1. விணையூக்கி
இரவு 09:00 மணி
கார்த்திக் அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டிருந்தான். பயணக் களைப்பு தெரியாமல் இருக்க பண்பலை வானொலியிடம் உதவியை நாடினான்.
சில விளம்பரங்களுக்கு அடுத்து, ஒரு பெண்ணின் கொஞ்சலாக அப்போதைய நிகழ்ச்சியின் விவரம் தெரிவிக்கப்பட்டது.
"நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது காதல் காதல் With Me" என தன்னுடைய பெயரையும் கூறிக்கொண்டார் அதே கொஞ்சலுடன்.
பல மணித்துளிகள் வரிசையில் காத்திருந்து சிலர் அந்த நிகழ்ச்சியில் பேசினார்கள். அனைவரிடமும் ஒரே கேள்வி வேறு, வேறு சுருதியில் கேட்கப்பட்டது.
"காதல்னா என்ன? "
அதற்க்கு பல வார்த்தைகளில் ஒரு பொருள் தரும் பதிலை கூறிக்கொண்டிருந்தார்கள் காதலிடம் வசியப் பட்டு வரிசையில் காத்திருந்தவர்கள்.
"இனம் புரியாத அன்பு"
"அன்பை பரிமாறிக் கொள்ளுதல்"
"அன்பு செலுத்துதல்"
"எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டுவது"
"விவரிக்க முடியாதது"
"அனைவரும் அனுபவிக்க வேண்டிய அற்புதமான அனுபவம்"
"Feelings that makes the world keep moving"
இவை அனைத்தயும் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கின் மூளை, 19 வகையான சிரிப்புகளில் புன்சிரிப்பை அவன் இதழ்களுக்கு அனுப்பியது.
வானொலி, தொடர்ந்து காதல் ரசத்தை காதில் ஊற்றிக் கொண்டிருந்தது.
"உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?"
"இதயத் தாமரை படத்துல இருந்து "ஒரு காதல் தேவதை" பாட்டுப் போடுங்க"
"கண்டிப்பா, இதயத்தாமரை படத்துல வைரமுத்துவின் வரிகளுக்கு, சங்கர்-கணேஷ் இசை அமைத்து S.P.B மற்றும் சித்ரா பாடிய ஒரு காதல் தேவதை பாடல் இந்த நேயருக்காகவும் மற்றும் உங்கள் அனைவருக்காகவும் இதோ காற்றலைகளில்"
பாடல் ஆரம்பித்து 3 நிமிடம் 53 நொடிகளில்.
சித்ரா கேட்ட கேள்விக்கு
"கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது?"
அதற்க்கு S.P. B எதிர் கேள்வி கேட்க
"ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது?"
இரண்டிற்கும் சித்ராவே விடையும் அளித்தார்.
"இயல்பானது"
கார்த்திக்கை அறியாமலே இந்த வார்த்தைகள் அவன் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருந்த நினைவுகளை வருடின...
1997 வருடம் ஜூன் மாதம்,
ஒரு நாள்...
கல்லூரி தொடங்கி சில நாட்கள் ஆகிட்டபோதிலும் கார்த்திக் அன்று தான் முதல் முறையாக கல்லூரிக்கு செல்கிறான்.
"Ragging" எனும் சில்மிஷ பண்டிகையின் முக்கிய கொண்டாட்டங்கள் ஓய்ந்து இருந்ததன. அவ்வப்போது சில அன்புக் கட்டளைகள் துறையின் மூத்த (வருங்கால) தூண்களிடம் இருந்து வரத்தான் செய்தன.
அன்றைய தினம் கார்த்திக் சற்று முன்னதாகவே கல்லூரிக்கு சென்று விட, அவனுடைய வகுப்பில் அவன் துறையை சார்ந்த முன்னோடிகள் அமர்ந்திருந்தனர். இடதுபக்கம் சில மாணவிகளும் அமர்ந்திருந்தனர். சீக்கிரம் வந்து வம்பின் வலையில் சிக்கிக் கொண்டதை உணர்ந்தான் கார்த்திக்.
"உன் பேரென்ன?"
"கார்த்திக்"
"பதில் சொல்லும் போது மரியாதையோட 'Sir'' னு சொல்லணும், இருக்கட்டும் பழைய Cinema Heroines ல புன்னைகை அரசி யாருன்னு தெரியுமா?"
"K. R. விஜயா Sir"
"ஏன்டா Cinema Heroine பேருக்கெல்லாம் Initial செல்ற, உன் பேருக்கு Initial சொல்ல மாட்டியா?"
"R. கார்த்திக் Sir"
"சரி, ஒரு College Salute அடி"
"College Salute எனக்கு தெரியாது Sir"
அதற்கு ஒரு சீனியர், கார்த்திக்கு முன்னதாகவே வகுப்பிற்கு வந்திருந்த மற்றொரு இளம்கலை மாணவனை கைகாட்டி, "நீ அவனுக்கு Salute அடிச்சி காட்டு டா" என்றான். அதற்க்கு உடனே அந்த மாணவன் எழுந்து "Abdomen Guard" போல இடது கையை வைத்துக் கொண்டு, வலது கையை உயர்த்தி, மடக்கி வலது நெற்றியை தொடுட்டவுடன், இரண்டு பின்னங்கால்களை உயர்த்தி "Yes Sir" என்று உரக்க கூறிவிட்டு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பினான்.
"தம்பி கார்த்தி, College Salute என்னன்னு தெரிஞ்சிக்கிட்டேள்ள இப்போ அடி"
சம்மதமோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் அப்படியே நின்றான் கார்த்திக்.
"என்னடா, சொல்றது கேக்கலையா? அடின்னா..."
"Sir நான் வேணா வேற எதாவது பண்ணட்டுமா?"
நீ வேற ஒன்னும் பண்ண வேண்டாம், இதப் பண்ணு"
கார்த்திக் கைக்கடிகாரத்தை நோக்கினான் மணியடிக்க இன்னும் 15 நிமிடங்கள் இருந்தது. அதுவரை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
பொறுமை இழந்த சீனியர் மாணவன் எழுந்து கார்த்திக்கை நோக்கி வந்தான். அப்போது சரியாக வாசலில் ராம் வந்து நின்றான். "ராம்" அந்த சீனியர்களில் ஒருவன்.
"இங்க என்னடா பண்றீங்க வாங்க போகலாம்" என்று தன்னுடைய சீனியர் பட்டாளத்தை அழைத்தான்.
"இருடா ராம், இவன் ரொம்ப நேரமா Salute அடிக்காம நிக்கிறான், அவன கொஞ்சம் கவனிப்போம்." என்றான் மற்றொரு சீனியர் மாணவன்.
"என்ன தம்பி, எவ்வளவு நேரம்தான் இப்படியே நிப்ப, சட்டு புட்டுன்னு Salute அடிச்சிட்டு போயேன்" என்றான் ராம்.
கார்த்திக் பதில் ஏதும் கூறவில்லை.
"ராம், அவன் Salute அடிக்க மாட்டானாம், வேற எதாவது செய்றானாம்."
"அப்படியா, சரி பரவாயில்ல, இவன் பேரென்ன?" என்று ராம் தன் கூட்டத்திடம் கேட்க.
"கார்த்திக்" என்றான் பங்காளி.
"சரி கார்த்திக், நான் உனக்கு ரெண்டு Options தர்றேன், ஒன்னு Salute அடி, அல்லது நான் கொடுக்குற problem ல solve பண்ணு. என்ன பண்ற?" என ராம் கேட்க.
"Problem என்னனு சொல்லுங்க Sir"
"உன்னால solve பண்ண முடியலன்னா, Salute தான்" என்று தன்னுடைய புதிரை கார்த்திக்கை நோக்கி எய்தான் ராம்.
வகுப்பில் இருந்த கரும்பலகையில் இவ்வாறு எழுதினான்.

"இதுல X, Y values என்ன வரும் சொல்லு கார்த்திக்? உனக்கு 3 minutes time தர்றேன்."
.......
"ஒரு Clue வேணா தர்றேன். first answer 3,1 அடுத்த answer என்னன்னு சொல்லு" என்று கேட்டு விட்டு மெல்ல சிரித்தான்.
இரண்டு நிமிடங்கள் முடிந்து, நொடி முள் மூன்றாவது முத்தம் கொடுக்க "12" நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. 30 வினாடிகள் மீதம் இருக்கும் சமயத்தில் சீனியர் கூட்டம் Count Down செய்ய ஆரம்பித்தது.
"30, 29, 28, 27..."
கார்த்திக் மெல்ல கரும் பலகை நோக்கி நகர்ந்தான். தனக்கு தெரிந்ததை கிறுக்கினான். கரும் பலகையில் கார்த்திக் கொட்டிய வெண்ணிற கோடுகள் ராமின் கண்களை அகலமாக்கின.

கார்த்திக் கடைசி மூன்று புள்ளிகள் வைக்கவும், காலக்கெடு மூன்று நிமிடம் முடியவும் சரியாக இருந்தது. கார்த்திக் எழுதியது யாருக்கு புரிந்ததோ இல்லையோ ராம் நன்றாகவே புரிந்து கொண்டான். காலை வகுப்பு தொடங்க இன்னும் சில நிமிடங்கள் மீதம் இருப்பதை தன்னுடைய கைக்கடிகாரத்திடம் உறுதி செய்து கொண்டு ராம் அடுத்த கேள்வியையும் தொடுத்தான்.
"இன்னும் ஒரு Test இருக்கு தம்பி, இதுக்கும் correct டா Answer சொல்லிடு அதுக்கப்புறம் உனக்கு எந்த problem வராம நான் பாத்துக்குறேன்" என்றான் ராம்.
"சொல்லுங்க Sir" என்று புத்தியை கூராக்கி எதிர் நின்றான் கார்த்திக்.
கரும் பலகை அடுத்த போருக்கு தயாரானது. குதர்க்கமாக குண்டலகேசியில் இருந்து கேள்வி கேட்கலாமா என்று யோசித்து விட்டு பின்பு அதை கைவிட்டான் ராம். ஏனெனில் குண்டலகேசி, குண்டு மணி அளவுகூட அவனுக்கு தெரியாது. "all is fair in war" என்று அரைகுறையாக எங்கோ படித்தது நினைவுக்கு வரவே, மேல் படிப்பிற்கு தன்னை தயார் செய்து கொள்ள உதவிக்கொண்டிருக்கும் புத்தகத்தில் இருந்து அடுத்த கேள்வியை உருவினான் ராம்.
" L L L,
L C C,
C,
அடுத்து என்ன வரும் ?" என்று தன் கேள்வியை முடித்தான் ராம்.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சீனியர் சேகர், "ரொம்ப படித்து ராமுக்கு மூளை குழம்பி போச்சி போல A, B, C ய தப்பு தப்பா எழுதிட்டு கேள்விங்கிறானே" என்று அலுத்துக் கொண்டான்.
கார்த்திக்கின் தேடுபொறி சில நொடிகளில் பல ஆங்கில எழுத்துக்களை அள்ளிக் கொண்டு வந்தது. சுண்ணாம்புக்கட்டி கார்த்தியின் கைவசம் மாறியது.தொடரை பூர்த்தி செய்தான்.
L C
இதை பார்த்த ராம், பதில் ஏதும் கூறாமல் வகுப்பறையில் இருந்த பிற சீனியர் மாணவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
"என்னடா ராம், நீ எதோ கேட்ட, அதுக்கு அவன் எதோ எழுதுனான். நாமளும் வந்துட்டோம். ஒண்ணுமே புரியலையே" என்றான் சீனியர் சேகர்.
"கார்த்திக் எழுதினது Correct தான் சேகர். First Question அது 'Continued fraction', அதுல இருந்து ஒவ்வொரு sequence சா எடுத்து Solve பண்ணா, வேற வேற answer கிடைக்கும். அதுல பிரஸ்ட் sequence ல இருந்த answer தான் 3 னும் 1 னும்".
Second question, English alphabets ச represent பண்ணுது. L னா Line; C னா Curve. L L L மூணு lines சேர்ந்து "A" ய form பண்ணும். B க்கு ஒரு line and ரெண்டு Curves. C க்கு ஒரே Curve. next D, அதுக்கு ஒரு Line ஒரு Curve. அததான் கார்த்திக் எழுதினான்.
"ராம், நீ சொல்றத பார்த்தா கார்த்திக் என்ன அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா?"
"அப்படிதான் தெரியுது, இனிமே அவன ragging பண்ணாதீங்க" என்று மற்ற சீனியர்களுக்கு கட்டளையிட்டான்.
காலை வகுப்புகள் தொடங்கவிருப்பதை மிசார மணி ஒலி அறிவித்தது. பேராசிரியர் முதலாம் ஆண்டு வகுப்பில் நுழைந்தார். முதல் வரிசையில் கார்த்திக்.
மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களுடைய வரிசை எண்னை குறிப்பிட, வராத மாணவர்களின் எண்களை மட்டும் குறித்துக் கொண்டார் பேராசிரியர். கார்த்திக் தன்னுடைய எண்ணான 127 ஐ முழங்கிவிட்டு அமர்ந்தான்.
கரும் பலகையில் காத்திருந்த "தொடர் பின்னம்", இந்த வகுப்பிற்கு தொடர்பில்லாததால், பேராசிரியரால் சுத்தம் செய்யப்பட்டு "Properties of Matter" பாடம் ஆரம்பிக்கப் பட்டது.
பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழிக்கல்வி கற்றவர்கள் என்பதால் பேராசிரியர், "மேஜர்" ஆகவும் மாறவேண்டி இருந்தது. "Rotation, Rotation" னா "சுழற்சி,சுழற்சி"னு அர்த்தம் என அறிவியல் தமிழை போதித்துக்கொண்டிருந்தார்.
அந்த கல்லூரியில் இருபாலரும் கலந்துரையாட தடை. உரையாடலின் நோக்கம் கடலையாக இருந்தாலும் தடை, கல்வியாக இருந்தாலும் தடை. அதுவரை ஆண்கள் பள்ளியிலேயே படித்து விட்டு முதல் முறையாக இருபாலரும் படிக்கும் கல்லூரியில் சேர்ந்திருப்பது கார்த்திக்கு சற்று புதிதாக இருந்தது. அவன் வகுப்பில் 21 மாணவிகள், 7 மாணவர்கள். ஒரு சில மாணவிகள் தவிர பிறரை பார்த்தது கூட கிடையாது.
2. காதலின் முதல் விதி
விழிஈர்ப்பு விசையொன்று செயல்படாத வரை எந்த ஒரு மனதும் சலமில்லாமல் சயனித்துக் கொண்டுதான் இருக்கும்.
கல்லூரியில் சேர்ந்து, முதல் சில நாட்கள் சாதரணமாகத்தான் சென்றன. அன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வகுப்பு ஆரம்பமானது. வழக்கம் போல "மேஜர்" பேராசிரியர் பாடம் நடத்த ஆரம்பித்தார். அன்றைய பாடம் மின்னோட்டம் (electric current).
"எலக்ட்ரான்களின் ஓட்டம் மின்னோட்டம்". என்று எளிய தமிழில் விளக்கிக் கொண்டிருந்தார்.
"excuse me sir, may I come in?"
அனுமதி கேட்டு குரல் வந்த திசை நோக்கி கார்த்திக்கின் விழிகள் பயணித்தன.
"வண்ணப் புடவையில் வாசலில் தேவதை".
கார்த்திக்கின் மூளை "Norepinephrine" வெளியிட பணித்தது.அது அதிகப்படியான "adrenaline" னை சுரக்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பு இருமடங்கானது, உள்ளங்கை வியர்க்க தொடங்கியது. "மேஜர்" எதாவது கேள்வி கேட்டு சிறுது நேரம் "தேவதையை" அங்கேயே நிற்க வைக்க மாட்டாரா என்று ஏங்கியது அவன் உள்ளம். அது நடக்கவில்லை, ஆனால் அவள் உள் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். நடந்தால், அவளின் கால் நோகுமென அவளை விழிகளில் ஏற்றிக் கொண்டான் கார்த்திக்.
"மேஜர்" தன் சேவையை விட்ட இடத்தில் தொடர்ந்தார். "உலோக கடத்திகளில் எலெக்ட்ரான்கள் இயங்கும் மின்னூட்டங்களாகச் செயல்படுகின்றன".
கார்த்திக்கின் மனது மின்சாரத்திற்கு புதிய வரையறை கொடுத்தது.
கம்பிகளின் வழியே பாயும் மின்சாரத்தை - இன்றுதான்
கண்டேன் அவள் கண்களின் வழியாக.
அதற்கடுத்து, யார் பேசியதும் கார்த்திக்கின் காதுகளில் விழவில்லை. அவனுக்கு அடுத்து உடனடியாக தேவைப்பட்டது, அவளின் பெயர். மெல்ல மிதந்து சென்று மூன்றாவது வரிசையில், இரண்டாவது இடத்தில் அமர்ந்தாள். அருகில் அமர்ந்திருந்த யாரோ "பிரியா ஏன் லேட்டு?" என 20 Hz ல் கேட்ட கேள்வி கூட கார்த்திக்கின் காதுகளில் தெளிவாக கேட்டது.
பிரியா
பிரியா
என்னை விட்டு
என்றும் பிரியா(ள்)...
அன்றைய தினம் வீட்டிக்கு வந்ததும் முதலில் அம்மாவிடம் சென்றான் கார்த்திக்.
"அம்மா, நான் எப்படிம்மா இருக்கேன்"
"நீ என்னடா கண்ணு, வீட்ல ஆக்குரதுல மூகல்வாசி சாப்பாட்ட சாப்ட்டுட்டு நல்லா size சா தான் இருக்க"
"அத கேட்கல மா, பாக்குறதுக்கு நான் எப்படி இருக்கேன், நல்லா இருக்கனா, இல்லையா"
"உனக்கென்ன ராஜா மாதிரித்தான் இருக்க"
"உன்கிட்ட கேட்டா நீ இப்படித்தான் சொல்லுவ"
"அப்பறம் எதுக்கு என்கிட்ட கேட்ட" என்று அலுத்துக் கொண்டு அம்மா சமயலறைக்குள் சென்று விட்டார். கார்த்திக் கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு சில கேள்விகள் அவனிடம் கேட்டுக் கொண்டான்.
"உனக்கு இது தேவைதானா?"
"மத்ததெல்லாம் கூட O.K, இந்த கலர்க்கு என்ன பண்ணலாம்?"
"நீயோ கலர் கம்மி, அவளோ கொஞ்சம் உத்து பாத்தாலே சிவந்து போற நிறம். இதெல்லாம் சரியா வருமா?"
சுயமரியாதையை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் அவனால் பல கேள்விகளுக்கு விடை தேட முடியவில்லை. இப்போது அவனுக்கு வந்திருக்கும் வியாதியின் பெயர் என்னவென்று அவனால் விவரிக்க இயலவில்லை. நிச்சயம் காதலாக இருக்க முடியாது. கண்டதும் காதலா? அபத்தம். இறுதியாக இது "இனக்கவர்ச்சி" அன்றி வேறல்ல என்று முடிவுக்கு வந்தான்.
சனி, ஞாயிறு இரண்டு நாட்கள், பொது நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகத்தில் தன்னை புதைத்துக் கொண்டான். திங்கள் அன்று இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக தன்னை தேற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்றான். சில, பல நாட்கள் இதே உபாதையால் அவதிப் பட்டாலும் மீண்டும் மீண்டும் தன்னை தேற்றிக்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினான்.
முதல் பருவம் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியது. தேர்வு முடிவுகளும் வெளியாகின. தன்னுடைய மதிப்பெண் என்னவென்று பார்க்கும் முன்பாக பிரியாவின் மதிப்பெண்களை அவன் கண்கள் தேடின. கார்த்திக்கை விட 5 விழுக்காடு அதிகம். கார்த்திக் 65 விழுக்காடு பெற்றிருந்தான். துறைத்தலைவர் கார்த்திக்கை தனியாக அழைத்து விசாரித்தார்.
"Classல நல்லா தானப்பா answer பண்ற, பின்ன Mark மட்டும் ஏன் கம்மியா வாங்கியிருக்க?"
பதில் ஏதும் சொல்ல முடியாமல் திரும்பி விட்டான் கார்த்திக். 28 மாணவர்கள் படிக்கும் வகுப்பில் 12 வது இடத்தில் கார்த்திக். முதல் மூன்று மதிப்பெண்கள் வாங்கியது வழக்கம் போல பெண்களே.
இந்த சமயத்தில் வந்தது சுற்றுலா...
இந்த சுற்றுலா, பிரியாவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டிருந்த கார்த்திக்கின் கனவில் "தடா" வை இறக்கினார் அவன் அப்பா. வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக்கொண்டான் கார்த்திக்.
சுற்றுலா முடிந்து வந்தவுடன், இருபாலரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள கூடாது என்ற கல்லூரியின் விதி, வீதியில் எறியப்பட்டது. oxygen tank இல்லாமல் சுவாசிக்க முடியாது என்ற அளவுக்கு கடலை வறுப்பதினால் உண்டான புகை முழுவகுப்பையும் ஆக்கிரமித்தது. கார்த்திக்கின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. விஸ்வாமித்திரர் வேடம் ஏன் பூண்டோம் என்று தன்னை தானே நொந்து கொண்டான். இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் "பிரியா டார்லிங்" இன்னும் யாருடனும் பேசுவதில்லை.
முதல் வருடம் முடிந்து, இரண்டாம் வருடம் தொடங்கியது. மதிப்பெண் பட்டியலில் கொஞ்சம் முன்னேறி இருந்தான் கார்த்திக். மீண்டும் முதல் மூன்று இடங்கள் பெண்களுக்குத்தான். பல சமயங்களில் கார்த்திக்கின் மனது அலை பாய்ந்தாலும் எதையும் வெளியே சொல்லும் தைரியம் மட்டும் வரவில்லை.
இந்த சமயத்தில் வந்தது "inter college competition". மாவட்ட தலைநகரில் இருந்த ஒரு கல்லூரியில் நடைபெற்றது போட்டி.
- விநாடி - வினா
- பேச்சுப் போட்டி
- கட்டுரை
- கதை
என நான்கு போட்டிகளில் முதல் பரிசை அள்ளினான் கார்த்திக். பரிசுகளை வென்று கொண்டு மறுநாள் கல்லூரிக்கு வந்தவனுக்கு மீண்டும் ஒரு பரிசு. "பிரியாவிடம் இருந்து வாழ்த்துகள்" அப்புறம் ஒரு "சிரிப்பு".
அதன் பிறகு எப்போதாவது இருவரும் சிர்ப்பதுண்டு மற்றபடி பேசிக்கொள்வது கிடையாது. ஒரு வருடம் கழித்து, சென்றமுறை கார்த்திக் தவறவிட்ட வாய்ப்பு மீண்டும் அவனுக்கு கிடைத்தது.
"சுற்றுலா"
இந்த முறை அவனுக்கு அப்பாவிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இந்த முறை சரித்திரம் சற்று மாற்றி எழுதப்பட்டது. இவன் வகுப்பில் இருந்து "21" மாணவிகளும், மாணவர்களில் இவன் ஒருவன் மட்டும் சுற்றுலாவிற்கு சென்றனர். "டார்லிங்" உடன் பேசுவதற்கு நல்ல வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டே சுற்றிப் பார்க்க சென்றான் ஊட்டிக்கு.
மறுநாள் மேட்டிப்பாளையத்தில் காலை உணவுக்காக அனைவரும் புறப்பட்டனர். இரு பேராசியர்கள் அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியாது என்பதால், பல குழுக்களாக மாணவர்களை பிரித்தனர். பிரியாவுடன் சேர்த்து இன்னும் 6 மாணவிகளுக்கு பாதுகாப்பாக கார்த்திக் நியமிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டான்.
அந்த 7 பேர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை மெல்ல துவங்கியது. பேச ஆரம்பித்த சில நிமிடங்களில்.
"கார்த்திக் நீ இவ்வளவு நல்லா பழகுவியா, எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. நீ பேசவே மாட்டனு நினைச்சோம்." என்று ஒரு மாணவி கூறவும். கொஞ்சம் அடக்கி வசிக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் கார்த்திக்.
"இந்த டூர்க்கு மத்த பசங்க ஏன் வரலன்னு தெரியுமா கார்த்திக்"
"இல்ல, தெரியாது"
"போன வருஷம் டூர்க்கு போயிட்டு வந்த பிறகு, நாங்கெல்லாம் கொஞ்சம் Free யா பசங்க கூட பேச ஆரம்பிச்சமா"
"சரி, அதனால"
"ஒவ்வொரு பையனும், ஒவ்வொரு பொண்ண Love பண்றேன்னு சொல்லிட்டாங்க" என்று கார்த்திக்கின் எண்ணத்தில் தீவைத்தாள் அந்த மாணவி. அதோடு நிற்காமல் "நட்பின் காவலன்" என்ற பட்டம் வேறு கார்த்திக்கு வழங்கிவிட்டார்கள்."உலக உத்தமனாக" தன்னை காட்ட நினைத்து , சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டான் கார்த்திக்.
இப்படியே இரண்டாம் ஆண்டும் முடிந்தது. படிப்பில் மட்டும் நல்ல முன்னேற்றம் இருந்தது கார்த்திக்கிடம்.
மூன்றாம் ஆண்டு, முழுக்கவனமும் படிப்பு மட்டும்தான் என்று ஆனது. இப்போது வகுப்பில் இரண்டாம் இடத்தில் கார்த்திக். முதல் மதிப்பெண் மீண்டும் பெண் குலத்திற்கே.
கல்லூரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பிரியாவின் ஊரில் நண்பனின் அண்ணன் திருமணம் நடக்கவிருப்பதாக பிரியாவிடம் தெரிவித்தான் கார்த்திக். தன்னுடைய வீட்டிற்கு நிச்சயம் வரவேண்டும் என்று பிரியா அழைத்தாள். அதுவரை திருமணதிற்கு செல்லும் எண்ணம் இல்லாமல் இருந்த கார்த்திக், இப்போது நிச்சயம் போகவேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.
பிரியாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியாததால். காதலில் "கரை" கண்ட தன் நண்பனையும் உடன் அழைத்துச் சென்றான் கார்த்திக். திருமணத்தை முடித்துவிட்டு சாப்பாடுகூட வேண்டாம் என்று பிரியாவின் வீட்டிற்கு சென்றனர் இருவரும். "சாதாரண உடையிலும் அசாதாரணமாக ஜொலித்தாள் பிரியா"
உபசரிப்பு பலமாகத்தான் இருந்தது. அதற்க்கு தமிழர் பண்பாடு மட்டும்தான் காரணமா என்று இருவருக்கும் புரியவில்லை. இருவரும் இரண்டு மணிநேரம் பிரியாவின் வீட்டில் இருந்தனர். கடைசியாக வெளியே வந்த பிறகு நண்பனிடம் கேட்டான் கார்த்திக்.
"என்னடா சொல்ற, எதாவது feelings இருக்கா?"
"ஒன்னும் இருக்குற மாதிரி தெரியலடா கார்த்திக்"
"நீ சரியா கவனிக்கலடா, வள்ளுவரே சொல்லி இருக்காரு...
தான்நோக்கி மெல்ல நகும்."
"இப்படி எதாவது சொல்லி உன்ன நீயே ஏமாத்திக் கிட்டாதான் உண்டு" என்று நண்பன் தன் அறிவுரையை முடித்துக் கொண்டான்.
வருடமும் முடிந்தது, அன்று வரை மனதில் தோன்றியதை சொல்ல தைரியம் வரவில்லை கார்த்திக்கு. "autograph" வாங்க பல diary கள் இடம்பெயர்ந்தன. பிரியாவின் diary யில் பல, சில மாணவர்களிடம் இருந்து indirect proposal கள் இருந்தன. பத்தோடு ஒன்றாக தன்னையும் இணைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.
"இரண்டு உடல்களில் வசிக்கும் ஒரு உயிர்தான் நட்ப்பு" என்று மட்டும் எழுதிவிட்டு முடித்துக் கொண்டான்.
வீட்டுக்கு வந்துதன் diary யை புரட்டினான் கார்த்திக். பல direct proposal கள் இருந்தன. அவை அனைத்தயும் கடந்து November மாதத்திற்கு ஓடினான். அங்கு பிரியாவின் பிறந்தநாளை தேடினான்.அவளின் தொலைபேசி எண்ணைத் தவிர அங்கு வேறு ஒன்றும் இல்லை. மீண்டும் ஒரு புதிர்...
மூன்றாம் ஆண்டு தேர்வுகள் முடிந்தன, கடைசி தேர்வு. அவளை பார்க்கப்போகும் கடைசி நாள். அதுவும் முடிந்தது, அவன் இதயம் இரும்புப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டது.
கல்லூரி முடிந்து சில நாட்கள் பிரியாவுடன் தொலைபேசியில் உரையாடினான். பின்னர் அதற்கும் முற்றுப்புள்ளி. மேல்படிப்புக்கு இருவரும் வேறு, வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
3. காதலின் இரண்டாம் விதி
அவளின் விருப்பம் அதுவானால், கடலினை கடப்பதும் கணநேர வேலைதான்.
மேல்படிப்பு இரண்டு ஆண்டுகள் முடியும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
மூன்றாம் பருவத்தின் தொடக்கத்திலேயே, "campus interview" மூலமாகவே தன்னுடைய வேலையை உறுதி செய்துகொண்டான் கார்த்திக். வேலை உறுதியான சில நாட்களில் அமெரிக்காவில் விழுந்த குண்டு இவன் வாழ்க்கையிலும் விழுந்தது. உறுதியான வேலை உருக்குலைந்து போனது.
"நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று நம்பும் கார்த்திக்கின் மனதால், இந்த வேலை இழப்பும் நன்மைக்கு என ஏற்க முடியவில்லை.
நான்காம் பருவத்தின் தொடக்கத்தில் project செய்வதற்காக மாநிலத்தின் தலைநகருக்கு சென்றான். நல்லபடியாக project முடித்துவிட்டு வந்தவனுக்கு கல்லூரியின் முதல் மதிப்பெண் பெற்றதற்க்கான பதக்கம் காத்திருந்தது.
எங்கும் வேலையில்லை, என்ன செய்ய என்று திகைத்தவன். கல்லூரி விரிவுரையாளர் வேலையாவது கிடைக்குமாவென அனைத்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்தான்.
அவன் ஊருக்கு அருகில் இருந்த கல்லூரியில் இருந்து நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது. வேலைக்கான முதல் நேர்முகத்தேர்வு, ஆவலுடன் சென்றான் கார்த்திக்.
தற்செயலோ, விதியின் செயலோ மீண்டும் சந்தித்தான் பிரியாவை.
12 ம் வகுப்பில் அங்கில ஆசிரியர் கூறிய சரித்திரக் (அவரின் சொந்த கற்பனைக்) கதை நினைவுக்கு வந்தது.
"சீசரின் (ஆசை)நாயகி கிளியோபட்ரா. சீசர் தன்னுடைய அரண்மனைக்கு அந்தோணியை விருந்துக்கு அழைக்க, அந்தோணியும், கிளியோபட்ராவும் ஒருவரை ஒருவர் சந்திக்க, மன்மதன் எய்த அம்பு இருவரையும் தைக்க, இந்த நேரம் அந்தோணியை அரண்மனையில் கிளியோபட்ராவின் உபசரிப்பில் விட்டு விட்டு சீசர் வெளியே பயணிக்க. காதல் கிளிகள் இரண்டும் அரண்மனையை விட்டு தப்பிக்க, திரும்பி வந்த சீசர் துரோகம் இளைத்தவரை தண்டிக்க துடிக்க, விரைந்தார் அந்தோணியின் இருப்பிடம் நோக்கி.
அரண்மனையின் வாசலில் அந்தோணியை பதம் பார்த்த சீசரின் வாள், தாகம் அடங்காமல் கிளியோபட்ராவை நோக்கிப் பயணித்தது. ஆத்திரம் மறைத்ததால் கிளியின் அழகு சீசரின் கண்களுக்கு தெரியவில்லை.திரைச்சீலைக்கு பின்புறம் நின்றுகொண்டிருந்தாள் கிளியோபட்ரா. திரையை வெட்டியது சீசரின் வாள். நீங்கியது அந்தத்திரை மட்டுமல்ல சீசரின் கோபத்திரையும்தான். கிளியோபட்ராவின் கூரான விழிகளிடம் சீசரின் வாள் தோல்வி அடைந்தது. அவளின் அழகில் மீண்டும் தஞ்சம் அடைந்தார் சீசர்".
இரும்புப் பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட காதல் இதயம் பிரியாவை மீண்டும் பார்த்ததும் துள்ளி எழுந்தது. அவள் இன்னும் தன்னவள் தானா என்பதை உறுதி செய்ய கழுத்தையும், கால் விரல்களையும் நோக்கினான். பிரியாவின் இதயமும், கழுத்தும், கால்விரல்களும் இவனுக்கான இன்னும் காத்திருப்பதாக தோன்றியது. நலம் மட்டும் விசாரித்துவிட்டு திரும்பிவிட்டான்.
நேர்முகத்தேர்வின் முடிவுகளுக்காக காத்திருந்தான். அந்தக் கல்லூரியில் இருந்து எந்த தகவலும் வரவில்லை, ஆனால் கார்த்திக் படித்த கல்லூரியில் இருந்து பணி நியமனக் கடிதம் வந்திருந்தது. "புருஷ லட்சணத்தின்" முதல் படியை எட்டினான் கார்த்திக். இதை தெரிவிக்க பிரியாவை தொலைபேசியில் அழைத்தான். அந்த எண்ணில் யாரும் இல்லை.
சில நாட்கள் கழித்து தோழியின், தோழியின், தோழி வழியாக பிரியா பள்ளியில் பணிபுரிவதை தெரிந்து கொண்டான் கார்த்திக். தீவிர முயற்சிக்குப் பின்பு மீண்டும் அவளின் தொலைபேசி எண் கிடைத்தது.
மிகுந்த சிந்தனைக்குப் பிறகு...
"Hello, பிரியா இருக்கங்களா?"
"Hey, கார்த்திக் நான்தான் பேசுறேன்"
சிறுது நேர உரையாடலுக்குப் பின், கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிவதை தெரிவித்தான்.
"Congratulations கார்த்திக்"..... "எப்போ IT job க்கு try பண்ணப் போற, இங்கேயே இருந்திடாத" என்று அழுத்தம் கொடுத்தாள் பிரியா...
கொஞ்சம் ஏமாற்றமாக இருந்த போதிலும், அவளின் அக்கறை அவனுக்குப் பிடித்திருந்தது. 8 மாதங்கள் விவுரையளராக பணியாற்றிவிட்டு கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு மென்பொருள் வேலை தேடி மாநிலத் தலைநகரை நோக்கிப் புறப்பட்டான் கார்த்திக்.
இரண்டு மாத தீவிர தேடுதலுக்குப் பின்பு ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில், சுமாரான வருமானத்தில் பணியில் சேர்ந்தான். மென்பொருள் துறையில் வேலை கிடைப்பதுதான் கடினம், விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் அடுத்த நிலைக்கு முன்னேறுவது மிகவும் எளிது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், அதனால் கிடைத்த வேளையில் உடனே சேர்ந்து விட்டான். வேலை கிடைத்த செய்தியை அம்மா, அப்பாவிடம் தெரிவித்துவிட்டு அடுத்து கார்த்திக் தொடர்பு கொண்டது பிரியாவை.
"Congratulations கார்த்திக், சீக்கிரம் நல்ல salary கிடைக்கிற வேலையா பாரு..."
புதிதாக வந்திருக்கும் மென்பொருள் மொழிகளை விடாமல் பயின்றான். அடுத்த 8 மாதத்தில் அடுத்த வேலைக்கு மாறினான். அந்த புதிய வேளையின் ஊதியம் தற்போது வாங்குவதை விட நான்கு மடங்கு அதிகம்.
"Congratulations கார்த்திக், ரொம்ப நல்லது. இந்த company ல Onsite offer எல்லாம் இருக்கா?"
இவ்வளவு தூரம் ஓடிவந்த கார்த்திக்கால் நிற்க முடியவில்லை. அவளின் விருப்பத்திற்கு கண்டங்களைத் தாண்டவும் தயாரானான். வேறு சில, பல நிறுவனங்களில் வேலை கிடைத்தபோதும் உடனே வெளிநாட்டுக்கு அனுப்ப யாரும் முன்வரவில்லை. அதனால் தற்போது வேலை செய்யும் அதே நிறுவன மேலாளரிடம் Onsite குறித்து பேசினான். உண்மையான காரணத்தையே கூறினான்.
இரண்டு மாதத்திற்குப் பிறகு அதற்க்கான ஏற்ப்பாடு செய்வதாக கூறினார் மேலாளர்.
4. காதலின் மூன்றாம் விதி
மேலாளர் கூறியபடி இரண்டு மாதங்களில் கார்த்திக்கின் VISA உறுதி செய்யப்பட்டது அமெரிக்காவிற்கு. Stamping க்காக Passport டை american embassy யில் கொடுத்து விட்டு VISA உறுதியான செய்தியை வீட்டுக்கு தெரிவித்தான். சிறுது நேரத்தில் பிரியாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முதல் முறையாக பிரியாவின் அழைப்பு. இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
"Hello பிரியா"
"Hi கார்த்திக், எப்படி இருக்க"
"நான் நல்லா இருக்கேன் பிரியா, நானே உனக்கு call பண்ணலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே call பண்ணிட்ட"
"Oh அப்படியா, நானும் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசத்தான் call பண்ணேன்."
"சொல்லு பிரியா, உனக்கு Marriage fix பண்ணிட்டாங்களா? தயவு செஞ்சி ஆமான்னு மட்டும் சொல்லாத."
"என்ன கார்த்திக் சொல்ற..."
"நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டுதான் உன்கிட்ட இதப்பத்தி பேசணும்னு wait பண்ணிக்கிட்டு இருந்தேன். அதுமட்டுமில்லாம இப்போ எனக்கு வந்த இந்த தைரியம் இத்தன நாளா எனக்கு வரல. இப்போகூட நீ எனக்கு இல்லாம போயிடுவியோங்கிற பயம்தான் தைரியத்த கொடுத்திருக்கு.
......
என்ன நீ கல்யா.."
"Love பண்றியா கார்த்திக்..."
"6 வருசமா... "
கார்த்திக்கின் அலைபேசி ஒலித்தது. நிகழ் காலத்திற்கு திரும்பினான் கார்த்திக்.
"எங்க இருக்கீங்க, வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்?"
"Car, Service station ல இருக்கு, bus ல தான் வந்துக்கிட்டு இருக்கேன். இன்னும் 30 minutes ல வந்துருவேன். நீ சாப்பிடு, எனக்காக wait பண்ணாத. குழந்தைங்க என்ன பண்றாங்க"
"ரெண்டு பேரும் விளையாடிக்கிட்டு இருக்காங்க, நான் wait பண்றேன் நீங்க வாங்க சேர்ந்து சாப்பிடலாம்".
அலைபேசியை சட்டைப் பையில் செருகிவிட்டு நினைவுகளை தொடர்ந்தான் கார்த்திக்.
"Love பண்றியா கார்த்திக்..."
"6 வருசமா... "
......
......
"சரி எங்க அப்பகிட்ட வந்து பேசுங்க..."
மூன்றாம் விதி
காதலே வாழ்க்கை என்று முடிவான பின்பு, இல்லை என்ற பதில் எற்றுக் கொள்வதற்க்கில்லை
30 நிமிடத்தில் வீட்டுக்கு சென்ற கார்த்திக்காக. காதல் மனைவி பிரியவும், மகன் அர்ஜுனும், மகள் ஆராதனாவும் காத்துக்கொண்டிருந்தனர்...