cookie

Thursday, August 16, 2012

கருப்பு பெட்டி

உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டது...  

இடம்: கோவில்பட்டி 
நாள்:  மார்கழி 2 1978
நேரம்: காலை 04:45


"கட்டளை நாள் இரண்டு, கட்டளைக் குரியவர் சுப்பையா. பக்தகோடிகள் அனைவரும் வந்து அம்மனை தரிசித்து, அம்மனின் அருள் பிரசாதம் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவன் கோவில் விழா கமிட்டியார்", என்று அதிகாலையில் சேவலுக்கு முன்பாகவே கூவி அழைத்து கோவிலுக்கு கூட்டம் சேர்க்கும் வேலை தொடங்கியது.

சுப்பையா காசு கொடுத்து வாங்கிய அன்றைய கோவில் மரியாதையை பெருமையுடன் ஏற்றுக்கொண்டார். பொங்கல் பிரசாதம் பெற்றுக்கொண்டு கோவிலின் முன்புறம் நடை பெற்றுக் கொண்டிருந்த  சமய உரையில்  தன்னையும் இணைத்துக்கொண்டார். அப்போது இறைவன் எங்கிருக்கிறான், எப்படிப்பட்டவன் என்று யாரோ கேட்ட கேள்விக்கு, வெள்ளிக் கம்பிகளின் காட்டுக்குள் புதைந்த இரு கண்களை மட்டும் கொண்ட ஒரு ஆத்மா நம்மாழ்வாரின் பாடல் ஒன்றை "திருவாய்மொழி" ந்தது      


உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

அப்போது துர்சக்திகள்? என்ற கேள்விக்கு சிறிய அமைதிக்குப்பின் " இறைவன் அனைவரையும் காப்பார்" என்று மட்டும் கூறி உரைக்கு உறை போட்டுவிட்டு புறப்பட்டுவிட்டார்.  சுப்பையாவும் வீட்டை நோக்கி...

வளமனை தெரு   

         வளமனை முதல்  தெரு, வீட்டு எண் 553 னை அடைந்தார். வெளியில் போடப்பட்ட பூட்டை திறந்து உள்ளே நுழைந்தவருக்காக காத்திருந்த "அதிர்ச்சி" அவரை சந்தித்தது. பரண் மேல் இருந்த பொருட்கள் தரையில், இரும்புக் கட்டிலில் படுத்திருந்த அவர் மனைவி காசியம்மாவின்   தலையில் அவர்கள் திருமணம் முடிந்து வந்த போது உடன் வந்த வெண்கலப் பானை சத்தமில்லாமல் அமர்ந்திருந்தது.  

          பலமுறை மனைவியிடம் கேட்ட "உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?" என்ற கேள்விக்கு விடை பானையில் ஒட்டிக் கொண்டிருந்தது.  அழவும் தெம்பில்லாமல் சாய்ந்தார். சிறுது நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். தாமதமாக வந்தவர்களின் கேள்விக்கு முதலில் வந்தவர்கள்  பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

         உடம்பு சரியில்லாம தூங்கிகிட்டு இருந்த அம்மாவை எழுப்ப வேண்டாம்னு கதவ வெளியில பூட்டு போட்டுட்டு அவரு மட்டும் கோவிலுக்கு போயிருக்காரு. திரும்ப வந்து பார்க்கும் போது  இப்படி ஆயிரிச்சி. பரண் மேல இருந்த "பான" உருண்டு அந்தம்மா மேல விழுந்து இறந்துட்டாங்க.    ஆனா அவ்வளவு கனமான பான எப்படித்தான் கீழ விழுந்ததோ தெரியல. பாவம் அவரு வயசான காலத்துல வேற யாரும் இல்ல. என்று பலரும் தங்களுக்கு தெரிந்த செய்திகளுக்கு கண் காது மூக்கு இணைத்து உருவம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

1979 - அழகாபுரி 

காமராசர் மாவட்டம், விருதுநகர் அருகில் உள்ள குக்கிராமம்

             "ராணி" அந்த வீட்டில் முதல் பெண். ராணி என்பதோடு அல்லாமல் அவருக்கு இன்னும் சில பல பேர்கள் இருந்தன. அன்பு, அமைதி, அறியாமை, வெகுளி.ராணி மட்டுமல்லாமல் அவரை தொடர்ந்து ஆண், பெண் , ஆண் , ஆண் என மேலும் நான்கு குழந்தைகள். அன்றைய தினம் ராணியைப்  பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதால் தன்னிடம் இருப்பதிலேயே சிறந்த தாவணியை கட்டிக்கொண்டு பயத்துடன் காத்திருந்தார். ராணிக்கு வயது 18.

       ஆலமர பிள்ளையாரை சுற்றி தன் அன்றைய தின நேத்திக் கடனை செலுத்தி விட்டு நின்றது அந்த பேருந்து. படிகளில் இறங்கும் ஒவ்வொருவரையும் ஆவலோடு அலசினார் இராஜரத்தினம். கடைசியில் இறங்கிய கிருஷ்ணனை பார்த்ததும் இவர் தான் என்பதை உறுதி செய்து விட்டு உடன் அழைத்துச் சென்றார் தன் மகளை பார்க்க. 

              காபி கொண்டு வந்த ராணியை பார்த்த மறு நொடி சம்மதத்தை சிரிப்பில் தெரிவித்து விட்டார் கிருஷ்ணன். ராணியின் விருப்பத்தை பற்றி யாருக்கு கவலை?.  பையன் அரசாங்க உத்தியோகம், காலேஜ் மெக்கானிக், அது மட்டும் இல்லாம வெளிய வேலைக்கும் போவார்,  நல்ல வருமானம், கூட பொறந்தது அவரையும் சேர்த்து 5, செந்த வீடு விவசாய நிலம்னு வசதி இருக்கு. பெருசா ஒன்னும் எதிர்பாக்கல, 15 பவுன் நகையும் கொஞ்சம் பணமும் கொடுத்துருங்க என்று பிற விவரங்களை பட்டியலிட்டார் இரு வீட்டாருக்கும் பொதுவான ந(ண்)பர்.

            கிருஷ்ணனின் விருப்பப்படி ஓதுதலும், ஊதுதலும் இல்லாமல் "குறள்"    முழங்க சான்றோர் முன்னிலையில் "தமிழ்" முறைப்படி திருமணம் இனிதே நடந்தது. திருமணம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ராணி ஒன்றை மட்டும் நினைத்து மகிழ்ந்தார். இனி தினமும் அரிசி சோறு சாப்பிடலாம், நல்ல துணிமணி  உடுத்தலாம். பணக் கஷ்டம் இல்லை.
                
        உண்மை தான் இனி பணக் கஷ்டம் இல்லை, பணம் மட்டும் தான் கஷ்டமா?

புகுந்த வீடு 

    மறு வீடு முடிந்து மாமியார் வீட்டிற்கு திரும்ப வந்தார் ராணி.  கோவில்பட்டியில் இருந்து சுமார் 7 K.M தொலைவில் இருந்த மற்றொரு கிராமம் "அப்பனேரி", அங்குதான் கிருஷ்ணனுக்கு தவறு கிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான வீடு, நிலம், மாடு இருந்தது இப்போது ராணி.  
             
             கணவர் நல்லவர் தான் ஆனால் இந்த கோபம். அதை வர்ணிக்க 10 வகுப்பு   வரை படித்தும் ராணிக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.   கிருஷ்ணனுக்கு  ஜாதகம் , சம்பிரதாயம், நல்ல நேரம் இவைகளில் நம்பிக்கை இல்லை. அப்பகுதியில் உள்ள கல்லூரியில் mechanic வேலை செய்கிறார்.  தினமும் அலுவலகம்  முடிந்த வீடு திரும்பியவுடன் தன் காதல் மனைவியை அழைத்துக் கொண்டு வலம் சென்று விடுவார். எப்போதாவது ராணியின் வற்புறுத்துதலின் பேரில் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். திருமணம் ஆகி 1 மாதம் ஆகியும் இந்த உலா நின்ற பாடில்லை, இது கிருஷ்ணனின்  அன்னை, அக்கா, அண்ணி எவருக்கும் பிடிக்க வில்லை.  ஏனெனில் அவர்களுக்கு இது  எட்டாக் கனியாக இருந்தது தான்.  

         விவசயக் குடும்பம் என்பதால் வீட்டில் பசுமாடு உண்டு. பிரசவத்திற்கு காத்திருந்த பசு, மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல், கிருஷ்ணனின் மாமா (அக்காவின் கணவர்) தானே மருத்துவரானார் அதன் விளைவு, தன்னுயிரை ஈன்ற குட்டிக்கு ஈந்தது. 

       "எத்தன வருஷமா நம்ம வீட்ல மாடு வளக்குறோம், ஒரு தடவையாது இப்படி ஆயிருக்கா? இந்த "ச..." பிடிச்சவ வந்தவுடனே இப்படி ஆயிருச்சி" என்று கிருஷ்ணனின் அக்கா தன் கணவரின் மருத்துவம் மீது பிறர் பழி போடாமல் முந்திக்கொண்டு தன் பங்கை துவங்கினார். மாலை கிருஷ்ணன் வரும் வரை அந்த வசை மாரி நிற்க வில்லை.  
    
           hospital க்கு கொண்டு போயிருக்க வேண்டியது தானே? உங்கள யாரு பாக்க சொன்னது?  என்று ராணிக்கு குடை பிடித்தார் கிருஷ்ணன்.

                 இவ்வாறாக தொடர்ந்த மாமியார் வீட்டு திருவிளையாடல்களை ஒரு  வருடம் சமாளித்து ஒரு குழந்தைக்கும் தாயனார் ராணி. பிரசவம் முடிந்து  5 மாதம் சென்ற பின்  மீண்டும் புகுந்தார் அந்த வீட்டில், கிருஷ்ணன் அலுவலகம் சென்றவுடன், ஏதோ காரணம்   சொல்லி கிருஷ்ணனின் அக்கா தன் அகலமான கையின் பத்து விரல்களை ராணியின் முதுகில் உரக்க பதித்தார். ராணியின் அலறல் கேட்டதோ என்னமோ   ! கிருஷ்ணன் அன்றைய தினம் விரைவாகவே வீட்டுக்கு வந்து விட்டார். 

                 மனைவியின் நிலை கண்டு வருந்தி, தன் குடும்ப அன்பர்களுடன்  ஒரு மணி நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு  அன்று இரவே தனிக் குடித்தனம்  செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.  மூவரும் கோவில்பட்டிக்கு சென்றனர். தெரிந்தவர் ஒருவர் மூலமாக வீடு பிடித்துத் தரும் இடைத் தரகர் அறிமுகம் மூலம் அன்று இரவே ஒரு வீட்டிற்கு குடி புகுந்தனர்.

                  மறுநாள் அலுவலகத்தில், தன்னுடைய முதல் நாள் அனுபவத்தையும்  புது வீட்டிற்கு சென்றதையும் பற்றி நண்பரிடம் கூறினார். 

                 உடனே எப்படி வீடு கிடைச்சது?
                          புரோக்கர் தான், வாடகையும் ரொம்ப கம்மி தான்.      


                 வீடு எங்க இருக்கு கிருஷ்ணா?
                      First Bungalow street  ராமு, ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வரணும். வீட்டு நம்பர் 553

புது வீடு 
             வீடு முழுவதும் மண்டிக் கிடந்தது தூசு. குழந்தையை வராண்டாவில் தொட்டிலில் தூங்க வைத்து விட்டு, கிருஷ்ணன் வேலைக்கு சென்றதும், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் ராணி. ராணிக்கு கொஞ்சம் சுவாசப் பிரச்சனை உண்டு என்பதால் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தன் வேலையை முடித்தார். மாலை கிருஷ்ணன் திரும்ப வந்ததும் காலை வெறும்  சுவர்களாக இருந்தது இப்போது வீடாக மாறியது புரிந்தது. திருமணமான போது ராணியின் நினைவில் நின்றது (அமைதியான வாழ்வு) இப்போது தான் மெல்ல நனவாகி வந்தது. 

        இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து, சில நல்ல நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன. கிருஷ்ணனுக்கும் நிறைய வெளி வேலைகள் வரத் தொடங்கின.   இந்த புது வீட்டுக்கு வந்து முழுதாக நான்கு மாதங்கள் முடிந்தன.  

அன்று வெள்ளிக்கிழமை...

          கிருஷ்ணன் காலை வேலைக்கு செல்லும்முன் மாலை வெளியே  கூட்டிச் செல்வதாக கூறியது நினைவுக்கு வந்தது. கடிகாரம் தீவிரமாக ஐந்தை  நெருங்கிக் கொண்டிருதது அவசரம் அவசரமாக அலுவலகத்தில் இருந்து வெளிவந்து  மிதி மிதி என மிதித்தார் மிதி வண்டியை   சரியாய் 30 நிமிடத்தில் வீட்டை அடைந்தார். 

         வீட்டில் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்...

      ராணி, ராணி என்ன தூங்கிக்கிட்டு இருக்க, வெளிய போகலாம்னு சொல்லி இருந்தேன்ல, கிளம்பலையா?
                      இல்லங்க, ரொம்ப தல வலியா இருக்கு, நாளைக்கு போகலாமா 

       சரி பரவால்ல நீ தூங்கு. 
                     டீ போடட்டுமா?

      இல்ல, இப்ப வேண்டாம், அப்பறம் போடு.

பதில் கூட சொல்ல முடியாமல் தலை சாய்த்தார் ராணி. வழக்கமாக ஒரு மணிக்கு ஒரு முறை உணவுக்காக அழும் குழந்தையும் இரண்டு மணிநேரம் ஆகியும் அமைதியாக இருந்தது. ராணியும்.

மணி 07:30

           ராணி, ராணி......    ராணி, ராணி.........
                    ..............

           ராணியின் தோளைப் பிடித்து உலுக்கினார் கிருஷ்ணன். மெதுவாக கண் திறந்தார்.

      இப்போ எப்படி இருக்கு? hospital போலாமா?
                    ..............

 மீண்டும் கேள்வி எதுவும்  கேட்காமல், ராணியை தூக்கி விட்டு முகம் கழுவச் சொல்லிவிட்டு. குழந்தையை தூக்கிக் கொண்டு தயாரானர்.

       ரிக்க்ஷா கூட்டிட்டு வரவா?
               இல்லங்க, அதெல்லாம் வேண்டாம், நான் மெல்ல நடந்தே வந்துர்றேன். குழந்த முழிச்சிட்டான் அவன கொடுங்க.

     தளர்ந்த நடையுடன் வீட்டை விட்டு வெளியே வந்த ராணி சிறிது தூரம் நடந்தவுடன்  தெளிவானார். 

               இப்போ கொஞ்சம் பரவா இல்லங்க, சைக்கிள்ள கூட ஏறிக்கிறேன்.

சரி என்று ராணியை குழந்தையுடன்  பின்னால் உட்காரச் சொல்லி விட்டு,  கிருஷ்ணன்  மிதி வண்டியை இயக்க முயற்சிக்க, சற்று தூரத்திலேயே தெரு விளக்கின் அடியில் இரண்டு நாய்கள் எதோ ஒன்றுக்காக வெறிப் பிடித்தது போல சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அந்த குறுகிய தெருவில் ஒதுங்கி செல்லவும் வாய்ப்பில்லை. திரும்பி செல்லவும் மனமில்லாமல் அங்கேயே நின்றார் கிருஷ்ணன். சில நொடிகளில் இரண்டு நாய்களும் கிருஷ்ணனை நோக்கி அதே வெறியுடன் ஓடி வந்தன.  மிக அருகில் வந்த நாய்கள், வந்த  அதே வேகத்தில் நிற்க முயற்சி செய்து நிற்க முடியாமல் வழுக்கிக் கொண்டு சாலையின் இருபுறமும் இருந்த சாக்கடையில் விழுந்து எழுந்து வந்த திசையிலேயே ஓடின. படபடப்பில் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற கிருஷ்ணன் திரும்பினார், பின்னால் உட்கார்ந்திருந்த ராணி குழந்தையுடன்  இறங்கி நின்று கொண்டிருந்தார்.

            "நல்ல வேளை ஒன்னும் ஆகல"  என்று தேற்றிக்கொண்டு மிதிவண்டியை மருத்துவமனைக்கு செலுத்தியவரை ராணி இடைமறித்தார்.
                  
              நல்லா தூங்கினதால தலைவலி சரியாப் போச்சு, hospital போகவேண்டாம். வேற எங்காவது போகலாம்.  

இரவு உணவு உண்டு விட்டு மூவரும் 09:30 மணிக்கு வீடு திரும்பினர்.

 அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் ஒருமுறை தலை வலி, மருத்துவமனை, வழியில் வேறு ஒரு சம்பவம்.

ஒரு மாதம் சென்ற பின்பு, விடுமுறைக்காக ராணியின் தங்கை வந்திருந்தார். வந்து ஒருவாரம் ஆகியும் வெளியில் எங்கும் கூட்டிச்செல்ல முடியாததால் ராணியையும், தங்கையையும் திரைப்படத்திற்கு முதல் காட்சிக்கு சென்று வரச்சொன்னார் கிருஷ்ணன். 

  ராணி, நீயும் உன் தங்கச்சியும் பக்கத்து theater க்கு சினிமாக்கு போயிட்டுவாங்க, எனக்கு இந்த motor re-winding வேலை இருக்கு.

                     நாங்க மட்டும் எப்படிங்க போறது?

   உங்கள நான் theater ல விட்டுர்றேன், படம் முடியிற நேரத்துல வந்து கூப்ட்டுக்குறேன். பக்கத்துல தான நடந்து போகலாம்.
                             
                    சரிங்க, குழந்தையும் நானே கொண்டு போயிர்றேன். அழுதா நாங்க ரெண்டு பேறும்  சமாளிச்சிக்குவோம்.

கூச்சல் 


இருவரையும் திரையரங்கத்தில் விட்டு விட்டு வந்து தன் வேலையை தொடர்ந்தார் கிருஷ்ணன். வயலுக்கு நீர் பாய்ச்ச, கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் 4  குதிரை திறன் கொண்ட  மோட்டாரின் உள் பக்கத்தில் குனிந்து  தாமிர கம்பிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். வேலை மும்மரத்தில் எதையும் அறியாதவர், சட்டென்று தன்னருகில் யாரோ இருப்பதைப் போன்று உணர்ந்தார்.  யாரும் இல்லை என்று தெரிந்தாலும் திரும்பி பார்த்து அதை உறுதி செய்து கொண்டு மீண்டும் பணியை தொடர்ந்தார்.     

வீட்டின் முன்புறம் போடப்பட்ட மரச் சட்டங்களினால் ஆன கதவு திடீரென சத்தமில்லாமல் தானாக மெல்ல ஆட ஆரம்பித்தது. 

குனிந்திருந்த கிருஷ்ணன், தலையை உயர்த்தாமல் கண்களை மட்டும் மேலே உயர்த்திப் பார்த்தார். ஆட்டம் மெல்ல குறைந்து அமைதியானது. மனதுக்குள் எந்த கேள்விக்கும் இடம் கொடாமல், தரைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியை திருப்புளி (screwdriver)  கொண்டு மீண்டும் ஆடாதபடி நிரப்பினார்.

கவனத்தை தாமிர கம்பியின் மீது திருப்பி வேலையை தொடங்க முயற்ச்சித்தார், இனம் புரியாத கலவரம் அவரை ஆட்கொண்டது. 

"சீ சீ  அதெல்லாம் ஒன்னும் இல்ல, சுத்த மூட நம்பிக்கை" என்று சமாதானம் செய்துகொண்டு வேலையை தொடர்ந்தவர், சிறிது நேரத்திலேயே தன்னை அறியாமல் நிமிர்ந்து பார்த்தார். பார்த்தவுடன் உடலின் அனைத்து மயிர்க் கால்களும் சிலிர்த்து நின்றன...

என்ன  அது ?

4 comments:

  1. கதைக்கு என்று ஒருவடிவம் இயல்பாகவே உண்டு ....
    அதன் சூத்திரம் ஒரு எளிமையான வாய்ப்பாடு ... ஆனால் எல்லோருக்கும் வாய்க்காது...
    விதிவிலக்காக உன்னைப் போல ஆர்வம் கொண்டோருக்கு விரைவில் விளங்கிவிடும்...
    அதன் மெருகேற்றம் ....தீவிர வாசிப்பு அதனை நேர் செய்துவிடும் ...
    வார்த்தைக்குள் வரிகளைச் சொருகிவிடும் நுணுக்கங்களை ' சுந்தர ராமசாமியின்' எழுத்தில் காணலாம்.
    கதை சொல்லுவதில் ஒரு எளிமையினை எஸ். இராமகிருஷ்ணன் வரிகளில் வாசிக்கலாம்.
    மதினிமார் கதை வாசித்துப் பார்... கோணங்கியின் சிறுகதை வடிவம் கொண்டுள்ள நேர்த்தி நிறைவானதாக இருக்கும்.
    அசோகமித்திரனை தவறவிடாதே ...
    ஜெயகாந்தனின் புரட்சி எழுத்தில் எழுந்து நிற்கும்...
    கலகம் கொண்ட கதைகளை, கட்டுரைகளை "சாரு" நிவேதிதாவின் வலைப் பூவில் மேயலாம் ;) ...

    எழுத்து ஆர்வம் கொண்டோரின் வாசிப்பனுபவம் வார்த்தைகளில் கூர்மை கொண்டு வந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வாசிப்பு வசமானது சமீபத்தில் தான். நிச்சயம் நீ குறிப்பிட்டுள்ள புத்தகங்களை வாசிக்கிறேன். உன்னுடைய பொன்னான நேரத்தை என்னைப் போன்ற கத்துக்குட்டிகாக ஒதுக்கியது மிக்க மகிழ்ச்சி.

      Delete
  2. இன்று கம்பராமாயணம், மகாபாரதம் தலைப்புகளில் பல மணிநேரம் சொற்பொழிவு மற்றும் விரல்கள் எண்ணிக்கையிலான புத்தகங்களின் ஆசிரியராக இருக்கும் நடிகர் சிவகுமார் வாசிக்க ஆரம்பித்ததே அகவை நாற்பதில்... அப்படிப்பார்த்தால் நீ ...

    ReplyDelete
  3. Priyadharshini SethuAugust 28, 2012 at 4:45 AM

    Ungalukulla edho irundhuruku parungalen.. Anna Super.. intresting!!

    ReplyDelete