cookie

Tuesday, February 11, 2014

"வாய்" எனும் கழிவு நீக்க உறுப்பு

வண்ணங்களையும் (சில) தமிழர்தம் வாழ்வினையும் பிரித்தல் இயலாது.

நீலப்படம் பார்ப்பார்கள் 
மஞ்சள் பத்திரிக்கை படிப்பார்கள்
சிகப்பு விளக்கு பகுதிக்கு போவர்கள்  
பச்சை பச்சையாய் பேசுவார்கள் 

நானும் எனது நண்பர்களும் 2002ம் ஆண்டு முகவரி தேடி சென்னைக்கு வந்தோம். அப்போதுதான் முதல் முறையாக அந்த  (புதிரா) புனிதமான, ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த, சிறியவர் பெரியவர் என்று வயது வித்தியாசம் இல்லாமல், பணக்காரன் ஏழை என்ற பேதம் இல்லாமல் அனைவரிடமும் நீக்கமற நிறைந்திருந்த அந்த வார்த்தையைக் கேட்டோம். தொல்காப்பியத்தின் எல்லா விதிகளையும் மீறி சில சென்னை பச்சைத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தொகைச்சொல்லாக்கம் அது. சில மாதிரிகள் கீழே 

O​​__ படம் சூப்பர் டா 
O​​__ எங்கடா போன?
O​​__ எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?

என்னுடன் பணிபுரிந்த ஒரு வட்டார மொழி வல்லுநர்தான் அந்த சொல்லாக்கத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் பயன்பாட்டையும் விளக்கினார்.

கடந்த பல வருடங்களாக இந்தச் சொல்லை தென் மாவட்டங்களிலும் காலூன்றச் செய்த பெருமை திரைப்படங்களையே சாரும்.

"வசை"யின் குடும்பத்தைச் சார்ந்த கடுமையான சொற்கள் பொதுவாக பெரும்பாலும் வெறுப்பைக் காட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டு வந்தன. வசைபாடுவதற்கு "கொச்சை"யான சொற்களை உபயோகிப்பதன் உள்நோக்கம் என்னவென்று சற்று அகழ்ந்து பார்த்தால் அதை இவ்வாறுதான் புரிந்து கொள்ள முடிகிறது. கடுமையான சொற்களால் திட்டிய பொழுதும் ஆத்திரத்தின் வீரியம் சற்றும் குறையாததால் அடுத்த கட்டமாக கொச்சையான சொற்களை பயன்படுத்த நம் மூளையில் உறங்கிக் கொண்டிருக்கும் அது கட்டளையிடுகிறது.

இந்தக் கொச்சை குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான வார்த்தைகள் கழிவுநீக்க உறுப்புகளை குறிப்பதாகவோ அல்லது கழிவுடன் தொடர்புகொண்ட வார்த்தைகளாகவோ இருக்கின்றன. இதன் உள்நோக்கம் திட்டப்படுபவரை கழிவுடன் ஒப்பிட்டு அவரின் தன்மானத்தையும் கொவரவத்தையும் குத்திக் கிழிப்பதுவே.         

அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் போது எதிராளியை மீளமுடியாத அவமானத்திற்கு ஆட்படுத்தி விட்டதாக நம் மனம் எண்ணிக் கொ(ல்)ள்கிறது. "அவனை/அவளை நல்லா அசிங்கப் படுத்திட்டோம்" என்ற எண்ணம் வரும்போது கோபத்தின் வீரியம் குறைந்து மனித மிருகம் அமைதி அடைகிறது.

என்னுடன் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், அவர் என்ன பேசினாலும் அதில் நிச்சயம் "S***", "F**K" நிச்சயம் இருக்கும். ஒரு நாள் அவரிடம் இது குறித்து கேட்கவே செய்துவிட்டேன். அதற்க்கு அவர் கூறிய பதில் 

"இதுவே எனக்கு பழக்கமாகி விட்டதால் தவிர்க்க முடியவில்லை, என்னுடைய நண்பர்கள் அனைவரும் இப்படித்தான் பேசிக்கொள்வோம்". 

"உங்கள் நண்பர்கள் சரி, வீட்டில் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளிடம் எப்படி பேசுவீர்கள்?"

"வீட்டில் கவனமாக இதுபோன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுவேன்".

என்ன sir ஞாயம் இது? உங்க குழந்தைகள் இருக்கும் போது பேசமாட்டீங்க, ஊர்ல இருக்குற மத்தவங்க குழந்தைகளை பத்தி உங்களுக்கு கவலை இல்லையா?

பேதமில்லாமல் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரியது ஆனால் வசை பாடுவதிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராகவும் சில சமயம் அவர்களுக்கு மேலாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பது வேதைக்குரியது. "தமிழில் திட்டினால் தானே கொச்சை அசிங்கமெல்லாம், ஆங்கிலத்தில் திட்டுவோம்". மொழி எதுவானாலும் அதன் பொருள் தரும் வீரியமும் , தாக்கமும் குறையப் போவது இல்லை. 

தவறு செய்வது/செய்தது யாராக இருந்தாலும் பெரும்பாலும் வசையின் கசை திட்டப்படுபவரின் குடும்பம் சார்ந்த பெண்களை, குறிப்பாக தாயை நோக்கியே நீளும். இதன்மூலம் எதிரி உச்சகட்ட பாதிப்பிற்கு உள்ளாவதை உறுதி செய்து கொள்கிறது திட்டுபவரின் மனம்.

முடி, மயிரு ஒரு பொருள் தரும் இந்த இரு வார்த்தைகளில் "மயிரு" மட்டும் தீஞ்சொல் ஆனதேன்?
       
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 
நிலையின் இழிந்தக் கடை ( குறள் 964)
                               
தலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் வரைக்கும்தான் அது முடி, அதுவரைக்கும் தான் அதற்க்கு அலங்காரம். உதிர்ந்த பின்பு அது மயிர். எந்த வார்த்தையில் திட்டினாலும் "நீ விரும்பத்தகாத இழிவானவன்" என்பதையே பதிவு செய்ய விரும்புகிறது மனம்.

People learn best by watching others; it's how we learn as children.

இப்படி ஒரு நிலைமையை யோசித்துப் பாருங்கள். மழழை மாறாத உங்கள் குழந்தை ஏதேனும் கொச்சையான வார்த்தையை (எந்த மொழியானாலும்) உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் முன்னிலையில் கூறினால் எப்படி இருக்கும்?

கடுமையான ஒரு சொல் என் முழு நாளையும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அநாகரீகமான வசை உண்டாக்கும் மன அழுத்தம் தற்கொலைக்கு கூட தூண்டுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மனிதர்களை மட்டுமல்ல மனங்களை கொள்வதும் கொலைதான்

It takes a village to raise a child - நம் வீட்டை மட்டுமல்ல, சமுதாயத்தையும் நஞ்சு கலவாமல் காப்பது நம் கடமை.


முன்னுறு ஆயிரம் வார்த்தைகள் கொண்ட செழுமையான மொழியில் இனிய சொற்களுக்கா பஞ்சம் ?


இனிய உளவாக இன்னாது கூறல்
கனிஇருப்பக் காய் கவர்ந்தற்று 

புன்னகையும், இன்சொல்லும் உதிர்க்கும் வரைதான் வாய், இல்லையேல் அது மற்றொரு கழிவுநீக்க உறுப்பே!