு புதிராக இருப்பது, எப்படி இவர்கள் இருவரால் இத்தனை வருடங்கள் சேர்ந்துவாழ முடிந்தது? பாப்பாவை தவிர வேறு யாராலும் இவருடன் வாழமுடியாது என்பதுதான் உண்மையோ? 


மண்டோதரி  

பாப்பாவின் வேலை பொழுதுபோக்கு எல்லாமே சமைப்பது, கணவரை கவனிப்பது, அவரின் வாய்மொழியை ரசிப்பது, எப்போதாவது திரைப்படம் பார்ப்பது. வேலை நிமித்தமாக கணவர் வெளியூர் செல்லவேண்டி வந்ததால், ஐந்து குழந்தைகளுடன் தனியாக பாப்பா வாசித்தார். கணவர் வரும்நாள் வீட்டில் அரிசிச்சோறு. வடித்த சோற்றை கணவருக்கும், கஞ்சியை அவரின் சட்டைக்கும் விருந்தாக்கிவிட்டு, (சமயங்களில்) வாசத்தால் மட்டும் வயிற்றை நிரப்பிக்கொள்வார் பாப்பா. மனைவியின் உள்ளமும் உணர்வும் கணவர்களுக்கு என்றுமே புரிவதில்லை, அது அவர்களின் அறியாமை. தாலிக்கொடிக்காக தொப்புள்கொடியைக்கூட தியாகம் செய்த மண்டோதரிகளாகத்தான் (சில) மனைவிகள் இருக்கிறார்கள். "மண்டோதரி" என்றாலும் "ரெங்கநாயகி" என்றாலும் உணர்வு ஒன்றுதான்.

திருமணத்தின் போது அணிந்துவந்த கிலோ தங்கத்தையும், மனைவியின் கழுத்து வலிக்குமேயென அடகுக்கடையில் சிறைவைத்தார் கணவர் தன் உடன்பிறப்புகளை கரையேற்ற. வீட்டில் ஐந்து பிள்ளைகள், வைக்க இடம் இல்லாதால் தேவைப்படுபவர்களுக்கு தானமாக பாப்பா கொண்டுவந்த சீர் பாத்திரங்களை விற்றுவிட்டார். இவை எதுவுமே பாப்பாவை சிறிதும் கலங்கடிக்கவில்லை. அவள் முகத்தில் நீங்காத புன்-நகை.


மொழி
    "இரண்டு மொழிகள் அறிந்தவர், இரண்டு மனிதர்களுக்குச் சமம்"         

பாப்பாவுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது என்னக்கு சரியாக நினைவில்லை. ஆனால் பல்வேறு மொழிகளை அவள் தன்மொழியிலேயே தெளிவாகப் பேசும் தனித்திறமை கொண்டவள். அதை நான் உணர்ந்த சமயம் ஒன்றுண்டு. 

பாப்பாவின் புதல்வர்களில் ஒருவர் தொழிற்சங்கத்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைப்பற்றி பாப்பா என்னிடம் கூறியபோது, தன் அன்புமகன் "அன்னபோஸ்ட்" ல் தலைவரானார் என்றார். தமிழில் புதியவார்த்தை ஒன்றைத் தெரிந்துகொண்ட பேரானந்தத்தில் பள்ளிக்குச் சென்று அனைவரிடமும் கூறி உவகையடைந்தேன். அந்த சமயம் அங்குவந்த ஆங்கில ஆசிரியை தங்கரத்தினம் அவர்கள் என்முதுகில் "unopposed" ல் கபடி விளையாடி களைப்படைந்தார்.  பாப்பாவால் வஞ்சிக்கப்பட்ட வெறியுடன் வீட்டுக்கு வந்த நான், பாப்பாவின் கணவர் அங்கு இருக்கிறார் என்று தெரியாமல் உள்ளே சென்று குறைக்க ஆரம்பிக்க, "புத்தகப்புழு" என்னை புரட்டியெடுத்து வெளியே விரட்டினார். தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினேன் என்னுடைய வீட்டிற்கு.

வேறொருமுறை சில கிந்தி வார்த்தைகளையும் பேச்சின் நடுவே கிண்டிவிட்டார். அப்போது நான் பிராத்மிக் சாராத அக்காவிடம் படித்துக்கொண்டிருந்தேன் அதனால் தப்பித்துக்கொண்டேன். 


குறியீடும் குறியாக்கமும்  

அப்போது எங்கள் ஊரில் ஐந்து திரையரங்கங்கள் உண்டு. அதில் ஒன்று "மூர்த்தி", எங்கள் வீட்டின் அருகிலேயே இருந்தது. அதில் திரையை விலக்கும் பெருநிகழ்வுக்கென்றே விநாயகர் பாடல் ஒன்று ஒலிபரப்பப்படும். அந்தப்பாடலை எப்போது எங்கு கேட்டாலும் "மூர்த்தி"யின் நினைவு மனதில் ஆக்கிரமித்து விடும். ஒவ்வொரு வெள்ளியன்றும் பழைய-புதிய படம் திரையிடப்படும். வாரம் முழுவதும் தீப்பெட்டி கட்டை அடுக்கியவர்கள் கந்தக நெடியை மறப்பது இங்குவந்துதான்.

வெள்ளிமாலை பள்ளிமுடிந்து வீட்டுக்கு வரும்போது பாப்பாவின் தரிசனம்பெற அவளின் வீட்டுக்குச் சென்றேன். பேசிக்கொண்டிருக்கும்போதே நாளை படம் பார்க்கச் செல்வதாக கூறினாள் பாப்பா. என்ன படம் என்று நான் கேட்க, "அதான் மூர்த்தியில ஓடுதுல்ல அதுதான்" என்றால், எனக்கு தெரியவில்லை. கடைசியாக திருவாய் மலர்ந்தாள் பாப்பா. அதுதான் "பூ சிந்துகிறது"...  நான் ஒன்றும் புரியாமல் என்னது "பூ சிந்துகிறதா"? இப்படியெல்லாமா பேரு வைக்கிறாங்க என்று எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தேன் அவள் சுடும் பலகாரத்தை காலிசெய்வதற்காக. 

சிறிது நேரத்தில் பாபாவின் கணவர் வந்துவிட்டார். பாப்பா படத்திற்கு போவதற்கு கணவரிடம் அடிக்கல் நாட்டிக்கொண்டிருந்தார். ஒருவழியாக "புத்தகப்புழு"வும் சம்மதித்து விட்டார். என்ன படம் என்று அவர் கேட்க சற்றும் தயங்காமல் "பூ சிந்துகிறது" என்றாள் பாப்பா. எந்தவித சலனமுமில்லாமல் அவரும் சரி "நாளைக்கு சாயங்காலம் போகலாம்" என்று கூறிவிட்டு எழுந்துபோய் புத்தகத்தில் தன்னை புதைதுக்கொண்டார். படம் பெயர் என்னவென்று புரியாததால்  எனக்கு மூளையை குடைய ஆரம்பித்துவிட்டது. பலகாரத்தை முடிந்தவரை வயிற்றில் அப்பிஅடைத்துக் கொண்டு அவரிடம்போய் அது என்ன படமென்று கேட்கச்சென்றேன். 

"புத்தகப்புழு"விடம் ஒரு சிக்கல் என்னவென்றால்? நாம் ஒரு கேள்வி அவரிடம் கேட்டால்! நாம் ஏன் இவரிடம் கேள்வி கேட்டோம் என்று வருந்துமளவுக்கு பிதாமகர் பீஷமர் போல நம்மை கேள்விக்கணைகளின் மீதே படுக்கவைத்துவிடுவார். இருந்தாலும் ஆர்வம் தாங்காமல் எதற்கும் தயாராகவே அவரிடம் சென்றேன். "பூ சிந்துகிறது"னு படமா என்று கேட்க? நீஈஈண்ட விளக்கத்திற்குப் பிறகு படத்தின் பெயரைக்கூறினார்.

அது புதுமைப்பித்தன் அலட்சியமாக எழுதிய "சிற்றன்னை" யெனும் நெடுங்கதையை, காவியமாக மகேந்திரன் இயற்றிய "உதிரிப்பூக்கள்". 

சிலவருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தின் பெயரை குறியாக்கம் செய்தாள் பாப்பா அது "சீவலப்பேரி தேவர்". இதற்கு எனக்கு யாருடைய உதவியும் தேவைப்படவில்லை.

--****--

கடந்த வாரத்தோடு பாப்பா சிந்திப்பதை நிறுத்தி ஒருவருடமாகிறது. புத்தகப்புழுவும், பாப்பாவின் பிரிவிற்குப்பின்பு யாரிடமும் கூறாமல் எங்கேயோ போய்விட்டார்.         

அதீத அறிவும் சமயங்களில் அலுப்படையச் செய்கிறது. குறைகள்தான் மனிதர்களை முழுமையாக்குகிறது. 
           

பாப்பாவின் பிரிவில் நானும் புத்தகப்புழுவும்...