cookie

Saturday, December 3, 2016

கட்டபொம்மனும்...நெப்போலியனும்... எனது ஒன்றுவிட்ட தாத்தாவும்...

விடுமுறைக்கு சொந்தஊருக்கு சென்றிருந்த பொழுது நிகழ்ந்த மற்றொரு சம்பவம்...

பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் அடுத்ததாக இருந்தது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, அதைக்கண்டு வரலாமென்று அன்று காலையே புறப்பட்டோம் கோட்டைக்கு. மதி மலரும் வேளையில்தான் வீடுதிரும்பினோம். மறுநாள்காலை எங்களின் நலம் விசாரித்துவிட்டு அப்படியே ஏகாதிபத்திய மண்ணில் வாங்கிய மின்கல விளக்கை கப்பமாக பெற்றுச்செல்ல எனது ஒன்றுவிட்ட தாத்தா எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்.

மின்கலம் மறுஊட்டம் செய்யவியலாததால் விளக்கில் அவருக்கு திருப்தியில்லை சலிப்புடன் அடுத்த கேள்வியை சம்பிரதாயமாக துவங்கினர்.

"அப்புறம், நேத்து எங்க போயிருந்தீங்க?"

"பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு போயிருந்தோம் தாத்தா, நல்லாயிருந்தது. நீங்க போயிருக்கீங்களா?"

"இல்ல, அதுக்கெல்லாம் நமக்கு எங்க நேரம் இருக்கு, சிவாஜி நடிச்ச கட்டபொம்மன் படம் பார்த்ததோடு சரி" என்று கூறிக்கொண்டே என் மகனை அருகில் அழைத்தார். அவனும் தயங்கிக்கொண்டே அவர் அருகில் சென்றான். 

இந்த தாத்தா நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர பக்தர். வரலாற்றுப் பேராசிரியருக்கே வரலாறு கற்றுக்கொடுக்கும் பேரறிவை பிறப்பிலேயே கொண்டவர். இவரின் சின்ன தலைக்குள் இவ்வளவு தகவல்களா! என்று நான் பலமுறை வியந்துள்ளேன். ஒரு சமயம் அவர் இவ்வாறு கூறியது இன்னும் என் நினைவில் உள்ளது. "நடிகர் திலகம்(1928-2001) அவர்களே முந்தைய பிறவிகளில் "வீரபாண்டிய கட்டபொம்மு"வாகவும்(1760-1799), கப்பலோட்டிய தமிழனாகவும் (1872-1936), ஒரு படிமேலே போய் மகாகவியாகவும் (1882-1921) வாழ்ந்தார்".

"ஆரியா, கோட்டையில என்ன பாத்தேன்னு தாத்தாகிட்ட சொல்லு!" வழக்கம்போல அதற்கு அவன்  கேள்வி புரியாமல் என்னைப்பார்க்க. நானும் வழக்கம்போல அவனுடைய பதிலை என் வாய்மொழிந்தேன்...

சிறிது நேரத்தில் கோட்டை கட்ட பாஞ்சாலங்குறிச்சி ஏன் தேர்வானது என்ற கேள்வி வரவே. நான் அங்கு சுற்றுலா வழிகாட்டியிடம் கேட்டதையும் அதற்கு முன்பு புத்தகத்தில் படித்ததையும் அவரிடம் சொன்னேன்.

"ஒரு நாள் கட்டபொம்மனின் முன்னோர்கள் வேட்டைக்கு அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு சென்றபொழுது, அவர்களுடன் வந்த வேட்டைநாய் அங்கோர் முயலை கண்டது. உடனே அதனைப்பிடிக்க விரட்டியது. உயிருக்குப் பயந்து ஓடத்தொடங்கிய முயல், தொடர்ந்தது ஓடியது, வேட்டைநாயும் விடாமல் விரட்டியது.  அதுவரை ஓடிய முயல் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும் ஓடுவதை நிறுத்திவிட்டு வேட்டைநாயை எதிர்த்தது. இதைக்கண்ட கட்டபொம்மனின் முன்னோர்கள், முயலுக்கே வீரம் கொடுத்த இந்த மண்ணில்தான் நாம் கோட்டை கட்டவேண்டும் என்று முடிவுசெய்து கோட்டையை கட்டிமுடித்த ஆண்டு கி.பி 1101" என்று கூறி முடிக்க.

"என்னது! முயல் நாய்கூட சண்டை போட்டுச்சா? அதுவும் வேட்டைநாய் கூடவா? இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு? நம்ம ஆளுங்க ஒண்ணுன்னா நூறுன்னுதான் சொல்லுவாங்க" என்று வரலாற்றின்(?) மீது பிராது கொடுத்தார். 

சில நொடிகள் நாம் அமைதியாக இருந்தேன் பிறகு முன்பு படித்த நெப்போலியனின் நிகழ்வு நினைவில் வரவே...

"1807 ஆண்டு, ருசியா பேரரசின் படைகளை வென்ற நெப்போலியன் அந்த வெற்றியை கொண்டாட  அவரின் படைத்தலைவர் "லூயிஸ் பெர்த்தியர்" என்பவரிடம் முயல் வேட்டைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அவரும் ஆணையை ஏற்று வேட்டைக்கு முயல்களை சேகரித்தார். மொத்த முயல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000. மதிய உணவு உண்டபிறகு வேட்டைக்கு அனைவரும் துப்பாக்கியுடன் தயாராக, கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து முயல்களும் புல்வெளிக்கு திறந்து விடப்பட்டன. கையில் துப்பாக்கியுடன் வீர்கள், அவர்களின் முன்னே (அப்போது) உலகின் சக்திவாய்ந்த மனிதன் நெப்போலியன், எதிரே அப்பாவி முயல்கள். துப்பாக்கிகளின் விசைகள் அழுத்தத்துக்கு தயாராக இருந்தன. முயல்கள் ஓட வேண்டும் அவ்வளவுதான்"

"அப்புறம் என்னாச்சு" என தாத்தா தோட்டாவை வீசினார் 

"ஓடுவதற்கு பதிலாக முயல்கள் வீரர்களை நோக்கி முன்னே வரத்தொடங்கின. இதைக்கண்டு அனைத்து வீரர்களும் சிரித்தனர், நெப்போலியனும்" அவர்களுடன் எனது ஒன்றுவிட்ட தாத்தாவும் சிரித்தார்.

"பெறகு?"

"முன்னே வந்த முயல்கள் வீரர்களின் மீது பாய்ந்தன, இதில் சிறப்பம்சம் என்னவென்றால்! ஒரு சிறிய முயல் கூட்டமே நெப்போலியன் மீது பாய்ந்தது ஒன்றின்மீது ஒன்றாக ஏறி தலைவரை சென்றுவிட்டது. இதே நிலைதான் அனைவருக்கும். வேட்டையாட வந்த கூட்டம் முயல்களால் வேட்டையாடப்பட்டது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று நெப்போலியன் அங்கிருந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து அவருடைய வீரர்களும்"

"உண்மையாவா!"

"ஆமா தாத்தா, இதப்பத்தி அவருடைய படைத்தலைவர் (Paul Thiébault) சொல்லியிருக்கார்"

"ஓ வெள்ளைக்காரனே சொல்லிட்டானா அப்ப உண்மையாத்தான் இருக்கும்..."

2 comments:

  1. Anna interesting. Silirthu poi sillaraya kooda sethara vidalam but innum namba mudiyala. Reference anuppa mudiyuma.

    Found one mistake. :(
    /Users/mobility/Desktop/Screen Shot 2016-12-05 at 7.18.57 AM.png

    ReplyDelete
    Replies
    1. Thanks Mohan, searching for the recording. I shall share once I found it.

      Delete