cookie

Monday, August 20, 2012

கருப்பு பெட்டி - பாகம் 2

பாகம் 1 - தொடர்ச்சி


கிருஷ்ணனை இனம் புரியாத கலவரம் ஆட்கொண்டது

"சீ சீ  அதெல்லாம் ஒன்னும் இல்ல, சுத்த மூட நம்பிக்கை" என்று சமாதானம் செய்துகொண்டு வேலையை தொடர்ந்தவர், சிறிது நேரத்திலேயே தன்னை அறியாமல் நிமிர்ந்து பார்த்தார். பார்த்தவுடன் உடலின் அனைத்து மயிர்க் கால்களும் சிலிர்த்து நின்றன...




ஒரு நிலையில்லாத பெண்ணைப் போன்ற உருவம் வெளியில் இருந்து வாசலின் வழியாக உள்நோக்கிச் சென்றது. அடுத்த சில நொடிகளில் கிருஷ்ணன் அமர்ந்திருந்த வராண்டாவில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்தது. இந்த அதிர்ச்சியில் தன்னை அறியாமல் வந்த கூச்சலை உணர்ந்த கிருஷ்ணன் உடனே வீட்டைப் பூட்டி விட்டு மிதிவண்டியை கிளப்பினார்.

சிறிது நேரம் சந்தையில் சுற்றி விட்டு, திரைஅரங்க வாசலில் மனைவிக்கு காத்திருந்தார். படம் முடிந்து  வெளியே வரும் மனைவியை பார்த்து ஓரளவு அறுதல் அடைந்தார். மகன் ஏற்க்கனவே தூங்கி இருந்தான். ஆறு கால்களும் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கின. ராணியின் தங்கை, பார்த்த படத்தை விமர்சித்துக் கொண்டிருந்தார். சம்பிரதாயத்துக்கு மட்டும் படம் எப்படி இருந்தது என்பதை மனைவியிடம் கேட்டு விட்டு வந்த பதிலை வாங்கிக் கொண்டு தொடர்ந்து நடந்தனர். வீட்டில் நடந்தது பற்றி இப்போது சொல்லி அனைவரையும் பயமுறுத்த வேண்டாம் என முடிவு செய்தார் கிருஷ்ணன். இரவு உணவு உண்ட பின்பு அனைவரும் தூங்க கிருஷ்ணன் மட்டும் எதோ யோசனையில் மூழ்கி இருந்தார். பின்பு அவரும்.


விளக்கம்       


 மறுநாள் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றாலும், வழக்கமாக பணியில் ஈடுபட அவரால் முடியவில்லை. இதைப் பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழம்பினார். தன் பயத்தையும் வெளியே கட்டிக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. இறுதியில் தன் மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் உரிய இயற்பியல் பேராசிரியர் முனைவர்  ராமசாமியிடம் நடந்தவைகளை கூறினார். 

அனைத்தையும் பொறுமையாக கேட்ட பேராசிரியர்,

இந்த உலகத்ல உயிருள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் "உயிர் மின்சார" சுழற்சி இருக்கு, அது 60 Hz ல இருக்கும். அந்த மின்சாரம் தான் இதயம், மூளை, நரம்பு மண்டலம் என முக்கியமான உறுப்புகள் வேலை செய்ய உதவுது. இது கூட சம்மந்தம் ஆன ஆற்றல் விதி ஒன்னு இருக்கு. அது என்னன்னா "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனா ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்ற முடியும்". இந்த மனித வாழ்வு அல்லது உயிர்னு  நாம சொல்றதுல மூன்றில் இரண்டு பங்கு சிந்தனையிலும் ஆன்மாவிலும் இருக்கு, ஒரு பங்கு மட்டும் தான் இந்த உடம்பு. இரண்டு பங்கு உயிர் கண்ணுக்கு தெரியாத ஆற்றலா இருக்குதுன்னா, நாம இறந்ததுக்கு அப்புறம் அந்த ஆற்றல் எங்க போகுது? science படி அது அழிஞ்சி போக வாய்ப்பு இல்ல.

அதனால ஒரு மனிதர் இறந்த பிறகு இந்த உயிர் சக்தி உடம்ப விட்டு வெளிய போயி சுற்று சூழல் கூட கலந்ரும். அப்புறம் அது செயல் பாடற்ற நிலை ஆற்றலா மாறிடும். இல்லேன்னா ஒரு பொருள் அல்லது இடம்னு எதுகூடவாவது சக பிணைப்ப உண்டாக்கிக்கும். அப்படியும் இல்லேன்னா electron பற்றாக்குறை உள்ள எது கூடவாவது சேர்ந்துக்கும். சரி அப்படி அது அமைதியாகாம unstable லா அலைஞ்சா என்னாகும்னா... 

  1. ஒரு வகையான மின்காந்த அலைகள் உண்டாகும். அது வீட்ல இருக்குற electric devices ச affect பண்ணும்.

 2. வெப்பநிலை மாற்றம் இருக்கும். சாதாரணமா 10 இருந்து 30 டிகிரி பாரன்ஹீட் வரைக்கும் temperature குறையும் அல்லது கூடும்.   

 3. இது ஒளி அலைகளையும் பாதிக்கும் அதனால சில சமயத்ல திடீர்னு ஏதோ  உருவம் எல்லாம் தெரியும்.

புற உலகத்துல இந்த உயிர் மின்சாரத்தின் ஆற்றல்னு பாத்ததா, நீங்க lab ல பாத்திருப்பீங்களே! ஒரு சட்டக் காந்தம் அவ்வளவுதான். அப்படித்தான்  physics சொல்லுது. இது இல்லாம "பேய்" எல்லாம் சுத்த பொய். 

 England ல இருந்த ஒரு மனோதத்துவ வல்லுநர் magnetic field பத்தி ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லைனு prove பண்ணி இருக்கார்.   அதை மக்களுக்கு காட்டுறதுக்காக பேய், பிசாசு இருந்துச்சின்னு  சொன்ன  800 வருட பழங்காலக் கட்டடத்ல பேயினால் பாதிக்கப் பட்டவங்கள வச்சி ஆராய்ச்சி பண்ணார். அதுல பேய் மற்றும் பிசாசு பிடிச்சவங்க, அவங்களுக்கு  பேய் பிடிச்சப்போ திடீர் சத்தம் கேட்டதாவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைஞ்சி போச்சின்னும் சொன்னாங்க.  

பேய், பிசாசு இருக்குன்னு சொன்ன அந்த இடத்துல இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில சில நரம்புகள் பாதிக்கப்பட்டவங்க அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுறவங்க இந்த இடத்துக்கு போகும் போது அந்த அதீத காந்தபுலம் அவங்க சொல்ற மாதிரி பிரம்மைகளை  ஏற்படுத்தி இருக்கலாம், அதனால பேயோ, பிசாசோ அதைச் செய்யலனு விஞ்ஞானக் கருவிய வச்சி அதை நிரூபிச்சார்.  

அதனால என்னோட சொந்த அபிப்ராயம், பேய் பிசாசு இது எல்லாம் நம்ம மனசுக்குள்ள உள்ள பயம் கலந்த ஒரு கற்பனை. 

ஆனா நீங்க முற்ப்போக்கு வாதியாச்சே கிருஷ்ணன்! இதை எல்லாமா நம்புவீங்க?

       இல்ல sir நான் நம்பல, இருந்தாலும் விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெளிவு படுத்திகிட்டா கொஞ்சம் நிம்மதி அதான்...

இருவரும் சிரித்துக் கொண்டனர்...     

உங்க wife கிட்ட இதப்பத்தி எதாவது பேசுனீங்களா?

      இல்ல sir, என் wife க்கு இதுல எல்லாம் நெறைய நம்பிக்கை இருக்கு. அதனால தேவை இல்லாம பயமுறுத்த வேண்டா மேன்னு யாரு கிட்டயும் சொல்லல.
  
நல்லது, நான் அடுத்த வாரம் ஒரு presentation காக வெளியூர் போறேன். இது பத்தி உங்களுக்கு வேற எதாவது தெரியனும்னா நான் ஊருக்கு போயிட்டு வந்த பிறகு பேசலாம்.

பேராசிரியரின் பதில் போதுமான நம்பிக்கை அளித்ததால், நடந்தவைகளை அன்றே முற்றிலும் மறந்து இயல்பான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அடுத்த சில நாட்களாக எந்த விதமான சம்பவமும் நிகழாததால் கிருஷ்ணன் முற்றிலுமாக அமானுட நிகழ்வுகளை மறந்தார்.

மகன் நான்கு கால்களால் நடக்க (தவழ) ஆரம்பித்தான், கிருஷ்ணன் மற்றும் ராணியிக்கு அவர்களுடைய மொத்த மகிழ்ச்சியும் அழகான குட்டி உருவத்தில் அங்கும் இங்கும் திரிவதை கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர்.

முன்பு போல் இல்லாமல் இப்போது மகன் அமுதன் இரவில் அடிக்கடி  முழிப்பதோ, அழுவதோ இல்லை அதனால் கிருஷ்ணன் இரவில் தடையில்லாமல் தூங்க முடிந்தது.

ராணியின் தந்தை ஜாதகங்களில் நிறைய நம்பிக்கை உடையவர். அமுதன் பிறந்த போது, பிறந்த நேரத்தை வைத்து கணித்து சில எழுத்துக்களை கூறி, அந்த எழுத்துக்கள் எதாவது ஒன்றில் குழந்தையின் பெயர் தொடங்க வேண்டும் என்றார். திருமணத்திற்கு முன்பே குழந்தையின் பெயரை முடிவு செய்துவிட்ட கிருஷ்ணன் அதை ஏற்க்கவில்லை.

"அமுதன்" என்ற பெயருக்கான காரணத்தை இவ்வாறாக ராணியிடம் விளக்கினார் கிருஷ்ணன்.

  1.  முதல் எழுத்து "அ" (A) வில் தொடங்க வேண்டும். அப்போதுதான் வகுப்பறையிலும், தேர்வரையிலும் முதலில் அமர்வான். ஆசிரியரின் முதல் கவனம் இவன் மேல் இருக்கும். 

  2. பெயரின் மொத்த எழுத்துக்கள் நான்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


 மீண்டும்... 


அன்று இரவு ஏதோ சத்தம் கேட்டு கிருஷ்ணன் விழித்துக் கொண்டார். மணி சரியாகத் தெரியவில்லை. மின் மினியாய் ஒளிர்ந்த இரவு விளக்கில் சுற்றிலும் பார்த்தார். இருவருக்கும் இடையில் படுத்திருந்த அமுதனை காணவில்லை. விளக்குக்கு உயிர் கொடுத்து மனைவியை எழுப்ப விரும்பாததால் அந்த சிறு வெளிச்சத்திலேயே விழிகளை அகலமாக்கி உற்று நோக்கினார். அவர் கேட்ட அந்த ஒலியின் மூலம் சமையல் அறை கதவின் அருகே அமர்ந்திருந்த அந்த சிறு உருவம், அமுதன். அழுகையா அல்லது சிரிப்பா என்று சொல்ல முடியாத சிறு சப்தம். பரண் மேல் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அருகில் செல்லச் செல்ல அமுதனின் முகம் கொஞ்சம் தெளிவாக தெரிந்தது. அதுவரை சிரிப்பதுபோல சப்தம் செய்தவன் கிருஷ்ணனை கண்டவுடன் சட்டென்று மௌனமானான். பின்பு மௌனம் அழுகையானது. அறையின் விளக்கு உயிர் கொண்டு எழுந்தது ராணியால்.

ஏங்க அழறான்?
 
          தெரியல ராணி, திடீர்னு முழிச்சி பார்த்த இங்க வந்து உட்கார்ந்திருக்கான். சிரிச்சிகிட்டுதான் இருந்தான்.

எங்க பாட்டி சொல்லிருக்காங்க, குழந்தைங்க கண்ணுக்கு கடவுள் தெரிவாராம், கடவுள பார்த்து குழந்தைங்க சிரிக்குமாம்!
   
          ........

கிருஷ்ணன், ராணியின் நம்பிக்கையை கலைக்காமல் தனக்குத் தானே மனதுக்குள் மட்டும் கூறிக்கொண்டார் "கடவுளா இருந்தா சரி".

அமுதனை வாரி அனைத்து தோளில் சாய்த்து தூங்கச் சொல்லி  கட்டாயப்படுத்தினார் ராணி.  அன்று மூவருக்கும் சிவராத்திரி.


இரண்டு வாரங்கள் இனிமையாக சென்ற பிறகு. ஒரு ஞாயிறு நண்பகல் மதிய உணவுக்காக கிருஷ்ணனும் ராணியும் அமர்ந்தனர். எது முதலில் வந்தது என்று தெரியாவிட்டாலும் எதை முதலில் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்த ராணி, முட்டையில் கருவாகி குழம்பில் கறியாகிக் காத்திருந்த அனைத்தையும் கிருஷ்ணனுக்கு இறைத்து, தன் சமையலின் சுவையை கணவர் எவ்வாறு ருசிக்கிறார் என்று அறிய காத்திருந்தார். 

இந்தக் கோழி திரி சங்கின் மறுபிறவியா?  தெரிய வில்லை, கிருஷ்ணனின் தொண்டையை தாண்ட மறுத்தது, அங்கேயே சிக்கிக் கொண்டது. இவ்வளவு பார்த்து பரிமாறிய ராணி தண்ணீரை மறந்தார். தண்ணீரை மறப்பது அவருக்கு புதிதல்ல. கிருஷ்ணனிடம்   வரம் வாங்கும் முன்பு சமையல் அறை நோக்கி ஓடினார் தண்ணீரைத் தேடி. கிருஷ்ணனின் விக்கல் எச்சரிக்கை மணியாக ஒலித்தது.  அதுவரை அமைதியாக தொட்டிலில்  தூங்கிக் கொண்டிருந்த அமுதன் தொட்டிலை விட்டு இறங்கும் முயற்சியில் வெற்றி வாய்ப்பை இழந்து கீழே விழுந்து மூச்சு நின்று போகும் அளவுக்கு கதறினான். 

அமுதனின் அழுகுரல் கேட்டு, டம்ளரின் கால் பகுதி  நிரம்பிய  நீரைத் தூக்கிக் கொண்டு அமுதனிடம் ஓடினார் ராணி அவனை தூக்க. அவர் சமையலறையை விட்டு வெளியேறவும், பரண் மேலிருந்த அண்டா கீழே விழவும் சரியாக இருந்தது. சப்தம் கேட்டு விக்கலுடன் வந்த கிருஷ்ணன் கையில் தஞ்சம் அடைந்தது டம்ளர். சில நொடிகளாக வெளியேற துடித்துக் கொண்டிருந்த உயிருக்கு நீரால் அணைபோட்டார் கிருஷ்ணன். அருந்திய கால் டம்ளர் நீர் வற்றும் அளவுக்கு வரங்களை வாரி வழங்கினார் ராணிக்கு.

சோறு வைக்கிறதுக்கு முன்னால தண்ணிய வைன்னு உனக்கு எத்தன தடவ சொல்லணும் அறிவே வராதா? 

துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதால் தற்காலிக ஊமையானார் ராணி. விழிகள் மட்டும் கங்கையை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. சமயலறையின் உள்ளே சென்று பார்த்த கிருஷ்ணன், மேலே உள்ள பலகையில் இருந்த "அண்டா" எவ்வாறு இறக்குமதியானது என்று புரியாமல் விழித்தார். சரியான சமையத்தில் ராணி வெளியே போயிருக்கா விட்டால்?  ஒருவேளை ஒத்த நிகழ்வாக இருக்கலாம் என்று தேத்திக்கொண்டு வெளியே வந்த கிருஷ்ணன் இரண்டு குழந்தைகள் அழுது கொண்டிருக்க முதல் குழந்தையை சமாதானம் செய்தார்.

இன்றைய நிகழ்வு கிருஷ்ணனுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. எந்த சலனமும் இல்லாமல் ராணி உறங்கி விட்டார், அமுதனும். சிறுது நேரம் சென்ற பிறகு ஏதோ முனுமுனுப்பு சப்தம் கிருஷ்ணனின் தூக்கத்தை  விரட்டியது. மூச்சுவிட முடியாமல் யாரோ சங்கடப்படுவது போன்ற சப்தம். ராணிக்கு சுவாசக் கோளாறு உள்ளது. ஒருவேளை ராணியாக இருக்கலாமோ என்று ராணியை எழுப்பினார்.

திடுக்கிட்டு எழுந்த ராணி, பயத்தையும், பரபரப்பையும் கண்ணில் காட்டினார்.

  
 என்னாச்சு ராணி? எதுவும் பிரச்சனையா?

        என் கழுத்த, என் கழுத்த 

உன் கழுத்த, என்னாச்சி சொல்லு?

        என் கழுத்த யாரோ பிடிச்சி நெரிக்கிற மாதிரி இருந்ததுங்க.

கனவுலையா?
         
         இல்லங்க, நிஜமாத்தான், என்னால மூச்சு விட முடியல, கத்தலாம்னா அதுக்கும் முடியல. நீங்க என்ன எழுப்பின உடனே போயிரிச்சி. 

நீ எதையோ நினைச்சி பயந்திருக்க, அதனால தான் இந்தமாதிரி கனவெல்லாம் வருது, தண்ணிய குடிச்சிட்டு தூங்கு. எல்லாம் சரியாப் போகும் என்று கூறிவிட்டு விளக்கை அணைக்கச் சென்ற கிருஷ்ணனிடம்.

          light ட off பண்ணாதீங்க, எனக்கு பயமா இருக்கு.

என்ன பயம், நான் தான் இருக்கேன்ல, சும்மா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காத. கண்ண மூடி தூங்கு.

         தயவு செஞ்சி  light ட off பண்ணாதீங்க...

ராணியை பார்க்கவே கிருஷ்ணனுக்கு பாவமாக இருந்தது. 

காலையில் மூவரும் வெகுநேரம் கழித்தே விழித்தனர். இன்று அலுவலகம் செல்ல வேண்டாம் எனும் ராணியின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அலுவலகத்திற்கு விடுப்பு விண்ணப்பத்தை அனுப்பினார் கிருஷ்ணன்.

       வேற வீட்டுக்கு மாறி போயிடலாங்க, நேத்துல இருந்து எனக்கு ஒவ்வொரு நிமிசமும் பயம்ம்ம்மா இருக்கு.

  வீடு மாத்துறது என்ன அவ்வளவு சாதரணமா?

        இடம் மாறினா, மனம் மாறும்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க..

  ........
       

சிறிது நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் சம்மதித்தார் கிருஷ்ணன். அதிர்ஷ்ட வசமாக அடுத்த தெருவிலேயே ஒரு வீடு காலியாக இருந்தது. இப்போது இருக்கும் வீட்டின் உரிமையாளர் முன்பணத்தில் இருந்து இரண்டு மாத வாடகையை கழித்துக் கொண்டுதான் மீதியை கொடுத்தார். நண்பரிடம் கடன் வாங்கி புது வீட்டிற்கு முன்பணம் கொடுத்து குடிபெயர்ந்தனர்.

புது வீட்டிற்கு மாறியது  ராணிக்கு மன தைரியத்தை தந்தது.  சில நாட்களிலேயே இயல்பு வாழ்க்கைக்கு இருவரும் திரும்பினர். இந்த வீடு குளத்துக்கு அருகில் இருந்தது. கொசுத் தொல்லையும் அவ்வளவாக இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது.


ஒரு மாதத்திற்குப் பின்... 

அன்று இரவு இருவரும் விரைவாகவே நித்திரையில் ஆழ்ந்தனர். சிறிது நேரம் அமுதன் மட்டும் அவனுக்கு மட்டும் புரியும் மொழியில் ஏதோ பேசிவிட்டு உறங்கி விட்டான். மணி சரியாக தெரியவில்லை, ஆனால் நள்ளிரவு. கதவு திறக்கும் சப்தம் கேட்டு முழித்தார் கிருஷ்ணன். யாரோ செல்வது தெரிந்தது. அருகில் ராணி, குழந்தை இருவரும் இல்லை. உடனே எழுந்து அவர்களை பின் தொடர்ந்தார். நடந்து சென்றவர்கள் ஓடத் தொடங்கினர். கிருஷ்ணனும் ஓடினார். அந்த உருவம் குளம் இருந்த திசை நோக்கி வேகமாக ஓடியது. தன்னால் முடிந்த அளவு வேகமாக ஓடி அந்த உருவத்தை பிடித்தார். அந்த உருவங்கள் ராணியும் குழந்தையும்.  வழுக்கட்டாயமாக இழுத்து வந்தார் ராணியை.

ராணியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, குழந்தையோடு வீட்டுக்கு வெளியில் காவல் நின்றார். காலை 06:00 மணிக்கு அழகாபுரிக்கு தந்தி பறந்தது.

"உடனே புறப்பட்டு வரவும். நலம்,  பயப்படவேண்டாம்".

ராஜரத்தினமும் அவர் மனைவியும்  08:45 க்கு கிருஷ்ணன் வீட்டில், நடந்தவைகளை கூறினார் கிருஷ்ணன். 

மாப்ள இது ஏதோ பயந்த கோளறு மாதிரி தெரியுது, கருப்பசாமி கோவில்ல பூச பண்ணா எல்லாம் சரியாயிடும். இதுக்காக நீங்க வேற மாதிரி முடிவு...

இடைமறித்த கிருஷ்ணன், மாமா நீங்க கண்டதையும் நினைக்காதீங்க. பயந்த கோளாறா, அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. ஒரு நல்ல டாக்டர் கிட்ட போனா சரியாயிடும். இந்த நிலைமைல ராணிய வீட்ல தனியா விட்டிட்டு நான் வேலைக்கு போக முடியாது. கொஞ்ச நாள் வேனா ராணி உங்க கூட ஊர்ல இருக்கட்டும். நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்.

அரை மனதுடன் மகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றார் ராஜரத்தினம்.

பேய் என்பதை மட்டும் நம்ப முடியாமல்,  மன நோய் மருத்துவரைத் தேடிக்கொண்டிருந்தார் கிருஷ்ணன். இதற்கிடையில்  அழகாபுரியில் ராணியின்  நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எம்மதமும் சம்மதம் என தேவாலயம், பள்ளிவாசல் என அனைத்தையும் முயன்றுவிட்டார் ராஜரத்தினம். 

அன்று வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில், தேநீர் கடையின் முன்புறம் அந்த வித்தியாசமான புத்தகத்தைப் பார்த்தார் கிருஷ்ணன்.

"ஆவிகள் உலகம் "

விருப்பம் இல்லா விட்டாலும் அதை வாங்க ஏதோ ஒரு விசை அவரை செலுத்தியது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார் சில பக்கங்களை புரட்டினார். பல அமானுட செய்திகள், எதுவும் நம்பும் படியாக இல்லை. நடுப்பக்கத்தில் இருந்த செய்தி, இதுவரை இந்த புத்தகத்தில் பார்த்ததிலேயே உச்சகட்ட கோமாளித்தனம். "ஆவிகளுடன் பேசலாம் -  மீடியம் ஆவி அனிதா".

மீடியம் என்ற வார்த்தையை அன்று தான் கேள்விப்படுகிறார் கிருஷ்ணன். அதற்க்கான விளக்கமும் அங்கே கொடுக்கப் பட்டிருந்தது. திருநேல்வேலியில் உள்ள ஒரு விலாசமும், தொலைபேசி எண்ணும்  கொடுக்கப் பட்டிருந்தது. தன் நம்பிக்கையை ஒருபுறம் வைத்து விட்டு, முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது கிருஷ்ணனுக்கு. அந்த எண்ணுக்குப் பேசி, நேரில் ஞாயிறு அன்று  சந்திக்க நாள் குறித்து விட்டார்.

"ஆவி" அனிதாவை சந்திக்க தன்னுடன் வருமாறு ராஜரத்தினத்தை அழைத்தார். அவர் தன் மகளுக்கு "ஆவி" பிடிக்க வில்லை என்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார். 

மாமா, நானும் இதெல்லாம் நம்ப மாட்டேன், அது உங்களுக்கே தெரியும் இருந்தாலும் ஒரு முயற்சி பண்ணிப் பாப்போமேன்னு தான். 


வேறு வழியில்லாமல் உடன் வர சம்மதித்தார் ராஜரத்தினம்.

ஞாயிறு காலை 10:00 மணிக்கு அந்த விலாசத்தை அடைந்தனர் இருவரும். குறைந்தது 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியை எதிர் பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். 23 வயதுக்கும்  குறைவான ஒரு பெண் (சிறுமி போல் தோற்றம்). 

சொல்லுங்க, உங்க பிரச்சனை என்ன?

      கிருஷ்ணன் விவரித்தார்.

இதுவரைக்கும் இங்க வந்தவங்க ரொம்ப பேர் சொத்து விவகாரமாத்தான் வந்திருக்காங்க. உங்க பிரச்சனை வேற மாதிரி இருக்கு. முயற்சி பண்ணி பாக்குறேன் ஆனா இப்போ எதுவும் உறுதியா சொல்ல முடியாது.

      எனக்கு உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கனும் மேடம். கேட்கட்டுமா?

தாராலமா கேளுங்க   
    
    இத நான் முதல் தடவையா அனுபவ படும் போது, physics department professor கிட்ட இத பத்தி கேட்டேன். அவர் உயிர் மின்சாரம் பத்தி சொன்னார். அப்புறம் இங்கிலாந்து ல யாரோ இது சுத்த பொய்ன்னு நிரூபிச்சதா சொன்னாரு.


உயிர் மின்சாரம் உண்மைதான், அந்த England news பத்தி நானும் படிச்சிருக்கேன். science ல பல நிரூபணங்கள் அனுமானத்தின் அடிப்படையில் தான் ஆரம்பிக்கும். அனுமானம் சரீன்னா  நிரூபணம் சரி. அனுமானம் தவறுன்னா நிரூபணமும் தவறு. நியூட்டன் புவிஈர்ப்பு விசை பத்தி சொல்றதுக்கு முன்னாலையே அது இருந்தது. கொலம்பஸ் கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாலையே அமெரிக்கா (பேரு வேறையா இருக்கலாம்)  இருந்தது. அந்த மாதிரி நம்மால உணரமுடியாத பல விசயங்கள இல்லேன்னு சொன்னா அது உண்மை ஆகாது. நம்ம கிட்ட அத கண்டு பிடிக்கிறதுக்கான கருவி இல்லேன்னு சொல்லுங்க ஆனா அப்படி ஒன்னே இல்லேன்னு சொல்லாதீங்க. இது என்னோட தாழ்மையான கருத்து.

      அனிதா சொல்வது புரிவது போல் இருந்தாலும் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் எதோ நம்பிக்கையில் அவர் சொல்வதற்கு சம்மதிக்க தொடங்கினர்.

கிருஷ்ணன் சார்,  நாளைக்கு உங்க wife இங்க கூட்டிட்டு வாங்க, நான் பேசுறேன். 

    சரி மேடம்.

கிருஷ்ணன், ராணி, அமுதன், ராஜரத்தினம் நால்வரும் அனிதாவை பார்க்க காத்துக் கொண்டிருந்தனர். இப்போது ராணியிடம் எந்த மாற்றமும் இல்லாதது கிருஷ்ணனுக்கு சற்று வியப்பாகவே இருந்தது. அழைப்புக்கு பின்பு இருவரும் உள்ளே சென்றனர். ராணியை மட்டும் அழைத்தார் அனிதா, குழந்தையும் கிருஷ்ணனும் வெளியே காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து ராணியை  வெளியே இருக்கச் சொல்லிவிட்டு கிருஷ்ணனை அழைத்தார். கிருஷ்ணன் குழந்தையை ராணியிடம் கொடுத்து விட்டு உள்ளே வந்தார். 

கிருஷ்ணன் சார், உங்க wife கிட்ட எந்த மாற்றமும் இல்ல. அவங்கள எந்த விதமான சக்தியும் அலைகழிக்கல.

என்று கூறும்போதே வெளியில் நின்று கொண்டிருத்த watchman உள்ளே வந்தார் ராணியை இழுத்துக்கொண்டு, உடன் ராஜரத்தினம்,

மேடம், இந்தம்மா குழந்தையோட ரோட்டப்பாத்து ஓடினாங்க, நான் தான் புடிச்சி இழுத்துக் கிட்டு வந்தேன். என்று கூறி watchman ராணியை உள்ளே விட்டுச் சென்றார்.

இப்போது ராணி உள்ளே வரும் போதே அனிதா புரிந்து கொண்டார். குழந்தையை ராணியிடம் இருந்து பறித்துக் கொண்டு, குழந்தையை மட்டும் அருகில் இருந்த அறையில் போட்டு அடைத்தார். இதைக் கண்டு பதறிய கிருஷ்ணன்.

என்ன madam பண்றீங்க? சின்னக் குழந்தையை போயி..

    உங்க மனைவிய கவனிங்க (முறைத்துக் கொண்டிருந்த ராணியின் கண்கள் சாதாரண நிலைக்கு திரும்பின, இதை கண்டு ஏதும் புரியாமல் நின்றார் கிருஷ்ணன், அப்போது உள்ளே குழந்தையின் அழுகை கேட்டது.)

     கிருஷ்ணன் சார்,  அலைக்கழிக்கப்படுவது உங்க மனைவி இல்ல, உங்க குழந்தை. உங்க குழந்தை மூலமா மனைவி. இரண்டு பேரையும் பிரிச்சி வைங்க உங்க மனைவி normal லா இருப்பாங்க.

அதிர்ச்சியில் உறைந்தார் கிருஷ்ணன்.

குழந்தையை நீங்க எடுத்துக் கோங்க sir, நான் சொல்ற வரைக்கும் உங்க மனைவி கிட்ட கொடுக்காதீங்க.

சரி

அமுதனை தாத்தாவுடன் ஊருக்கு அனுப்பி விட்டு, கிருஷ்ணனும் ராணியும் அனிதாவுடன் 553 வளமனை முதல் தெருவுக்கு சென்றனர். எதிர்பார்த்த படி வீடு இன்னும் காலியாகவே இருந்தது. உரிமையாளரிடம் இருந்து சாவியை வாங்க சென்றனர் கிருஷ்ணனும், ராணியும். அனிதா அந்த வீட்டைப் பற்றி அருகில் விசாரிக்கச் சென்றார். யாரும் அந்த வீட்டைப் பற்றி பேச தயாராக இல்லை. கடைசியாக ஒரு மூதாட்டி அந்த வீட்டின் முன்கதையை கூறினார். 

சில வருடங்கள் முன்பாக அந்த வீட்டில் வாழ்ந்த குடும்பத்தில் இருந்த ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையின் காரணம் பலவாறு கூறப்படுகிறது. அதன் பின் வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்க்கு குடிவந்த வயோதிக தம்பதிகளில் மனைவி மட்டும் இறந்தார். பின்பு பல  நாட்கள் கழித்து கிருஷ்ணன் குடும்பம் வந்தது. ஆனால் நல்ல வேலையாக அசம்பாவிதம் நடக்கும் முன்பாகவே சென்று விட்டனர். இந்த வீடு பற்றி யாரும் வெளியில் பேசுவது கிடையாது ஏனெனில் பேசினாலே ஆபத்து என்கிற பயம் தான். நான் சாகப் போற கிழவி தான, என்று கூறி விட்டுச் சென்றார்.

சாவியை வாங்கிக் கொண்டு வந்த கிருஷ்ணன், அனிதாவிடம் கொடுத்தார். 

இப்போ என்ன பண்ணப் போறீங்க madam ?

   அந்த "ஆத்மா" கிட்ட பேசிப் பார்க்கலாம். கண்டிப்பா இந்த "ஆத்மா" பேச வரும். 

கிருஷ்ணன் கூறியது அனிதாவுக்கு நினைவுக்கு வந்தது. சமையல் அறை கதவுக்கு மேலிருக்கும் பரண். கிருஷ்ணனிடம் சொல்லி மச்சி வீடு போலிருக்கும் அந்த சிறிய அறையில் என்ன இருக்கிறது என்று பார்க்கச் சொன்னார். 

இங்க ஒரு கருப்பு பெட்டி இருக்கு

அத கீழே கொண்டு வாங்க sir. 

கிருஷ்ணன் பெட்டியை கீழே இறக்க முயல, ராணி வெறியுடன் கிருஷ்ணனின் காலை பிடித்து இழுத்து வீசினார். ராணியின் பற்கள் நறநறக்கும் ஓசை காதுகளை கூசச் செய்தது. 

அனிதா seance  முறை மூலம் அந்த ஆத்மாவை தொடர்பு கொள்ள முயன்றார். அனிதாவும், ராணியின் உடலில் இருக்கும் ஆத்மாவும் ஏதோ தங்களுக்குள்  மொழி இல்லாமல் பேசிக் கொண்டனர். 

சிறிது நேரம் சென்று கிருஷ்ணனிடம் சென்ற அனிதா 

உங்க மனைவிகிட்ட இங்க இருக்குற ஒரு வயசானவங்க இறந்து போன அந்த பொண்ணப் பத்தி சொல்லி இருக்காங்க. வீடு சுத்தம் பண்ணும் போது ராணி அந்த கருப்பு பெட்டிய பாத்திருக்காங்க.

கவலைப்படாதீங்க, இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. நான் house owner கிட்ட பேசுறேன். இந்த வீட்டை இன்னும் 5 வருசத்துக்கு வாடகைக்கு விட வேண்டாம். அதுக்கப்புறம் என்ன வேனா பண்ணிக்கலாம், no problem 

5 வருஷம் என்ன கணக்கு?

    இந்த ஆத்மாவோட மீதி இருக்குற life time

எங்களுக்கு இனி தொல்லை இருக்காதுள்ள?

    தொல்லை இருக்காது, இருந்தாலும் வேற எங்காவது தூரமா போயிடுங்க.

அந்த கருப்பு பெட்டி ல என்ன இருக்கு madam?

     உயிர் மின்சாரம் !!!

அப்ப பேய் உண்மையா?

   ..........................

முற்றும்... 

2 comments: