cookie

Saturday, December 31, 2016

இரண்டாம் காதலி... முதல் மனைவி...

(கிட்டத்தட்ட) எல்லா மகன்கள் போல, எனக்கும் அம்மாதான் முதல் காதலி...  

"அழகு என்பது நிறத்திற்கு அப்பாற்பட்டது" என்பது "கனகவள்ளி" எனும் அந்த தேவதையை கண்டபின்புதான் புரிந்துகொண்டேன், சுருங்க சொல்வதென்றால் "கனகவள்ளி"  கோவிலில் இருக்கும் அலங்கரிக்கப்பட்ட "சாமி"சிலை. அந்த சிலையை தினமும் பார்க்க, "திட்டு"மட்டுமல்ல அடிகூட வாங்க ஒரு கூட்டமே காத்துக்கிடந்தது.

அன்றைய தினம் நாங்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, கனகவள்ளி அங்கு வந்தார். "ஆறுமுகம்" என்று அவர் அழைக்க, அவனும் ஓடி அருகில் சென்றான் பவ்யமாக. எங்கள் அனைவரின் முன்பாக ஆறுமுகத்திடம் ஒரு காகிதஉறையை நீட்டி, "உங்க எல்லாருக்கும் சேத்து இந்த பத்திரிக்கையை ஆறுமுகம் கிட்ட கொடுக்குறேன், நீங்க எல்லாரும் என்னோட கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்" என்று கூறிவிட்டு, "7B மாணவர்கள்" என காகித உறையில் எழுதினார்.

"டீச்சர், டீச்சர் அப்போ உங்கள நாங்க இனிமே பாக்கவே முடியாதா?" என்று ஆறுமுகம் சோகமாக கேட்க, கனகவள்ளி டீச்சர் கண்ணீரை மறைத்து கொண்டு "முழுஆண்டு பரீட்சை முடுஞ்சதும் நான் கண்டிப்பா வருவேன்" என்று உறுதிமொழிந்தார். இரண்டு மாதம் தேர்வு விடுமுறை முடிந்ததும் மீண்டும் பள்ளிக்கு திரும்பியபோது, ஒருவர் விடாமல் நாங்கள் அனைவரும் "7B" வகுப்பை பார்த்துவிட்டு வந்தோம், ஆறுமுகத்தை அனுப்பி ஆசிரியர்கள் அறையிலும் சென்று பார்த்துவர அனுப்பினோம், எங்குமே கனகவள்ளி டீச்சரை காணவில்லை.

அந்த துயரத்திலிருந்து மீள்வதற்க்கு முன்பாகவே அடுத்தஇடி இறங்கியது "8B"யில். பள்ளியிலேயே மிகவும் கெடுபிடியான ஆசிரியை எங்கள் "வகுப்பு ஆசிரியை"யாக வருவதாக ஆறுமுகம் கூறினான். மறுநாளே அது வதந்தியானது. கெடுபிடி ஆசிரியைக்கு பதிலாக "சீனிவாசன்" சார் எங்கள் வகுப்புக்கு வந்தார். "சீனி" சார் "8B"க்கு வருகிறார் என்றவுடன் மற்ற வகுப்பில் இருந்து மாணவர்கள் எறும்பாக "8B"க்கு படையெடுத்தனர். தலைமை ஆசிரியர் அனுமதியுடன் விருப்பமாற்று பெற்றுக்கொண்டு, பிரிவுக்கு இரண்டு மாணவர்கள் வீதம் பத்துபேர் அதிகமாயினர் எங்கள் வகுப்பில்.

சீனிவாசன் சார் எங்கள் வகுப்பிற்கு வந்ததிலிருந்து எங்கள் அனைவருக்கும் ஒரே குதூகலமாக இருந்தது. பாடம்தவிர, சூரியஒளி தழுவும் அனைத்தையும் பற்றி விவாதிப்போம். அவ்வாறான விவாதம் ஒன்றில், தனக்கு "வானவியல்" தெரியுமென்றும் எதிர்காலத்தை கூட தன்னால் கணிக்கமுடியுமென றும் சீனிவாசன் சார் கூற, நாங்கள் எங்களுக்குள் "டூப்பு டூப்பு" என்று மெதுவாக கூறிக்கொண்டு வாயைமூடி சிரித்தோம்.

நாங்கள் சிரிப்பத்தை கண்டுகொண்ட சீனிவாசன் சார் அதோடு நில்லாமல், தன்னுடைய சாகசத்தை அடுத்த படிக்கு உயர்த்தினார். என்னால் உங்களுடைய மனைவியின் பெயரை கூட சொல்லமுடியும் என்று ஒரு பந்தில் சதமடித்தார். வகுப்பில் கிளுகிளுப்பு விண்ணைத்தொட்டது. இருந்தாலும் சிலர் சீனிவாசன் சாரின் "அமானுஷ ஷக்தியை" நம்பாமல் தொடர்ந்தது இளித்தனர். பொறுமையிழந்த சீனிவாசன் சார், "சரிடா இன்னும் நீங்க நம்பலேன்னா வரிசையா இங்க வாங்க உங்க வருங்கால பொண்டாட்டி பேர இப்போவே நான் சொல்றேன்" என்று கட்டளையிட...

...
...              
...      
...

ஆசை அனைவரையும் தள்ளினாலும், நல்ல பையன் என்ற பிம்பத்தை உடைக்க யாருக்கும் விருப்பமில்லை. அதனால்... 

...
...              
...      
...

"என்னடா? யாரும் வரலையா? சும்மா நடிக்காதீங்கடா! வாங்கடா!!!" என்று சார் அன்புடன் அழைக்க.
...
...

நான் முதலில் சென்றேன்...

"என்னடா, ஒருத்தந்தான் வந்துருக்கான், வேற யாருக்கும் பொண்டாட்டி பேரு தெரியவேண்டாமா ?"என்று சார் தூண்டில்போட

ஆறுமுகம்
செல்லத்துரை
தவமணி
மகேஷ்

என ஐவர் வரிசையில் நின்றோம்...

மறுபடியும் சீனிவாசன் சார் தூண்டில் வேறு திசையில் வீச, புதிதாக எந்த மீனும் மாட்டவில்லை. "சரி, வராட்டி போங்க..." என்று சலித்துக்கொண்டு என்னிடம் "வலதுகை" என்றார். சிலநொடிகள் உற்றுநோக்கிவிட்டு

"உன்னோட wife பேரு..." என்று இடைவெளி விட்டு மொத்த வகுப்பையும் நோக்கினார்... வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன்கூட சீனிவாசன் சாரின் அடுத்த வார்த்தைக்கு காத்திருந்தான்.

....

"உன்னோட wife பேரு..."

...
...
...

பொறுமையிழந்த மொத்த வகுப்பும் "சொல்லுங்க சார்..." என்று கெஞ்ச...

"உன்னோட wife பேரு... Mrs. அருண்..." 

3 comments:

  1. Nice one. I think Srinivasan was our Maths teacher. I was also been 8B sometime. Good memories Arun!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete