cookie

Tuesday, July 16, 2013

தந்தி

 163 வருடங்களாக இயங்கிவந்த தந்தி சேவைக்கு, ஜூலை 14 ம் நாள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தரித்திரத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட தந்தி சேவை இனி சரித்திரத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும்.

இனிவரும் ஆண்டுகளில், "வரலாற்றில் இன்று" என்று ஜூலை 14 ம் நாள், இந்திய தந்தி சேவையும் சேர்த்து தொலைக்காட்சியில் காட்டப்படும்.    

80 களின் இடையில் விஸ்வரூபம் எடுத்து இயங்கிய இந்த சேவையில், சமயங்களில் 6 கோடி தந்திகள் கூட ஒரே நாளில் அனுப்பிய மெடிக்கல்  மிராக்கில்களும் அடங்கும்.

இது போன்ற பல சாதனை விளக்கப் பட்டியல்களை பல முறை நீங்கள் சமீபத்தில் படித்திருப்பீர்கள் என்பதால், மேலும் உங்களை புள்ளி விவரம் கொடுத்து சலிப்பை ஏற்படுத்த விரும்பாமல் சொல்ல விரும்பிய செய்திக்கு வருகிறேன்.

நான் கொடுத்த முதல் (கடைசி) தந்தி...

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரையாண்டு தேர்வு விடுமுறையில்,வீட்டில் இருப்பவர்களின் உயிரை தவணை முறையில் எடுத்துக் கொண்டிருந்தேன். இதே சமயத்தில் ஊரில் இருந்து மாமாவின் புதல்விகள் இருவர் விடுமுறையில் என்னிடம் அடி வாங்கு வதற்கு என்றே பாட்டி வீட்டிற்கு வந்திருந்தனர்.

பாட்டி வீடும், எங்கள் வீடும் வெகு அருகில் இருந்தன. விடுமுறையில் என்னுடைய முக்கிய பொழுதுபோக்கு என்னவென்றால் அக்கா, தங்கை, தம்பி (தம்பி,தங்கை இருவரும் சித்தியின் வாரிசுகள்) மற்றும் மாமா மகள்கள் அனைவரையும் பட்டியல் போட்டு பந்தாடுவது.

அரைமணிக்கு ஒரு முறை யாராவது ஒருவர் என் அம்மாவிடம்  என்னைப் பற்றிய புகாருடன் பஞ்சாயத்துக்கு போய் நிற்ப்பார்கள். எங்கள் வீட்டின் IRON MAN வரும் வரை இது இப்படியே தொடரும்.

இந்த சமயத்தில் ஒரு நாள், காலை 10:00 மணி ஆகியும் அன்றைய அடிகளை வாங்க அன்னக்கிளிகள் வரவில்லை. சிறுது நேரம் கழித்து பாட்டிதான் வந்தார். மாமாவின் மூத்த மகள் பூப்படைந்து விட்டதாகவும் அந்த செய்தியை மாமாவின் வீட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்தார்.

அன்றைய தினம் எங்களின் உற்றார் உறவினர் யார் வீட்டிலும் தொலைபேசி கிடையாது. விரைவாக செய்தி அனுப்ப தந்திதான் ஒரே வழி, கையில் கொஞ்சம் காசு கொடுத்து (சுருக்கமாக) தந்தி கொடுக்க என்னை அனுப்பினர்.

இந்த நிகழ்விற்கு சில நாட்களுக்கு முன்பு, எங்கள் வகுப்பு ஆசிரியை தங்கரத்தினம் அவர்கள், அவரின் சொந்த ஆர்வத்தாலும், தன்னுடைய மாணவர்களின் நடைமுறை வாழ்விற்கு தேவையான அறிவை வளர்த்துக் கொள்ளவும் பல முயற்சிகளையும் எடுப்பார்கள். அதில் ஒன்றுதான் தந்தி எவ்வாறு அனுப்பவேண்டும் என்பது குறித்த விளக்க வகுப்பு. 

"நானெல்லாம் எதுக்கு தந்தி அடிக்கப் போறேன்", என்ற எண்ணத்தில் அரைகுறையாக ஏதோ கற்றுக்கொண்டதாக நினைவு.

பணத்தை வங்கிக் கொண்டு, கோவில்பட்டி மெயின் ரோடு,  பாரத ஸ்டேட் வங்கிக்கு அருகில் இருந்த தந்தி அலுவகத்திற்கு சென்றேன். அலுவலரிடம் இருந்து படிவம் பெற்றுக்கொண்டேன். அனுப்புநர் மற்றும் பெறுனர் குறித்த விவரம் நிரப்பப்பட்டு விட்டது. அடுத்தது செய்தி...

முதலில் அனுப்ப வேண்டிய செய்தியை தனியாக ஒரு காகிதத்தில் எழுதினேன்.

"<பெயர்> குத்த வச்சிட்டா "

"<பெயர்> சமஞ்சிட்டா."

நல்லா இல்லையே, சரி இப்படி சொல்லுவோம்.

"<பெயர்> பெரிய மனுசி ஆயிட்டா. மஞ்சள் தண்ணி நாளைக்கு ஊற்றுகிறோம். உடனே வரவும் "

அடுத்து தான் "Mission: Impossible", இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது எப்படி?

இத அப்படியே மாத்துவோம், அவ்வளவு தானே. என்று மனதை தேற்றிக் கொண்டு பலமுறை முயன்றும் செய்தியை தொடங்கக்கூட முடியவில்லை.  தந்தி அலுவலரிடமும் உதவி கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அருகில் மிடுக்கான உடை அணிந்த ஒருவர் தந்தி படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். அவரிடம் உதவியை நாடலாம் என்று முயன்று பார்த்தேன்.

நான் கூறிய செய்தி அனைத்தையும் முழுமையாக கேட்டுவிட்டு, என்னைப் பார்த்து  "என்ன படிக்கிற" என்றார். 8 ம் வகுப்பு என்று நான் கூறியதும். என்னையும் இந்த சமுதாயத்தையும் கடுமையாக சாடினார். 8ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இந்த சாமர்த்தியம் கூட இல்லையே என்று. போனால் போகட்டும் நமக்கு உதவி செய்தால் போதும் என்று நினைத்தேன் ஆனால் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டேன், வேறு யாரிடம் உதவி கேட்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் முந்தய அந்த மிடுக்கு மனிதரை கவனித்தேன். அவரும் செய்தியை சொந்தமாக எழுதவில்லை, யாரோ எழுதிக் கொடுத்ததை அச்சு பிறளாமல் பிரதி எடுத்துக் கொண்டிருந்தார்.

இனி யாரிடமும் உதவி கிடைக்காது என்பதால், என்னிடம் இருந்தே உதவியை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்து மீண்டும் நான் ஏற்கனவே எழுதி வைத்த செய்தியை மொழி மாற்றம் செய்ய முயன்றேன்.

            
"<பெயர்> பெரிய மனுசி ஆயிட்டா. மஞ்சள் தண்ணி நாளைக்கு ஊற்றுகிறோம். உடனே வரவும் "

"<NAME> IS BIG LADY NOW. YELLOW WATER TOMORROW. START NOW".

இந்த செய்தி பொறிக்கப்பட்ட படிவம் அலுவலரின் கைக்கு மாறியது. எந்த சலனமும் இல்லாமல் அவரும் வங்கிக் கொண்டார். செய்தியும் காற்றில் பறந்தது.  

அன்று மாலையே என்னுடைய மாமாவும், அத்தையும் வந்ததன் மூலம், நான் அனுப்பிய தந்தி அவர்களுக்கு சென்று விட்டது, புரிந்தும் விட்டது என்பதை நினைத்த போது, கொல்கத்தாவில் இருந்து டைமண்டு ஹார்பர்க்கு முதல் தந்தி அனுப்பியவரின் வெற்றிக்களிப்பை அன்று நான் உணர்ந்தேன். 

2 comments:

  1. the way you have written is Such a sense of humor.. can’t stop my laughing… Nice :)

    ReplyDelete