cookie

Tuesday, June 11, 2019

இருதலைக் காதல்

ஆரஞ்சுமிட்டாய் காரணமாக ஏற்பட்ட பிணக்கு, சிலநாட்கள் "குருநாயர்" தங்கராஜுடன் பேசாமல் இருந்தேன். குருநாயர் கைகால் முளைத்த கருந்துளை ("பிளாக் ஹோல்"லாமா), சந்திப்பை தள்ளப்போட முடிந்ததே தவிர, முழுவதும் தவிர்க்க இயலவில்லை! தோல்வியை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு, குருநாயரின் வீட்டுக்கு விரைந்தேன் அவரிடம் அறிவு அமுதம் பருக. 

திருமதி. காளியம்மாள், குருநாயரை இப்பூவுலகிற்கு ஈன்ற புண்ணியவதி. பெரும்பாலும் தலைவாரி நுனிக்கொண்டை தரித்திருப்பர். நெற்றியில் பழைய ஒரு ரூபாய் அளவிலான பொட்டு எப்போதும் சிகப்பாக ஒளிரும். அந்த குறியீட்டின் உள்ளார்ந்த பொருள் அன்றுதான் எனக்கு புரிந்தது. சற்று தூரத்தில் வரும்போதே "மொத்தடீர் மொத்தடீர்" என்று அடுக்குத் தொரடராக ஒலி என்  செவிப்பறையை அறைந்தது. நான் வேகமாக விரைந்தேன் வாசலுக்கு, அங்கு அன்பில் உருவான திருமதி. காளியம்மாள், பத்திரகாளியாக மாறி சூரனை வாதம் செய்துகொண்டிருந்தார். சூரன் காளிதேவியின் காலடியில் கண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தார். சற்று உற்று நோக்கியபோதுதான் தெரிந்தது அன்று "சூரா"அவதாரம் எடுத்திருந்தது குருநாயரே!

இந்த ரணகளத்தில் திரு.காளியம்மாள் எங்கேயென்று தேடினேன், அவரோ அன்று "பல்லி" அவதாரம் எடுத்திருந்தார். சம்ஹாரம் கிட்டத்தட்ட முடிந்தநிலையில், காளிதேவி சாந்தியடைந்து, தன்சிகைகோதி  மீண்டும் நுனிக்கொண்டைக்கு வந்தார். வாசலில் நின்ற என்னை இனம் கண்டு கொண்டு, "உள்ளவாப்பா" என்றார் "புன்" நகைத்த முகத்துடன். நான் சப்த நாடியும் அடங்கி அங்கேயே நின்றுவிட்டேன். இரண்டு அணுகுண்டுகளை அங்கத்தில் வாங்கி, முன்பைவிட வேகமாக முன்னேறிய ஜப்பானின் முன்னோடியே குருநாயர்தான். தன் திருமேனியில் ஒட்டியிருந்த தூசிதட்டி பீனிக்ஸ் போல படிகளில் இறங்கிவந்தார் "புண்"நகையோடு.

"எதுக்குடா உங்கம்மா உன்ன அடிச்சாங்க?" என்ற கேட்ட எனக்கு, "அடிவாங்கி ரொம்ப நாளாச்சா, அதான் அடி மறந்திரக்கூடாதுன்னு நான்தான் அடிக்க சொன்னேன்" என்றார் சிரிப்போடு. "உன் அனுமதியில்லாமல் உன்னை யாரும் அவமதிக்க முடியாது" என்ற சொன்ன புத்தரையே விஞ்சிய சித்தர் என் குருநாயார்!  அவரின் அனுமதியில்லாமல் அம்மாகூட அவரை அடிக்கமுடியாது.  (சிலநாட்கள் கழித்து குருநாயரே தன்னுடைய ராபின்ஹூட் நாடகம் வீட்டில் அரங்கேறியதின் விளைவுதான் அன்று வாங்கிய அடியின் காரணம் என்று தன்னிலை விளக்கமளித்தார்)         

இன்னும் சற்றுநேரம் அங்கே இருந்தால் காளிதேவியின் ருத்ரதாண்டவம் எங்கே மீண்டும் தொடர்ந்துவிடுமோ என்றஞ்சி அங்கிருந்து எங்களை அப்புறப்படுத்திக் கொண்டோம். வீட்டின் முடுக்குசந்தை தாண்டி வெளியேவந்தோம். குருநாயார் எங்கள் தெருவின் சொறிநாய் "அந்தோணியை" தேடினார், என்னது நாய் பேறு "அந்தோனியா"ன்னு தான யோசிக்கிறீங்க? ஆமா, எல்லா தெரு நாய்களைப் போலவும் இதன் பெயரும் "மணி"யாகத்தான் இருந்தது, ஆனால் எங்களுக்கு மணியைவிட அந்தோணி மீதுதான் ரொம்பவும் கோவம். வகுப்பின் சட்டாம்பிள்ளை (மணி கடந்தவருடம் சட்டாம்பிள்ளை என்பதை சொல்லத் தேவையில்லை) அவன்தான். வகுப்பில் "அமைதி" நேரத்தில் எங்கள் பெயரை கரும்பலகையில் நாங்கள் பேசுவதற்கு முன்பாகவே எழுத்துவிடுவான். "நாங்கதான் பேசவேயில்லையே" என்றால், "நீங்க கண்டிப்பா பேசுவீங்க அதான் முதல்லயே எழுதிட்டேன் என்பான்" என்று எதிர்காலம் கணிப்பான். சரிவுடு அதுதான் பேருதான் எழுதியாச்சேன்னு பேச ஆரம்பிச்சா உடனே "மிக, மிக, மிக அதிகம்" என்று சேர்த்துவிடுவான், வகுப்பு முடியும் முன்பாக முத்தாய்ப்பாக "அடங்கவில்லை" என்பதையும் கோர்த்துவிடுவான்.

பேசியதற்கு - ஒன்று
ஒவ்வொரு "மிக"வுக்கும்  - இரண்டு 
"அடங்கவில்லை"க்கு  - மூன்று என்று எங்களின் வகுப்பு ஆசிரியர் புள்ளிவைத்து கோலம் போடுவார்.

காளிதேவியிடம் வாங்கிய வரங்களை கைமாற்ற அன்று அந்தோணி அகப்படவில்லை. ஆனால் அந்தோணியின் முகத்தைப்போலவே சப்பையா, உருண்டையா, சதுரமா ஒரு வண்டி அங்கு வந்து நின்றது. வண்டியில் இருந்து ஓட்டுநர் தவிர்த்து ஒரு குடும்பம் இறங்கியது. வரிசையாக பெட்டிகளை இறக்கியது. குருநாயருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை, நாமளும் போயி அவங்களுக்கு உதவிசெய்யலாமா என்று கேட்டார்? என் பதிலுக்கு காத்திராமல், குடும்பத்தலைவரிடம் போய் "அண்ணாச்சி, நாங்களும் பெட்டியை எடுத்து வைக்கிறோம் என்றார்". குருநாயருக்கு தன்னைவிட வயது முதிர்ந்த அனைத்து ஆண்களும் "அண்ணண்"தான் அனைத்து பெண்களுக்கு "அக்கா"தான். முதலில் அண்ணனின் மனைவி "அக்கா" வந்தார், பின்பு அண்ணனின் மக்கள் "அக்கா" வந்தார். இரண்டு அக்காவுக்குள் குழப்பம் வந்து விடாமல் இருக்க, பின்பு அவர்களின் பெயர்களை "அக்காவுக்கு முன்பு சேர்த்துக்கொண்டோம். மனைவி அக்கா "மீனாட்சி அக்கா" ஆனார். மகள் அக்கா "கவிதா அக்கா" ஆனார். ஒரே ஒரு அண்ணன்தான் என்பதால் அவரின் பெயர் தேவைப்படவில்லை.

எடுத்து வைத்துக்கொண்டிருந்த பெட்டிகளின் இடையில் ஒரு தகரடப்பாவும் இருந்தது. அது அண்ணனுக்கு தெரியாமல் மீனாட்சியக்கா சேர்த்துவைத்த சிறுவாடு. அதை பொறுப்பாக கொண்டுபோய் மீனாட்சியக்காவிடம் கொடுத்துவிட்டார் குருநாயார். அண்ணன் அங்கிருந்து  நகர்ந்த சமயத்தில், தான் டப்பாவில் வைத்திருந்த பணம் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு  எங்களைப் பார்த்து நிம்மதியாக சிரித்தார் மீனாட்சியக்கா. 

குருநாயார் பல தவறுகளை செய்திருக்கலாம், ஆனால் அவர் ஒரு தவறான குருநாயார் அல்ல என்பதை நிரூபித்த பல தருணங்களில் இதுவும் ஒன்று.

அதன் பின்பு பல மாலை வேளைகளில் கவிதா அக்கவுடன்தான் இருப்போம். சாப்பிட மட்டுமே வீட்டுக்கு போவோம். கவிதா அக்கா பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ளார், மேலும் படிக்க தன் தந்தையின் வருமானத்தில் இடமில்லாததால் வீட்டில் இருந்து டியூஷன் எடுக்க ஆரம்பித்தார். சில நாட்களில் அக்காவிற்கு வரன் தேட ஆரம்பித்தனர். பெண்பார்க்க வரும் அனைத்து நாட்களிலும் தவறாமல் நாங்கள் அங்கே இருப்போம் பலகாரங்களை பதம்பார்க்க. சில, பல அண்ணன்கள் வந்தார்கள் யாரையும் எங்களுக்கு பிடிக்கவில்லை.

ஒரு பொன் மாலைப்பொழுதில், மீண்டும் ஒரு பெண்பார்க்கும் படலத்தில், மீனாட்சியக்கா எங்களுக்கு "கவிதாக்கா கல்யாணமாயிட்டா உங்களவிட்டுட்டு போயிடுவா" என்று காரவிருந்து கொடுத்தார். அதைக்கேட்ட  எங்கள் இருவருக்கும் அழுகைவந்தது. ஆண்பிள்ளைகள் அழுவதில்லை ?!(அடிவாங்கும்போது தவிர்த்து) என்பதால், கண்ணீருக்கு கைகளால் கரைகட்டினோம். இருந்தாலும் கடைசிவரை இருந்து மிக்ஸர், பூந்தி சாப்பிட்டுவிட்டுதான் வீட்டுக்கு வந்தோம்.

அதன்பிறகு இரண்டு நாட்கள் நாங்கள் இருவரும் கவிதாக்கா வீட்டுக்கு போகவில்லை, ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தோம். இறுதியாக குருநாயாரின் மகாசிந்தனையில் உதித்த யோசனையை கூறினார்.   

ஆமாம், அந்த யோசனை என்னவென்று நீங்கள் யூகித்தது சரிதான்.

நேராக கவிதாக்காவிடம் போய், "எங்க ரெண்டுபேர்ல ஒருத்தன கட்டிக்கோங்க" என்றோம். அதைக்கேட்டவுடன் கண்ணில் நீர்வரும் வரை சிரித்தார் அக்கா. பொறுமையிழந்த குருநாயார், "போனவாரம் உங்கள பொண்ணுபாக்க வந்த ஆளவிட நாங்க நல்லாத்தானே இருக்கோம்" என்று அக்காவை மிரட்டினார். "இப்போ ஏண்டா திடீர்னு இப்படி வந்து கேக்குறீங்க" என்ற அக்காவிடம். எங்களின் காரணத்தை கூறியபோது, கண்ணீருடன் அமைதியானார். சோகம் அக்காவுக்கு எப்போதுமே பிடிக்காது என்பதால் உடனே பேச்சை மாற்றிவிட்டார். "உங்க ரெண்டு பேர்ல யாரு முதல்ல நல்ல வேலைக்கு போயி, பெரிய ஆள ஆகுறீங்களோ அவங்கள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று முற்றுப்புள்ளி வைத்தார். நாங்களும் நம்பிக்கையோடு வீட்டுக்கு வந்தோம்.

"பெரிய ஆள ஆக ஒன்னும் செய்யவேண்டாம், சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினா போதும் ஆனா நல்ல வேலைக்கு போக நல்ல படிக்கணுமே?" என்பதை நினைக்கும் போதே எனக்கு துக்கமாக இருந்தது. அப்படியே துக்கத்துடன் நடந்து கொண்டிருக்க, ராஜமாணிக்கம் மாமா (அம்மாவின் தம்பி)  ஒரு காகிதத்தை என்னிடம் தந்தார், அது நான்காக மடித்திருந்தது. அதை பிரிக்க முயன்ற போது, மாமா என்னை தடுத்து, "இதை கவிதாக்காவிடம் கொடுத்துவிடு" என்றார். கணக்குப்பாடம்தான் எனக்கு புரியா நாளாகும், இது உடனே புரிந்து விட்டது. ஏற்கனவே போட்டிக்கு குருநாயார் இருக்கிறார், இதில் மாமா வேற, கடுப்பான நான் கண்டபடி மாமாவை திட்டினேன் (எனக்கும் மாமாவுக்கும் 10 வயதுதான் வித்தியாசம்). இந்த கடிதத்தை பற்றி  தாத்தாவிடமும், அம்மாவிடமும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினேன். கொடுத்த கடிதத்தை வாங்கிக்கொண்டு மாமா ஓடிவிட்டார்.

அதன் பிறகு சிலநாட்கள் கவிதாக்கா வீட்டுக்கு நாங்கள் இருவரும் போகவில்லை. பின்பு ஒருநாள் நான் போனேன் வீடு பூட்டிக்கிடந்தது. என்ன வென்று அண்டை வீட்டில் விசாரிக்க, கவிதாக்கா வீட்டைக்காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக சொன்னார்கள். அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துவிட்டேன். சில நாட்களில் கவிதாக்கா ஏன் வீட்டை காலிசெய்தார்கள் என்ற செய்தி என்னை யெட்டியது.

நான் தரமறுத்த மாமாவின் கடிதம், வேறுவழியில் கவிதாக்காவை அடைந்துள்ளது. கடிதம் வந்த செய்தி, அக்காவீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து பெரிய சச்சரவாகி வீட்டை காலிசெய்துள்ளனர். எப்படி அந்தக் கடிதம் மாமாவிடம் இருந்து அக்காவிடம் சென்றது என்று அறியமுற்பட்டபோது, அதை கொண்டுசேர்த்தது சாட்சாத் என் குருநாயரேதான்.

ஆத்திரமும் கோபமும் அடைந்த நான். குருநாயரிடம் இதுபற்றி விசாரித்தபோது. குருநாயார் அமைதியாக "நமக்கு தேவை கவிதாக்கா நம்மைவிட்டு போக கூடாது அவ்வளவுதான். நீயும் நானும் பெரியாளாக ரொம்ப வருசம் ஆகும். அதான் உங்க மாமாவுக்கு உதவி செஞ்சேன்" என்றார். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.

எப்படி யோசித்தாலும் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. மாமாவை ஒன்றும் செய்யமுடியாது. அதானால் அந்தோணியின் பெயரை "ராஜமாணிக்கம்" என்று மாற்றிவிட்டு, அதன் மீது கல்லைவிட்டு வீசினேன்.